சாணக்கியன் பற்றிய சுவையான கதைகள் (Post No.4547)

Written by London Swaminathan 

 

Date: 26 DECEMBER 2017 

 

Time uploaded in London- 6-36 am

 

 

Post No. 4547

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

சாணக்கியன் ஒரு பெரிய சிந்தனையாளர்; திட உறுதி பூண்டவர்; வெற்றி பெறுவதற்கு சாம, தான, பேத, தண்டம் என்னும் சதுர்வித உபாயங்களையும் பயன்படுத்தத் தயங்காதவர். இந்தியாவில் தோன்றிய மிகப் பெரிய அரசியல்வாதி அவர்தான் என்றால் மிகையல்ல. பெரிய ராஜ தந்திரி; ராஜதந்திரம் உடையோருக்கு எல்லாம் முன்னோடி என்பதால் எந்த திறமையான அரசியல் வித்தகரையும் ‘சாணக்கியன்’ என்ற அடைமொழியோடு அழைக்கும் அளவுக்கு முன்னுதாரணமானவர். சூழ்ச்சிமிக்கவர்.

 

நரியின் தந்திரமும் யானையின் பேருருவமும், சிங்கத்தின் பராக்ரமும், புலியின் பாய்ச்சலும் உடையவர். ஆயினும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு துறவி; செல்வத்தையும் பதவியையும் துச்சமாக மதித்தவர். மாபெரும் மகத சாம்ராஜ்யத்தை — அலெக்ஸாண்டரை நடுங்க வைத்த பிரம்மாண்டமான படையை– உருவாக்கிய – சாணக்கியன் இருந்ததோ ஒரு சிறு குடிலில்; இதனால்தான் அவருக்கு மதிப்பு; பற்றற்ற வாழ்க்கையில் பற்றுக் கொண்டதால் எதைக் கண்டும் அஞ்சவில்லை.

 

சிறந்த நிர்வாகியான சாணக்கியனை நிறைய புராதன எழுத்தாளர்கள் போற்றிப் புகழ்ந்துள்ளனர். நீதி நூல்களும் கதைகளும் அவர் பெயரை மொழிகின்றன. தண்டியின் தச குமார சரிதம், விஷ்ணு ஸர்மனின் பஞ்ச தந்திரம் அவர் பெயரைப் போற்றுகின்றன. பாணனும், வராஹமிஹிரரும், சோமதேவரும், நீதி சாஸ்திரத்தின் ஆசிரியர் காமந்தகியும் முதல் அத்தியாயத்திலேயே அவருக்கு முதல் வணக்கம் செலுத்துகின்றனர். விஷ்ணு புராணம் அவரைக் கௌடில்யர் என்ற பெயரில் குறிப்பிடுகிறது. பாகவத புராணம் நந்தர்களை முறியடிக்கும் பிராமணன் என்று மட்டும் சொல்லும்.

 

உயர்ந்த சிந்தனை, பரந்த அறிவு, எளிய வாழ்க்கைக்கு முன்னுதாரணம் சாணக்கியன். அவர் எழுதிய அர்த்த சாஸ்திரம் போன்ற பொருளாதார நூல் பழங்கால உலகில் எங்குமே இல்லை.

 

சந்திரகுப்த மௌர்யன் என்னும் பேரரசனின் அதிகாரி அவர் வீட்டிற்குள் சென்றபோது கண்ட காட்சியை வருணிக்கிறார்:-

 

அஹோ ராஜாதிராஜ மந்த்ரிணோ விபூதிஹி–

 

உபலஸகலமேதத் பேதகம் கோமயானாம்

படுபிருபஹ்ருதானாம் பர்ஹிஷாம் ஸ்தூபமேதத்

ஸரணமபி சமிதிபஹ ஸுஸ்யமாணாபிராபி

விர்னமிதபடலாந்தம் த்ருஸ்யதே ஜீர்ணகுட்யம் (3-15)

 

பொருள்:

மன்னாதி மன்னனின் மந்திரியின் செல்வத்தைப் பற்றிக் கேளுங்கள்:-

பசுஞ்சாண விரட்டிகளை உடைக்க ஒரு கல்லைக் கண்டேன்; அதோ இளம் சிறார்கள் — சிஷ்யப் பிள்ளைகள் — சேகரித்த தர்ப்பைப் புல் இருக்கிறது; அவருடைய குடிலின் சுவர்கள் பாழடைந்து இருக்கின்றன; மேல் கூரையில் காயப்போட்டுள்ள யாகத்துக்கான மரக்  குச்சிகளின் பாரம் தாங்காது கூரை சரிந்து நிற்கிறது.

