மோக்ஷம் அடைவது எப்படி? வஸிஷ்டர் கூறிய கதை (Post. 10,592)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,592
Date uploaded in London – – 24 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

யோக வாசிஷ்டம்
மோக்ஷம் அடைவது எப்படி? வஸிஷ்டர் கூறிய விதஹவ்யன் கதை!

ச.நாகராஜன்
மோக்ஷம் அடைவது எப்படி? அது எங்கே இருக்கிறது?
வஸிஷ்டர் தெளிவாக பதிலைத் தருகிறார்.


மோக்ஷம் என்பது சுவர்க்கத்திலும் இல்லை, பாதாளத்திலும் இல்லை அல்லது பூமியிலும் இல்லை.
அது பிரக்ஞையைப் பொறுத்து அமைந்துள்ள ஒன்று.
அது தான் ஆத்ம ஞானம்!
மோக்ஷத்தை விரும்பும் ஒருவன் ஆசைகள் வசப்படுகிறான், எண்ணங்கள் வசப்படுகிறான், ஆகவே அவனுக்கு பந்தம் என்னும் தளை ஏற்படுகிறது.

ஆகவே வஸிஷ்டர் மிகத் தெளிவாகக் கூறுகிறார் -“ மோக்ஷம் அடைய வேண்டும் என்ற ஆசையைக் கூட விட்டு விடு” என்று!

வஸிஷ்டர் ராமருக்கு இது சம்பந்தமாக ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
விதஹவ்யன் என்ற ஒருவர் ஆத்ம ஞானம் பெற விரும்பினார். அதற்காக மலைகளுக்குச் சென்றார். மனம் மற்றும் உடல் சம்பந்தமான உபாதைகளிலிருந்து விடுபட இதுவே சரியான வழி என்று அவர் நினைத்தார்.
சாஸ்திரங்கள் கூறிய படி என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அந்தக் கர்மங்களை எல்லாம் ஒன்று விடாமல் செய்தார். ஆனால் அவருக்கு சாந்தி கிடைக்கவில்லை.
அலைபாயும் மனம் அப்படியே தான் இருந்தது.


புலன்களை அடக்கினார். மனத்தை அடக்கினார். ஒருவாறாக கடைசியில் சமாதி நிலையில் இருக்க அவரால் முடிந்தது. சமாதி நிலையில் நெடுங்காலம் இருந்தார்.
இதனால் அவர் தனது உடல் இறுகிப் போய்விட்ட நிலையை அடைந்திருப்பதை உணர்ந்தார். அவரால் நகரக் கூட முடியவில்லை.
தான் முயற்சி செய்து எப்படியாவது நகர வேண்டுமா அல்லது இப்படியே இதே நிலையில் தொடர்ந்திருக்க வேண்டுமா – அவருக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்.
விதஹவ்யனைப் பார்த்த சூரிய பகவான் அவரது பிரச்சினை என்னவென்பதைப் புரிந்து கொண்டார்.


அவர் மீது பிரகாசமான தன் ஒளியைப் பாய்ச்சினார். அவரை அவரது பிரச்சினையிலிருந்து விடுவித்து அவரது உடலை அவர் நகர்த்துமாறு செய்தார்.
விதஹவ்யரால் இப்போது நகர முடிந்தது.
நேராக மலையிலிருந்து இறங்கி மக்கள் அனைவரும் இருக்கும் இடத்திற்குச் சென்றார். இப்போது மைத்ரி என்னும் அனைவருடனுமான சம பாவ நட்புக் கொண்டு எல்லோருடனும் பழக முடிந்தது. அத்துடன் கருணை என்னும் அளப்பரிய இரக்கத்துடன் அனைவருடன் பழக முடிந்தது.
அவர் விருப்பம், ஆசை, வெறுப்பு, சந்தோஷம், துக்கம் ஆகிய அனைத்து நிலைகளையும் கடந்தார்.


வஸிஷ்டர் இந்தக் கதையைக் கூறியதோடு இது சொல்லும் நீதியை விளக்கலானார்.
சிலர் கஞ்சா, அபினி போன்ற போதை மருந்துகளை உட்கொண்டு மனதை அடக்க முயல்வதை வஸிஷ்டர் வெகுவாகக் கண்டித்தார்.
இதன் மூலம் மனதை சாந்தி அடையச் செய்யவோ அல்லது அடக்கவோ முடியாது என்று தெள்ளத் தெளிவாக அவர் கூறினார்.
அத்துடன் சில சித்திகளை அடைந்தவுடன் அதை அனைவருக்கும் காட்டும் விருப்பத்தையும் அவர் கண்டித்தார். அந்த அதீத சக்திகளைக் காண்பிக்கக் கூடாது என்று அவர் அறிவுரை கூறினார்.
ஹத யோகம் மூலம் உடலைக் கட்டுக்குள் கொண்டு வரலாமே தவிர மனதை அடக்கவே முடியாது என்றும் அவர் கூறினார்.

