திருமூலர் யோகமும் பதஞ்சலி யோகமும் ஒன்றா?(Post No.8729)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8729

Date uploaded in London – – 24 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.

21-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் திருமூலர் யோகம் மற்றும் பதஞ்சலி முனிவர் யோகம் பற்றிய கேள்விக்கு அளித்த பதிலை இங்கு காணலாம்.

கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.

QUESTION ASKED BY SENTHAMANGALAM GANESAN

திருமூலர் யோகமும் பதஞ்சலி யோகமும் ஒன்றா?

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

இப்போது நம் முன் இருக்கும் கேள்வி : யோகம் பற்றிய கேள்வி.

திருமூலர் யோகமும் பதஞ்சலி யோகமும் ஒன்றா?

சுருக்கமான பதில், ஆம் ஒன்றே தான், ஆனால் அதில் சிறிய வேறுபாடும் உண்டு.

திருமூலர் பற்றி நாம் நன்கு அறிவோம். பதினெட்டு சித்தர்களில் ஒருவர். 63 நாயன்மார்களில் ஒருவர்.

திருமந்திரம் என்ற நூலை உலகிற்குத் தந்தவர். ஆண்டுக்கு ஒரு பாடலாக 3000 ஆண்டுகளில் 3000 பாடல்களை அருளியவர் அவர்.

ஒன்பது தந்திரங்களைக் கொண்ட நூல் திருமந்திரம்.

இதில் மூன்றாவது தந்திரத்தில் யோகம் பற்றிக் காணலாம்.

யோகம் என்ற சொல் மனதையும் ஆன்மாவையும் இணைப்பது என்ற பொருளைத் தருகிறது.

யோகத்திற்கு எட்டு உறுப்புகள் உண்டு. ஆகவே இதை அட்டாங்க யோகம் என்று கூறுகிறோம்.

இயம நியமமே எண்ணிலா ஆதனம்

நயமுறு பிராணாயாமம் பிரத்தியாகாரம்

சயமிகு தாரணை தியானஞ் சமாதி

அயமுறும் அட்டாங்க மாவதுமாமே (திருமந்திரம்)

என்று இந்த எட்டு உறுப்புகளைத் திருமூலர் விளக்குகிறார்.

பதஞ்சலி மாமுனிவர் யோக சூத்ரம் என்ற யோக நூலை உலகிற்கு அருளியவர்.

இதில் 194 சூத்திரங்கள் உள்ளன.

ஸ்வாமி விவேகானந்தர் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விளக்கவுரை அளித்துள்ளார். உலகம் முழுவதும் யோகா பிரபலமாக ஸ்வாமி விவேகானந்தர் முக்கிய காரணமாக அமைந்தார். தியாஸபிகல் சொஸைடியும் யோகாவில் ஆர்வம் காட்டியது.

யோக சூத்ரம் நான்கு பாகங்களைக் கொண்டது. சமாதி பாதம், சாதனா பாதம், விபூதி பாதம், கைவல்ய பாதம் என்ற நான்கு பாதங்களில் சமாதி பாதத்தில் 51 சூத்திரங்களும் சாதனா பாதத்தில் 54 சூத்திரங்களும், விபூதி பாதத்தில் 56 சூத்திரங்களும் கைவல்ய பாதத்தில் 33 சூத்திரங்களும் உள்ளன.

அத யோகானுசாஸனம் என யோக சூத்ரம் ஆரம்பிக்கிறது.

Yogashchittavrittinirodhah -யோக சித்த விருத்தி நிரோத:

Yoga is restraining the mind-stuff (Chitta) from taking various forms (Vrttis)

யோகம் என்பது மனதை சித்த விருத்திகளிலிருந்து அடக்குவது தான்

என்பதை அடுத்த சூத்திரத்தில் இப்படிக் கூறி அருள்கிறார் பதஞ்சலி மாமுனிவர்.

இயமம் பற்றி பதஞ்சலி முனிவர் கூறும் போது கொல்லாமை, வாய்மை, களவு செய்யாமை, வெஃகாமை, புலன் அடக்கம் என்ற ஐந்தைக் கூறும் போது திருமூலரோ நடுநிலைமை, பகுத்துண்ணல், மாசற்ற தன்மை, கள் உண்ணாமை, காமம் இன்மை ஆகிய ஐந்தையும் சேர்த்து பத்து இயமங்களைச் சொல்கிறார்.

