3 கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்த அமெரிக்க தீ விபத்து! (Post No.4519)

Date: 20  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-54 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4519

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

15-12-17 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 43வது) கட்டுரை

மூன்று கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்த அமெரிக்க தீ விபத்து!

ச.நாகராஜன்

அமெரிக்காவில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் போஸ்டன் நகரில் மிகவும் பிரபலமான நைட் கிளப்பாகத் திகழ்ந்தது கோகனட் க்ரோவ் என்னும் க்ளப்.

 

இதில் 1942ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி கோரமான தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. இதன் காரணம் அதிகாரபூர்வமாக இன்று வரை யாருக்கும் தெரியாது. ஆனால் பல ஊகங்கள் இது பற்றி உண்டு. தப்பான வயரிங் தான் இதற்குக் காரணம் என்றும் ஒரு பல்பை மாற்றும் போது ஏற்பட்ட மின்கசிவினால் இந்த மாபெரும் தீ விபத்து ஏற்பட்டது என்றும் சிலர் கூறுவர்.

 

தீ விபத்து ஏற்பட்ட நாளில் அதிலிருந்த ஹாலில் அதில் இருக்கக் கூடிய நபர்களுக்கு மேல் மிகவும் அதிகமாகக் கூட்டம் இருந்தது. ஹாலின் பக்கவாட்டில் கதவுகள் இருந்த போதும் அவை வெளிப்புறத்தில் தாளிடப்பட்டிருந்தன. ஆகவே உள்ளிருப்போர் கதவுகளைத் திறக்க முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

 

இன்னொரு காரணம் தீ பற்றிய் எச்சரிக்கை மணி ஒலித்தவுடன் அவசர வழி வழியாக அனைவரும் தப்ப முயன்றனர்.

 

ஆனால் கிளப்பில் இருந்த ஒரு முட்டாள் அவசர வழி கதவுகளைத் திறக்க முடியாதபடி அடைத்து விட்டான். அதன் காரணம் தீ என்ற சாக்கில் கிளப்பிற்குத் தர வேண்டிய பணத்தைத் தராமல் எல்லோரும் ஓடி விட்டால் என்ன செய்வது என்று அவன் முட்டாள்தனமாக எண்ணியதே காரணம்.

ஹாலில் இருந்தவர்களில் 492 பேர்கள் தீயினால் கருகி மாண்டனர். அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரும் தீ விபத்து இது தான்.

 

(28-11-2017 அன்று நடந்த) இதன் 75வது நினைவு தினத்தை ஒட்டி  இந்த ஹாலில் தீ விபத்தில் அகப்பட்டும் கூட அதிர்ஷ்டவசமாகத் தப்பி மீண்ட 91 வயதான மார்ஷல் கோல் என்பவர் இதைப் பற்றி நினைவு கூர்ந்து பேசுகையில், “கோரமான அந்த விபத்தில் பிழைத்து மீண்டதிலிருந்து எங்கு போனாலும் முதலில் வெளியேறும் வழிகள் எங்கு உள்ளன கதவுகள் சரியாக இருக்கிறதா என்பதை செக் செய்வதைத் தவறாமல் செய்வது எனக்கு ஒரு பழக்கமாகவே ஆகி விட்டது” என்றார்.

இந்தத் தீ விபத்தின் கோரமான இழப்பு ஒரு புறம் இருக்க, இதனால் மூன்று பெரிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்தது.

600 பேர்கள் இருக்கக் கூடிய ஹாலில் ஆயிரம் பேருக்கு மேல் அன்று குழுமி இருந்தவர்களில் பெரும்பாலோர் தம்பதிகளாக ஜோடி ஜோடியாக வந்திருந்தனர்.

திடீரென்று தீப்பொறிகள் தென்பட்டன. அது என்னவென்று உணருவதற்கு முன்னர் ஹாலே தீ ஜுவாலைகளால் பற்றி எரிய ஆரம்பித்தது.

 

492 பேர் இறந்ததோடு 150 பேர் தீக்காயத்தினால் பீடிக்கப்பட்டனர். போஸ்டன் சிடி ஹாஸ்பிடலில் தீ விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 300 பேர் அட்மிட் செய்யப்பட்டனர். மசாசுசெட்ஸ் ஜெனரல் ஹாஸ்பிடலுக்கு இன்னொரு நூறு பேர் எடுத்துச் செல்லப்பட்டனர்.

 

அங்கிருந்த பிளாஸ்டிக் சர்ஜன் ப்ராட்ஃபோர்ட் கானான் (Bradford Cannon) என்பவர் தீக்காயங்களுக்கு ஒரு நவீன சிகிச்சை முறையைக் கண்டுபிடித்தார். சாதாரணமாக தீக்காயங்களுக்கு டைகள் மற்றும் டேனிக் ஆசிட் ஆகியவையே உடனடி சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும். அதற்கு பதில் அவர் காஸ்  (gauze)-  உடன்  பெட்ரோலியம் ஜெல்லியை போரிக் ஆசிட் மீது தடவி அதைப் பயன்படுத்தினார். அவர்கள் தீயினால் வெந்திருந்த சதைப் பகுதிகளை அகற்றி தோலை ஒட்டும் புது முறையைக் கையாண்டார். கானான் இந்த சிகிச்சை முறையை பிலடெல்பியாவிலும் பின்னர் வேலி ஃபோர்ஜ் ஜெனரல் ஹாஸ்பிடலில் கையாண்டார்.

