
Post No. 8632
Date uploaded in London – –5 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
திருவிளையாடல் புராணத்தில் தருமி என்ற ஏழைப் பிராமணனுக்கு சிவபெருமான் எழுதிக் கொடுத்த கவியை சங்கப் புலவன் நக்கீரன் கேள்வி கேட்க, சிவபெருமானே நேரில் வந்து நெற்றிக் கண்ணைத் திறக்க , “நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று அவர் வாதாட, பின்னர் எல்லாம் இனிதே முடிந்த கதை எல்லோரும் அறிந்ததே . அந்தப் பார்ப்பனன் தருமி பெற்றது 1000 பொற் காசுகள் . இந்த நிகழ்ச்சியை அப்பர் பெருமான் தேவாரத்தில் பாடியதால் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இது நடந்ததை நாம் அறிகிறோம். திருவிளையாடல் திரைப்படம் இந்தக் காட்சியை சுவைபடக் காட்டுவதால் மக்கள் நினைவில் இது பசுமையாக நிற்கிறது .
ஸ்ரீ மாதவ சிவஞான யோகிகள்
ஸ்ரீ மாதவ சிவஞான யோகிகள் என்பவர் வாழ்விலும் இது போல ஒரு சுவையான சம்பவம் நடந்தது . முதலில் மாதவ சிவஞான சுவாமிகள் யார் என்பதைக் காண்போம். அவர் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் புலமை பெற்றவர் . திருநெல்வேலிப் பகுதியில் பாபநாசம் அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரத்தில் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் பிறந்தார். இவருடைய இயற்பெயர் முக்களா லிங்கர். தந்தையின் பெயர் ஆனந்தக் கூத்தர். தாயார் பெயர் மயிலம்மை.
‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்னும் பழமொழிக்கேற்ப இவர் மேதாவிலாசம் சிறு வயதிலேயே வெளிப்பட்டது. திருவாவடுதுறை ஆதீன முனிபுங்கவர்கள் ஒரு முறை விக்கிரமசிங்கபுரம் சென்றிருந்தனர். அப்போது பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த முக்களா லிங்கர் அவர்களைத் தன் வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அழைத்தார். இவ்வளவுக்கும் அப்போது அவருடைய தந்தை ஊரில் இல்லை. சிறுவன் அழைப்புக்கிணங்க அவனுடைய வீட்டுக்குச் சென்ற சிவனடியார்களுக்கு அவன் தாயார் அறுசுவை அமுது படைத்து உபசரித்தார்.
தந்தை ஊருக்குத் திரும்பியவுடன் மகனின் தொண்டை நினைத்து மகிழ்ந்தார். தந்தையையும் தாயாரையும் வணங்கிய முக்களாளிங்கர் தன்னைத் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டினர். அங்கு சென்ற அவர் சிவநெறித் தொண்டு செய்வதே தன் குறிக்கோள் என்று சொன்னவுடன் அங்கு சின்னப் பட்டத்தில் எழுந்தருளிய வேலப்ப சுவாமிகள் , முக்களா லிங்கருக்கு சிவ தீட்சை அருளி சிவஞானத் தம்பிரான் என்ற தீட்சா நாமம் கொடுத்தார். குரு முகமாக பல சாஸ்திரங்களைக் கற்று, சிவஞானத் தம்பிரான் சம்ஸ்கிருத நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். தமிழில் சுமார் 20 நூல்கள் இயற்றினார் .
சிவ ஞான சுவாமிகள் ஒருமுறை திருப் பாதிரிப்புலியூருக்குச் சென்றார்கள் . அப்பர் சுவாமிகளைக் கரை ஏற்றிவிட்ட ஊர் என்பதால் சிலகாலம் தங்கினார் .அப்போது அவ்வூரில் கற்றோர் அவை கூடியது . அதில் ஒரு பணக்காரர் , “கரை ஏற விட்ட முதல்வா உன்னை யன்றியும் ஓர் கதியுண்டாமோ” என்ற ஈற்றடியைத் தந்து இதனை முடித்துத் தருவோருக்கு நூறு பொன் பரிசளிப்போம் என்று அறிவித்தார். இதனை அறிந்த ஏழை ஒருவன் சுவாமிகளிடம் வந்து விண்ணப்பிக்க, சுவாமிகளும் அருள் கூர்ந்து ,
வரையேற விட்டமுதம் சேந்தனிடம்
உண்டனைவல் லினம் என்றாலும்
வரையேற விட்டமுத லாகுமோ
எனைச்சித்தென் றுரைக்கின் என்னாம்
நரையேற விட்டமுத னாளவனாக்
கொண்டு நறும் புலிசை மேவும்
கரையேற விட்டமுதல் வாவுன்னை
யன்றியுமோர் கதியுண்டாமோ
என்ற பாடலை எழுதிக்கொடுத்து பரிஸில் பெற்றுச் செல்க எனப் பணித்தனர்.
சுவாமிகள் காஞ்சிபுரத்தில் தங்கிய நாட்களில் , மெய்கண்ட தேவரின் சிவ ஞான போதத்துக்கு பேருரை எழுதினார். அந்த நூலின் பெயர் சிவ ஞான மாபாடியம் .
சுவாமிகள் எழுதிய தொல்காப்பிய விருத்தியில் முந்தையோர் உரையில் கண்ட பல விஷயங்களைத் தவறு என்று சொல்லி ஆதாரமும் தருகிறார்.
இவருடைய பிற நூல்கள் –
சிவ ஞான சித்தியார் பொழிப்புரை
சிவசமவாதவுரை மறுப்பு
அரதத்தாசாரிய சுலோக பஞ்சக மொழிபெயர்ப்பு
சித்தாந்தப் பிரகாசிகை
சிவதத்துவ விவேகம்
சித்தாந்த மரபுக்கு கண்டன கண்டனம்
பஞ்சாக்கர தேசிக மாலை
திருத்தொண்டர் திருநாமக்கோவை
வட திருமுல்லைவாயில் திருவந்தாதி
திருவேகரம்பரந்தாதி
அகிலாண்டேசுவரி பதிகம்
அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ்
செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ்
திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு
கச்சியானந்தருத்திரேசர் பதிகம்
இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி
குளத்தூர்ப் பதிற்றுப் பத்தந்தாதி
சோமேசர் முதுமொழி வெண்பா
காஞ்சிப்புராண முதற் காண்ட பேரிலக்கியம்
தொல்காப்பியச் சூத்திரவிருத்தி
நன்நூல் விருத்தியுரைத் திருத்தம்
இலக்கண விளக்கச் சூறாவளி
தருக்க சங்கிரகம்
அன்னம்பட்டீயம்
சுவாமிகள் , திருவாவடுதுறை ஆதீனத்தின் ஞானக் கண்ணாக, செந்தமிழ்க் காவலராக , இலக்கண வரம்பினையும், சமய வரம்பினையும் பாதுகாக்கும் சிவஞான வள்ளலாகத் திகழ்ந்தார். விசுவாவசு சித்திரைத் திங்கள் எட்டாம் நாள் 17-4-1785-ம் ஆண்டு சிவானந்தப் பெருவாழ்வு அடைந்தார்கள்
– உதவிய நூல் – தொல்காப்பிய சூத்திரவிருத்தி; ஆதீன மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர் முகவுரை

tags –மாதவ சிவஞான ,யோகிகள்,சுவாமிகள், திருவாவடுதுறை