ஆசனங்கள் பற்றி பதஞ்சலி முனிவர் குறிப்பாகச் சொல்கிறார்.

ரஜோ குணத்தை அழிப்பது ஆசனம்.

வியாதி, யோகத்தில் வன்மை இன்மை,

இது ஆகும், இது ஆகாது என்ற விருப்பு, வெறுப்பு,

அலட்சியம், வைராக்கியம் இல்லாமை, திரிபுணர்ச்சி

சமாதிக்கு உரிய இடம் கிடைக்காதிருத்தல், கிடைத்த இடத்தில் சித்தம் நிலையாக இல்லாமலிருத்தல் ஆகிய இந்த எட்டும் இல்லாமல் நிலைபேற்றினை அளிப்பது தான் ஆசனம் என்று பதஞ்சலி கூறுகிறார்.

திருமூலரோ 134 ஆசனங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். திருமந்திரத்தில் 563வது பாடலாக மலர்வது இந்தப் பாடல்:

பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி

சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழும்

உத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்

பத்தொடு நூறு பலஆ சனமே

மிகப் பெரும் பழைய ஆசனம் சுவத்திகம்.

அடுத்து இந்தப் பாடல் கூறும் ஏழு ஆசனங்கள்

இது தவிர எட்டெட்டுப் பத்தொடு நூறு ஆசனங்கள் உண்டு எனக் கூறி அருளுகிறார் திருமூலர்.

எட்டெட்டு என்றால் , ஈரெட்டு பதினாறு. அத்தோடு பத்தைக் கூட்ட வருவது 26. அத்துடன் நூறைக் கூட்டினால் வருவது 126.

இந்த 126 ஆசனங்கள் யாவை?

  1. சுவஸ்திகாசனம்
  2. கோமுகாசனம்
  3. வீராசனம்
  4. கூர்மாசனம்
  5. குக்குடாசனம்
  6. உத்தான கூர்மாசனம்
  7. தனுராசனம்
  8. மச்சேந்திராசனம்
  9. பச்சிமதானாசனம்
  10. மயூராசனம்
  1. சவாசனம்
  2. மச்சேந்திர சித்தாசனம்
  3. சித்தாசனம்
  4. வச்சிராசனம்
  5. பதுமாசனம்
  6. மச்சேந்திர பதுமாசனம்
  7. முக்த பதுமாசனம்
  8. சிம்மாசனம்
  9. பத்திராசனம்
  • வல்லரியாசனம், இப்படிப் போகிறது பெரும் பட்டியல்.

ஆக, மொத்த ஆசனங்கள் நூற்றி இருபத்தாறையும் எட்டையும் கூட்டினால் வருவது 134.

கேசரி ஆசனம் என்றால் வானத்தில் பறப்பது. இப்படி அபூர்வமான ஆசனங்களைச் செய்வதன் மூலம் சித்திகள் பல கிடைக்கின்றன.

யோகத்தின் பயன்களாக சித்திகளை பதஞ்சலியும் விளக்குகிறார். திருமூலர் மூன்றாம் தந்திரத்தில் அஷ்டாங்க யோகத்துடன் அட்டமா சித்திகளையும் விளக்குகிறார்.

அணு மாதி சித்திகளானவை கூறில்

அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை

இணுகாத வேகார் பரகாய மேவல்

அணுமைத் தனையெங்குந் தானாத லென்றெட்டே (பாடல் 668)

என்று எட்டு சித்திகளை இப்படி விளக்குகிறார் திருமூலர்.

அணிமா என்பது அணுவைப் போல சிறிதான தேகத்தை அடைதல்; மகிமா என்பது பெரிய உருவத்தை அடைதல்; லகிமா என்பது காற்றைப் போல லேசாக ஆதல், கரிமா என்பது கனமாக ஆதல்; ப்ராப்தி என்பது அனைத்துப் பொருள்களையும் தன் வசப்படுத்தல், பிராகாமியம் என்பது பர காய பிரவேசம் அதாவது கூடு விட்டுக் கூடு பாய்தல்; ஈசத்துவம் என்பது தேவர்களிடம் கூட ஆணை செலுத்துதல்; வசித்துவம் என்பது அனைத்தையும் தன் வசப்படுத்துதல்

பதஞ்சலி, யோகத்தின் உச்ச பயனாக கைவல்ய நிலையைக் கூறுகிறார்.

