அப்பா போல பிள்ளை! காளிதாசன், வள்ளுவன் உவமைகள்! (Post No.3415)

Written by London swaminathan

 

Date: 4 December 2016

 

Time uploaded in London: 7-07 am

 

Post No.3415

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

 

ஒரு மகன், அவனது தந்தையின் நல்ல குணங்களை பின்பற்றவேண்டும். மகன் என்பவன், தந்தையின் மறு அச்சு என்று சம்ஸ்கிருத  நூல்கள், கூறுகின்றன. பிரம்மாவுக்கு எப்படி அத்ரி மகரிஷி நல்ல புத்திரனாக இருந்தாரோ, சந்திரன் எப்படி அத்ரிக்கு நல்ல புத்திரனாக இருந்தாரோ , புதன் எப்படி சந்திரனுக்கு நல்ல புத்திரனாக இருந்தாரோ, புரூருவசு மன்னன் எப்படி புதனுக்கு நல்ல புத்திரனாக இருந்தாரோ அப்படி ஆயுஸ் என்ற புதல்வன் அவன் தந்தைக்கேற்ற மகனாகப் பிறந்தான்.

பிரம்மா, அத்ரி, சந்திரன், புதன், புரூருவஸ் – என்று அழகாக ஐந்து தலைமுறைகளை அடுக்குகிறான் காளிதாசன்.

அமர முனி: இவ அத்ரி:ப்ரம்மண: அத்ரே: இவ இந்து:புத: இவ சசினாம்சோ: போதனஸ்ய ஏவ தேவ: பவ : பிது:அனுஸ்த்ரூப: த்வம்

குணை: லோக காந்தை: அதிசயினி சமாப்தா வம்சஏவாசிஷஸ்தே

–விக்ரமோர்வசீயம் 5-21

ரகுவம்சம்

 

ரகு வம்சத்திலும் மகன்கள் பற்றிய அழகிய பாடல்கள் வருகின்றன:-

அத நயன சமுத்தம் ஜ்யோத்ரத்ரேரிவ த்யௌ:

சுரசரிதிவ தேஜோ வன்னிநிஷ்டயூதமைசம்

நரபதி குல மூர்த்யை கர்பமாதத்த ராக்ஞோ

குருபிரபிநிவிஷ்டம் லோகபாலானுபாவ:

–ரகுவம்சம் 2-75

 

பொருள்:

பிறகு ஆகாசம், அத்ரி மகரிஷியின் கண்களிலிருந்து எழுந்த ஒளியாகிய சந்திரனை தரித்தது போலும், கங்கா நதி அக்னி தேவனால் கொடுக்கப்பட்ட பரமசிவனுடைய தேஜசாகிய சுப்ரமண்யனை (தரித்தது) போலும், அரசியான சுதக்ஷிணை ராஜகுலத் தின் க்ஷேமத்தின் பொருட்டு அதிகமான லோகபாலகர்ளின் அம்சங்களினால் பிரவேசிக்கப்பட்ட கர்ப்பத்தைத் தரித்தாள்.

 

லோகபாலகர்களின் அம்சம்: இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என எண்மர். இவர்களுடைய சக்தி அரசனிடம் பிரவேசிப்பதாக மனு கூறுகிறார். தமிழ் இலக்கியமும் மன்னர்களை இந்திரன் என்றும், அக்கினி என்றும், வாயு என்றும், எதிரிகளுக்கு எமன் என்றும் புகழ்கின்றன.

 

அத்ரியின் கண்களிலிருந்து விழுந்த நீர்த்துளிகளை திக் தேவதைகள் தாங்கவே அது சந்திரனாக மாஇறியது.

 

பரமசிவனுடைய கண்களிலிருந்து விழுந்த ஆறு தீபொறிகளை கங்கை தாங்கவே அது சுப்பிரமணியனாக உருவாகியது என்பது புராணச் செய்திகள்.

தமிழ்ப் புலவர் திருவள்ளுவரும் மகன் தந்தைக்குள்ள உறவைப் பற்றி பேசுகிறார்:

 

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை

என்னோற்றான் கொல் எனுஞ் சொல் (குறள் 70)

 

அதாவது ஒரு மகன் அவனுடைய தந்தைக்கு எப்படி நன்றி செலுத்துவது? இப்படிப்பட்ட ஒரு நல்ல பிள்ளையைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ? என்னென்ன நோன்புகளைக் கடைப்பிடித்தானோ?

