WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,556
Date uploaded in London – – 13 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஹெல்த்கேர் ஜனவரி 2022 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.
100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்! -1
ச.நாகராஜன்
இந்த வேக யுகத்தில் மூளை ஆற்றலை மிக அதிகமாகப் பயன்படுத்தி உடனுக்குடன் பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. நவீன் சாதனங்கள் ஒரு புறம், அன்றாடம் வளர்ந்து வரும் பல அறிவியல் கலைகள் என்று மறு புறம், குழந்தைகளானாலும் சரி, முதியோர்களானாலும் சரி மூளை ஆற்றலைப் பயன்படுத்தாமல் வாழவே முடியாத சூழ்நிலை.
ஆனால் பயப்படத் தேவை இல்லை. மூளை ஆற்றலைப் பயன்படுத்த நூறு வழிகள் உள்ளன. உங்களுக்குப் பிடித்த வழிகளை எல்லாம் தேர்ந்தெடுத்து அவற்றை உங்களுக்கு உகந்த நேரத்தில் பயன்படுத்தி மூளை ஆற்றலை முழுதுமாகப் பெற்று உலகில் வெற்றிகரமான வாழ்க்கையை வாழலாம்.
இதோ நூறு வழிகள் :-
உலகில் உள்ள தலையாய ஆய்வு நிறுவனங்கள் இந்திய யோகாவின் பயனைக் கண்டு பிரமிக்கின்றன. ஹார்வர்டு, யேல், மசாசூசெட்ஸ் ஆகிய இடங்களில் உள்ள ஆய்வகங்கள் தியானத்தினால் மூளையின் அளவு பெரிதாகிறது என்று கண்டு பிடித்துள்ளன. கவனத்தையும் புலன்களின் உணர்வைச் செயல்படுத்தும் மூளைப் பகுதிகளின் கனம் தியானம் செய்வோர்களிடம் கூடுகிறது என்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன. உங்களின் மன அழுத்தத்தைப் போக்கி உங்களை நிதானமாக எப்போதும் வைக்க வல்லதும் தியானமே. ஆகவே தியானத்தை மேற்கொள்ளுங்கள்!
ஒரு சுலபமான வழி படிப்பது. ஆனால் யாரும் இதை அவ்வளவாகச் செயல்படுத்துவதில்லை. நீங்கள் படிக்கும் போது மூளையானது தகவலை ஆய்ந்து நடைமுறைப்படுத்தி ஒரு புதிய நியூரான் வழியை உண்டாக்குகிறது. தகவலைப் புரிந்து கொள்ளச் செய்கிறது. இதனால் அறிவு கூடுகிறது. புதிய தகவல்களைப் பெற முனைப்புடன் ஈடுபடுங்கள்; அறிவை அதிகமதிகம் பெறுங்கள். இதற்கு சுலபமான எளிய வழி படிப்பது தான்! ஆகவே படியுங்கள்!!
கேள்வி கேளுங்கள் : எந்த மேதையை எடுத்துக் கொண்டாலும் அவர் கேள்வி கேட்டுக் கேட்டு அறிவைக் கூர்மைப் படுத்திக் கொண்டதைக் காணலாம். தனக்குப் புரியாத எதையும் நன்கு அறிந்து கொள்ள அவர்கள் கேள்வி கேட்கத் தயங்குவதே இல்லை. நீங்கள் கேள்வி கேட்கும் போது ஒரு பிரச்சினைக்கான விடையைக் காணத் துடிக்கிறீர்கள். நீங்கள் சிந்திக்கத் தொடங்குகிறீர்கள். சிந்திப்பது என்பது மூளை ஆற்றலைக் கூட்டுவதற்கான சிறந்த பயிற்சி! ஆகவே கேள்விகளைக் கேளுங்கள்.
இசையை அனுபவியுங்கள் : இசைப் பிரியராக இல்லாத ஒருவரை உலகில் காண்பது மிகவும் அரிது. இசையைக் கேட்கும் போது மூளை ஆற்றல் கூடுவதையும் வாக்கு வன்மை கூடி சரளமாகப் பேச முடிவதையும் ஆய்வுகள் கண்டுள்ளன. குறிப்பாக கரோனரி ஆர்டிரி வியாதி (Coronary artery disease) உள்ளவர்கள் தங்களுக்குப் பிடித்த கர்நாடக, ஹிந்துஸ்தானி, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட திரைப்படப் பாடல்களைக் கேட்டு அமைதி பெறலாம். வாக்கு வன்மை இரட்டிப்பாகக் கூடுவதை ஆய்வுகள் நிரூபிக்கும் போது வியப்பு தான் அடைய வேண்டியிருக்கிறது. இசை கேளுங்கள்!
