
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 8805
Date uploaded in London – –13 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நீ டப்பா தமிழனா ? முட்டாள் வடுகனா ?
ஒவ்வொரு மொழி பேசுவோரும் ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’– என்ற பாணியில் தன் மொழியே உலகில் சிறந்தது, இனியது என்று தம்பட்டம் அடித்துக் கொள்வர். இதில் வியப்பு ஒன்றுமில்லை. இது போலவே ஒவ்வொரு மதத்தினரும் தன் மதமே உயர்ந்தது என்பர். இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று பிற மத தூஷணம் செய்வார்கள். கிறிஸ்தவர்கள், ஏனைய மதத்தினரை பேகன் pagan என்றும் முஸ்லீம்கள் , மற்ற மதத்தினரை காஃபிர் kafir என்றும் இகழ்ந்துரைப்பர். இந்துக்கள் மட்டும் ‘வசுதைவ குடும்பகம் – இந்த உலகமே ஒரு குடும்பம்’- என்பர். மாணிக்கவாசகர் போன்றோர் அசுரர்களும் தேவர்களும் புல்லும் பூண்டும் ஒரே ஆன்மாவின் பல பிறவிகள் என்று பாடுகிறார்கள். பாரதியோ ‘காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என்று அதே கருத்தை எதிர் ஒலிக்கிறார்.
பாரதி போன்ற உயர்ந்த உள்ளம் படைத்த கவிஞர்கள் ‘சுந்தரத் தெலுங்கு’, என்றும் ‘பாகு மொழிகளில் புலவர்கள் போற்றும் பாரத ராணி’ என்றும், சம்ஸ்கிருத மொழியை ‘தெய்வீக சாகுந்தலம்’ தோன்றிய மொழி என்றும் பாராட்டுகிறார். ஆயினும் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிதான் இனிது’ என்றும் முடிவுசெய்கிறார்.
மொழிகள் மூலம் சண்டை போடுவது உலகெங்கிலும் நடக்கிறது. பிரெஞ்சுக்காரர்களுக்கு இங்கிலிஷ் என்றால் வெறுப்பு. ஆங்கிலேயருக்கு பிரெஞ்ச் என்றால் வெறுப்பு. பிரிட்டனுக்குள் இங்கிலீஷ்கார்கள், அருகிலுள்ள ஐரீஷ் , ஸ்காட்டிஷ், வெல்ஷ் மொழிகளையும் அவர்களது ஆங்கில உச்சரிப்புக்களையும் எள்ளி நகையாடுவர். இது டெலிவிஷன் காமெடி ஷோ comedy show க்களில் அடிக்கடி நடைபெறும்.
50 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய பார்லிமெண்டில் இந்தி மொழி பற்றி காரசார விவாதம் நடந்தது. இந்தி நேற்று வந்த மொழி; அதில் என்ன இலக்கியம் இருக்கிறது? கனத்த, தடித்த டெலிபோன் டைரக்டரியும் ரயில்வே கால அட்டவணையும்தான் உளது என்று தமிழ் மொழி எம்.பிக்கள் சாடினர் ; இந்தி மொழி அபிமானியான சேத் கோவிந்ததாஸ் எழுந்து ‘அட, போடா , தமிழா, உன் பாஷை யே கர்ண கடூரமானது. ஒரு தகர டப்பாவில் கற்களைப் போட்டு குலுக்கினால் என்ன ஸப்தம் வருமோ அதுதாண்டா தமிழ்’ என்று பதில் கொடுத்தார்..
அதாவது ஒரு மொழி புரியாவிட்டால் அல்லது அந்த மொழி பேசுவோரைப் பிடிக்காவிட்டால் இப்படித் திட்டுவது வழக்கம். கிரேக்கர்கள் தங்கள் மொழியைப் பேசாதோரை barbarian பார்பேரியன் என்று அழைத்தனர். இப்போது அதன் பொருள் மிகவும் மருவி காட்டுமிராண்டி என்று மாறிவிட்டது. உண்மையில் அவர்கள் சொன்னது நமமைப் போல பண்பட்ட மொழியைப் பேசாதவர்கள் என்றுதான் சொன்னார்கள்.