 

ஒரு இந்துவானவன் நல்ல பிள்ளை கிடைக்க கடவுளை வேண்டுவான். மகன், வாழ்நாள் முடியும்வரை தந்தைக்கு சாப்பாடு போட வேண்டும், கை கால் பிடித்துவிட வேண்டும் என்றெல்லாம் வள்ளூவன் சொல்லவில்லை. அவன் தந்தையை விட அறிவாளியாகவும், தந்தையைப் போல குணவானாகவும் இருப்பதே பெரிய கைம்மாறு! இதனால்தான் காளிதாசனும் பிரம்மா முதல் ஐந்து தலைமுறைகளைப் புகழ்ந்து அப்படிக் குணவானாக இருந்தான் அந்தப் பிள்ளை என்கிறான்.

 

ஏனைய இடங்களில் வள்ளுவன் கூறும் கருத்துகளும் சிறப்புடைத்து. பெற்றபோது இருந்த இன்பத்தைவிட, ‘உன் மகன் அறிஞன்’ என்று சொல்லும்போது தாயார் கூடுதலாக மகிழ்வாளாம் (குறள் 69). ஒரு தந்தையினுடைய கடமை, பிள்ளையை நல்ல பள்ளியில் சேர்த்து அவனை வகுப்பில் முதல் மாணவனாகக் கொண்டுவரவேண்டும் என்றும் வள்ளுவன் வலியுறுத்துவான்.

 

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து

முந்தியிருப்பச் செயல் (குறள் 67)

ஒரு மகனுக்கு தந்தை செய்யக்கூடிய நன்மை யாதெனில் கற்றோர் உள்ள சபையில் தன் மகன் அறிவாளி என்று புகழப்படும் அளவுக்குக் கல்வியை அளிப்பதாகும்.

 

இதே கருத்தை பெரியாழ்வார் திவ்வியப்பிரபந்தத்திலும், திருத்தக்க தேவர் சீவக சிந்தாமணியிலும், கம்பன், ராமாயணத்திலும் கூறுவது ஒப்பிட்டுப் பார்த்து ரசிக்க வேண்டிய பகுதிகளாம்:-

 

என்ன நோன்பு நோற்றாள் கொலோ

இவனைப் பெற்ற வயிறுடையாள்

என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா

–பெரியாழ்வார் 2.2-6

 

எத்துணைத் தவம் செய்தான் கொல்

என்று எழுந்துலகம் ஏத்த — சீவக.2567

 

வல்லை மைந்தவம் மன்னையும் என்னையும்

எல்லையில் புகழ் எய்துவித்தாய் என்றான்

–கம்ப, சடாயுகாண் படலம் 41

 

–சுபம்–

 

புத்தகம் எழுதுவது எப்படி? கம்பனும் காளிதாசனும் காட்டும் வழி (Post No.2859)

கம்ப1

Article written by London swaminathan

 

Date: 1 June 2016

 

Post No. 2859

 

Time uploaded in London :–  8-03 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

kalidasa_20405

Poet Kalidasa

அடக்கத்தின் சின்னம் கம்பன்; பணிவின் சின்னம் காளிதாசன். கம்ப ராமாயணத்தின் புகழும், காளிதாசன் எழுதிய ரகு வம்சம் என்ற காவியத்தின் புகழும் இன்று இந்தியா முழுதும் பரவிவிட்டது. ஆயினும் அவர்கள் முதல் பாடலை எழுதி பெரும் காவியத்தைத் துவக்கியபோது இது மக்களின் ஆதரவைப் பெறுமா, காலத்தின் தாக்குதலைக் கடந்து நிலைத்து நிற்குமா என்றெல்லாம் பயமும் ஐயமும் இருந்திருக்கும். அவர்களிருவரும் பெரும் புலமை படைத்திருந்தும் மிகவும் அடக்கத்துடன் காவியத்தைத் துவக்குகின்றனர். அவர்கள் சொன்னதை ஒப்பிட்டுப் பார்ப்போம்.

 

க்வ சூர்யப்ரபவோ வம்ச: க்வ ச அல்பவிஷயா மதி:

திதீர்ஷு துஸ்த்ரம்  மோஹாத் உட்டுபேன  அஸ்மி சாகரம்

 

சூரியனிடமிருந்து இந்த வம்சம் தோன்றியது. அதைக் கூற, சின்ன அறிவுடைய நான் எங்கே? கடக்கமுடியாத கடலை சிறிய படகைக் கொண்டு கடக்க விரும்புபவன் போல நான் ஆசைப்படுகிறேனே!

