
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9932
Date uploaded in London – 4 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆடிக் க்ருத்திகை சிறப்பு விழா நாளான 2-8-2021 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பப்பட்ட ஞானமயம் நிகழ்ச்சியில் ச.நாகராஜன் ஆற்றிய உரை.
அபகார நிந்தைப் பட்டுழலாதே, அறியாத வஞ்சரைக் குறியாதே உபதேச மந்திரப் பொருளாலே உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ இபமாமுகன் தனக்கு இளையோனே இமவான் மடந்தை உத்தமி பாலா, ஜெபமாலை தந்த சற்குருநாதா, திருவாவினன் குடிப் பெருமாளே. முருகன் தனக்கு உபதேசம் செய்ததையும் ஜெபமாலை தந்ததையும் நினைத்து இப்படிப் பாடி உருகுகிறார் அருணகிரிநாதர்.

அவரது திருப்புகழின் பெருமையைக் கண்டு பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்ற தேவி உபாசகன் அரசன் பிரபுட தேவ மஹாராஜனிடம் அருணகிரிநாதர் தான் உபாசிக்கும் மூர்த்தியைச் சபையில் அனைவருக்கும் காட்டினால் அவரே பெரியவர் என்று ஒப்புக் கொள்கிறேன் என்றார். பிரபுடதேவ மஹாராஜன் இந்தப் போட்டிக்கு அருணகிரிநாதரை அழைத்தார். சம்பந்தாண்டான் எவ்வளவு முயன்றும் தனது உபாசனை தெய்வமான தேவியை அனைவருக்கும் காட்ட இயலவில்லை. அருணகிரிநாதர் ‘அதல சேடனாராட, அகில மேரு மீதாட, அபின காளி தானாட’ என்று பாடத் தொடங்கினார். மதுர வாணி தானாட, மலரில் வேதனாராட மருவு வானுளோராட மதியாட வனச மாமியாராட, நெடிய மாமனாராட மயிலுமாடி நீயாடி வரவேணும் என்று அவர் வேண்ட, முருகப்பிரான் திருக்கையில் வேல் விளங்க மயில் மீது அமர்ந்து ஆடியவாறே வந்து சபையோருக்குக் காட்சி தந்து அருள் பாலித்தார். இதை அவரே தனது பாடலில், “சயிலம் எறிந்த கை வேற் கொடு மயிலினில் வந்தெனை யாட்கொளல், ஜகம் அறியும் படி காட்டிய குருநாதா” என்று குறிப்பிட்டு உருகுகிறார்.
அன்று தொடங்கி இன்று வரை அன்பருக்கு உதவும் அமுதமாக விளங்குகிறது திருப்புகழ். இந்த முருகனின் புகழைக் கற்று ஓத, ஒரு நூல் அருணகிரி நாதர் அருளிய திருப்புகழே.
வேதம் வேண்டாம் சகல வித்தை வேண்டாம் கீத
நாதம் வேண்டாம் ஞான நூல் வேண்டாம் – ஆதி
குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றும்
திருப்புகழைக் கேளீர் தினம்.
ஆம்! திருப்புகழைத் தினமும் கேட்டால், ஓதினால் மற்ற எதுவும் வேண்டாம், ஏனெனில் திருப்புகழில் சகலமும் அடங்கி இருக்கிறது.
திருப்புகழ் அருணகிரிநாதர் வாயிலிருந்து அருள்மொழியாக வெளிப்பட்டிருப்பினும் அதில் உள்ள ஒரு ரகசியத்தை முருகப் பிரானே அதிலேயே அருளி விட்டார்.
‘யாம் ஒதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்’ என்ற கந்தரனுபூதிச் சொற்றொடரால் அருணகிரி வாக்கு முருகன் வாக்கு என்பதையும் அதைத் தாமே பெற வேலவர் அவருக்குத் தந்தார் என்பதும் பெறப்படுகிறது.