 

 

முதல் கதை

 

பாடலிபுத்திரத்தில் கிரேக்க தூதர் பதவி ஏற்ற மெகஸ்தனீஸ் சாணக்கியனைப் பார்க்க வந்தார். அது இரவு நேரச் சந்திப்பு. ஆட்சி சம்பந்தப்பட்ட ஓலைச் சுவடிகளைப் புரட்டிக் கொண்டிருந்தார் சாணக்கியன். ஒரு மூலையில் தீப ஒளி பிரகாஸித்துக் கொண்டிருந்தது. மெகஸ்தனீஸ் உள்ளே நுழைந்தவுடன் அந்த விளக்கை அணைத்துவிட்டு, சாணக்கியன் வேறு ஒரு தீபத்தை ஏற்றினார். மெகஸ்தனீசுக்கு பெரும் வியப்பு!

 

ஐயன்மீர்! ஏன் ஒரு விளக்கை அனைத்து இன்னும் ஒரு விளக்கை ஏற்றினீர்? இதன் தாத்பர்யம் என்னவோ? என்றார் மெகஸ்தனீஸ்.

 

சாணக்கியன் சொன்னார்:

நீவிர் வரும் வரை எரிந்த தீபம் அரசங்கப் பணி நிமித்தம் ஆட்சி நிர்வாக வேலைகளுக்காக, அரசு செலவில் ஏற்றப்பட்டது. இப்போது நாம் சந்திப்பது அரசுப் பணியல்ல நீவிர் எனது விருந்தாளி; ஆகவே இது என் செலவில் எரிக்கப்படும் தீபம் ; ஆகையால்தான் இதை ஏற்றினேன்.

 

இதுதான் சாணக்கியனின் குணாதிசயங்களைக் காட்டும் நிகழ்ச்சி. தன்னலம் கருதாத் தகைமையாளராக இருந்தும் அரசுப் பணி இது, சுய வாழ்வு இது என்று வரம்பு கட்டிய மாமனிதன்.

 

அவலட்சணப் பிராமணன்; இரண்டாவது கதை

 

சாணக்கியன் பல நீதி நூல்களுக்கும் ஆசிரியன்; அவனுக்கு விஷ்ணுகுப்தன் கௌடில்யன் (கௌடல்யன்) என்ற பெயர்களும் உண்டு. அவர் வாழ்ந்த காலத்தில் மகத சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள் நவநந்தர்கள் எனப்படும் ஒன்பது பேர் ஆவர். மஹா பத்ம நந்தன் தலைவன். அவர்களுக்கு ராக்ஷஸன் என்ற திறமையான அமைச்சன் உதவினான்.

 

சாணக்கியன் பற்றி அதிகத் தகவல் கிடைக்கவில்லை. ஆனால் விஸாக தத்தன் எழுதிய முத்ரா ராக்ஷஸம் என்ற நாடகத்திலிருந்து வாழ்க்கைச் சரிதத்தை ஒருவாறு ஊகிக்க முடிகிறது. அவர் ஒரு முறை சாப்பாட்டுப் பந்தியில் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தாராம். அறிவின் சிகரத்தை எட்டிய அவருக்கு ஆண்டவன் அழகைக் கொடுக்கவில்லை.

யார் இந்த அவலட்சணமான பிராமணன்? முதல் வரிசையில் இவன் எதற்கு உட்கார்ந்தான்? என்று மன்னன் மஹா பத்ம நந்தன், சாணக்கியனை தர, தர வென்று இழுத்துச் சென்று வெளியே விட்டானாம். காரணமின்றி தன்னை அவமானப் படுத்திய நந்த வம்ஸத்தை வேர் அறுக்காமல் என் ஸிகையை முடிய மாட்டேன் என்று குடுமியை அவிழ்த்துவிட்டு அவரும் வெளி ஏறினாராம். அன்று முதல் அவர் திட்டம்போட்டு நவ நந்தர்களை ஒழித்ததோடுமில்லாமல் மயில் வளர்க்கும் முரா வம்ஸத்தைச் சேர்ந்த சந்திரகுப்தனைப் பேரரசனாக்கினார்.

 

முத்ரா ராக்ஷஸ நாடக வசனத்தில் வரும் காட்சி:

என்னை அன்று தர தர என்று வெளியே இழுத்ததை வேடிக்கை பார்த்த மக்கள் இன்று நவ நந்தர்களை அரசுக் கட்டிலில் இருந்து நான் விழுத்தட்டியதையும் பார்த்தார்கள்; ஒரு மலை உச்சியின் மீதுள்ள யானையை சிங்கம் மலை உச்சியில் இருந்து இழுத்துப் போட்டதைப் போல நான் செய்துவிட்டேன்.