காளிதாசனின் ரகுவம்சம் 1-2

xxx

மந்த கவியஸ ப்ரார்த்தீ கமிஷ்யாமி உபஹாஸ்யதாம்

ப்ராம்சுலப்யே பலே லோபாத் உத்பாஹுரிவ வாமன:

 

எனக்கோ குறைந்த அறிவு; ஆசையோ பெரிய கவிஞனாக வேண்டும் என்பது. ஒரு குள்ளன், மரத்தின் உச்சியில் இருக்கும் பழத்தைப் பறிக்க கையைக் கையைக் நீட்டினால் எல்லோரும் நகைக்க மாட்டார்களா? (அதுதான் என்னுடைய நிலை)

ரகுவம்சம் 1-3

xxx

அதவா க்ருத வாக் த்வாரே வம்சே அஸ்மின் பூர்வசூரிபி:

மணௌ வஜ்ரசமுத்கீர்ணே சூத்ரஸ்யேவாஸ்தி மே கதி:

நான் காவியம் இயற்றும் திறமை இல்லாதவந்தான். ஆனால் முன்னோர் சென்ற வழியில் சென்று புகழடைவேன். எப்படியென்றால் வைரத்தால் துளையிடப்பட்ட ரத்தினக் கல்லில் ஒரு நூலைக் கோர்ப்பது எளிதுதானே. அதே போல முன்னோர்கள் (வால்மீகி) இயற்றிய காவியம் என்னும் துவாரத்தில் நுழைந்து செல்வேன்

ரகுவம்சம் 1-4

 

காளிதாசன் பணிவின் காரணமாக தன்னை குட்டையனாகவும், சின்னப் படகைக் கொண்டு பெரிய கடற் பரப்பைக் கடந்து செல்ல முயலும் முட்டாள்போலவும் , கேலி செய்யப்படக்கூடியவனாகவும் உருவகிக்கிறான்.

cat

கம்பன் ஒரு பூனை!

கம்பனோ இதற்கும் ஒரு படி கீழே போய்விடுகிறான். தன்னைப் பைத்தியக் காரன் என்றும், பாற்கடலை நக்கிக் குடிக்கும் பூனை என்றும் உருவகிக்கிறான்.

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு

பூசை முற்றவும் நக்குபு புக்கென

ஆசைபற்றி அறையலுற்றேன் மற்று இக்

காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ

–பாலகாண்டம்

பொருள்:- ஒரு பூனை (பூசை), ஆர்ப்பரிக்கும் பாற்கடலை அடைந்து, அதிலுள்ள பால் முழுதையும் நக்கிக் குடித்துவிட ஆசைப்பட்டதைப் போல, குற்றமற்ற வெற்றியை உடைய ராமனது கதையை நான் சொல்ல ஆசை கொண்டேன்.

முத்தமிழ்த் துறையின் முறைபோகிய

உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென்

பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்

பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ

பொருள்:- ஐயா! முத்தமிழ் புலவர்களே! கற்றறிந்த புலவர் பெருமக்களே! உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். பைத்தியக்காரர்கள் சொன்னதையும், அறிவில்லாத முட்டாள்கள் சொன்னதையும், பக்தர்கள் சொன்னதையும் ஆராயலாமா? அல்லவே.

valmiki

தெய்வ மஹா கவி வால்மீகி

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு

எய்தவும் இது இயம்புவது யாது எனின்

பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்

தெய்வ மாக்கவி மாட்சி தெரிவிக்கவே

பொருள்:– உலகம் என்னை கேலி செய்யும்; அதனால் எனக்கு பழி வரட்டுமே. நான் இந்தக் கம்பராமாயனத்தை இயற்றக் காரணம் என்ன தெரியுமா? தெய்வத் தன்மைமிக்க கவிதைகளின் பெருமையைத் தெரிவிக்கவே.

(இதில் தெய்வ மாக் கவி என்பது அவர் இயற்றிய கவிதைகளை மட்டும் குறிப்பதல்ல. வால்மீகியே தெய்வ மாக்கவிஞன். பாணினியை பகவான் பாணினி என்று பகர்வான் பதஞ்சலி; வள்ளுவனை தெய்வப் புலவன் என்றனர் புலவர் பெருமக்கள்; இலியட், ஆடிஸி காவியங்களை இயற்றிய ஹோமரை கிரேக்கப் புலவர்கள் தெய்வ ஹோமர் என்று போற்றினர்)

ஆக பணிவுடன், வணக்கத்துடன் எழுதப்பட்ட காளிதாசனின் ரகுவம்சமும், அவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்வந்த கம்பன் இயற்றிய ராமகாதையும் அவர்களை உலக மஹா கவிகள் உயரத்துக்கு உயர்த்தியதில் வியப்பொன்றும் இல்லை.

raguvamsam_b

–சுபம்–

 

ஆசை பற்றி அறையலுற்றேன்…..

கம்பன்1

கட்டுரையாளர் :– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை:- 1183; தேதி:–20 July 2014.