உலகியல் என்பது உடலிலும் மனம் என்னும் கருவியிலும் இருக்கிறது என்று அவர் விளக்கினார். ஆகவே மோக்ஷம் பற்றி எண்ணும் ஒருவன் முதலில் எல்லா வாஸனைகளையும் – ஆசைகளையும் – வெல்ல வேண்டும் என்றார் அவர்.
இது வாஸனா க்ஷயம் எனப்படும்.
வாஸனா க்ஷயம் அடைந்தவுடன் மனோ நாசம் ஏற்படும்.
அலைபாயும் மனம் இருக்காது.
ஆத்ம விசாரம் செய்யும் ஒருவனின் பாதையே சரியான பாதை என்பது வஸிஷ்டரின் முடிவு.
இந்த விசாரத்தினால், வைராக்யத்துடன் தொடர்ந்து செய்யும் இந்தச் செய்கையால், ஒருவன் படிப்படியாக முன்னேறி மோக்ஷத்தை அடைய முடியும்.
எவன் ஒருவன் அமைதியான மனதுடன் இருக்கிறானோ, எவன் ஒருவன் எல்லா ஆசைகளையும் துறந்து விடுகிறானோ, அவன் ஏழையாக இருந்தாலும் சரி பணக்காரனாக இருந்தாலும் சரி, அவன் உயரிய அந்தஸ்தில் இருந்தாலும் சரி, தாழ்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் சரி, அவன் சந்தோஷத்தை அடைவான்.

ஆக இந்தக் கதை மூலம் ஆத்ம விசாரம் வலியுறுத்தப்படுகிறது.

இதையே பகவான் ரமண மஹரிஷி திருப்பித் திருப்பித் தன்னை அடைந்தவர்களுக்கெல்லாம் சொல்லி வந்தார்.
இதுவே மோக்ஷத்திற்கான ரகசியம்.
யோக வாசிஷ்டத்தில் வரும் 55 கதைகளில் 25வது கதையாக இது அமைகிறது. இது உபசாம பிரகரணத்தில் வரும் கடைசி கதையாக அமைகிறது.


tags — யோக வாசிஷ்டம், மோக்ஷம், வஸிஷ்டர், விதஹவ்யன், கதை,

பாரசீகக் கிளி செய்த தந்திரம்!

alexandrine_parrot_f

கிளி படங்கள் பல  இடங்களிலிருந்து எடுக்கப்பட்டன; நன்றி)

Article No. 2104

Written by London swaminathan (தமிழில் மொழி பெயர்ப்பு)
Date : 28 August  2015
Time uploaded in London :– 8-38 am

காஷ்மீரில் ஒரு பெரிய வணிகர் இருந்தார். அவர் ஆண்டுதோறும் பாரசீகத்துக்குச் சென்று வணிகம் செய்து வந்தார். (பாரசீகத்தின் தற்போதைய பெயர் ஈரான்). இந்திய சரக்குகளை அங்கே விற்றுவிட்டு ஈரானிய சரக்குகளைக் காஷ்மீருக்குக் கொண்டுவந்து விற்பது அவரது வழக்கம். ஒரு முறை பாரசீகத்தில் ஒரு அழகான கிளியைப் பார்த்தார். அது மனிதர்களைப் போலவே பேசுவது கண்டு வியப்படைந்தார். உடனே அந்தக் கிளியை ஒரு விலை பேசி வாங்கிவிட்டார்.

காஷ்மீருக்குத் திரும்பிவந்தவுடன் அழகான, பெரிய கூண்டு செய்து அதற்கு ராஜ உபசாரம் செய்துவந்தார். அவரது குடும்பத்தினரும் அக்கிளியைப் போற்றி வளர்த்தனர். தங்கக் கூண்டு ஆனாலும், கூண்டு என்பது சிறைவாசம்தானே! இருந்த போதிலும் கிளி அழகாகப் பேசி அவர்களை மகிழ்வித்து வந்தது.

ஒரு குறிப்பிட்ட ஆண்டில் காஷ்மீர் வணிகருக்கு உலல்நலம் சரியில்லை. உடனே அந்தரங்கக் காரியதரிசியை அழைத்து, “இந்த ஆண்டு நீ போய் பாரசீகத்திலிருந்து சரக்குகளை வாங்கி வா; எனக்கு உடம்பு சரியில்லை” என்றார். எஜமானர் போட்ட உத்தரவை சிரம் மேல் தாங்கி அவரும் பாரசீகத்துக்குப் புறப்படத் தயாரானார்.