 

‘நந்த வம்ஸத்தை விழுத்தாட்டியது இருக்கட்டும்; என் புத்தி மட்டும் என்றும் குறைந்து விடக்கூடாது’ என்று வேண்டியதாகவும் ஸம்ஸ்கிருத நாடக வசனம் செல்கிறது. நவ நந்தர்களின் திறமை மிகு அமைச்சன் ராக்ஷஸன் போட்ட ஒவ்வொரு திட்டத்துக்கும் சாணக்கியன் வேட்டு வைத்ததை ஸம்ஸ்கிருத நூல்கள் சித்தரிக்கின்றன.

 

வேறு சில சுவையான கதைகளும் உள. அவற்றைத் தனியே மொழிவேன்.

 

–சுபம்–

மெகஸ்தனீஸ், அர்ரியன், ப்ளினி பொய் சொல்வார்களா?

indaca

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1431; தேதி 23 நவம்பர், 2014.

இந்திய வரலாற்றை விரைவில் மாற்றி எழுத வேண்டும். இதற்காக பல் துறை வித்தகர் அடங்கிய இந்திய வரலாற்று சங்கம் அமைக்கவேண்டூம். வேத ஆராய்ச்சிக்கு என ஒரு சங்கம் அமைக்கவேண்டும். ஏனெனில் சிந்து சமவெளி நாகரீகம் பற்றி ஆராய்வோர் பக்கத்துக்கு பக்கம் வேதங்களை மேற்கோள் காட்டித்தான் எழுத முடிகிறது. அஸ்கோ பர்போலாவின் டிசைபரிங் தெ இண்டஸ் ஸ்க்ரிப்ட் Deciphering the Indus Script புத்தகத்தைப் பார்த்தால்—படித்தால் இது விளங்கும். வேதங்களோ வெகு வேகமாக அழிந்து வருகிறது. எல்லோரும் வேதத்தைப் புத்தகத்தை வைத்துப் படிக்கத் துவங்கி விட்டனர். மனப்படாமாக வைத்துக் கொள்ளும் சக்தி மிகவும் குறைந்து விட்டது. போன் நம்பரைக் கேட்டால்கூட அந்த போனை on ‘ஆன்’ செய்து அதைப் பார்த்துப்படித்தாதால்தான் தன்னுடைய போன் நம்பர் தெரியும்!!

உலகின் மிகப் பழைய (Rig Veda) ரிக் வேதப் புத்தகத்தில் 150 அரசர்களின் பெயர்கள் மற்றும் மிகவும் பழமையான – அருமையான ரஹசியங்கள் உள. நிற்க

கட்டுரைத் தலைப்பு அர்ரியன், மெகஸ்தனீஸ், பிளினி என்று சில புரியாத கிரேக்க, ரோமானிய பெயர்களைச் சொல்கிறதே ! இவர்கள் யார்?

யார் இந்த அர்ரியன்?
அர்ரியன் (கி.பி.92-175):- கிரேக்க நாட்டு வரலாற்று அறிஞர்—தத்துவ வித்தகர். துருக்கியில் பிறந்தார். ஏதென்ஸில் இறந்தார்.

யார் இந்த பிளினி?
பிளினி மூத்தவர், பிளினி இளையவர் என்று இருவர் உண்டு. இருவரும் சொந்தக்காரர்களே. ரோமானிய எழுத்தாளரும் தத்துவ ஞானியுமான மூத்த பிளினி கி.பி. 23- கி.பி.79 க்கு இடையே வாழ்ந்தார். இளைய பிளினி ரோம் நகரில் மாஜிஸ்டிரேட் பதவி வகித்தார் புத்தகங்கள் எழூதினார். வாழ்ந்த காலம் கி.பி. 61- கி.பி.112.

யார் இந்த மெகஸ்தனீஸ்?
இவர் மகத சாம்ராஜ்யத்தின் மாபெரும் மன்னன் சந்திர குப்த மௌர்யனியிடம் செல்யூகஸ் நிகோடரின் தூதராக இருந்தவர். அர்த்த சாஸ்திரம் என்னும் உலகின் முதல் பொருளாதார நூலை எழுதிய சாணக்கியன் காலத்தவர். இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். இண்டிகா என்ற நூலை எழுதியவர். ஆனால் நமக்கு அந்த நூல் கிடைக்க வில்லை. மற்றவர்கள் இங்குமங்கும் காட்டிய மேற்கோள்கள் மூலம் சிற்சில பகுதிகள் கிடைத்தன. வாழ்ந்த காலம் கி.மு..350- கி.பி.290.
arrian
Picture of Arrian