கம்பன் பாடிய ராமாயணப் பாடலில் பால காண்டத்தில் மிகவும் பணிவோடு சொல்கிறான்:

ஓசைபெற்று உயர்பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் – மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ! (4)

பொருள்:– பெரிய புனிதமான திருப் பாற்கடலை ஒரு பூனை நக்கிக் குடிப்பது போல, குற்றமற்ற, வீரம் மிக்க ராமன் கதையை சொல்லவேண்டும் என்ற ஆசையால் நான் சொல்கிறேன்.

பின்னர் ஒரு பாடலில் மூவர் பாடிய ராமாயணத்தில் முதல்வர் (வால்மீகி) பாடியதை வைத்துப் பாடியதாகக் கூறுகிறான். அந்த முதல்வர் வால்மீகி என்பதை அதற்குப் பின் வரும் பாடலில் பெயரைச் சொல்லியே உறுதிப் படுத்துகிறான். ஆனால் அந்த மூவர் யார் என்பதற்கு உரைகாரர்கள் வசிஷ்டர், போதாயனர், வால்மீகி ஆகியோர் எழுதியவை என்கின்றனர். நமக்குக் கிடைத்திருப்பதோ வால்மீகி ராமாயணம் ஒன்றுதான். காளிதாசன் ரகுவம்சத்தில் எழுதியதைக் கம்பன் திரும்பச் சொன்னானோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. இதோ கீழ்வரும் பாடலைப் படித்து நீங்களே முடிவு செய்யுங்கள்.

கம்பன்3

முத்தமிழ்த் துறையின் முறை போகிய
உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ –(பால. 8)

பொருள்:– முத்தமிழ் நூல்களைக் கற்றுத் தேர்ந்த புலவர்களுக்கு எல்லாம் ஒரு பெரிய அறிவிப்பு:– பைத்தியக்காரர்கள் சொன்னதையும், அரைவேக்காடுகள் சொன்னதையும், பக்தர்கள் சொன்னதையும் ஆராயலாமோ!!

தேவ பாடையின் இக்கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும் முந்திய
நாவினான் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ! (10)

பொருள்:– தேவ பாஷையான — (கடவுளரைப் போற்றும் வேதம் உள்ள மொழி) —-சம்ஸ்கிருதத்தில் மூவர் —-(வால்மீகி, வசிட்டர், போதாயனர்) — இராமன் கதையைப் பாடினர். அவர்களுள் முதன்மையான நாவல்லமை மிக்கோனைப் — (வால்மீகி) – பின்பற்றி தமிழில் நான் பாடுகிறேன்.

raghuvamsa_of_kalidasa

காளிதாசன் ரகுவம்சம்

க்வ சூர்யப்ரபவோ வம்ச: க்வ ச அல்பவிஷயோ மதி:
திதீர்ஷு:துஷ்தரம் மோஹாத் உடுபேனாஸ்மி சாகரம்

பொருள்:– சூரியனிடமிருந்து இந்த வம்சம் தோன்றியது. அந்த வம்சத்தின் பெருமையோ சிறந்தது. நானோ மிகக் குறைவான அறிவுடையவன். கடக்க முடியாத சமுத்திரத்தை ஒரு சிறு படகின் மூலம் ஒருவன் கடக்க விரும்புவது போல என் சிறு மதியால் கடல் போன்ற இந்த சரித்திரத்தைக் கூறப் போகிறேன்.

மந்த: கவியச: ப்ரார்த்தி கமிஷ்யாம் உபஹாஸ்யதாம்
ப்ராம்சு லப்யே பலே லோபாத் உத்பாஹுரிவ வாமன:

பொருள்:– குறைந்த அறிவுடைய நான் கவியின் புகழை அடைய விரும்புகிறேன். உயரமான மனிதன் மட்டுமே அடையக்கூடிய பழத்தை குள்ளமான நான் கைகளை நீட்டிப் பறிக்க முயலும்போது பரிகசிக்கப்படும் நிலையை அடைவேன்.

அதவா க்ருதவாக் தூரே வம்சேஸ்மின் பூர்வசூரிபி:
மணௌ வஜ்ர சாமுத்கீர்ணே சூத்ரயேவாஸ்தி மே கதி:

நான் காவியம் இயற்றும் திறமை இல்லாவிடினும் முன்னோர் சென்ற வழியில் சென்று என் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வேன். எப்படி வஜ்ர ஊசியினால் துளைக்கப்பட்ட துவாரத்தில் நூல் எளிதில் செல்லுமோ அப்படி முன்னோர் —- (வால்மீகி) — போட்ட துளை வழியாகச் செல்வேன்.
—ரகுவம்சம் முதல் சர்கம் பாடல் 2, 3, 4

மேலும் இரண்டு ஸ்லோகங்களில் ரகுவம்ச மன்னர்களின் குணங்கள் தன் காதில் விழுந்துவிட்டதால், ஏற்பட்ட உந்துதலால் துணிச்சலாக இந்தக் காவிய முயற்சியில் இறங்கியதாகவும் தனக்கு சொற்செல்வம் குறைவே என்றும் பணிவுடன் கூறுகிறார். தங்கம் சுத்தமானதா இல்லையா என்பதை அக்னியில் (தீயில்) போட்டு பரிசோதிப்பது போல பெரியோர்கள் என் காவியத்தைப் பரிசோதிக்கட்டும் என்கிறார்.

