தியானத்துக்கு மிகவும் அவசியம் பூனை!!!

SONY DSC

மூட நம்பிக்கைகள் தோன்றுவது எப்படி? 4 கதைகள்
Post No. 978 ; Date 14th April 2014
By London Swaminathan

பேராசிரியர் ராமானுஜ சீனிவாசன் இந்திய கலாசாரம் பற்றி எழுதிய புத்தகம் ஒன்றில் இசையில் மூட நம்பிக்கைகள் வளர்ந்தது பற்றி நான்கு கதைகள் சொல்லுகிறார். இவை இசைக்கு மட்டுமின்றி எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

முதல் கதை: தியானத்துக்கு மிகவும் அவசியம் பூனை!!!

ஒரு ஊரில் ஒரு குரு இருந்தார். ஒரு நாள் அவருடைய ஆஸ்ரமத்தில் திடீரென்று ஒரு பூனை புகுந்தது. அது நோய்வாய்ப்பட்ட பூனை. ஆகையால் குரு அதை அன்புடன் கவனித்து நோயைக் குணப்படுத்தினார். இப்போது பூனைக்கு துணிச்சல் வந்துவிட்டது. குருநாதர் தியானம் செய்கையில் கூட அவர் மடியில் உட்கார்ந்து கொஞ்சத் துவங்கியது.

இந்த அன்புத் தொல்லை பொறுக்காததால், பூனையை குருநாதர் தினமும் தனது கட்டில் காலில் கட்டிப் போட்டுவிட்டு தியானம் செய்யத் துவங்கினார். குருநாதரின் சீடர்கள் இதை உன்னிப்பாகக் கவனித்தனர். நாளடைவில் குருநாதருக்கு வயதாகி இறந்தும் போனார்.

ஆஸ்ரமத்தின் பிரதம சீடர் குருநாதர் பதவிக்கு வந்தார். அவரும் பூனையின் கட்டில் கால் ‘’மர்மத்தை’’ அறியாமல் தினமும் அதைக் கட்டிலின் காலில் கட்டிப் போட்டுவிட்டுத் தியானம் செய்யத் துவங்கினார். நாளாக நாளாக எல்லோரும், தியானத்தைவிட பூனையைக் கட்டில் காலில் கட்டிப் போடும் சடங்கை பயபக்தியுடன் செய்யத் துவங்கினர். அந்தப் பூனைக்கு வயதாகியதால் அது இயற்கை மரணம் எய்தியது. உடனே புது பூனை ஒன்றை வாங்கி கட்டில் காலில் கட்டத் துவங்கிவிட்டனர்!
பிரதம சீடரும் இறந்தவுடன் சீடர்கள் ஆள் ஆளுக்கு ஒரு பூனையை வாங்கி கட்டில் காலில் கட்டத் துவங்கினர்! இப்படியாக தியானத்தைவிட பூனை முதலிடம் பெற்றது!

Tambourine_21787

கதை 2: ஆஹிரி பாடினால் சாப்பாடு கிடைக்காது!!!

ஆஹிரி ராகத்தைப் பாடினால் சாப்பாடு கிடைக்காது என்று கர்நாடக சங்கீத உலகில் ஒரு மூட நம்பிக்கை உண்டு! இதற்கும் ஒரு சம்பவமே காரணம். அந்தக் காலத்தில் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் போவோர் ஒரு கம்பின் நுனியில் கட்டுச் சாத மூட்டையைக் கட்டிக் கொண்டு அதைத் தோளில் சார்த்திக்கொண்டு வழிநடைப் பயணம் போவார்கள். ஒரு பாகவதர் இப்படிப் போகும் போது களைப்பால் அந்தக் கம்பை மரத்தில் சார்த்திவிட்டு ஒரு மரத்தடியில் உட்கார்ந்தார். பல ராகங்கள் பாடினார். அவர் தன்னை மறந்து பாடிக்கொண்டே இருந்ததில் கம்பு சூடாகி திடீரென்று எகிரிக் குதித்தது. அப்போது அவர் ஆஹிரி ராகம் பாடிக்கொண்டிருந்தார். எட்ட முடியாத உயரத்தில் சோற்று மூட்டை இருந்தது. இந்த சம்பவத்தை அவர் சாதாரணமாக எல்லோரிடமும் கூறிச் சிரித்துக் கொண்டிருப்பார். மக்கள் அதிலிருந்து ஆஹிரி ராகம் என்ற விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு , ஆஹிரி ராகம் பாடினால் சாப்பாடு கிடைக்காது என்று வதந்தி கிளப்பினர். அது மூட நம்பிக்கையாக வளர்ந்து விட்டது!!

good tabla

கதை 3: சாவேரி பாடினால் சோகம் வரும்!!!