இந்த மூவரும் அவரவர்தம் துறைகளில் கரை கண்டவர்கள். மேலும் இந்து ஆதரவு பாரதீய ஜனதா கட்சியையோ, இந்து விரோத திராவிடக் கட்சி களையோ, கடவுள் விரோத மார்கஸீய கட்சிகளையோ சாராதவர்கள். ஆகையால் இவர்களை யாரும் சந்தேகிக்க முடியாது. இவர்கள் மூவரும் தங்கள் நாடுகளுக்கும் மேலாக அல்லது சமமாக வைத்து இந்தியாவைப் பாராட்டுபவர்கள். கிருஷ்ணரையும் ஹெர்குலீஸையும் ஒன்று என்று கருதியவர்கள். மெகஸ்தனீஸ் என்பவரோ மதுரை மீனாட்சியின் புகழையும் பாடியவர்!

அதிசயத்திலும் அதிசயம்—உலக மஹா அதிசயம்— இந்தியாவுக்கு வந்த எந்த வெளி நாட்டு யாத்ரீகர்களும் வெள்ளைக்கரர்கள் எட்டுக் கட்டிய ஆரிய—திராவிட பொய்மைக் கதைகளை குறிப்பிடவில்லை. ஆரிய—திராவிட வாதம் பொய்மை வாதம் என்பது இதன் மூலம் வெள்ளிடை மலையென விளங்கும்.

இந்த மூவரும் இந்திய வரலாறு பற்றிக் கூறும் செய்தி மிகவும் வியப்பானது. இவர்கள் மூவரும் அவர்கள் காலத்துக்கு முந்திய சுமார் 150 அரசர்கள் வரை குறிப்பிடுவர். இது 2000 ஆண்டுகளுக்கு முன், இந்தியர்கள் என்ன நம்பிக்கை கொண்டிருந்தனர் என்று காட்டுகிறது. நாம் இப்பொழுது படிக்கும் வரலாற்றுப் புத்தகம் வின்ஸென் ட் ஸ்மித் என்பவர் எழுதியது. அக்காலத்தில் பைபிள் பிரசாரகர்கள் உலகம் என்பது கி.மு.4004 அக்டோபர் 23 ஆம் தேதி காலை ஒன்பது மணிக்குப் பிறந்தது என்று சொல்லியதை நம்பியவர். இந்தியாவுக்கு மன்னர்களும் இல்லை, வரலாறும் இல்லை எல்லாம் புத்தர் காலம் முதற்கொண்டே வந்தன — என்று கதை எழுதியவர்.

india_as_known_to_kautilya_and_megasthenes_idj539

ஆனால் அர்ரியன் என்பவர் மஹா பாரத கால மன்னர்கள் 6000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் கூறுகிறார். 153 மன்னர்கள் 6042 ஆண்டுகள் ஆண்டதாக அர்ரியனும், 154 மன்னர்கள் 6451 ஆண்டுகள் ஆண்டதாக பிளினியும் கூறுகின்றனர். இந்தக் கணக்கெல்லாம் அவர்கள் வாழ்ந்த காலத்துக்கு முந்தையது என்பதைக் கருத்திற்கொண்டால் இன்னும் 2000 ஆண்டுகளை நாம் சேர்க்கவேண்டும்.

கிருஷ்ணருக்கும் மௌர்ய சந்திர குப்தனுக்கும் இடையே 138 மன்னர்கள் ஆண்டதாக மெகஸ்தனீஸ் சொல்லுகிறார். ஒரு மன்னருக்கு 35 ஆண்டு ஆட்சிக்காலம் வைத்தாலும் 4830 ஆண்டுகள் ஆகும். மெகஸ்தனீஸோ நமக்கும் 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். கண்ணபிரான் ஆட்சி செய்தது ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆகும்.

இவர்கள் கூறுவதில் கொஞ்சம் முரண்பாடுகள் இருந்தாலும் எவ்வளவு பழமையானது என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நம் மக்கள் நம்பினர் என்பது புலனாகும்.

