எழுதியவர்: லண்டன் சுவாமிநாதன்
சிந்து சமவெளி பற்றி தமிழர்களின் புலம்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‘‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’’ என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. ‘’பேனா எடுத்தவன் எல்லாம் ‘பிளாக்’காரன்’’ என்பது புதுமொழி. சிந்து சமவெளி நாகரீகம் பற்றி ‘பிளாக்’கில் எழுதுபவர்கள் எவ்வளவு தூரம் படித்துவிட்டு எழுதுகிறார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இது பற்றி எழுதுபவர்கள் முதலில் அங்கே பின்பற்றப்பட்ட மதத்தையும் அவர்களுடைய நம்பிக்கைகளையும் அறியவேண்டும். அதுவும் ஊகம்தான். ஏனெனில் படத்தில் உள்ள எழுத்துக்களை இதுவரையும் யாராலும் படிக்க முடியவில்லை. அவரவர்கள் தங்கள் கருத்துக்களை மனம்போல போக்கில் எழுதிவருகிறார்கள்.
மனம்போன போக்கில் எழுதுபவர்களில் மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கியவர் மார்ஷல் என்னும் தொல்பொருட் துறை இயக்குநர் ஆவார். இவர் அங்கே கிடைத்த சில பொருட்கள் ஆண்குறி வடிவில் இருக்கவே அதை லிங்க வழிபாடு என்று சொல்லிவிட்டார். நடுவில் துளைகளுடன் வட்டவடிவில் கிடைத்த கற்களை பெண்குறி (யோனி) என்று சொல்லிவிட்டார். அவை மொஹஞ்சதாரோவில் எங்கே கிடைத்தன என்பதைச் சொல்லவில்லை. அது போன்ற கற்கள் வேறு எங்கேயும் கிடைக்கவும் இல்லை. இவர் செய்த தவறுகள் மகத்தான தவறுகள். தொல்பொருட் துறையினரின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றத் தவறிவிட்டார். பெரிய வெள்ளைக்கார அதிகாரி சொல்கிறார் என்பதால் அப்போது கேள்வி கேட்க நாதி இல்லை.
தற்கால வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இந்த லிங்கம்-யோனி கற்கள் பற்றிப் பல கேள்விகளை எழுப்புகின்றனர். உலகிலேயே மிகப்பெரிய சிந்துவெளி நாகரீகத்தில் மற்ற இடங்களில் இது ஏன் கிடைக்கவில்லை? 4000 முத்திரைகளில் இப்படி ஒரு வழிபாடு பற்றி ஏன் படமே இல்லை? புலி தேவதை, பேய் முத்திரை, ஆடு நரபலி முத்திரை, பசுபதி முத்திரை, பெண்குறியிலிருந்து மரம் வெளிவரும் முத்திரை, கொம்பன் முத்திரைகள், ஆட்டுக் கொம்பு தெய்வ முத்திரை, பல மிருகங்கள் ஒட்டிக் கிடக்கும் பலமிருக முத்திரை இப்படி எவ்வளவோ கிடைத்த இடத்தில் லிங்க வழிபாடு பற்றி ஏன் ஒன்றுமே இல்லை?
(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவேண்டுகிறேன்)
மார்ஷலை மாஹா ‘பிராட்’ (மோசடிக்காரன்) என்று இதுவரை யாரும் சந்தேகிக்கவில்லை. ஆனால் தொல்பொருட் துறை ஊழியர்கள் பின்பற்றும் அடிப்படைக் கொள்கைகளைக் கூடப் பின்பற்றவில்லை என்று மட்டும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒரு யோகி போல அமர்ந்திருக்கும் ஒரு கடவுளைச் சுற்றி பல மிருகங்கள் இருப்பதைப் பார்த்தார். இது பசுபதி என்றும் சிவனுக்கு முந்திய ஒரிஜினல் சிவன் என்றும் சொல்லிவைத்தார். இந்த உருவத்தின் ஆண்குறி எடுப்பாக வெளியே நீண்டிருக்கும் (ithyphallic). அவருக்குத் தமிழ் தெரியாது. அப்போது தமிழ் தெரிந்த ஆட்களுக்கு சிந்து சமவெளி தெரியாது. ஆரிய திராவிட வாதம் என்னும் விஷச் செடி மட்டும் கொஞ்சம் வளர்ந்திருந்ததால் அதைப் பற்றித் தமிழர்களுக்கு தெரியும். இந்த விஷ வித்தை ‘’ஈஸ்ட் இந்தியா கம்பெனி’’யிடம் (East India Company) மானிய உதவி பெற்று வேதங்களை மொழிபெயர்த்த மாக்ஸ்முல்லர் என்ற ஜெர்மானியர் விதைத்திருந்தார். பின்னர் சிந்து சமவெளி நாகரீகத்தைத் தோண்டி எடுத்தவர்கள் அந்த விஷச் செடிக்கு நீர் பாய்ச்சி மரமாக வளர்த்தனர்.