 

அது மட்டுமின்றி அந்த 500 பேர்களும் தவித்த தவிப்பு உளவியல் ரீதியாக அவர்கள் எப்படிக் கையாள வேண்டும் என்பதையும் கற்றுத் தந்தது. அந்த வழிமுறைகள் உலகெங்கும் இன்று தீ விபத்துக் காயம் ஏற்பட்டவரிடம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் இந்த நவீன சிகிச்சை முறையால் பிற்காலத்தில் நலம் அடைந்தனர்.

 

 

இதைத் தொடர்ந்து இரண்டாவது கண்டுபிடிப்பு உளவியல் ரீதியில் அமைந்தது.

இந்தப் பெரிய தீ விபத்தில் உயிர் பிழைத்தோரையும் , போரில் தீக்காயம் பட்ட இராணுவத்தினரையும் உளவியலாளர் எரிச் லிண்டிமான் (Erich Lindemann) முறையாக பேட்டி எடுத்து விவரங்களைச் சேகரித்தார். இப்படி ஒரு துயரமான சம்பவத்தில் அகப்பட்டோரின் துக்கம் எப்படி இருக்கும், அதற்கு உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் ஆய்வு செய்தார்.

அப்போது தான் மணமுடித்திருந்த ஒரு இளம் வயதுப் பெண் தன் கணவனை அந்தத் தீவிபத்தில் இழந்திருந்தார். அந்தக் கணவன் அவளுடன் ஒரு சண்டையைப் போட்டு விட்டு அந்த கிளப்புக்குச் சென்றிருந்தான். இன்னொருவரோ தன் இளம் வயது மனைவியை அந்த விபத்தில் இழந்திருந்தார். அவளைக் காப்பாற்றுமுன்னர் அவர் மயக்கமடைந்து விழுந்து விட்டார்.

இப்படிப் பல துயரகரமான நிகழ்வுகளையும் அதையொட்டிய மனித உணர்வுகளையும் தொகுத்த லிண்டிமான் உளவியல் துறையில் துக்கம் அடைந்தோருக்கான உளவியல் சிகிச்சை முறையைக் கண்டார். அதற்கு இந்த தீ விபத்து தான் வழி வகுத்தது.

 

மூன்றாவது கண்டுபிடிப்பாக ஒரு  விபத்தில் காயம்பட்டோர்  அது நடந்து முடிந்தவுடன் எப்படி தீராத மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்பதை தீவிபத்தில் உயிர்பிழைத்தவர்களைச் சந்தித்து அலெக்ஸாண்ரா ஆட்லர் (Alexandra Adler) என்ற பெண்மணி ஒரு ஆய்வு நடத்தினார். இப்படிப்பட்ட ஒரு ஆய்வை முதலில் செய்த உளவியலாளர் இவர் தான். கோகனட் கிளப் தீ விபத்தை வைத்து இவர் செய்த இவரது உளவியல் ஆய்வு பெரிய மருத்துவ முன்னேற்றத்திற்கான ஆய்வுப் பேப்பர்களைக் கொண்டிருந்தது. 2001ஆம் ஆண்டில் டாக்டர் ஆட்லர் மறைந்தார். அவர் மறைவை ஒட்டிய இரங்கல் செய்தியில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் உல்ப்கேங் சாக்ஸன் என்ற நிபுணர், “490 பேருக்கு மேல் கொல்லப்பட்ட விபத்தில் அங்கிருந்து மீண்ட பலருக்கு மூளை நிரந்தரமாக சேதம் அடைந்திருந்தது. அவர்கள் அனைவரையும் சோதனை செய்த ஆட்லர் மன அழுத்தமும், கவலையும் எப்படி ஒரு விபத்தைத் தொடர்ந்து பலரையும் நிரந்தரமாக பாதிக்கிறது, அதை எப்படிப் போக்குவது என்பதையும் ஆராய்ந்தார். அதன் பலனாகவே இரண்டாம் உலகப் போரில் காயம்பட்டிருந்த பல வீரர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்க முடிந்தது” என்று புகழாரம் சூட்டியிருந்தார்.

 

 

இந்த மாபெரும் தீ விபத்து உலகினருக்குத் தரும் செய்தி என்ன?

ஜனசந்தடி அல்லது கூட்டம் அதிகமுள்ள ஒரு இடத்திற்குப் போகும் போது அங்கு எங்கெல்லாம் வெளியேறும் வழிகள் உள்ளன, எப்படி நமது பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது ஆகியவற்றைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில், இது பெண்களையும், குழந்தைகளையும், முதியோரையும் தியேட்டர் உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்து செல்வோர் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சம் என்பதைச் சொல்ல தேவையே இல்லை!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு உடை விஷயத்தில் எப்போதுமே அக்கறை இல்லை.

 

அவர் மனைவிக்கு இதில் பெரிதும் வருத்தம்.

நன்றாக உடை உடுத்து வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அடிக்கடி அவர் சொல்வார்.

 

“எதற்காக? என்னை எல்லோருக்கும் அங்கே நன்றாகத் தெரியும்” என்று சொல்லி மனைவியின் வாயை மூடி விடுவார் ஐன்ஸ்டீன்.

 

ஒரு சமயம் பெரிய மாநாட்டிற்கு மனைவியுடன் அவர் செல்ல வேண்டியிருந்தது.

 

வழக்கம் போல அவர் மனைவி, “நன்றாக உடை உடுத்திக் கொண்டு போக வேண்டும்” என்று ஆரம்பித்தார்.

வழக்கம் போல ஐன்ஸ்டீனும்,” எதற்காக? அங்கே எல்லோருக்கும் என்னைத் தெரியும்” என்றார்.

உடனே அவர் மனைவி, “ என்னை அங்கே யாருக்கும் தெரியாதே!” என்று பதில் சொன்னார்!

 

ஐன்ஸ்டீன் சிரித்தார். நல்ல ஆடைகளை அணிந்து கொண்டார்!

***