பதிற்றுப் பத்து என்னும் சங்க இலக்கிய நூல் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் 58 ஆண்டுகளும், சேரன் செங்குட்டுவன் 55 ஆண்டுகளும், ஆடுகோட்பாட்டு சேரலாதன் 35 ஆண்டுகளும் ஆண்டதாகச் செப்பும். மேலைநாட்டு ரத்தக்களரிகளையோ மொகலாய சாம்ராஜ்ய படுகொலைகளையோ பழைய இந்திய வரலாற்றில் காண முடியாது. ரகுவம்ச காவியத்தில் காளிதாசன் சொன்னது போல வயதான மன்னர்கள் தாங்களாகவே வலிய வந்து தன் மகனிடம் ஆட்சி ஒப்படைத்து வானப்ரஸ்தம் சென்றனர்.

pliny-the-elder-greek-philosopher
Pliny the Elder

கபிலரும் புறநானூற்றுப் பாடல் 201-ல் இருங்கோவேளின் 49 தலைமுறை பற்றிப் பேசுவார். கபிலரே 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவருக்கு 1500 முதல் 1800 ஆண்டுகளுக்கு முன் இருங்கோவேளின் முதல் தலைமுறை துவாரகையிலிருந்து யாதவர்களை அழைத்துக் கொண்டு தமிழகம் வந்தது.

பாணினி தனது இலக்கண சூத்திரங்களில் பாரத்வாஜரின் 21-ஆவது தலைமுறை, கௌதம மஹரிஷியின் 53-ஆவது தலைமுறை என்றெல்லாம் எடுத்துக்காட்டுவார். பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் நீண்ட குருமார்கள் பட்டியல் உள்ளது. எல்லாப் புராணங்களிலும் மன்னர் பரம்பரைகள் 130 முதல் 150 வரை உள்ளது.

ஆக பாணினி, கபிலர், அர்ரியன், பிளினி, மெகஸ்தனீஸ், உபநிஷத், புராணங்கள் ஆகிய அனைத்தையும் நம்பி நம் வரலாற்றைத் திருத்தி எழுதுவது நம் கடமை. முதலில் இப்போதுள்ள வரலாற்றுக்கு அருகிலேயே இவைகளின் மாற்றுக் கருத்துகள் என்று கொடுப்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது. நமது தலைமுறை மாணவர்கள் அவைகள மேலும் ஆராய்ந்து புது வரலாறு எழுதட்டும். இதன் மூலம் தமிழர்தம் பழமையும் பெருமையும் மேலும் ஓங்கும்.

Ancient-India-as-De

குதிரை போட்ட வெடிகுண்டு

குதிரை பற்றிய அமெரிக்க ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி நேற்று எல்லா இந்தியப் பத்திரிக்கைகளிலும் வந்துள்ளது. ஆரிய – திராவிட வாதம், உளுத்துப்போன கட்டை என்பது இதிலிருந்து தெரிகிறது. இந்தச் செய்தி அந்த வாதத்தில் மீது வீசிய வெடி குண்டாகும்.

குதிரையும் காண்டாமிருகமும் 54 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்திய துணைக்கணத்தில் தோன்றிய பிராணீகள் என்பதை மஹாராஷ்டிர மாநில நிலக்கரிச் சுரங்கத்தில் கிடைத்த படிம அச்சு எலும்புகளைக் கொண்டு அவர்கள் முடிவு செய்துள்ளனர். நாம்தான் உலகிற்கு பசுமாடுகளையும், குதிரைகளையும் அறிமுகப்படுத்தி மனித குலத்தை நாகரீகப் படுத்தினோம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இது நாள் வரை ஆரிய—திராவிடம் பற்றிப் பிதற்றி வந்தோர், சைபீரியாவில் இருந்து குதிரை வந்ததா? அரேபியாவில் இருந்து வந்ததா? ஸ்டெப்பி புல்வெளியில் இருந்து வந்ததா? என்று பி.எச்.டி பட்டத்துக்காக பொய்யுரைகளை எழுதி வந்தனர்.

சிந்து சமவெளி மக்களோவெனில், பசு மாடு, குதிரை ஆகியவற்றின் புனிதம் கருதி அவைகளை முத்திரையில் பொறிக்கவில்லை. காளை மாட்டை ஆயிரம் முத்திரைகளில் பொறித்த நம்மவர் ஒரு முத்திரையிலும் பசுவைப் பொறிக்கவில்லை. இது போலவே குதிரையும்.

india_as_known_to_kautilya_and_megasthenes_idj539

அயஸ் என்பது பற்றி நான் முன்னரே சொல்லிவிட்டேன். தமிழர்கள் பொன் என்பதை தங்கத்துக்கும், இரும்புக்கும், ஐம்பொன் சிலகளில் உள்ள ஐந்து உலோகங்களுக்கும் பயன்படுத்தியது போலவே ரிக்வேதத்தில் அயஸ் என்பதைப் பயன்படுத்தினர். இதைச் சரியாக மொழி பெயர்க்காமல் இரும்பு என்று எழுதி காலக் கணக்கீட்டைப் பின்னுக்கு இழுத்தனர். உண்மையில் இரும்பு கண்டு பிடித்ததும் நாமே —– சிவபெருமான் எரித்த முப்புரங்களில் இரும்பு, தங்கம், வெள்ளி என்ற 3 கோட்டைகள் உள்ளன!
–சுபம்–

contact swami_48@yahoo.com

எதையும் நம்பாதே! யாரையும் நம்பாதே!!