திருமூலரோ யோகத்தைச் சிவயோகமாகக் கூறுகிறார். யோகத்தின் உச்ச பயன் சிவனை அடைவதேயாம்.

பதஞ்சலி, யோகத்துடன் தன்னை நிறுத்திக் கொள்கிறார். திருமூலரோ ஒன்பது தந்திரத்தில் உலகியலையும் வாழ்வாங்கு வாழ வேண்டிய நெறிகளையும் புகல்கிறார்.

பதஞ்சலி சம்ஸ்கிருதத்தில் அற்புதமான சொற்றொடர்கள் அடங்கிய 194 சூத்திரங்களைத் தரும் போது திருமூலரோ என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என்று தமிழுக்குப் பெருமை சேர்க்கிறார்.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும், அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார், உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே, பெரியாருடன் கூடல் பேரின்பமாமே, பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின், நல்லாரைக் காலன் நணுக நில்லானே, நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை, யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி என இப்படி வாழ்வின் ரகசியங்களைக் கொடுத்தருள்கிறார் திருமூலர்.

பதஞ்சலி சிதம்பர ஸ்தலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்; ஆடல் வல்லானின் ஆனந்தத் திருநடனத்தைக் கண்டு களித்தவர்.

திருமூலரோ திருவாவடுதுறையில் அரச மர நீழலில் வெகு காலம் தவம் புரிந்தவர்.

இப்படி இருவரையும் பற்றிச் சொல்ல நிறைய விஷயங்கள் உண்டு.

மிக முக்கியமான குறிப்பு ஒன்று உண்டு. இந்த யோகத்தைத் தகுந்த குரு மூலமாகவே கற்க வேண்டும். பிராணாயாமம் என்பது மூச்சுக் கலை. இதை முறையாக ஆசானிடமே கற்க வேண்டும். இல்லையேல் விபரீதமான பக்க விளைவுகள் ஏற்படும்.

இன்னொன்று, இன்றைய கால கட்டத்தில் யோகா என்ற சொல் தவறாகப் பயன்படுத்தப்படுவது போல வேறெந்தச் சொல்லும் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை.

சிரிப்பு யோகா, அழுகை யோகா, நடக்கும் யோகா, ஓடும் யோகா என்று தமக்குத் தோன்றியபடி பெயரைக் கொடுத்து சுயநல நோக்குடன் பயிற்சிகளை அளிக்கின்றவரை இனம் கண்டு தவிர்த்து பாரம்பரியமாக பதஞ்சலி முனிவர், திருமூலர் ஆகியோர் கூறிய யோகத்தில் பயிற்சி அளிப்பவரையே குருவாகக் கொள்ள வேண்டும்.

இல்லையேல் போலிகள் கற்பிக்கும் யோகம் நம்மை சோகத்தில் ஆழ்த்தி விடும்.

ஸ்வாமி விவேகானந்தர் அருளிய பதஞ்சலி யோக சூத்ரத்தின் விளக்கவுரை, திருமூலரின் திருமந்திரம் ஆகியவை இணையதளத்தில் இலவசமாகத் தரவிறக்கம் – டவுன் லோட் – செய்து கொள்ளலாம்.

படிப்போம்; யோகா பயில்வோம். இரு உலகிற்கும் தேவையானதைப் பெறுவோமாக.

இந்த வாய்ப்பினை நல்கியோருக்கும் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கும்  உளமார்ந்த நன்றி கலந்த வணக்கம் கூறி விடை பெறுவது சந்தானம் நாகராஜன்.

tags– திருமூலர் ,யோகம், பதஞ்சலி ,

***

‘யோகா’ ஒரு சமுத்திரம் – 5 லட்சம் சுவடிகள் ! (Post No.7612)

Tevaram manuscript in British library

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7612

Date uploaded in London – 24 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

yoga in alphabet

ஞானஸ்ய காரணம் கர்ம, ஞானம் கர்ம விநாசகம்

பலஸ்ய கரணம் புஷ்பம், பலம் புஷ்ப விநாசகம்

ஞான மார்க ப்ரபோதினி

பழத்தை உண்டாக்கியது பூ ; அந்தப் பழமே பூவின் முடிவுக்குக் காரணம் ஆகிவிடுகிறது.