கம்பனையும் காளிதாசனையும் படிக்கும்போது கம்பன் காளிதாசனைப் பின்பற்றினானோ ( அறிமுகப் பாடல்களில் மட்டும்) என்று எண்ண வேண்டி இருக்கிறது. ஆனால் இரு புலவர்களும் எவ்வளவு பணிவோடு துவங்கினர் ! அவை இரண்டும் எப்படி உலகப் பிரசித்தம் அடைந்து விட்டன!!

‘வித்யா விநயன்ன சம்பதே’= பணிவால் கிடைப்பதே கல்வி; கல்விக்கு இலக்கணம் பணிவு!

இந்த நேரத்தில் நினைவுக்கு வரும் மேலும் ஒரு பாடல் ஆதிசங்கரரின் அபூர்வ சௌந்தர்ய லஹரி (அழகின் அலைகள்) துதியில் வரும் ஒரு பாடலாகும்.

lahari

சௌந்தர்ய லஹரி

ஜபோ ஜல்ப: சில்பம் ஸகலமபி முத்ரா விரசனா
கதி: ப்ராதக்ஷிண்ய – க்ரமண – மசனாத்யாஹுதி – விதி:
ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகில – மாத்மார்ப்பண – த்ருசா
ஸபர்யா – பர்யாயஸ் – தவ பவது யன்மே விலசிதம்
–சௌந்தர்ய லஹரி பாடல் 27

ஆதிசங்கரர் கூறுகிறார்:

தாயே! நான் ஆத்மாவை உனக்கு அர்ப்பணித்துவிட்டேன். நான் என்ன பேசினாலும் அதையெல்லாம் உனது ஜபமாகக் கொள்ளவேண்டும். நான் என் கைகளால் செய்யும் அத்தனையையும் உனது முத்திரைகளின் விளக்கமாகக் கொள்ள வேண்டும். நான் நடப்பதையெல்லாம் உன்னை வலம் வருவதாகக் கொள்ள வேண்டும். நான் சாப்பிடுவதை எல்லாம் உனக்கு வேள்வித் தீயில் ஆகுதி செய்ததாகக் கொள்ள வேண்டும், நான் படுத்துக் கொண்டால் அதைக் கீழே விழுந்து வணங்கியதாகக் கொள்ள வேண்டும். எனது செயல்கள் அனைத்தும் உனது பூஜையாகக் கொள்ள வேண்டுகிறேன்.

இப்படிப்பட்ட ஒரு நிலை வந்துவிட்டால் — எதையும் இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யும் நிலை வந்துவிட்டால் — எல்லோரும் சங்கரர் ஆகிவிடுவர்.

வாழ்க கம்பன், காளிதாசன், ஆதி சங்கரன்!!!

மாரி, பாரி, வாரி: காளி.,கம்பன் கபிலன்!!!

06TH_WEATHER2_1937233g
Written by London Swaminathan
Post No.1125 ; Dated :– 23 June 2014.

N.B. If you want to reproduce this article, please email me for permission. Previously I gave blank cheque to some people. They have been uploading all the 1100 posts from my blogs which is not allowed from today. You have to get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com

மாரி என்றால் மழை;
பாரி என்பவன் கடை எழு வள்ளல்களில் ஒருவன்;
வாரி என்றால் கடல்.

காளிதாசன், கபிலன் என்பவர்கள் 2000 ஆண்டுகளு க்கு முன் வாழ்ந்த புகழ்பெற்ற கவிஞர்கள். அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் உதித்தவன் கம்பன் என்னும் கவிஞன். இம்மூன்று கவிஞர்களும் சொல்லேர் உழவர்கள்; ஒரே விஷயத்தை தமக்கே உரித்தான பாணியில் நயம்பட உரைப்பதைப் படித்து மகிழ்வோம்.