 

Marco Polo in Kiribati stamp.

(இந்தக் கட்டுரை ஆங்கிலத்திலும் கிடைக்கும். கட்டுரையை வேறு இடத்தில் பயன்படுத்துவோர், பிளாக் பெயரையோ, கட்டுரையாளர் லண்டன் சாமிநாதன் பெயரையோ வெளியிட வேண்டுகிறோம். தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் மதிப்பு கொடுங்கள்.)

இல்லை என்றால் உண்டு?

  1. புத்தர் பற்றி மெகஸ்தனீஸ் சொல்லவில்லை. புத்தர் அப்போது பிரபலமாகவில்லையோ? அசோகர் அவரை பெரிய ‘ஆள்’ ஆக்கிவிட்டாரோ? மதுரை மீனாக்ஷி பற்றி எழுதிய மெகஸ்தனீஸ் (கி.மு.350), புத்தரை அறியாதது ஏனோ!! (மெகஸ்தனீஸ் எழுதிய புத்தகம் ‘இண்டிகா’ முழுதும் நமக்குக் கிடைக்கவில்லை)

 

  1. உப்பு பற்றி வேதம் சொல்லவில்லை. உப்பே இல்லாமல் சாப்பிட்டார்களோ? ஆனால் சர்க்கரையைக் கண்டுபிடித்தது அவர்கள் தானே! (எனது கட்டுரை The Sugarcane Mystery : Indus Valley and Ikshvahu Dynasty காண்க)

 

  1. சிவன் என்ற சொல் தொல்காப்பியம், சங்க இலக்கியப் பாடல்களில் இல்லை. தமிழர்களுக்கு ஏழாம் நூற்றாண்டு வரை ஏன் சிவன் என்ற சொல்லே தெரியவில்ல? அவர் தமிழ்க் கடவுளே இல்லையோ?

 

  1. விநாயகர் பற்றி, காளிதாசன், மாணிக்கவாசகர், சங்க இலக்கியத்தில் இல்லை. தமிழர்களுக்கு பிள்ளையார் இறக்குமதி தெய்வமோ? வடக்கேயிருந்து வந்தாரோ? சிறுத்தொண்டர் ,வாதாபிக்குப் போகும் முன் தமிழர்களுக்கு இப்படி ஒரு தெய்வம் இருப்பதே தெரியாதோ? சங்க இலக்கிய கடவுள் வாழ்த்துக்கள் எல்லாம் சிவ மயமாகவும் நாராயணமயமாகவும் இருப்பது ஏன்?

 

  1. மார்க்கோ போலோ சீனாவின் நெடுஞ் சுவர் பற்றி எழுதவில்லை. மார்க்கோ போலோ சினாவின் முக்கிய வழக்கமான தேநீர் அருந்துவது பற்றி ஏன் ஒன்றுமே சொல்லவில்லை? பீங்கான் தட்டுகள், கோப்பைகளுக்கு உலகப் பிரசித்தமான இடம் சீனா. அதை எப்படி அவர் சொல்லாமல் விட்டார்? மார்க்கோபோலோ சீனாவுக்கே போகாமல், ஜெனோவா சிறையில் கைதிகளிடம் கேட்ட கதைகளை எல்லாம் நன்றாக அளந்துவிடாரோ?

 

  1. சிந்து சமவெளியில் பசு மாடு முத்திரைகள் இல்லை, காளை மட்டுமே உள்ளது. ஏன்?—-இந்துக்களுக்கு பசு தெய்வம். வேதங்கள் பசுக்களைப் புகழ்கின்றன. சிந்து சமவெளி மக்களுக்கு பசு புனிதமானதோ?—- அவர்கள் வேத கால நாகரீகமோ? அதனால்தான் பசுக்களை மட்டும் முத்திரையில் குத்தவில்லையோ?

 

  1. ஆதி சங்கரரும் ராமானுஜரும் தமிழர்கள். ஆனால் தமிழில் எழுதாமல் வட மொழியில் மட்டுமே எழுதினர். அவர்களுக்குத் தமிழே தெரியாதோ?

