இசை தரும் நோயற்ற வாழ்வு!- 5

25FR-THIYAGARAJAR_1340664g

Picture of Saint Thyagarajar

 

ச.நாகராஜன்

   

டாக்டர் கலினா மிண்ட்லின் என்னும் பெண்மணி மூளை அலைகளை இசை வடிவமாக மாற்றும் ஒரு அலாக்ரிதத்தின் மூலமாக ஒவ்வொருவருக்கும் உகந்த இசையைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கிறார். ஒவ்வொருவரின் உடல் மற்றும் மனப் பக்குவமும் வேறு வேறாக இருப்பதால் அவரவர்க்குரிய இசையை அவரவர் பயன்படுத்த வேண்டும் என்பது அவர் அறிவுரை.

 

டாக்டர் பீட்டர் கை மானர்ஸ் என்பவர் பிரிட்டனைச் சேர்ந்த சிறந்த டாக்டர். இவர் ஒரு ஆஸ்டியோபத். அதாவது தசைகளையும் எலும்புகளையும் சரியாக இருக்குமாறு செய்தாலேயே உடல் ஆரோக்கியம்  மேம்படும் என்னும் கருத்தை உடைய ஆஸ்டியோபதி மருத்துவ நிபுணர். சுமார் பத்து வருட காலம் இவர் ஒலியின் மூலம் சிகிச்சை செய்வதைப் பற்றி ஆராய்ந்தார்.  டிஸீஸ் (disease = dis ease; out of tune ness) என்னும் ஆங்கில வார்த்தைக்குப் பொருள் உடல் இயல்பான டியூனில் இல்லாமல் இருப்பது தான் என்று கூறும் அவர், ஆயிரக்கணக்கான ஒலி அலைகளை எழுப்பும் இசைக் கருவியை அமைத்து உடலில் ஏற்படும் நோய்களை இசை மூலம் போக்க ஆய்வுகளை மேற்கொண்டார்.

 

அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் ஷெர்ரி எட்வர்ட்ஸ் என்னும் பெண்மணி  சிக்னேச்சர் சவுண்ட் ஒர்க்ஸ் (signature sound works) என்ற ஒரு இசை சிகிச்சையை ஆரம்பித்தார். எப்படி ஒவ்வொருவருக்கும் கை ரேகை பிரத்யேகமாகத் தனியாக இருக்கிறதோ அதே போலவே குரலும் ஒவ்வொருவருக்கும் தனித் தன்மையுடன் பிரத்யேகமாக உள்ளது என்றும் ஒருவரின் குரலைப் பகுத்துப் பார்ப்பதன் மூலம் அவர் உடலாலும் உள்ளத்தாலும் கொண்டுள்ள வியாதிகளைக் கண்டறிய முடியும் என்றும் அவர் கூறினார்.சிகிச்சைக்கு வருவோரின் குரலைப் பகுத்துப் பார்த்தவுடன் அவரது நோயைத் தீர்க்கும் ஒலி அலைகளை இயர் போன் மூலம் அவரைக் கேட்கச் செய்து அவரைக் குணப்படுத்துவது அவரது வைத்திய முறையாக அமைந்தது.

 

ராபர்ட் மன்ரோ என்னும் டாக்டர் மூளையின் இடப்பக்கத்தையும் வலப்பக்கத்தையும் லயத்துடன் ஒருங்கிணைக்க வெவ்வேறு டோன்களை – இசை ஒலி அலைகளை- பல இசைக் கருவிகள் அமைந்த ஒரு சவுண்ட் போர்டிலிருந்து எழுப்பி சிகிச்சையைச் செய்தார்.

 

மூளைக்கும் இசைக்கும் உள்ள தொடர்பை விரிவாக ஆராய விஞ்ஞானிகள் முனைந்தனர். மனிதனின் கேட்கும் திறமையைப் பற்றிச் சொல்லப்போனால் மூளையில் உள்ள கேட்கும் மையம் ஒரு வினாடிக்கு பத்து லட்சம் பிட்ஸ்களை (one million bits per second) உள்ளிடுகிறது! ஒரு பிட் (bit) என்பது தகவலின் மிகச் சிறிய கூறு ஆகும்.ஒன்று அல்லது பூஜ்யம் என்று இருக்கும் இந்த பிட் பற்றிய அமைப்பை ஹங்கேரிய விஞ்ஞானியான லியோ சிலாஸ் முதன் முதலில் கண்டுபிடித்தார். ஐம்புலன்களிலிலிருந்தும் தலைக்கு வரும் உள்ளீடுகள் வினாடிக்கு சுமார் ஒரு கோடியே பத்து லட்சம் பிட்ஸ் ஆகும்.நமது தலை ஏன் சூடாக இருக்கிறது என்பது இப்போது புரியும்!