கி.மு முதல் நூற்றாண்டில் வாழ்ந்த உலக மஹா கவிஞன் காளிதாசன். அவனது ஆயிரத்துக்கும் மேலான உவமைகளில் 200—க்கும் மேலான உவமைகளை சங்கப் புலவர்கள் கையாண்டிருப்பதை ஏற்கனவே ஆறு, ஏழு கட்டுரைகளில் ஆதாரத்துடன் எழுதி இருக்கிறேன்.

barcelona mediterranean sea

ரகுவம்சம் (17—72) என்னும் காவியத்தில் வரும் ஸ்லோகம் இது:

வறுமையில் வாடிய புலவரும் ஏழைகளும் அதிதி என்ற அரசனை அடைந்தனர். அவன் அள்ளி அள்ளிக் கொடுத்தான். அந்தப் பொருளை வாங்கி ஊருக்குத் திரும்பி வந்தவுடன் அவர்களும் எல்லோருக்கும் வாரி வழங்கி வள்ளல் என்ற பெயர் எடுத்துவிட்டனர். இதன் உட் பொருள்:–அப்பொருளைப் பெற்றோர், அப்பொருளுக்கு மூல காரணமான அதிதி என்னும் மன்னனையே மறந்துவிட்டனர். மேகங்களும் இப்படித்தான் கடல் நீரை மொண்டு எல்லோருக்கும் மழையாகத் தருகிறது. இதன் உட்பொருள்:–எல்லா கவிஞர்களும் மேகங்களை வள்ளல் என்று புகழ்கின்றனர். ஆனால் அந்த மேகங்களுக்கும் நீர் கொடுத்தது கடல் என்பதை மறந்துவிட்டனரே!!

ரகுவம்சம் 1-18ல் திலீபன் என்னும் மன்னனின் கொடைத் தன்மையை வருணிக்கையில் ‘’சூரியன் கடல் நீரை உறிஞ்சுவது ஆயிரம் மடங்கு திருப்பித் தருவதற்கன்றோ! அதே போல திலீபன் வரி வாங்கியதும் ஆயிரம் மடங்கு மக்களுக்குத் திருப்பித் தருவதற்கன்றோ!!’’ – என்பான்.

ரகுவம்ச அரசர்கள் எப்படிக் கொடுத்துக் கொடுத்து வறியவர் ஆயினரோ அதே போல பாரியும் ஆய் என்ற வள்ளலும் வறியவர் ஆனதை முடமோசியாரும் கபிலரும் பாடுகின்றனர்.

kadal-B_Id_428828_cyclone

புறம் 127 முடமோசியார் பாடிய பாடலில், ‘’ உன் மனைவி கழுத்தில் உள்ள தாலி ( ஈகை அரிய இழையணி மகளிரொடு ) மட்டுமே கொடுக்க இயலாது. மற்ற எல்லாவற்றையும் நீ பரிசிலர்க்கு வழங்கிவிட்டாய் என்பார்.

கபிலன் பாடல்
பாரியினுடைய 300 ஊர்களும் ஏற்கனவே இரவலர்க்கு வழங்கப்பட்டு விட்டது என்பதை முற்றுகையிட்ட மூவேந்தரிடம் கபிலர் கூறினார்.
புறம் 107 கபிலர் பாடிய பாடலில், மேகம் உவமை வருகிறது.:-
பாரி பாரி என்று பல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர் செந்நாப்புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு ஈங்கு உலகு புரப்பதுவே.

எல்லோரும் பாரியையே புகழ்கின்றனரே. உலகத்தைக் காப்பதற்கு மாரி (மழை/மேகம்) யும் உள்ளனவே. இது பழிப்பது போல பாரியைப் புகழ்வதாகும்.

கம்பன் பாடல்
கம்பனும் ராமாயண பால காண்டத்தில் இதே உத்தியைக் கையாளுகிறான்:
புள்ளி மால் வரை பொம் எனல் நோக்கி, வான்
வெள்ளி வீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள்,
உள்ளி உள்ள எல்லாம் உவந்து ஈயும் அவ்
வள்ளியோரின் , வழங்கின் மேகமே (ஆற்றுப் படலம், பால காண்டம்).

மற்றவர்களுக்கு தானம் செய்யும்போது ஏற்படும் இன்பத்தைக் கருதி தம்மிடமுள்ள செல்வத்தை எல்லாம் வாரி வழங்கும் வள்ளல்களைப் போல மேகங்களும் கோசல நாட்டில் மழையைக் கொட்டித் தீர்த்தனவாம்! இது கடைசி இரண்டு வரிகளின் பொருள்.

முதல் இரண்டு வரிகளின் பொருள்:– பெருமையுடைய இமயமலை பொலிவுடையதாக இருக்க வேண்டும் என்று கருதி வெள்ளி நிறக்கம்பிகள் போல தாரை தாரையாக மழை இறங்கியது.

kadal blue

ஆக மேகத்தையும் கடலையும், மழையையும் கொண்டு மன்னர்களின் வள்ளல் தன்மையை புலவர்கள் விளக்கும் நயம் மிகு பாடல்கள் படித்துச் சுவைப்பதற் குரியனவே!