கற்றுக் கொண்டே இருங்கள் : ஒரு விஷயத்தைக் கற்கும் போது நியூரான்கள் மற்றும் அவற்றின் இடையே உள்ள இணைப்புகள் ஆகியவற்றின் அளவும் அமைப்பும் மாறுகின்றன. படிப்பதால் மட்டும் கற்க முடியும் என்பதில்லை. புதிய இடங்களுக்குப் போவது, ஒரு புதிய மொழியை அறிவது, ஒரு புதிய இசையைக் கற்று நாமே பாடுவது, ஒரு இசைக் கருவியைக் கற்பது, ஏன் இணைய தளத்தில் ஒரு புதிய தகவலைத் தேடுவது இவை எல்லாமே கற்பதற்கான வழிகள் தாம்!
நண்பர்களைப் பெறுங்கள். மனிதர்கள் கூட்டு சமூகத்தால் வாழ்பவர்கள். தனியாக ஒருவரால் வாழவே முடியாது. உறவுகள் மூளையை மேம்படுத்தும். மற்றவர்களுடன் ஊடாடி மகிழ்வது, உண்மையிலேயே மூளைக்கான சிறந்த பயிற்சி. நண்பனில்லா மனிதன் பாழ்!
மன அழுத்தத்தைக் குறையுங்கள். அது தான் மனிதனின் முதல் எதிரி. தொடர்ந்து மன அழுத்தம் இருந்தால் அது மூளை செல்களைப் பாதிக்கிறது. நினைவாற்றல் திறன் குறைகிறது. ஆகவே வாழ்க்கையை லகுவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
சிரித்து மகிழுங்கள். சிரிப்பே சிறந்த மருந்து என்ற அனுபவ மொழி அற்புதமான உண்மை. அது மூளைக்கும் நினைவாற்றலுக்கும், உடலுக்கும் அற்புதமாகப் பொருந்தும். ஜோக்குகளும், பஞ்ச் டயலாக் வரிகளும் மூளையைக் கற்கச் செய்கிறது; படைப்பாற்றல் திறனைக் கூட்டுவிக்கிறது.
எதையும் நேர்த்தியாக வைத்திருங்கள் : இந்தியரிடம் இருக்கும் மகத்தான குறை எதையும் நேர்த்தியாக நிர்வகிக்காமல் கன்னா பின்னாவென்று அலங்கோலமாக வைத்திருப்பது தான். எதிலும் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும். இது மூளைச் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. நினைவாற்றலைக் கூட்டுகிறது. விஷயங்களை எளிதாக்குகிறது. படபடப்பைத் தவிர்க்கிறது. டெஸ்கிலிருந்து மட்டும் குப்பைகளை அகற்ற வேண்டாம். மூளையிலிருந்தும் அனாவசிய விஷயங்களைத் தேக்காமல் அகற்றி விடுங்கள்.
பகல் கனவு காணுங்கள் : பகல் கனவை அனுபவித்துக் காண்பது மூளைக்கான சிறந்த பயன் தரும் ஒன்று. மனம் அங்கும் இங்கும் அலை பாயும் போது பிரச்சினைக்கான தீர்வைக் காணும். இது ஆய்வின் முடிவு. பல மேதைகளின் கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாக இது அமைந்துள்ளது.
கையினால் எழுதுங்கள் : நாம் மறந்து கொண்டிருக்கும் ஒரு பழக்கம் கையினால் எழுதுவது. வார்த்தைகளை எழுதிப் பார்ப்பதால் மூளை ஆற்றல் கூடுகிறது; கற்றல் மேம்படுகிறது. நினைவாற்றல் கூடுகிறது.
மூளை விளையாட்டுக்கள் எனப்படும் ப்ரெய்ன் கேம்ஸ் – Brain Games – பலவற்றை விளையாடுங்கள். மூளையில் உள்ள வெவ்வேறு பகுதிகள் புதிர்களை விடுவிக்கும் போதும், விடுகதைகளை விடுவிக்கும் போதும் புதிய தொடர்புகளைப் பெறுகின்றன; மூளைத் திறனைக் கூர்மையாக்குகின்றன.
கார்ட்டுன் வரையுங்கள். கார்ட்டூன், கேலிப்படம் வரைவது, சில அர்த்தமற்ற கிறுக்கலகளை வரைவது மூளையை ஊக்குவிக்கிறது. நினைவாற்றலை மேம்படுத்துகிறது.
தொலைக்காட்சியைப் பாருங்கள். தொலைக்காட்சியை அளவோடு அதாவது ஒரு நாளைக்கு அரை மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு மிகாமல் பார்ப்பது மூளை ஆற்றலை வளர்க்கிறது. நேரடிப் பேட்டியில் பங்கு கொள்வோரில் பலர் இப்படி தொலைக்காட்சியை அளவோடு பார்ப்பதால் மிகத் திறமையுடன் பதில் அளிக்கின்றனர் என்பதை ஆய்வுகள் கூறுகின்றன.
ஒரே வழியில் தினமும் போகாமல் சற்று வழியை மாற்றிப் பழகுங்கள். இப்படிப் புதிய செயலைச் செய்வதால் டோபமைன் வெளியாகிறது. அது புதிய நியூரான்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. உங்களை ஊக்குவிக்கிறது.