இது போல நாகரீகமே இல்லாத அராபியர்கள் மிகவும் நாகரீகம் அடைந்த இரானியர் மொழியை ‘அஜம்’ என்றனர். அதாவது ‘ஊமை மொழி’ என்று பொருள். ‘ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை’ என்ற பழமொழியை நினைவுபடுத்தும்.

அரவர் என்றால் ‘அதிக சப்தம் போடுவோர்’ என்று பொருள். இதைத் தான் தெலுங்கர்கள் தமிழர்களைத் திட்டப் பயன்படுத்தினர் இதற்கு ‘பாம்பு’ என்ற கெட்ட பொருளும் பாம்புக்கால் முனிவரான பதஞ்சலி என்ற நல்ல பொருளும் உண்டு. (See Ananda Vikatan Tamil Dictionary 1935)
தமிழில் தெலுங்கர்களைக் கிண்டல் செய்யும் பல பழமொழிகள் இருக்கின்றன . அவர்களைத் தமிழர்கள் ‘வடுகர்’ என்று அழைத்தனர். வடுகர் என்றால் தெலுங்கர் என்றும் முட்டாள், மூடன் என்றும் பொருள். உண்மையில் சொல்லப்போனால் இப்படிப்பட்ட தீய பொருள் வருவது, அவர்கள் நமக்கு எதிராக மாறும்போதுதான்.
இதோ சில தெலுங்கு எதிர்ப்பு பழமொழிகள்—
வடுகச்சி அம்மா, வாலம்மா, வாலைப் பிடித்துக்கொண்டு தொங்கம்மா
வடுகச்சி காரியம் கடுகுச்சு முடுகுச்சு
வடுகத் துரட்டு மகா வில்லங்கம்
வடுக வில்லங்கமாய் வந்து வாய்த்தது
வடுகனும் தமிழனும் கூட்டுப் பயிரிட்ட கதை
வடுகன் தமிழறியான் வைக்கோலை கசு வென்பான் .
வடுகு பொடுகாச்சு, வைக்கோற் போர் நெல்லாச்சு
வடுகு கொழுத்தால் வறையோட்டிற்கு மாகாது.
xxx
ஆரியனா , அனார்யனா ?

‘ஆரிய’ என்றால் பண்பாடு உடையவர்கள், நாகரீக முடையோர் , ரிஷி முனிவர்களுக்குச் சமமானவர்கள் என்றே பொருள். மாக்ஸ்முல்லர் கும்பலும் கால்ட்வெல் கும்பலும் இந்துமதத்தை அழிக்கும் நோக்கத்தோடு ‘ஆர்ய’ என்ற எழுத்தை ஆங்கிலத்தில் பெரிய Arya எழுத்தில் எழுதி ஒரு இனம் என்று காட்டத் துவங்கினர். இதனால் இதைப் பண்பாடுடையோர் என்று மொழி பெயர்க்காமல் ஆரிய Arya என்றே எழுதத்துவங்கினர்.
2700 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருத மொழிக்கு இலக்கணம் எழுதிய பாணினி ‘ஆரிய’ என்ற சொல்லை பிராமண, க்ஷத்ரிய, வைஸ்யர்களுக்குப் பயன்படுத்தினார் . இன்றும் தமிழ்நாட்டில் ‘ஆர்ய வைஸ்ய சபா’–க்களைக் காணலாம்.
பகவத் கீதையிலும் கூட இதற்கு உதாரணம் உளது ;
அர்ஜுனன் கோழை போல நடந்து கொண்டவுடன் ஏன் ‘ஆரியனில்லாத’—‘பண்பாடில்லாத’- வன் போல நடந்து கொள்கிறாய்? என்று கேட்கிறார் (கீதை 2-2).
ஏன் க்ஷத்ரியவன் இல்லாதவன் போல் என்று கேட்கவில்லை.
ஏன் பிராமணன் போல, சூத்திரன் போல, வைஸ்யன்போல நடந்து கொள்கிறாய்? என்று கேட்கவில்லை.
நாம் யாராவது நடை உடை பாவனையில் கோளாறு இருந்தால் உடனே ‘என்ன பட்டிக்காட்டானா நீ?’ என்று திட்டுவோம்.
எதையாவது காணாதது கண்டது போல முறைத்துப் பார்த்தால் ‘பட்டிக்காட்டான் யானையைப் பார்த்தது போல’ என்று திட்டுவோம் . இங்கே பட்டிக்காடு, என்பது இனமல்ல; ஜாதியுமல்ல.