திருப்புகழைக் கற்கத் திருப்புகழைக் கேட்க
திருப்புகழை நித்தஞ் செபிக்கத் – திருப்புகழை
அர்ச்சிக்க முத்தியெளிதாகுமே கூற்றை வென்று
கெர்ச்சிக்கலாமே கேடீ
என்பது ஆன்றோர் வாக்கு.
முருகன், ‘அடியவர் வேண்டியபோது வேண்டிய போகம் உடனே தருவான்’ என்பதை கோங்கிள நீர் என்னும் திருவேங்கடப் பாடலில் அவர் கூறி உறுதி செய்கிறார்.
வீர ஜெயத் திருப்புகழ் என்று பெருமையுடன் அழைக்கப்படும் ‘சினத்தவர் முடிக்கும்’ என்று தொடங்கும் திருத்தணிகைத் திருப்புகழில் திருப்புகழின் பெருமையை அவரே கூறுவதைப் பார்க்கிறோம்.
“சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவர் உயிர்க்குஞ் சினமாக
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பு என்றறிவோம் நாம்
நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும் நிசிக்கருவறுக்கும் பிறவாமல்
நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும் நிறைப் புகழ்” என்பதுவே திருப்புகழின் பெருமை.
திருப்புகழைப் படித்தால் தமிழறிவு கூடும். வேத இதிஹாஸ புராணங்களின் அற்புத சம்பவங்களையும் சாஸ்திர தத்துவார்த்தங்களையும் உபநிடத ரகசியங்களையும் அறிய முடியும். இகபர சௌபாக்யம் கிட்டும்.முக்திப் பேறும் கிட்டும்.
திருப்புகழின் பெருமையை பாரெல்லாம் உணரும் வண்ணம் செய்த ஸ்ரீ வள்ளிமலைத் திருப்புகழ் ஸச்சிதானந்த ஸ்வாமிகளின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இது. இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது ஜப்பான், ஜெர்மனி ஆகிய பகை நாட்டினர் இந்தியா மீது குண்டு மழை பொழியத் திட்டமிட்டனர். மக்கள் அனைவரும் பயந்து நடுநடுங்கினர். அப்போது ஸ்வாமிகள் திருப்புகழ் பாராயணக் குண்டு என்று அவர்களின் குண்டுக்கு எதிர் குண்டாக திருப்புகழ் பாடல்களைத் தொகுத்து 1942ஆம் ஆண்டு ஜனவரியில் ஒரு நூலாக வெளியிட்டார்; அன்பர்கள் அதை ஓதினர். பயம் தெளிந்தனர். பகை நாடான ஜப்பான் அணுகுண்டால் பாதிக்கப்பட்டு தோற்று அழிந்தது. ஜெர்மனி வீழ்ந்தது.
எவ்வளவு கஷ்டம் வந்த போதிலும் கூட அதை நீக்கும் அரு மருந்து திருப்புகழே என்பதை இந்த ஒரு சம்பவமே நமக்கு உணர்த்துகிறது. நமக்கு அன்றாடம் உதவும் சில பாடல்களை இப்போது பார்ப்போம்:-

அச்சமற்று வாழ, ‘மரண ப்ரமாதம் நமக்கில்லை யாம் என்றும் வாய்த்த துணை’ என்ற பாடல்.
தாழ்வின்றி வாழ, ‘சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனை’ என்ற பாடல்.
நோய்கள் வந்தால் அவை தீர ஓத வேண்டிய திருப்புகழ் – ‘இருமல் உரோகம்’ என்ற பாடல்.
தனியே வழி நடக்கும் போது ‘வேலும் மயிலும் துணை’ என்ற கந்தரலங்காரப் பாடல்.
மனதிலே கலக்கம் வந்தால் ‘இதயந் தனிலிருந்து கிருபையாகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே’ என்ற பாடல்
ஆபத்துக்கள் வந்தால் ‘நாள் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும்’ என்ற கந்தரலங்காரப் பாடல்
திருமணம் தடைப் பட்டுக் கொண்டிருந்தால் அல்லது தாமதமாகிக் கொண்டிருந்தால் ‘நீலங்கொள் மேகத்தின் மயில் மீதே’ என்ற பாடல்
முருகனை தரிசிக்க மலை மீது ஏறும் போது திருப்புகழ் பாடல்களைப் பாடிக் கொண்டே ஏறுதல் மரபு.
முருக நாமம் கூறும் திருப்புகழைப் பாடுபவரின் பெருமை என்ன? ‘வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர் சீலம் ஏத்திய சித்த ப்ரஸித்தரே!’ என்பது தான் பதில்!
தினமும் சில நிமிடங்கள் ஒதுக்கி திருப்புகழைக் கற்று ஓதினால் அது நமக்கு இகபர சௌபாக்யம் அருளும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த நன்னாளில் உலகெங்குமுள்ள அன்பர்களை இணையதள வாயிலாகக் கூட்டி முருகப் பிரானை வழிபடும் பேற்றை நமக்கு நல்கிய லண்டன் சிவ ஸ்ரீ கல்யாண்ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி உரித்தாகுக. இந்த அன்பர்கள் கூட்டத்தில் என்னையும் ஒரு பொருட்டாக்கி சில வார்த்தைகளைப் பேச அழைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
“அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் ‘அஞ்சல்’ என வேல் தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்!”
நன்றி வணக்கம்!

***
tags- அருணகிரிநாதர் -2, முருகன்
You must be logged in to post a comment.