சிவன் என்ற தெய்வம் தொல்காப்பியத்தில் இல்லையே? சிவன் என்ற சொல்லே தேவார காலம் வரை தமிழில் இல்லையே? சங்க இலக்கியத்தில் வரும் சிவனை முக்கண்ணன், நீலமணிமிடற்றோன் என்று வேதகால தெய்வமாக மட்டுமே புறநானூறு வருணிக்கிறதே? தேவார மூவரும் திருவாசக மாணிக்கவாசகரும் சிவனை திராவிடனே என்று சொல்லாமல் ஆரியனே என்று மட்டும் சொல்கிறார்களே? சிவனை கருப்பன் என்று சொல்லாமல் செம்மேனி அம்மான் என்று மட்டும் சொல்கிறார்களே? என்றெல்லாம் கேள்வி எழுப்பி மார்ஷலை மடக்க ஆட்கள் இல்லை. நான் இப்போது டென்மார்க்கிலும் (Gundestrup Cauldron) பஹ்ரைனிலும் பசுபதி முத்திரை இருப்பதை படத்துடன் வெளியிட் டிருக்கிறேன். சிந்து சமவெளி பற்றி எழுதும் எவருக்கும் நான் பஹ்ரைனில் இருந்து வெளியிட்ட முத்திரை இருப்பது கூடத்தெரியாது. பசுபதி, சிவன், லிங்கம், யோனி இவை எல்லாம் சம்ஸ்கிருதச் சொற்கள் ஆயிற்றே? இவைகளை திராவிட என்று எப்படி சொல்லலாம்? திராவிடர்களை ஆரியர்கள் ஓடஓட விரட்டியதாக எழுதி திராவிடர்களைக் கோழைகளாக, பயங்கொள்ளிகளாகச் சித்தரிக்கிறீர்களே என்று கேட்கவும் அப்பொழுது நாதி இல்லை.
பசுபதி உருவத்தில் ஆண்குறி (ithyphallic) நீட்டிக்கொண்டு இருப்பதாகச் சொன்னதோடு, அவர் எங்கோ கண்டு எடுத்த கற்களை லிங்கம்—யோனி என்று வருணித்ததோடு, ஆரிய திராவிட வாதத்தையும் புகுத்தி சிந்து சமவெளி நாகரீகத்தையே திசை திருப்பிவிட்டார்.
இப்போதைய ஆராய்ச்சியாளர்கள் அவை லிங்கமும் இல்லை, யோனியும் இல்லை, அவை விளையாட்டுப் பொருட்கள் (செஸ் விளையாட்டு சிப்பாய், யானை, குதிரை Gamesmen) போன்றவை என்றும் அவை எடைக் கற்கள் என்றும் யோனி போன்ற வட்டக் கற்கள் தூண்களை எழுப்பப பயன்பட்டக் கற்கள் என்றும், அவை காலம் அறியப் பயன்படுத்தப்பட்ட கற்கள் (astronomical) என்றும் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வருகின்றனர்.
மேலும் பல ‘செக்ஸ்’ முத்திரைகள்
ஒரு முத்திரையில் இரண்டு பக்கம் பாயும் புலிகளும் நடுவில் சித்திர எழுத்துக்களும் ஒரு பெண்ணுடைய உறுப்பிலிருந்து ஒரு மரம் வெளிவரும் படமும் உள்ளது. இதை பூமாதேவி என்றும் தாவரங்கள் வளருவதை இது குறிப்பதாகவும் ‘அறிஞர்கள்’ விளக்குவர்.