இதுபோலவே ‘அனார்யாஜுஷ்டம்’ உனக்கு எங்கிருந்து வந்தது என்கிறார்.
இந்த சுலோகத்துக்கு வியாக்கியானம் எழுதிய டாக்டர் ராதாகிருஷ்ணனும் ‘வீரம், பெருந்தன்மை, மரியாதை , நேரிய அணுகுமுறை’ முதலிய குணங்களை உடையவர்கள் ஆரியர் எனப்படுவோர் என்கிறார்.
ஆக ஆரிய என்பது ஒரு உரிச் சொல்லேயன்றி (Adjective) இனப்பெயர் அல்ல.
ஆர்ய என்ற சொல் பிராகிருத / பேச்சு வழக்கில் ‘அஜ்ஜ’ என்று மருவி, தமிழில் ‘அய்யர்’ என்று வந்தது . கௌடில்யரோ 2400 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்ய என்றால் சுதந்திர மனிதன், தாச என்றால் அடிமை என்கிறார்.

வேதத்தில் சப்பை மூக்கு சீனர்களை கடுஞ்சொல் மக்கள் என்கின்றனர். அவர்களை ‘தஸ்யூ’ என்றும் அழைத்தனர். இதை ஒரு கும்பல், திராவிடர்களைத் தான் இப்படிச் சொன்னார்கள் என்று கதைகட்டிவிட்டது. சப்பை மூக்கு திராவிடர்கள் வடக்கில் வாழ்ந்ததற்கு இதுவரை எந்த சான்றும் கிடைக்கவில்லை. சிந்து-சரஸ்வதி நதி தீரத்தில் கிடைத்த எலும்புக்கூடு எல்லாம் நீண்டு உயர்ந்த பஞ்சாபியர் எலும்புக்கூடுகளே . சங்கத் தமிழர்கள் ரோமானியர்களை ‘வன் சொல் யவனர்’ என்று வருணித்தது போலவே சப்பை மூக்கு சீனர்களை கடுமையான வசனம் உடையோர் என்று அழைத்தனர். சங்கத் தமிழ் நூல்களிலும் சம்ஸ்கிருத நூல்களிலும் ‘மிலேச்சர்’ என்ற சொல் வருகிறது இதுவும் வேற்று மொழி பேசிய, நம் கலாசாரத்தைப் பின்பற்றாத கும்பலையே குறித்தது.
2200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பதஞ்சலி முனிவர்கூட ஒரு இலக்கண உதாரணத்துக்கு, ‘படுத்துக்க கொண்டே உணவு சாப்பிடும் யவனர்’ என்று வசைபாடுகிறார்.
xxxx
பிளாக், நீக்ரோ Black, Negro
ஆக்ஸ்போர்டு அகராதியில் ‘பறையா’ ‘ஐயோ’ போன்ற அசிங்கமான தமிழ்ச் சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நாம் எவரையும் ‘பறையா’ என்று இப்போது திட்டவும் முடியாது; கூப்பிடவும் முடியாது. அனால் ஆங்கில அகராதியில் உள்ள ‘பறையா’ என்ற சொல்லை உலகம் முழுதும் உள்ள ஆங்கிலப் பத்திரிகைகள் நாள்தோறும் பயன்படுத்துகின்றனர் தீண்டத்தகாத untouchable என்ற பொருளில் பயன்படுத்துகின்றனர். தமிழனை அவமானப்படுத்தும் பறையா , ஐயோ போன்றவற்றை நீக்க நாம் போராடவேண்டும்.
லண்டனில் வசிக்கும் நான், கறுப்பின மக்களை ‘கறுப்பர்’ என்றோ ‘நீக்ரோ’
என்றோ அழைக்க முடியாது. கடும் அபராதம் விதிக்கப்படும். ஆப்ரிக்க- கரீபிய இனத்தினர் afro-Caribbean community என்றுதான் குறிப்பிட்ட முடியும் இதே போல ‘பறையா’ என்ற சொல்லையும் ஒழிக்க முன் வருக!
Tags- வடுகன், அரவர், யவனர், மிலேச்சர் , பார்பேரியன், ஆரிய, தெலுங்கு எதிர்ப்பு
–subham–
You must be logged in to post a comment.