Written by S Nagarajan
Date: 27 February 2016
Post No. 2578
Time uploaded in London :– 5-38 AM
( Thanks for the Beautiful Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
நையாண்டி மடல் எண் 2
முட்டாள்கள் முன்னேற்ற சங்கம்: மெய் சிலிர்க்க வைக்கும் அழைப்பு!
ச.நாகராஜன்
அன்புடையீர்.
நிச்சயமாக உடனே அடுத்து ஒரு மடலை அனுப்பும் எண்ணமே எமக்கு இல்லை. ஆனால் முதல் மடல் வெளியானவுடன் எமக்கு வந்த தொலைபேசி அழைப்பு அந்த எண்ணைத்தை மாற்றி விட்டது.
தொலைபேசியில் பேசியதும் அவரோ இவரோ இல்லை. நீதியைக் காப்பேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நீதித்துறையில் களம் இறங்கியவர்.
அவர் உலக நீதித் துறை வரலாற்றிலேயே ‘தனி ஒரு” இடத்தைப் பிடித்தவர்.
தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, இப்போது உலக அரங்கிலும் கூட அனைவரும் அவரைக் கண்ணெடுத்துப் பார்க்கின்றனர்.
உலக நீதித்துறை வரலாற்றில் யாருமே சாதிக்க முடியாதபடி அப்படி இவர் சாதித்த “தனி ஒரு” சாதனை என்று ‘முட்டாள்தனமாகக்’ கேள்வி கேட்கிறீர்களா?
நமது கழகத்தின் முதல் விதியே கேள்வி யாரும் கேட்கக் கூடாது என்பது தான்!
யாமே கேள்விகளை எழுதி யாமே பதில் எழுதி சாமானியனுக்கு அறிவுறுத்துகிறார் போல அதை ஊடகங்களுக்கு கொடுப்பதே எமது வாடிக்கை.
இருந்தாலும் போனால் போகிறது என்று இந்த ஒரு முறை உங்களை மன்னித்து விடுகிறேன்.
இவர் சாதித்த சாதனை என்ன தெரியுமா?தன் மீதிருந்த குற்றச்சாட்டுகளைத் தானே விசாரித்து தானே தனக்கு தீர்ப்பு வழங்கிக் கொண்டது தான்! தான் நிரபராதி என்று அந்தத் தீர்ப்பில் இருப்பது நியாயம் தானே!)
இப்படி உலக வரலாற்றில் தன்னைத் தானே விசாரித்து அற்புதமாகத் தீர்ப்பு வழங்கியதாகச் சரித்திரம் உண்டா?
கோட்டா முறைப்படி உள்ளே வந்து சகல சலுகைகளையும் இவர் கடந்த பல்லாண்டுகளாக அனுபவித்தவர்.
இவர் மீது பல வயிற்றெரிச்சல்காரர்கள் ஊழல் புகார்களை அனுப்பவே நீதியரசர்கள் இவர் மீது வழக்கைப் பதிவு செய்து இவர் எந்த வேலையையும் செய்யக் கூடாது என்று உத்தரவு போட்டனர்.
ஆனால் வேலை ஒன்றையே தாரக மந்திரமென்று கொண்ட இவர் தன்னைத் தானே விசாரித்துக் கொண்டார்.
இவர் எம்மை அழைத்து முமு,கவில் தம்மை இணைத்துக் கொள்வதாகச் சொன்னவுடன் மெய் சிலிர்த்துப் போனோம். உடம்பெல்லாம் புல்லரித்தது..
கழகத்தில் வக்கீல் பிரிவு உண்டா, அதற்கான தலைமைப் பதவி தனக்கு கிடைக்குமா என்று கேட்டார்.
பிரமித்துப் போன யாம் ‘உடனே தந்தோம்’ என்றோம். பிரிவு உண்டா என்று கேட்காதீர்கள். கழகத்தின் முதல் நோக்கமே பிரிவினைக்கு வித்திடுவது தான். இதற்கு எத்தனை பிரிவுகள் வேண்டுமோ அத்தனை பிரிவுகளும் இங்கு உண்டு. பிரிவில் ஏற்படும் விளைவுகளினால் நம் கஜானா நிரம்ப வேண்டும்; அதிகாரம் வர வேண்டும் என்று பதில் தந்தோம். அவர் மகிழ்ந்து போனார்.
இனி கழக உடன்பிறப்புகள் இவர் காட்டிய வழியின் படி எந்த ஊழல், இதர சிவில் கிரிமினல் குற்றங்களைச் செய்தாலும் நீதி மன்றம் செல்ல வேண்டாம்.
தமக்குத் தாமே விசாரித்து (நிரபராதி என்று) நீதி வழங்கிக் கொள்ளலாம். இது எப்படி ஒரு ஆறுதலான செய்தி!
முட்டாள்களே! இந்த இனிய செய்தியை வேண்டி விரும்பி உங்களுடன் பகிர்ந்து கொண்டு விடை பெறுகிறோம்.
அன்புடன்
தலைவர்
You must be logged in to post a comment.