எல்லோர் அன்புக்கும் பாத்திரமான கிளி, அவரை அழைத்து, “அன்பரே. நீர் பாரசீகத்துக்குச் செல்லும்போது எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். இங்கு எனக்கு ராஜபோக உபசாரம் கிடைத்தாலும் என் சொந்தக்காரர்களைப் பார்க்காமல் எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர்களை நீங்கள் சந்தித்து நான் குசலம் (நலம்) விசாரித்ததாகக் கூறுங்கள். என் சொந்தக்கார கிளிகள் நீர் செல்லும் நகருக்குக் கிழக்கேயுள்ள தோட்டத்தில்தான் வசிக்கின்றன. மிகப் பெரிய கூட்டம் என்பதால் அந்தக் கிளிகளை நீவீர் எளிதில் இனம் காண முடியும். இடர்ப்பாடு ஏதும் இராது “ என்றது. கடைசியாக நான் அவர்களைப் பார்க்க வேண்டும். அதற்கு என்ன வழி என்றும் ஒரு கேள்வியைக் கேளும்; அவர்கள் சொல்லும் பதிலை என்னிடம் மறவாது செப்பும்” என்றும் கிளி பகன்றது. காரியதரிசியும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

330591-green-parrot

வணிகரின் செயலர் பாரசீகத்துக்குச் சென்று வணிகப் பணிகளை செவ்வனே செய்து முடித்தார். திடீரென காஷ்மீரிலுள்ள கிளி சொன்ன விஷயம் நினைவுக்கு வரவே நகருக்கு வெளியேயுள்ள தோட்டத்துச் சென்றார். அந்தக்கிளி சொன்னது போலவே எளிதில் சொந்தக் கார கிளிக்கூட்டத்தைக் கண்டு பிடித்தார். அவர்களுடைய சொந்தக்கார கிளி காஷ்மீரில் அடைபட்டிருப்பதையும் அது “நலம்தானா?” என்று வினவியதையும் செப்பிய பின்னர், ”ஒரு முக்கிய விஷயம் காஷ்மீர் கிளி உங்களை மீண்டும் பார்க்கவேண்டுமாம். நீங்கள்தான் வழி சொல்லவேண்டுமாம்” என்றார். அந்தக் கிளிகளோ கீச்சுக் கீச்சு என்று ஒலி எழுப்பியனவே அன்றி பதில் இறுக்கவில்ல. அவரும் மூன்று நான்கு முறை கேட்டுப் பார்த்தார். பலனில்லை. அவர் புறப்படும் முன் ஒரே ஒரு கிளி மட்டும்—வயதான கிளி—இறக்கையெல்லாம் பாதி இழந்துவிட்ட கிளி- தொப்பென்று மரத்திலிருந்து கீழே விழுந்தது. செத்துப்போன கிளி போல சிறகெல்லாம் விரிந்து, மல்லாந்து கிடந்தது. அதைப் பார்த்த செயலர், “ஐயோ பாவம்; தள்ளாத வயது போலும்” என்று சொல்லிக் கொண்டே வெளியேறினார்.

காஷ்மீருக்குத் திரும்பிவந்தவுடன் , எஜமானரிடம் – முதலாளியிடம் – வணிக விஷயங்களை ஒப்புவித்தார். அவருக்கும் மிக்க மகிழ்ச்சி. இதைப் பார்த்துக் கொண்டிருந்த கிளி மெதுவாக அவரை அழைத்து “நான் சொன்ன விஷயம் என்னவாயிற்று?” என்று கேட்டது. அவரும் நடந்ததை நடந்தபடியே சொல்லிவிட்டு கடைசியில் ஒரு கிளி மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்ததையும் கூறினார். இதைக் கேட்டுக்கொண்டே இருந்த கிளி திடீரென கூண்டின் உட்புறத்தில் நிற்கும் மரக்குச்சியில் இருந்து விழுந்தது. அது சிறகை விரித்து மல்லாந்து கிடந்ததைப் பார்த்துவிட்டு எஜமானரிடம் கிளி திடீரென்று இறந்துவிட்டது என்றார். அவரும் அதன் பரிதாபச் சாவைப் பார்த்துவிட்டு வேலைக்கரனைக் கூப்பிட்டு, ஊருக்கு வெளியேயுள்ள தோட்டத்தில் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யச் சொன்னார்.

உடனே வேலைக்கரன் அந்தக் கிளியை மிகவும் மரியாதையுடன் எடுத்துக்கொண்டு ஊருக்கு வெளியே ஒரு இலைதழை படுக்கை செய்து அதன்மீது வைத்துவிட்டு, ஒரு குழிதோண்டத் துவங்கினான். இதுவரை இறந்ததுபோல பாவனை செய்த கிளி சிறகடித்துப் பறந்தோடிப் போய்விட்டது!!!

விடுதலை! விடுதலை!

சுவாமி ராமதாஸ் சொன்ன கதை இது.

Parrot_clay_lick

(கிளி ப்டம்: விக்கிபீடியா)

அவர் சொல்லுவார்: எப்படி அந்தக் கிளி தான் (நான்) என்னும் தன்மையை இழந்தவுடன் விடுதலை பெற்றதோ அது போல நாமும் அஹம்காரம் (யான், எனது என்னும் செருக்கு) என்பதை இழந்தோமானால் விடுதலை/ முக்தி/ மோக்ஷம் கிடைக்கும்.

தமிழில் மொழிபெயர்ப்பு- லண்டன் சுவாமிநாதன்

parrot group