உங்கள் நகரைப் பற்றி நன்கு அறிந்து அதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். ஆய்வு ஒன்றில் நகரத்தில் டாக்ஸி ஓட்டும் டிரைவர்கள் இடம் பற்றி அறியும் மூளைப் பகுதிகளில் வல்லுநர்களாக இருப்பது தெரிய வருகிறது.
ஒரு புதிய இசைக் கருவியைக் கற்றுக் கொள்ளுங்கள். மோட்டார் கண்ட்ரோல், கேட்டல், பார்க்கும் பகுதிகள் எனப்படும் மூளைப் பகுதிகள் இப்படிப்பட்ட இசைக் கலைஞர்களிடம் மற்றவர்களை விட அதிகத் திறனுடன் இயங்குவதை ஆய்வு கூறுகிறது.
உரக்கப் படியுங்கள். எதையேனும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதா? உரக்கப் படித்துப் பழகுங்கள். உரக்கப்படித்தால் நினைவுக்குக் கொண்டுவருவது சுலபமாகிறது.
ஒரு புதிய மொழியைக் கற்க ஆரம்பியுங்கள். மூன்று மொழிகளுக்கு மேல் தெரிந்து வைத்திருப்பவர்கள் மற்றவர்களை விட அதிக ஐ க்யூ கொண்டிருக்கின்றனர். அல்ஜெமீர் வியாதி உள்ளவர்கள் ஒரே ஒரு மொழி மட்டுமே தெரிந்து வைத்திருப்பவர்கள் என்பதை ஆய்வுகள் கூறுகின்றன.
குறிப்பேடுகளில் குறிப்பெடுங்கள் : உங்கள் கருத்துக்களைக் குறிப்பெடுத்துக் கொள்வது நினைவுக்கு ஆதாரமாகவும் இலக்கியத்தை கற்கும் உங்கள் மூளையில் அமைந்துள்ள பகுதிகளுக்கு ஆக்ஸிஜனோடு கூடிய இரத்தைத்தை கொண்டு செல்லவும் உதவுகிறது. ஆகவே தான் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள் மாணவர்களைக் குறிப்பெடுத்துக் கொள்ளும் படி தூண்டுகின்றனர்.
மற்றவர்களுக்குக் கற்பியுங்கள். மற்றவர்களுக்கு எதையேனும் கற்பிக்கும் போது நீங்கள் தகவலை நினைவுக்குக் கொண்டு வர வேண்டியதாக இருக்கிறது. அதைப் புதிய முறையில் திருப்பி அமைத்துச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. இதனால் நினைவாற்றல் திறன் கூடுகிறது.
ஓவியம் வரையுங்கள். ஏதேனும் ஒரு சித்திரம், படம், ஓவியம் ஒன்றை வரைந்து பாருங்கள். படம் வரைவது வலது பக்க மூளைப் பகுதியின் செயலை அதிகரித்து படைப்பாற்றல் திறனை மேம்படுத்துகிறது. கலர் பென்சில்கள் உங்கள் மூளையைச் சக்தி உள்ளதாக ஆக்கும் சிறிய கருவிகள்!
ஆரோக்கியமான விவாதங்களில் கலந்து கொள்ளுங்கள். வெட்டி அரட்டை, வீண் பேச்சு இவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான ஒரு விவாதத்தில் கலந்து கொள்ளும் போது மூளை வெகு வேகமாகச் சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது. கருத்துக்களை உரிய வார்த்தைகளில் சொல்ல அவசியம் ஏற்படுகிறது. ஆகவே சிறந்த விஷயங்களைக் குறித்து நிபுணர்களுடன் விவாதிப்பது மூளை ஆற்றலைக் கூட்டுவிக்கும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். ஆகையால் தான் அறிஞர்களிடம் பழகு, நல்லோரை அணுகு என நமது அறநூல்கள் வலியுறுத்துகின்றன.
உங்கள் சுற்றுப்புறத்தை மாற்றுங்கள். ஒரே இடத்தில் இருக்காமல் புதிய இடங்களில் செயல்படுவது மூளையை ஊக்கப்படுத்தி மாற்ற வழி வகுக்கிறது. அடுத்த முறை வேறு ரெஸ்டாரண்ட், ஒரு புதிய வழியைத் தேர்ந்தெடுப்பது போன்றவை இதற்கான வழிகள்.
குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். பாஸிடிவ் சிந்தனைக்காக மூளையில் உள்ள பகுதிகளைச் செயலாற்ற வைப்பது உங்களால் நிர்ணயிக்கப்பட்ட உங்களின் குறிக்கோளே. வெற்றியைப் பெறச் சிறந்த வழி முதலில் குறிக்கோளை நிர்ணயிப்பது தான்! வாழ்க்கையை வளமாக்க வழி குறிக்கோள் ஒன்றைக் கொள்வது தான்!
*** மற்ற வழிகள் தொடரும்
tags — மூளை, ஆற்றல், 100 வழிகள்
You must be logged in to post a comment.