மகனைத் தியாகம் செய்து இளவரசனைக் காப்பாற்றிய வீரத்தாய்! (Post No 2680)

 

panna2 (2)

Written by london swaminathan

Date: 31 March,2016

 

Post No. 2680

 

Time uploaded in London :–  8-56 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

akbar7 (2)

ராஜஸ்தானில், மேவாரில் சங்க ராஜா என்ற ஒரு ரஜபுத்ர வீரன் ஆண்டுவந்தான். அவனுக்கு உதயசிம்மனென்ற சிறு குழந்தை இருந்தது. சங்கராஜா திடீரென்று இறந்துபோகவே, அரசவைப் பெரியோர்கள் கூடி, பான்பீர் என்னும் ஒரு இளவரசனை அழைத்து, உதய சிம்மன் பெரியவானாகும் வரை நீ நாட்டை ஆண்டு வா என்று உத்தரவிட்டனர்.

 

பான்பீர் முதலில் நன்றாகவே அரசாட்சி செய்து வந்தான். சில காலத்துக்குப் பின்னர் தானே மேவாருக்கு அரசனாக வேண்டும் என்ற பேராசை உண்டாயிற்று. உடனே பல வகைகளிலும் அரசாட்சியை நீட்டிக்கத் திட்டமிட்டான்.

 

 

பன்னா என்னும் தாதிதான் உதய சிம்மனைப் பாதுகாப்பாக வளர்த்து வந்தாள். அவளுக்கும் அதே வயதில் ஒரு குழந்தை இருந்ததால் இரண்டு குழந்தைகளையும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள். ரஜபுத்ரப் பெண்கள், அந்நாட்டு ஆண்களைப் போலவே வீரமிக்கவர்கள். அவளுக்கு பான்பீரின் துர்புத்தி நன்றாகத் தெரியும். உதய சிம்மனை சிறு வயதிலேயேக் கொல்ல, பான்பீர் திட்டமிட்டதும் அவளுக்குத் தெரியவந்தது. உடனே பாரி என்ற பெயருள்ள நாவிதனை வீட்டுக்குக் காவலாகப் போட்டாள்.

 

ஒருநாள் பான்பீர், வாளும் கையுமாக, பன்னாவின் வீட்டு வாயிலில் வந்து இறங்கினான். உடனே நாவிதன் பாரி, ஓடிப்போய் அவளிடம் தகவல் சொல்லவே, அவள் வீட்டின் பின்புறமாக உள்ளே நுழைந்து, தன் கையிலிருந்த பழக்கூடையில் ராஜகுமாரன் உதயசிம்மனை வைத்து பழக்கூடையை நாவிதனிடம் கொடுத்து ஊர்க்கடைசியிலுள்ள மரத்தடியில் காத்திருக்கச் சொன்னாள்.

 

வீட்டிற்குள் மீண்டும் வந்து, ராஜ குமாரனின் உடைகள், அணிகலன்களைத் தன் மகனுக்கு அணிவித்தாள்; பின்னர் கதவைத் திறந்துவிட்டாள். ஆவேசத்துடன் நுழைந்த பான்பீர், தொட்டிலில் அரசனுக்குரிய ஆடை அணிகலன்களை அணிந்திருக்கும் சிறுவன் தான் உதயசிம்மன் என்று எண்ணி ஒரே குத்தில் கொன்றுவிட்டான். உடனே பன்னா வீறிட்டழுதாள். அக்கம்பககத்திலுள்ள பெண்கள் ஓடிவந்து அரசன் பான்பீர் நிற்பதைப் பார்த்துவிட்டு, பயந்து பிரமையுடன் நின்றனர். அவன் கொக்கரித்துவிட்டு வெளி ஏறினான்.

தந்நாட்டு அரசகுமாரனைப் பாதுகாப்பதற்காக தன் மகனையே தியாகம் செய்த பன்னா, சிறிதும் தாமதியாமல் மரத்தடிக்கு ஓடிச் சென்று நாவிதனின் கையிலிருந்த கூடையை வாங்கினாள். அதிலுள்ள ராஜகுமாரனை அருகாமை நாட்டிலுள்ள சிற்றரசனிடம் ,நடந்த கதை அனைத்தும் கூறி, உதய சிம்மன் பெரியவனாகும் வரை பாதுக்காக்க வேண்டினாள்.

 

உதயசிம்மன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, நல்ல வாலிபப் பருவம் எய்திய பின்னர் முழுக் கதைகளையும் கேட்டறிந்து படை திரட்டிச் சென்று பான்பீரைக் கொன்றான். மேவாரின் ஆட்சியை மீண்டும் ஏற்றான்.

 

ஒரு தாதி, ரஜபுத்ர அரசனுக்கு விசுவாசமாக இருந்து தன் மகனையே தியாகம் செய்த கதையை ரஜபுத்ர கிராம மக்கள் இன்றும் கிராமம்தோறும் பாடிப்பரவி வருகின்றார்கள்.

அவள் ஒரு வீரத்தாய்!

வேதத்திலும், புறநானூற்றிலும் வரும் வீரத் தாய்கள் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். அவ்வரிசையில் காலத்தால் வெல்ல முடியாத பகழ் படைதுவிட்டாள் பன்னா என்னும் சாதாரணப் பணிப்பெண்!!!

–subam–