உத்வேகமூட்டும் இயற்கை ஆர்வலர்கள்! (Post No7768)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7768

Date uploaded in London – – 1 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் அலைவரிசை ‘A’யில் காலைமலர் நிகழ்ச்சியில் தினமும் காலை 6.55க்கு 1-3-2020 முதல் 10-3-2020 முடிய ஒலிபரப்பப்பட்ட பத்து சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு உரைகளில் ஐந்தாவது உரை

(5-3-2020 அன்று ஒலிபரப்பானது)

உத்வேகமூட்டும் இயற்கை ஆர்வலர்கள்!

ச.நாகராஜன்

இயற்கைச் சூழலை மாசில்லாது பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி உலகெங்கும் மேம்பட இயற்கை ஆர்வலர்கள் உத்வேகமூட்டும் முன்மாதிரியாகத் திகழ்கின்றனர்.

சாமானியனிலிருந்து ஹாலிவுட் பிரபலங்கள் வரை இதில் முனைப்புடன் ஈடுபடுவது வரவேற்கப்பட வேண்டிய செய்தியாகும்.

உலகின் பிரசித்தி பெற்ற நடிகரான லியனார்டோ டிகாப்ரியோ (Leonardo Dicaprio) 50 லட்சம் டாலர் தந்து அமேஸான் காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை வலியுறுத்தியுள்ளார்.

அமேஸான் காடுகளில் இயற்கையாகவும் சிலசமயம் செயற்கையாகவும் ஏற்படும் தீ விபத்து பல்லுயிர் பெருக்கத்திற்குப் பெரும் ஊறு விளைவித்திருக்கிறது.

இதே போல இம்பாலின் மேற்கே உள்ள காடுகள் அழிந்து வரும் நிலையைக் கண்ட 45 வயதான மொய்ரங்தெம் லொய்யா (Moirangghem Loiya)   மருலாங்கோல் மலைத் தொடர் பகுதிகளில் (Maru Longol hill range) தனது இளம் பருவத்தில் குழந்தையாக இருக்கும் போது அடிக்கடி செல்வது வழக்கம்.

தனது கல்லூரிப்படிப்பை முடித்த நிலையில் 2000ஆம் ஆண்டில் அங்கு சென்ற போது அந்தப் பகுதி முற்றிலுமாக எரிக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு திடுக்குற்றார்; வேதனை கொண்டார். உடனே அந்தப் பகுதியில் இழந்த பசுமையை மீட்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மரங்களை நட ஆரம்பித்தார். கடந்த 19 வருடங்களாக இடைவிடாது அவர் நட்டு வந்த மரங்கள் 300 ஏக்கர் காட்டை உருவாக்கி இழந்த பசுமையை மீட்டிருக்கிறது.

இந்திய அரசியல் அமைப்பின் 51-A (g) பிரிவானது ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இயற்கையைப் பாதுகாப்பதை கடமையாகக் கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்துவதோடு விலங்குகளின் மீது இரக்கத்துடன் நடந்து அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்கிறது.

லொய்யாவின் தன்னலமற்ற பணியால் உள்ளூர் மக்களும் உற்சாகத்துடன் அவருடன் இணைந்து இயற்கைப் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசும் லொய்யாவின் பணியை வரவேற்று ஊக்குவிக்கிறது.

250 வகையான தாவரங்கள் அங்கு வளர்கின்றன; இவற்றில் 25 வகையான மூங்கில் இருப்பது ஒரு சிறப்பு அம்சமாக இலங்குகிறது. அத்துடன் ஏராளமான பாம்பு வகைகளும், விலங்கினங்களும் பறவைகளும் இப்பகுதியில் பயமின்றி வாழ்ந்து வருகின்றன.

பெருந்திரளான மக்கள் இந்த இயற்கைப் பசுமையைப் பார்த்துப் பரவசப்பட்டு தம் தம் அளவில் இயற்கைப் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். இதே போல நமது பகுதியில் உத்வேகமூட்டும் முன்மாதிரியாக நாம் திகழ்வோம் என ஒவ்வொருவரும் முன் வந்தால் பசுமை இந்தியா அமையும், இல்லையா?!

Script by S.Nagarajan (ச.நாகராஜன்)


tags – மொய்ரங்தெம் லொய்யா, இயற்கை ஆர்வலர், சுற்றுப்புறச்சூழல், விழிப்புணர்வு