உலகில் இப்படி வள்ளன்மைக்கு உவமையாக மழை, மேகம், கடல் ஆகியவற்றைப் பயன்படுத்துவதை பாரதம் முழுதும் வடமொழி, தென்மொழிப் பாடல்களில் மட்டுமே காணமுடியும். இது பாரதீயர்களின் ஒருமுகச் சிந்தனையைக் காட்டுகிறது, ஆரிய—திராவிட இனவெறிக் கொள்கையைப் பரப்புவோருக்கு இதுவும் ஒரு அடி கொடுக்கும்!

–சுபம்–

வீரத் தாயும் வீர மாதாவும்

 

படம்: ரஜபுதனப் பேரழகி சித்தூர் ராணி பத்மினி. அலாவுதீன் கில்ஜியின் கைகள் தன்மீது பட்டுவிடக் கூடாதென்பற்காக ஆயிரம் மங்கைகளுடன் தீயில் பாய்ந்த உத்தமி (இது கி.பி.1303 ஆம் ஆண்டில் நடந்தது)

English version of this article is already posted in the blog: London Swaminathan)

இந்தியா ஒரே நாடு! இந்திய சிந்தனை ஒரே சிந்தனை! “செப்பு மொழி பதினெட்டுடையாள், எனில் சிந்தனை ஒன்றுடையாள்!” என்று சும்மாவா சொன்னார் பாரதி? வீரத் தாய், வீர மாதா என்ற புகழுரையை உலகிலேயே மிகப் பழமையான ரிக்வேதத்திலும் காண முடிகிறது. அதற்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின் வந்த காளிதாசன், புறநானூற்றுப் புலவர் காவற்பெண்டு, பாரதி பாடல்களிலும் காண முடிகிறது.

புறநானூற்றில் ஒரு அழகான பாட்டு:

புறம் 86 (காவற்பெண்டு)

சிற்றில் நற்றூண் பற்றி, ‘நின் மகன்

யாண்டுள்ளனோ? என வினவுதி; என் மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்;ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல

ஈன்ற வயிறோ இதுவே;

தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!

பொருள்: என் மகன் எங்கே என்று கேட்கிறீர்களா? எனக்குத் தெரியாது. ஆனால் இந்த வயிறு புலிகளின் உறைவிடமான குகை போன்றது. ஆகவே அவன் போர்க்களத்தில்தான் இருப்பான்.

உலகில் எந்த ஒரு பெண்ணும் கோழையைப் பெற விரும்புவதில்லை. ஆனால் அதைக் கவிதையில் வடித்த பெருமை இந்தியர்களுக்கே உண்டு.

ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் வரும் பாடல் (10-85-44), நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது.

காளிதாசனின் காவியங்களில் எண்ணற்ற இடங்களில் வீரத் தாய் பற்றி வருகிறது. குமார சம்பவத்தில் (7-87) உமை அன்னையை வாழ்த்தும் பிரம்மா, நீ வீரர்களின் தாயாக விளங்கவேண்டும் (வீரப் ப்ரசவா பவேதி) என்று வாழ்த்துவதாகக் கூறுகிறான்.

ரகுவம்சத்தில் (2-64;14-4) வீர என்ற சப்ததைப் பெறும் முறைகளை விளக்குகிறார். தமிழ் இலக்கியம் போலவே மார்பில் விழுப்புண் தாங்குவதைப் போற்றுகிறார் (3-68).

உலகப் புகழ்பெற்ற சாகுந்தலம் காவியத்தில் சகுந்தலையை வாழ்த்தும் துறவிகளும் முனிவர்களும் வீரப்ரசவினீ பவ= வீரர்களின் தாயாக விளங்குவாயாக என்று வாழ்த்துகின்றனர்.

லலிதா சஹஸ்ரநாமத்தில் லலிதாம்பிகையைப் போற்றும் 1008 நாமங்களில் ஒன்று வீர மாதா என்னும் போற்றி ஆகும்:

“ப்ராணேச்வரி ப்ராணதாத்ரீ பஞ்சாசத்பீடரூபினி

விஸ்ருங்கலா விவிக்தஸ்தா வீரமாதா வியத்ப்ரஸூ:”

பாரதி இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே போய் ‘மலடி’ என்பதற்குப் புதிய விளக்கமே கொடுக்கிறார்:

“வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை

ஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு”

படம்: ஜான்சி ராணி லெட்சுமிபாய், ஆங்கிலேயரால் கொல்லப்பட்டாள்.

