டாக்டருக்கும் யமனுக்கும் வேறுபாடு என்ன?

cartoon-doctor-8

Compiled by London swaminathan

Post No.2227

Date: 9  October 2015

Time uploaded in London: 9-03 காலை

Thanks for the pictures.

ஒரு அருமையான சம்ஸ்கிருத ஸ்லோகம்.

இது, பல்லாயிரக் கணக்கான சம்ஸ்கிருதப் பாடல்கள் நிறைந்த புத்தகமான சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் நூலில் இருக்கிறது. அதாவது சம்ஸ்கிருத தனிப்பாடல் திரட்டு நூலில் ஒரு பாடல். அதில் டாக்டர்களைப் பற்றிக் கூறுவது உலகில் எல்லா மொழிகளிலும் ‘ஜோக்’-குகளாக உள்ளன.

வைத்யராஜ! நமஸ்துப்யம் யமராஜ சஹோதர!!

யமஸ்து ஹரதே ப்ராணான், வைத்ய: ப்ராணான் தனானி ச!

“ஹே, டாக்டர்! யமரஜனின் சகோதரனே!! உனக்கு வணக்கங்கள்!

யமன் என்பவன் உயிரை (மட்டும்) கொண்டுபோகிறான். டாக்டர்களோ உயரையும் பணத்தையும் சேர்த்துக் கொண்டுபோகிறார்கள்!!!”

இதே கருத்து உலகம் முழுவதிலும் டாக்டர்கள் பற்றிய “ஜோக்”–குகளில் இருப்பதை முன்னரே ஆங்கிலத்தில் நிறைய சம்பவங்கள் மூலம் கொடுத்துள்ளேன்.

டாக்டர்களின் அனுபவமின்மை பற்றியும் பல பொன்மொழிகள் உள. தமிழில் சொல்லுவோம்:

“ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்” – என்று! இதுவும் சம்ஸ்கிருதத்தில் காணப்படுகிறது!

ஹத்வா ந்ருணாம் சஹஸ்ரம், பஸ்சாத் வைத்யோ பவேத் சித்த:

ஆயிரம் பேரின் கதையை முடித்தவுடன்தான், ஒரு டாக்டர் பெரிய டாக்டர் ஆகிறார்.

xxx

doctor

யாருக்கு முதல் மரியாதை என்று ஒரு டாக்டருக்கும் வழக்கறிஞருக்கும் வாக்கு வாதம் வரவே டயொஜெனிஸ் (கி.மு.412) என்ற கிரேக்க நாட்டு தத்துவ அறிஞரிடம் சென்றனர். அவர் சொன்னார்:

திருடன் முதலில் போகட்டும்; மரணதண்டனை நிறைவேற்றுபவன் அவன் பின்னால் செல்லட்டும்!

Xxx

அலெக்ஸாண்டர் துமா என்பவர் பிரபல பிரெஞ்சு நாவலாசிரியர். மார்செய் நகரத்தின் பிரபல டாக்டர் ஜிஸ்டால், அவரை விருந்துக்கு அழைத்தார். விருந்து எல்லாம் சுகமாக முடிந்தவுடன் தன்னுடைய ஆல்பத்தைக் காட்டினார் டாக்டர்.

“ஓய், நாவலாசிரியரே! நீரோ எழுத்துச் சித்தர்! எழுத்துத் தச்சர்! எங்கே பார்க்கலாம், உமது கை வல்லமையை? என் ஆல்பத்தில் ஏதாவது எழுதுங்கள் பார்க்கலாம்”– என்றார் டாக்டர் ஜிஸ்டால்.

நாவலாசிரியர் துமா, பேனாவை எடுத்தார், எழுதினார்:

“டாக்டர் ஜிஸ்டால் ஊருக்கு வந்தார்

நோய்களை ஒழிக்க மிகவும் முயன்றார்;

மருத்துவ மனைகளுக்கு வேலையே இல்லை!!

—இதை எழுதிக் கொண்டிருக்கையில் டாக்டர் குறுக்கிட்டார். “எழுத்தாளரே உமது புத்தியைக்காட்டிவிட்டீரே! உங்கள் வர்க்கமே சோறு கண்ட இடம் சொர்க்கம் என்னுமினம். நான் விருந்து கொடுத்தவுடன், என்னை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்து தள்ளுகிறீர்களே!”

நாவாலசிரியர் சொன்னார்; “அட! ஏன் அவசரப்படுகிறீர்கள்; நான் இன்னும் எழுதியே முடிக்கவில்லையே”- என்று சொல்லிக் கொண்டே கடைசி வரியை எழுதி முத்தாய்ப்பு (முத்தான ஆப்பு) வைத்தார்:

“ஊரின் இடு(சுடு)காடு பெரிதாகிவிட்டது!”

 

முழுக்கவிதையையும் படியுங்கள்:—-

 

“டாக்டர் ஜிஸ்டால் ஊருக்கு வந்தார்

நோய்களை ஒழிக்க மிகவும் முயன்றார்;

மருத்துவ மனைகளுக்கு வேலையே இல்லை!!

“ஊரின் இடு(சுடு)காடு பெரிதாகிவிட்டது!”

–சுபம்–