ஞானத்தை  உண்டாக்கியது கர்மவினையே ; அந்த ஞானமே  கர்மவினைக்கு முடிவுகட்டி விடுகிறது .

எளிய நடை ; அதி அற்புதமான தத்துவம் . இந்த நூல் வெளியாகவில்லை!! tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்தியா தங்கத்துக்கும் வைரத்துக்கும் பெயர்பெற்ற இடங்கள். இதைக் கொள்ளையடிக்க கஜினி முகமது முதல் கொலம்பஸ் வரை புறப்பட்டதையும் கொலம்பஸ் மேற்கிந்தியத் தீவுகளில் இறங்கி அதுதான் இந்தியா  என்று பெயரிட்டதையும் இன்று வரை அந்த கரீபியன் கடல்  தீவுகளுக்கு மேற்கு இந்தியா (West Indies) என்று பெயர் இருப்பதும் நீங்கள் அறிந்ததே ; அதற்குப் பின்னர் 700 ஆண்டுகளுக்கு துலுக்கர்களும் 300 ஆண்டுகளுக்கு வெள்ளையர்களும் இந்தியாவைக் கொள்ளையடித்ததும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். tamilandvedas.com, swamiindology.blogspot.com

எனக்கும் உங்களுக்கும் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது . அதாவது இந்தியாவின் மஹத்தான பொக்கிஷம் ஒன்று உலக லைப்ரரிகளில் ஒளிந்துகொண்டிருக்கிறது . அது என்ன?

ஐந்து லட்சம் சம்ஸ்கிருத , பிராகிருத, பாலி மொழி சுவடிகள் ஆகும்.! ( இதில் தமிழ் சுவடிகளின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை.. ஏனெனில் இதை பெங்களூரைச் சேர்ந்த பாண்டுரங்கி எழுதிய கட்டுரையிலிருந்து தருகிறேன்.).

உலகிலுள்ள 215 கல்வி நிறுவனங்கள் ,  நூலகங்களில் ஐந்து லட்சம் சுவடிகள் இருப்பதாகவும் இதில் ஒரு லட்சம் சுவடிகள் ஜெர்மனி,பிரான்ஸ், பிரிட்டன், இலங்கை, நேபாளம் முதலிய நாடுகளில் உள்ள 40 ஸ்தாபனங்களில் இருப்பதாகவும் பாண்டுரங்கி புள்ளி விவரம் வெளியிட்டுள்ளார். (K T Pandurangi, The Wealth of Sanskrit Manuscripts in India and Abroad, Bangalore 1997 ) tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, பாரசீக மொழிகளில் உள்ள சுவடிகளை அவர் கணக்கில் சேர்க்கவில்லை. இதற்கு முன்னர் தியோடர் ஓப்ரக்ட்(Theodor Aufrecht)  , பிரான்ஸ் கீல்ஹான் (Franz Kielhorn) , ஜார்ஜ் பியூலர் (George Buhler) , செஸில் பென்டெல் (Cecil Bendell) , ஏ ஸி பர்னல் ( A C Burnell) , ஹர பிரசாத் சாஸ்திரி (Hara Prasad Shstri)  , ஆர்.ஜி.பண்டார்க்கர் (R G Bhandarkar)  , குப்புசுவாமி  சாஸ்திரி Mm Kuppuswami  Sastri) ,டாக்டர் வி.ராகவன் (Dr V Raghavan) , பி.கே. கோடே ( P K Gode)   முதலிய பல அறிஞர்கள் எடுத்த நன் முயற்சியால் சம்ஸ்கிருத, பாலி , பிராகிருத மொழி சுவடிகள் பற்றி தெரிய வந்தது. சென்னை பல்கலைக் கழகம் வெளியிட்ட புதிய கேட்டலாகஸ் கேட்டலகோரம் ( The New Catalogus Catalogorum, Department of Sanskrit, Madras University) ‘அட்டவணைகளின்  அட்டவணை’ ) புஸ்தகம் நமக்கு சுவடிப் பட்டியலைத் தருகிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

அது ஒரு கலைக்களஞ்சியம் . அதில் வெறும் சுவடிப்பட்டியல் மட்டும் இல்லாமல் அதிலடங்கிய விஷயம் , அதை எழுதியோர்,தொ குத்தோர் , பாஷ்யம் செய்தோர் முதலிய பல விஷயங்கள் உள .

