
Post No. 8180
Date uploaded in London – 15 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரத்தன்பூர் என்ற ராஜ்யத்தை குமார சேனன் என்ற ராஜா ஆண்டு வந்தார். வீரத்துக்கும் நீதிக்கும் பெயர்போன நாடு அது. மன்னனுக்கு சங்கீதம் என்றால் உயிர் .அவரே மிருதங்கமும் வாசிப்பார். அதே ராஜ்யத்தில் நந்தலாலா என்ற சங்கீத நிபுணர் வாழ்ந்தார். அவர் தாள வாத்ய விற்பன்னர். புதிய தாளங்களைக் கண்டு பிடிப்பதில் மன்னன்.’இனம் இனத்தோடு சேரும்’ அல்லவா ? ஆகையால் நாட்டு மன்னனுக்கும் தாள வாத்ய மன்னனுக்கும் இடையே நட்பு மலர்ந்தது.
இருவரிடையே வளர்ந்த நட்பு பல மந்திரிகளிடையே பொறாமைத் தீயை வளர்த்தது .
ஒரு நாள் நந்தலாலாவும், குமார சேனனும் காட்டில் உலவிக்கொண்டிருந்த போது தாள மன்னன் நந்த லாலாவின் மனத்தில் ஒரு தாளக்கட்டு உருவாகியது. ஆனால் காட்டில் உலாவை முடிப்பதற்குள் முழு தாளமும் உருவாகவில்லை.
மாலை நேரம் வந்துவிட்டது; மலை வாயில் கதிரவனும் விழுந்தான். இருவரும் பிரிந்தனர். மறுநாள் பொழுதுவிடிந்தது. மன்னனுக்கு ஆர்வம் பொங்கி எழுந்தது. இவ்வளவு நேரத்தில் நந்தலாலா தாளம் முழுவதையும் கண்டு பிடித்து இருப்பார் ; அவரிடம் பேச வேண்டும் என்ற அவா எழுந்தது .
அக்காலத்தில் மொபைல் போனோ , ‘வாட்ஸ் அப்’போ, பேஸ் புக்கோ , ‘ஸ்கைப்’போ (Whats up, Mobile Phone, Facebook, Skype, Zoom ) எதுவும் கிடையாது. நந்தலாலாவை எப்போது மன்னர் சந்திக்க விரும்புகிறாரோ அப்போது வாத்ய கோஷம் முழங்க யானையையும் படை வீரர்களையும் நந்த லாலா வீட்டுக்கு அனுப்புவார். அவரும் ஊர்வலமாக வருவார். திரும்பிப் போகும் போதும் ‘ஓலா’ ,’ ஊபர்’ (Ola, Uber) டாக்சி வசதி இல்லாததால் யானை மீது ஏறி வீட்டுக்குப் போவார். அவர் போடும் தாளத்தை எல்லாம் யானையும் கேட்டு மகிழும்.
இந்த வழக்கப்படி, அன்றும் நந்த லாலா வீட்டுக்கு யானை அனுப்பப்பட்டது .ஆனால் அவரோ முழுக்க முழுக்க புதிய தாளம் கண்டு பிடிப்பதில் மூழ்கி இருந்தார். யானைப்பாகன் அரசர் அனுப்பிய செய்தியைச் சொன்னான் . அவரோ தாள சைகைகளையே காட்டினார். அவன் ஓஹோ இப்போது வரமாட்டேன் என்று சொல்கிறார் போலும் என்று எண்ணி அரண்மனைக்கே திரும்பிச் சென்றான்.
இவ்வளவு காலமாக பொறாமைத் தீயில் புகைந்து கொண்ட மந்திரிகளுக்கு நல்ல சாக்கு கிடைத்தது . அரசனை நந்த லாலா அவமதித்து விட்டதாக எல்லோரும் ஒரே குரலில் ‘கோரஸ்’ (Chorus) பாடினார்கள். நாட்டின் சட்டப்படி அரசனை அவமதித்த நந்தலாலாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் வாதாடினர். இன்று இவர் ஒருவரை சும்மா விட்டால் நாளைக்கு நாட்டில் எல்லோரும் மன்னனை எள்ளி நகையாடும் நிலைமை வந்துவிடும் என்றும் அச்சுறுத்தினர் ; மன்னனும் நந்த லாலாவுக்கு மரணதண்டனை விதித்தான். நாளும் தேதியும் அறிவிக்கப்பட்டது.