 

  1. மாணிக்கவாசகரின் இயற்பெயர் யாருக்கும் தெரியாது. யாரும் சொல்லவில்லை. அவர் பெயர் இல்லாப் பூச்சியோ?

 

  1. கடவுள் மாமுனிவர் மாணிக்கவாசகர் பற்றி எழுதிய புத்தகத்தில் மாணிக்கவாசகர் பெயரைச் சொல்லவே யில்லை. அவ்வளவு குரு பக்தியோ? அல்லது ஞாபக மறதியா?

Buddha in Pakistan stamp

10. அப்பர், சம்பந்தர், சுந்தரர் பற்றி, மாணிக்கவாசகர் ஒன்றுமே சொல்லவில்லை. ஒருவேளை அவர்களுக்கு முன்னால் வாழ்ந்திருந்தால் மூவரும் அவரைப் பற்றியாவது சொல்லி இருக்கலாமே! ஏன் சொல்லவில்லை?

 

11. தமிழர்கள் சிந்து நதி பற்றி, சங்க இலக்கியத்தில் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் கங்கை நதி பற்றி வியப்பான விஷயங்களைச் சொல்லி இருக்கிறார்கள். தமிழர்களுக்கு சிந்து சமவெளி நாகரீகம் பற்றி ஒன்றுமே தெரியாதோ? சிந்து என்ற ஒரு பகுதியையே அறியாத மக்களோ?

 

 

12. சிறுநீர் கழிப்பது, மலஜலம் கழிப்பது பற்றி ஒரு நாட்டின் இலக்கியம் ஒன்றும் பேசாது. அப்படியானால் அவர்கள் சிறு நீர், மலஜலம் கழிக்கும் வழக்கம் இல்லையோ?

 

13. உலக மகா இலக்கண வித்தகர் பாணினி சேர சோழர் பாண்டியர் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. தெற்கு திசை பற்றியும் ஒன்றும் சொல்லவில்லை. அவருக்கு தெற்கு திசையே தெரியாதோ! அல்லது தமிழ் நாகரீகம் அப்போது இல்லவே இல்லையோ?

 

14. காளிதாசனின் ஒரு நாடகத்தில் விதூஷகனும் (பிராமணன்), கபிலர் என்ற ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ ஒரு சங்கப் பாடலிலும் மாமிச உணவின் ருசியைப் புகழ்கிறார்கள். இந்த ஐயர்கள் மாமிசம் சாப்பீட்டார்களோ?

 

15. டாக்டர் பட்டத்துக்காக தத்துப் பித்தென்று கண்டதையும் கடையதையும் எழுதும் இவர்களைக் கண்டு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. நான் எனது 40 ஆண்டுக்கால ஆராய்ச்சியில் சேகரித்த சில உதாரணங்களை மட்டும் மேலே கொடுத்துள்ளேன். இவை எல்லாம் பிஎச்.டி-வாலாக்களுக்கும் பட்டிமன்ற வாய்ச்சாளர்களுக்கும், திண்ணைப்பேச்சு சோம்பேறிகளுக்கும் மட்டுமே பயன்படும் வாதங்கள்—குதர்க்க வாதங்கள்/

 

16. சங்கத் தமிழ் பாடல்களில் மூன்றில் ஒரு பகுதி ஆண்கள் பரத்தையிடம் செல்வதைப் பற்றிப் பாடுவதை பல அறிஞர்கள் சுட்டிக்காட்டி இது புலவர்கள் மிகைப்படுத்திப் பாடுவது என்று கூறியுள்ளனர். தமிழர்கள் ஒழுக்க சீலர்கள், ஒருவனுக்கு ஒருத்தி என்ற உன்னத கொள்கையுடையோர் என்பதை உலகம் அறியும்.

 

Bull on Indus Seal

17. ஆனால் அதே தமிழர்கள் மற்ற சம்ஸ்கிருத நூல்களில் வரும் ஒரு செய்யுளை எடுத்துக் கொண்டு அபத்தமான கருத்துகளை அள்ளித் தெளிக்கும்போது வேதனையாக இருக்கிறது. மனு தர்ம சாத்திரம் பற்றி விஷம் கக்குவது இவர்களுக்கு வாடிக்கை. மனு தர்ம சாத்திரத்தை எல்லா தமிழ் கல்வெட்டுகளும் மன்னர்களும் ஏன் புகழ்ந்தார்கள்? அதில் உள்ள எல்லா விஷயங்களும் உண்மையில் பின்பற்றப்பட்டதா? அதில் எது இடைச் செருகல்? எது உண்மை? அது இந்தியாவில் எந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு எப்போது எழுதப்பட்டது? என்பதை எல்லாம் நோக்குவதில்லை.