நான் ஒரு சங்கீதப் போட்டியை வேடிக்கை பார்க்கப் போயிருந்தேன். யார் மிகவும் நன்றாகப் பாடினாரோ அவருக்கு முதல் பரிசு கிடைக்கவில்லை! போட்டியின் நீதிபதிகளாக வந்தவர்களில் ஒருவர் மிகவும் பிரபலமான சங்கீத நிபுணர்! அவர் நடுவராக இருந்தும் நன்றாகப் பாடியவருக்கு பரிசு கிடைக்காதது எனக்கும் ஆச்சர்யத்தைத் தந்தது. இறுதியில் அந்த நடுவர் பேச எழுந்தார். “ஒருவர் மிக நன்றாகப் பாடினார். ஆனால் ராகமாலிகையில் ஒரு பாட்டுப் பாடியதில் சாவேரி ராகத்தைக் கடைசியாக வைத்துவிட்டார். இது தவறு. கடைசியாகப் பாடவேண்டிய ராகங்கள் மங்களகரமான மத்யமாவதி, சௌராஷ்டிரா ராகங்கள் ஆகும். இதை அவர் பின்பற்றவில்லை என்றார். இதைக் கேட்கவே எனக்கு விநோதமாக இருந்தது. இப்படி ஒரு விதியும் கிடையாது என்பது பழைய பாடகர்களின் பாடல் வரிசையைப் பார்த்தாலேயே தெரியும்.

Musical Instruments3

கதை 4: கணபதியா? ஹம்சத்வனியா? எது முக்கியம்?

இன்னொரு கச்சேரிக்குப் போயிருந்தேன். அவர் ஹம்சத்வனியில் ‘ரகுநாயகா’ கீர்த்தனையில் துவங்கி ராமன் புகழ் பாடினார். அந்தக் காலத்தில் எல்லோரும் பிள்ளையார் மீது முத்துசுவாமி தீட்சிதர் பாடிய ஹம்சத்வனி க்ருதியான வாதாபி கணபதிம் பாடி கச்சேரி யைத் துவக்குவர். இதற்குக் காரணம் கணபதி பிரார்த்தனையுடன் எந்த ஒரு செயலையும் துவங்க வேண்டும் என்ற சம்பிரதாயம் ஆகும். அது மட்டுமல்ல. கம்பீரமான ஹம்சத்வனியும் அந்த சபையில் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கும்..
இது போல ஹம்சத்வனி ராகத்தில் கச்சேரியைத் துவக்காத சிலருடன் நான் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததில் அவர்கள் கணபதியை மறந்துவிட்டு ஹம்சத்வனிதான் முக்கியம் என்று நினைத்தது தெரியவந்தது. எனக்கு இவர்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை!!
மேற்கூறிய விஷயங்கள் பேராசிரியர் சீனிவாசன் எழுதிய ஆங்கிலப் புத்தகத்தில் இருக்கின்றன. ஆங்கிலத்தில் இருந்து நான் தமிழில் மொழி பெயர்த்தேன்.

trimurti

மூட நம்பிக்கைகள் உருவாவது ஏன்?

1. எல்லோரும் செய்கிறார்கள் என்று நாமும் செய்வது.
2. ஒரு செயலின் காரணத்தை முன்னோர்கள் சொல்லாமல் மறைப்பது. அல்லது அந்தப் பெரியோர்களிடம் நாம் பயந்துகொண்டு காரணத்தை வினவாமல் விடுவது.
3. இப்படிச் செய்யாவிடில் ஏதேனும் எதிரிடை விளைவுகள் ஏற்படும் என்று அஞ்சுவது அல்லது நாலு பேர் நம்மை என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படுவது.
4. யாரோ ஒரு பெரியவர் செய்த செயலை நாமாகத் தவறுதலாகப் புரிந்துகொண்டு பின்பற்றுவது அல்லது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல தவறாக விளக்கம் கொடுப்பது.

Musical Instruments

மூட நம்பிக்கை இல்லாத துறையோ இடமோ இல்லை. வெளிநாடுகளில் வாழும் பெரிய பெரிய எழுத்தாளர்களும் நடிகர், நடிகைகளும், அரசியல்வாதிகளும் விளையாட்டு வீரர்களும்— எண், வர்ணம், தேதி, கிழமை—- ஆகியன பற்றிப் பலவகையான மூட நம்பிக்கைகளை வைத்திருப்பது அவ்வப்போது பத்திரிக்கை பேட்டிகளில் வெளி வருகிறது!!!

contact swami_48@yahoo.com