பெரிய மைதானத்தில் ஒரு குழி தோண்டி நந்த லாலாவின் தலை மட்டும் தெரிய ஏற்பாடாகி இருந்தது ; அந்தத் தலையை யானை வந்து இடறி துண்டிக்கும். இதுதான் வழக்கமாக மரண தண்டனை நிறைவேற்றும் முறை ; மரண தண்டனை நாளும் வந்தது. மிக தீவிரமாக புதிய தாள முயற்சியில் இருந்த நந்தலாலா எப்படியும் தாளத்தை கண்டுபிடித்து மரணம் அடைய வேண்டும் என்று முழுவீச்சில் இறங்கினார். மரண தண்டனைக்காக வாசலில் வந்து நின்ற சேவகர்கள் அவரை சிவப்பு மாலை அணிவித்து அழைத்துச் செல்வதற்குள் இவர் மனதில் உதித்த தாளத்தின் முழு வடிவமும் கிடைத்தது; உடனே அவருக்குப் பேரானந்தம்; பிரம்மா நந்தம். ஆன பரவசத்தில் மரண தண்டனை ஊர்வலத்தில் அந்த புதிய தாளத்தை வாசித்துக்கொண்டே அதி பயங்கர சந்தோஷத்துடன் ‘டான்ஸ் ஆடிக்கொண்டே வந்தார். ஊரே பார்த்து வியந்தது.
இதற்குள் நந்தலாலாவை யானை கொல்லும் காட்சியைக் காண மைதானத்துக்குள் பல்லாயிரம் மக்கள் கூடினர். நந்த லாலா கழுத்தில் சிவப்பு மாலை போட்டு மரணதண்டனை மைதானத்துக்கு அழைத்து வந்தனர் ; அவர் புதிய தாளத்தை பரவசத்துடன் வாசித்துக் கொண்டே வந்தார். பின்னர் பேரமைதி ; ஏனெனில் மரண தண்டனைக்கு அறிவித்த நேரம் வந்துவிட்டது.
வழக்கமாக மரணதண்டனைக் கைதியின் கடைசி ஆசையைக் கேட்டு அதை நிறைவேற்றுவர். நந்தலாலாவிடம் கடைசி ஆசை என்ன என்று கேட்டபோது தான் கண்டுபிடித்த புதிய தாளத்தை மிருதங்கத்தில் வாசிக்க அனுமதிக்க வேண்டும் என்றார் ; அனைவரும் அது நிறைவேற ஒப்புதல் தந்தனர்.

இவர் போட்ட புதிய தாளம் அரசவை யானையின் காதையும் எட்டியது.; அதற்குள் ஆனந்த பரவசம் எழுந்தது. இவர் போட்ட தாளத்துக்கு ஏற்ப அது காலையும் துதிக்கையையும் தூக்கி டான்ஸ் ஆடத் துவங்கியது. அது மட்டுமல்ல நடன மாடிக்கொண்டே தாளம் வந்த திசையை நோக்கிச் சென்றது; மன்னனும் மந்திரிகளும் இந்த அதிசயத்தைக் கண்டு மலைத்தனர்; திகைத்தனர்.
நந்தலாலாவின் புதிய தளத்துக்கு ஏற்ப கன கச்சிதமாக, யானை டான்ஸ் ஆடியது . அவரை அப்படியே துதிக்கையால் வளைத்துத் தூக்கி தனது முதுகின்மேல் வைத்தது ; நந்த லாலாவோ தன்னை மறந்து தாளத்தில் மூழ்கிக் கிடந்தார்; யானை அவரை மைதானத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்று மன்னன் முன்னிலையில் இறக்கிவிட்டு துதிக்கையால் பிளிறி வணக்கம் சொல்லிவிட்டு மீண்டும் தாளத்துக்கு ஏற்ப நடனம் ஆடியது !
மன்னனுக்கு ஒரே வெட்கம் ; யானைக்கு தெரிந்த சங்கீதம் கூட தனக்குத் தெரியவில்லையே என்று வருத்தப்பட்டு ஆசனத்திலிருந்து இறங்கி வந்து நந்த லாலாவைக் கட்டித் தழுவி பெரிய சன்மானங்களை வழங்கினான். புதிய. தாளத்துக்கு ‘கஜஜாம்பி’ என்ற புதுப் பெய ரும் சூட்டினர் .

SOURCE – ORGANISER WEEKLY, 21-01-2007
tags — டான்ஸ் , Dancing elephant, யானை
–சுபம்–
