
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7585
Date uploaded in London – 17 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
ரிக் வேதப் புலவர்கள் மகா மேதாவிகள்; அவர்கள் எதையும் நேரடியாகச் சொல்ல மாட்டார்கள். மறை பொருளில் பகர்வர். உலகிலேயே ரிக் வேதத்தை சரியாகப் புரிந்து கொண்டவன் தமிழன் ஒருவன்தான். வேதத்துக்கு மறை (ரகசிய மொழி) என்ற அழகான பெயரைக் கொடுத்தான். சங்கத் தமிழ் நூல்களில் இந்த அழகான சொல் பயிலப்படுகிறது. அது மட்டுமல்ல. ரிக் வேதத்தையே தமிழர்கள்தான் கண்டுபிடித்தார்களோ என்றும் எண்ண வேண்டி இருக்கிறது. ஏனனில் தமிழர்களின் கடல் தெய்வம் வருணன் என்றும், மருத நிலக் கடவுள் இந்திரன் என்றும் தொல்காப்பியர் செப்புகிறார். இவ்வளவு தெளிவாக, ரத்தினச் சுருக்கமாக எந்த சம்ஸ்கிருத நூலிலும் இல்லை. ரிக் வேதத்திலுள்ள பத்தாயிரத்துக்கும் மேலான மந்திரங்களை படித்தால் இந்திரனுக்கும் வருணனுக்கும் மாயோனுக்கும் (விஷ்ணு) 1008 அடை மொழிகள் கொடுத்து இருப்பர். அதைப் படிக்கும் வெளிநாட்டினர் வருணன் வான் தெய்வமா, கடல் தெய்வமா, சந்திரனா, இருளைக் குறிக்கும் ராத்திரி தெய்வமா என்று காரசார விவாதம் நடத்தினர். இன்னும் கதைக்கின்றனர். தமிழனோ பொட்டில் அடித்தாற்போல புகன்று விட்டான்.
இதே போல யாக, யக்ஞ, ஹோம, ஹவனுக்கு ‘வேள்வி’ என்ற ஒரே சொல்லைப் போட்டு அசத்திவிட்டான் தமிழன். இந்த ‘வேள்வி’ என்ற சொல், தமிழத்தில் வேத மதம், சங்க காலத்துக்கு வெகு காலம் முன்னரே தழைத்து ஓங்கி விட்டதற்குச் சான்று என்று காஞ்சி முனிவரும், பரமாசார்யாருமான ஸ்ரீ சந்திர சேகர இந்திர சரஸ்வதி (1894-1994) சுவாமிகளும் விளம்புவார் .
ரிக் வேதப் புலவர்கள், மறை பொருளில் கவி படுவதை உலகோர் அறிவர். சில கவிதைகள் முழுக்க முழுக்க விடுகதையாக அமைந்துள்ளன. குறிப்பாக எட்டாவது மண்டலத்திலுள்ள 29-ஆவது கவிதையைப் படித்து ரசிக்கலாம். ஒவ்வொரு கடவுளின் சிறப்பையும் சொல்லிவிட்டு கடவுளின் பெயரை நாமே கண்டுகொள்ளும்படி புதிர் போடுகிறார் புலவர் . இதோ இந்தக் கவிதையின் மொழி பெயர்ப்பைப் படியுங்கள்.. விடை கடைசியில் உளது. அதைப் பார்க்காமலேயே எத்தனை கடவுளரை நீங்கள் கண்டுபிடிக்க முடிகிறது என்றும் பாருங்கள்:–

1.ஒருவன் பழுப்பு நிறமுள்ளவன் . எங்கும் பரவுபவன்; இரவுகளின் தலைவன், யுவன்; போன் ஆபரங்களால் தன்னை அலங்கரித்துக் கொள்பவன் (அவன் யார்?)
2.ஒருவன் அறிஞன்- தேவர்களின் நடுவே பிரகாசிப்பவன் – தன்னுடைய இடமான வேதியிலே அமர்ந்துள்ளான் .
3.ஒருவன் தேவர்களிடையே இரும்புக் கோடாலியைச் சுழற்றிக் கொண்டிருக்கிறான்.
4.ஒருவன் தன கையில் இயங்கும் வஜ்ராயுதத்தை பற்றுகின்றான். அதனால் அவன் விருத்திரனைக் கொல்கிறான்.
5.ஒருவன் ஒளி வீசுகிறான்- உக்கிரமானவன் – கையில் கூரிய ஆயுதத்தை வைத்து இருக்கிறான் . அவன் குணப் படுத்தும் மருந்துகளைத் தருகிறான்.
6.ஒருவன் கள்ளர்களைப் போல வழிகளை, பாதைகளைக் கவனிக்கிறான். அவனுக்கு மறைந்து கிடக்கும் புதையல் செல்வங்கள் தெரியும் .
7.ஒருவன் கம்பிர நடையுள்ளவன் மூவடியால் ஓங்கி உலகளந்தவன்
8.இருவர் சிட்டாகப் பறந்து செல்லும் குதிரைகளில் ஒரு பெண்ணோடு போகின்றனர். அவர்கள் அந்நிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகளைப் போல விரைகிறார்கள்.
9.இருவர் வானத்தின் உயரே அமர்ந்து இருக்கிறார்கள் ; வணங்கப்படும் அவர்கள் நெய் ஆகுதிகளை ஏற்கிறார்கள்.
10.சிலர் சாம கீதம் இசைத்து , புகழ் பாடி , சூரியனையே பிரகாசிக்க வைக்கிறார்கள் (யார் இவர்கள்)

புதிர்களுக்கு விடை –
1.சோமன்/சந்திரன் 2.அக்நி (தீ), 3.துவஷ்டா , 4.இந்திரன், 5.ருத்ரன் 6. பூ ஷன் , 7.விஷ்ணு , 8.அஸ்வினி தேவர்கள், சூரியை என்னும் பெண், 9. மித்திரன், வருணன், 10.அத்ரி ரிஷி குடும்பத்தினர்.
இது வைவஸ்வத மநு பாடியது அல்லது மரீசி காஸ்யபன் பாடியது என்று பாடலின் அடிக்குறிப்பு கூறுகிறது.
–subham–
You must be logged in to post a comment.