stamps music

எவ்வளவு தகவல்களை அது பகுத்துப் பார்த்து தேவையற்ற தகவல்களை ஒதுக்கித் தள்ள வேண்டியிருக்கிறது!! விஞ்ஞானிகளுக்கு இன்று வரை புரியாத விஷயம் இது தான்! எப்படி மூளை தனக்கு வரும் ஏராளமான தகவல்களை இனம் பிரித்து ஒதுக்க வேண்டியவற்றை ஒதுக்கி அவசரமானவற்றிற்கு முன்னுரிமை அளிக்கிறது! பிரம்மாண்டமான நவீன கருவிகளை வைத்து அலசி ஆராய்ந்ததில் சாதாரண பிரக்ஞை நிலையில் ஒரு மனிதன் வினாடிக்கு 16 முதல் 20 பிட்ஸ் தகவலையே பகுத்துப் பார்க்க முடிகிறது. மிக உயரிய நிலை என்றால் வினாடிக்கு 50 பிட்ஸ் தான் பகுத்துப் பார்க்க முடிவதன் உச்ச எல்லை! புரபஸர் ஹெல்மர் ஃப்ராங்க் என்பவர் ஒலி அலைகளை ஆராய்ந்து வினாடிக்கு 16 தாளத் தட்டுகள் (beats) வரையில் தனித் தனியாக ஒருவரால் கேட்க முடிகிறது என்றும் அதற்கு மேல் தொடர்ந்த ஒலியலைகளாகவே கேட்க முடிகிறது என்றும் ஆய்வின் முடிவில் கண்டறிந்துள்ளார். ஆகவே வினாடிக்கு 16 முதல் 20 பிட்ஸ் தகவலையே பகுத்துப் பார்க்க வல்ல மூளையானது  வினாடிக்கு பத்து லட்சம் பிட்ஸ் தகவல் வரும் போது எவ்வளவு பெரிய நினைவாற்றல் வங்கியைக் கொண்டிருக்க வேண்டும்; அதில் தேவையானவற்றை எப்படிப்பட்ட ஆச்சரியமூட்டும் விதத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும்! இசை அல்லது ஒலி அலைகளைப் பற்றிய வேறு பல ஆராய்ச்சிகளும் வியப்பூட்டும் பல உண்மைகளை அவ்வப்பொழுது தெரிவித்துக்கொண்டே வருகின்றன!

tamil instruments

அமெரிக்கன் மியூசிக் தெராபி அசோசியேஷன் 5000 இசை சிகிச்சை நிபுணர்களைக் கொண்டுள்ள ஒரு அமைப்பு. க்ளீவ்லாண்டில் உள்ள செயிண்ட் ல்யூக் மெடிகல் செண்டரில் பணியாற்றும் டாக்டர் வால்டர் க்வான்,” இசை சிகிச்சை ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு நல்ல சிகிச்சையை அளிக்க வல்லது. புற்று நோய் உள்ளவர்களுக்கு உடலுடன் மனம் கொண்டுள்ள தொடர்பு மிக முக்கியமானது. மன அழுத்தம் இல்லாத நோயாளிகள் கான்ஸர் சிகிச்சையில் நல்ல பலனைப் பெறுகின்றனர் என்பதால் அவர்களுக்கு மியூசிக் தெராபி மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றலை கூட்டுகிறோம்” என்று உறுதி படத் தெரிவிக்கிறார்.

 

(பாக்யா 5-10-2012 இதழில் 85ஆம் அத்தியாயமாக வெளியாகிய இசை தரும் நோயற்ற வாழ்வு கட்டுரையின் ஐந்தாம் பகுதியை மகிழ்வுடன் அளிக்கிறோம்)

The above article is the fifth in series written by Santanam Nagarajan of Bangalore.

Pictures are taken from various sites;thanks.

Contact swami_48@yahoo.com

 

***********************