போரில் இறந்தால் சொர்க்கம்

தமிழ், வட மொழி நூல்களில் காணப்படும் மற்றொரு ஒற்றுமை போரில் இறப்பவர்கள் சொர்க்க லோகத்துக்குப் போவார்கள் என்பதாகும். சங்கத் தமிழ் இலக்கியத்தில் மேல் உலகம், துறக்கம், தேவர் உலகம் பற்றிய குறிப்புகள் ஏராளம். ஆனால் போரில் இறந்தால் சொர்க்கத்துக்கு “நேரடி டிக்கெட்” கிடைக்கும் என்ற செய்தி சில பாடல்களில் தெளிவாகவே உள்ளது (புறம்.26, 62, 93, 287, 341, 362 பதிற்றுப் பத்து 52):

வாடாப் பூவின் இமையா நாட்டத்து

நாற்ற உணவினோரும் ஆற்ற

அரும்பெறல் உலகம் நிறைய

விருந்து பெற்றனரால்; (புறம்.62)

அவ்வையார் தரும் ஒரு சுவையான செய்தி இதோ:

அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்

திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி

மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த

நீள்கழல் மறவர் செவ்வுழி செல்க என

வாழ் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ (புறம்.93)

பொருள்: போரில் இறக்காமல் வேறு காரணங்களால் இறந்த மன்னர்களை வேதம் படித்த பிராமணர்கள் வந்து, தர்ப்பைப் புல்லைப் பரப்பி, மன்னரின் சடலத்தை அதன் மீது வைத்து, வாளால் வெட்டி போரில் இறந்தவர்கள் செல்லும் வீர சுவர்க்கத்துக்கு நீயும் போவாயாக என்று மந்திரம் சொல்லுவர். (இதைப் போரில் விழுப்புண் தாங்கி இறக்கும் தருவாயில் இருக்கும் அதியமானிடம் அவ்வையார் கூறி ‘நீ அதிர்ஷ்டசாலி அப்பா! உன்னை இப்படி வாளால் வெட்டி சுவர்க்கத்து அனுப்ப வேண்டாமல் நீயே உன் வீரத்தால் வீர மரணத்தைத் தழுவிக்கொண்டாய்’  என்று பொருள்படப் பாடுகிறார்.)

பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணன் சொல்லுவதும் இதுதான்:

குந்தியின் மகனே! கொல்லப்பட்டாலோ நீ ஸ்வர்க்கத்தை அடைவாய்;ஜெயித்தாலோ பூமியை அனுபவிப்பாய். ஆகையால் போருக்குத் துணிந்தவனாக எழுந்திரு! (கீதை 2-37)

படம்: கிட்டூர் ராணி சென்னம்மா

 

ரத்த கோஷம் !!

இப்போதெல்லாம் அரசியல் தலைவர்களின் தீவிர பக்தர்கள்/ தொண்டர்கள் அந்தத் தலைவர்களுக்கு ஆதரவாக இரத்தத்தில் கோஷங்களை எழுதுவதைப் பார்க்கிறோம். இது ஆதிகால வழக்கம் என்னும் சுவையான செய்தியை காளிதாசன் நமக்குச் சொல்லுகிறான் (ரகு.7-65):

அஜன், ரகு ஆகிய சூரியகுல மன்னர்கள் எதிரிகளை வென்ற பின்னர் அவர்கள் நாட்டு வீரர்களை இரக்க உணர்ச்சி காரணமாக கொல்லாமல் விட்டு விடுவார்களாம். ஆனால் மன்னர்களின் தீவிர விசுவாசிகள் அம்புகளை எடுத்து அவைகளை ரத்தத்தில் தோய்த்து கொடிகளில் கோஷங்களை எழுதுவார்களாம்: “இப்பொழுது ரகுவின் புத்ரன் அஜனால் உங்கள் கீர்த்தி/ புகழ் கவரப்பட்டுவிட்டது; ஆனால் தயை காரணமாக உங்கள் உயிர் கவரப்படவில்லை” என்ற கோஷம் எழுதப்படும்!

காளிதாசன் இன்னும் ஒரு சுவையான தகவலையும் தருகிறான். ராவணனே நேருக்கு நேர் சண்டை போட வந்தவுடன் நாமனுக்கு ஏகப்பட்ட சந்தோஷமாம் (ரகு 12-89). ராவணனை மஹா பராக்ரமசாலி என்று ராமன் மதிக்கிறான். ராமனைப் போன்ற வீரர்கள் பலம் குறைந்தவர்களுடனோ, கோழைகளுடனோ சண்டை போடமாட்டார்கள்.

சங்க இலக்கியப் புலவர்கள் வாழ்ந்த காலத்துக்கு முன் வாழ்ந்தவன் காளிதாசன் என்று ஆறு கட்டுரைகளில் எழுதினேன். இந்தத் தலைப்பின் கீழும் இதற்குப் பல உதாரணங்கள் கிடைத்தன. வீரம் பற்றி நாடு முழுதும் ஒரே கொள்கை நிலவிய காலத்தில் இப்புலவர்கள் வாழ்ந்தனர் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை.

*************