வட இந்தியாவில் பல இடங்களிலும் ‘’லஜ்ஜ கௌரி’’ (Lajja Gauri) என்ற சிலைகள் உண்டு. இவையும் இதே போல காலை அகட்டி பெண் உறுப்பு தெரியும் வகையில் இருக்கும். இவை எல்லாம் ‘’பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ வேண்டும்’’ என்ற வளப்பத்தைக் (Fertility) குறிக்கும் என்று அறிஞர் பெருமக்கள் பகர்வர்.
பலி ஆட்டுடன் தோன்றும் ஒருவன் ஒரு தலையை (நரபலி) தெய்வத்தின் முன்பு வைத்திருக்கும் முத்திரையில் ஒரு மீன் வடிவ எழுத்தில் ஒரு பொட்டு வைத்திருக்கும். இதைக் கூட பெண்குறி என்று ஆய்வாளர்கள் எழுதுவர். சுருங்கச் சொல்லின் சிந்து சமவெளியில் கற்பனை சிறகடித்துப் பறக்கிறது!!!
‘தில்முன்’ எனப்படும் பஹ்ரைனில் பல செக்ஸ் காட்சி முத்திரைகள் கிடைத்திருக்கின்றன. அவை வேறு வகையானவை.
சிந்து சமவெளி பற்றிப் பேசும், எழுதும் தமிழர்கள் முதலில் அந்தக் கால மத நம்பிக்கைகளை அறியவேண்டும். சிந்து நதி, பஞ்சாப் சமவெளி பற்றித் தமிழர்கள் ஏன் ஒன்றுமே சொல்லவில்லை? சங்க இலக்கியத்தில் கங்கையையும் இமயத்தையும் புனிதமானவை என்று போற்றிப் புகழ்ந்தவர்கள் ஏன் சிந்து பற்றி மவுனம் சாதித்தனர்? என்றெல்லாம் சிந்திக்கவேண்டும்.
Lajja Gauri from Nepal
சிந்து சமவெளி பற்றிப் புத்தகம் எழுதிய எல்லோரும் ஏன் சம்ஸ்கிருத நூல்களைப் பக்கத்துக்குப் பக்கம் மேற்கோள் காட்டுகின்றனர்? மீன் உருவத்தைத் தவிர வேறு எதற்கும் தமிழில் ஏன் உதாரணம் காட்டமுடியவில்லை என்றும் மதத் தொடர்பான முத்திரைகளுக்கு ஏன் தமிழில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கம் சொல்ல முடியவில்லை என்றெல்லாம் சிந்திக்கவும் வேண்டும். 1960ஆம் ஆண்டுகளில் இந்த எழுத்துக்களை திராவிட அமைப்புடையவை என்று சொன்ன பின்லாந்துக்காரர்கள், இந்த ஆய்வில் ஏன் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியவில்லை என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும்
சிந்து சமவெளி பற்றிய என்னுடைய கீழ்கண்ட கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறேன்:
Please read my earlier posts: 1.Serpent Queen: From Indus Valley to Sabarimalai 2.Sugarcane Mystery: Indus valley and Ikshvaku Dynasty 3. Vishnu seal In Indus Valley 4. Indus Valley –New Approach required 5.Indra in Indus valley seals+ Symbols for Vedic Gods and 6.Ghost in Indus seals 7. Bull Fighting: From Indus Valley to Spain via Tamil Nadu 8. The Great Scorpion Mystery in History 9. (In Tamil) சிந்து சமவெளியில் புலிப்பெண் 10. சிந்து சமவெளியில் பேய் முத்திரை 11. Ramayana Wonders part 5: Indus Valley Cities in Ramayana + 575 articles on Tamil Sanskrit Literature and Indian Culture.
To get the above articles, type any of the article titles and add ‘from tamilandvedas.wordpress.com or from swamiindology.blogspot.com
For further list contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.