இதற்கு அடுத்தாற்போல யோகா சம்பந்தப்பட்ட சுவடிகள் மட்டும் எவ்வளவு என்று ஆராயாப் புகுந்த கே.எஸ். பாலசுப்ரமணியன் ஒரு கட்டுரை (ஆங்கிலத்தில்) எழுதினார். அதில் கண்ட சுவையான விஷயங்களை மட்டும் புல்லட் பாயிண்டு (Bullet Points) களில் தருகிறேன்.

ராஜ யோகம், ஹட யோகம் லய யோகம், மந்த்ர யோகம் என பல பிரிவுகள் உண்டு. யோகம் பற்றிய புஸ்தங்களைத் தவிர ஆகம, பவுத்த, ஜைன நுல்களுக்கிடையேயும் யோக விஷயங்கள் வருகின்றன. ஆகையால் அவ்வளவையும் சேகரிப்பதே ஒரு பெரிய கடினமான பணி . tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆனால் யோகா என்பது மனிதனின் ஆன்மீக , உடல் ஆரோக்கிய , மன ஆரோக்கிய விஷயங்களுக்கு உதவுவதாலும் , இன்று உலகம் முழுதும் அதில் ஆர்வம் காட்டுவதாலும் கடினமான பணியைச் செய்துதான் ஆகவேண்டும் .

அடையாறு நூலகம் , தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் முதலிய இடங்களில் இன்னும் பல யோகா சுவடிகள் அச்சேறாமல் உள்ளன.

யோகா சுவடிகளில்  சுந்தரதேவ எழுதிய ‘ஹட சங்கேத சந்திரிகா’ முக்கியமானது . வேறு பல ஹடயோக நூல்களில் இல்லாத அரிய பல விஷயங்களை சுந்தரதேவ எழுதி இருக்கிறார் . இந்த சுவடியின் பிரதிகள் வேறு பல நகரங்களிலும் கிடைக்கின்றன; சுந்தர தேவ 1650-1750 இடையே வாழ்ந்தவர். அவர் பல்கலை வித்தகர்; காவ்ய, யோக, ஆயுர்வேத , வேதாந்த விஷயங்களில் வல்லவர். நூலின் அடிக்குறிப்பிலிருந்து அவர் காஸ்யப கோத்ரத்தைச் சேர்ந்த தென்னிந்திய பிராமணர் என்பதும் காசி மா நகரில் குடியேறியவர் என்றும் தெரிகிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

அவர் 90 வேதாந்த, வைத்ய, யோக ஆசிரியர்களின் நுல்களைக் குறிப்பிடுவதால் அவருடைய மேதா விலாசம் விளங்கும்; கே. எஸ் பாலசுப்ரமணியன் இதை ஆராய்ந்து டாக்டர் பட்டம் பெற்றார்.

சுந்தரதேவ குறிப்பிடும் பல யோக நூல்கள் இன்று காணக்கிடக்கில. அவை யாவை ?

விரூபாக்ஷ எழுதிய அம்ருத சித்தி யோக;

கோரக்சனாத எழுதிய அமருக ப்ரபோத;

யோக சம்க்ரஹ , எழுதியர் பெயர் இல்லை

பாதஞ்சல யோக சம்க்ரஹ – இது பதஞ்சலியின் யோக சூத்ரம் அல்ல ; இது வேறு. tamilandvedas.com, swamiindology.blogspot.com

சாயா  புருஷ யோக ;

சாயா  புருஷ லட்சண;

ஞான யோக ப்ரபோதினி ;

குண்டலினி பஞ்சகாதி நிரூபணம்;

ராஜ யோக சார;

சித்தாந்தசார ;

யோக ரஹஸ்யம்;

ஸ்வர சாஸ்த்ர சம்க்ரஹ.

இவை அனைத்துக்கும் எழுதியோர் பெயர் கிடைக்கவில்லை

பரமேஸ்வர யோகி எழுதிய பரமேஸ்வர யோகின் , சுவடி வடிவில் அடையாறு நுலகத்தில் உள்ளது.

தஞ்சாவூர்  சரஸ்வதி மஹாலில் இன்னும் வெளியிடப்படாத யோக நூல்கள் சுவடிகளாக உள்ளன . tamilandvedas.com, swamiindology.blogspot.com

யோகத்தைப் பயில்வோம்! சுக போகத்தை அடைவோம்!!

–subham–