 

18. ஒரு புத்தமத ‘அறிஞர்’, யாகத்தில் கொல்லப்பட்ட பசுக்களின் ரத்தம் ஆறாக ஓடியது பற்றி கதை அளந்து இருக்கிறார். அவருக்கு இதே வரிகள் (ரத்த ஆறு) சங்கத் தமிழ் இலக்கியத்திலும் கலிங்கத்துப் பரணியிலும் இருப்பது தெரியாது!! புலவர்கள் மிகைப்படுத்தி சொல்லும் விஷயங்களை அப்படியே எடுத்துக் கொள்வோரின் ‘அறிவு’ அபாரமானதுதான்!!!

 

19. வெளிநாட்டு அறிஞர்’கள் சில இடங்களில் மட்டும் இடைச் செருகல் என்று கதை அளப்பார்கள். மனு போன்ற நூல்களில் இடைச் செருகல் பற்றி பேச மாட்டார்கள். ஒரு நூலின் காலத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டும் என்றால் கடைசியாக வந்த பாடலை மட்டும் காட்டுவார்கள். இதெல்லாம் அவர்களுக்கு கைவந்த கலை! இந்திய எண்களையே அராபிய எண்கள் என்று பெயர் சூட்டி நம்மை மட்டம் தட்டியவர்கள்தானே.

 

 

20. இந்தியாவில் உள்ள எல்லா நல்ல விஷயங்களும் பாபிலோனியா, கிரேக்க, எகிப்திய இறக்குமதிகள்!! எல்லா கெட்ட விஷயங்களும் ஆரிய, திராவிட கண்டுபிடிப்புகள்! என்பது அவர்கள் கணிப்பு!

 

21. ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்தும் திராவிடர்கள் மத்திய தரைக் கடல் பகுதியில் இருந்தும் வந்தவர்கள், ஆரிய சிவனும் திராவிட சிவனும் வேறு வேறு, சிவலிங்கம், யோனி என்பதெல்லாம் மனிதனின் ஜனன உறுப்புகள், சிந்து சமவெளி எழுத்து திராவிட எழுத்து, வேதகால மக்கள் மாடு மேய்த்த நாடோடிகள், பெண்களுக்கு எதிரானவர் மனு, இந்துக்கள் கணவர்கள் இறந்தால் மனைவியை உயிருடன் எரித்துவிடுவார்கள், சிந்து சமவெளி மக்கள்தான் ஜாதியைக் கண்டுபிடித்தவர்கள், பிராமணர்கள் கி.மு 1000-ல் தெற்கே குடியேறியவர்கள்—–இப்படி ஏராளமான ஆதாரமற்ற ,இன்று வரை நிரூபிக்க முடியாத,  பல “கண்டுபிடிப்புகளை” வெளிநாட்டார் புத்தகத்தில் காணலாம்.

Salt pan in Kutch, Gujarat

இதிலிருந்து நாம் அறிய வேண்டிய பாடம்:

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள்)

எதையும் யாரையும் நம்பாதீர்கள்.ஒருவர் ஒரு விஷயத்தைச் சொல்லாததால் அது இல்லாமல் போகாது. மற்ற விஷயங்களையும் கருத்தில் கொண்டு ஆராய வேண்டும்.

 

எதையும் முழுக்கப் படிக்காமல் கேள்வி கேட்காதே. யாரோ ஒருவர் எழுதிய ‘ஆய்வுக் கட்டுரையைப்’ படித்துவிட்டு நம்பிவிடாதே. மஹா பாரதம், ராமாயணம், புராணங்களை முழுக்கப் படிக்காமல் வாதம் செய்யாதே. சம்ஸ்கிருதமும் தமிழும் சொல்வதை முழுவதும் படித்த பின்னரே அரை வேக்காட்டு நிலையில் இருந்து ஒருவர் முழு வேக்காட்டு நிலைக்குப் போக முடியும். வெளிநாட்டுக் கருத்துக்களை விட, உள்நாட்டு அறிஞர்களுக்கு அதிக மதிப்புக் கொடு. பழைய விஷயங்களில் முன்னோர்கள் சொன்னதை நம்பு என்பதே நாம் கற்க வேண்டிய பாடம்.

 

இது தொடர்பான முந்தைய கட்டுரைகள்

1/ The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvaku Dynasty

2/ Biggest Brain wash in The World

3/ How Old Is Indian civilisation?

4..தமிழ் இனத்தின் வயது என்ன?

5..தமிழன் காதுல பூ

N.B.Pictures are taken from other sites.