ஞான ஆலயம் 2015 ஆகஸ்ட் மாத இதழில் வெளியாகி இருக்கும் கட்டுரை இது.
கோமாதாவும் குலமகளிரின் கண்ணாடி மோதிரமும்!
Article No. 2035
Written by S NAGARAJAN
Swami_48@yahoo.com
Date : 1st August 2015
Time uploaded in London : – 22-30
By ச.நாகராஜன்
மஹாராஜா ரஞ்சித் சிங்கின் ஆட்சி
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெண்மணிகளின் கையில் உள்ள மோதிரத்தில் ஒரு கண்ணாடி பளபளக்கும். அதில் அவர்களுடைய முகங்களின் மங்களகரமான பிரதிபிம்பம் பளிச்செனத் தெரியும். இதற்குப் பின்னால் ஹிந்து பாரம்பரியத்தைப் போற்றும் ஒரு அதிசயமான சுவையான உண்மைச் சம்பவம் இருப்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்!
சீக்கிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த மஹாராஜா ரஞ்சித் சிங் (தோற்றம் 13-11-1780; மறைவு:27-6-1839) பஞ்சாபை அரசாண்ட காலம்.லாகூரில் சுறுசுறுப்பாக எப்போதும் உயிர்த்துடிப்புடன் இயங்கும் ஒரு வீதியின் மூலையில் உள்ள கிணற்றிலிருந்து பஞ்சாபிய மங்கையர் நீரை எடுத்துக் கொண்டிருந்தனர். அங்கு நீரைக் குடித்துத் தாகத்தைத் தணிக்க பசுக்கள் உள்ளிட்ட மிருகங்களும் கூடி இருந்தன.
கொம்புகளை விடுவிக்க முடியாத பசு
அந்தப் பசுக்களில் ஒன்று அருகில் இருந்த சுவர் ஒன்றின் கீழே குனிந்து அங்கிருந்த குழியில் இருந்த தானியங்களை உண்ண முயன்றது. துரதிர்ஷ்டவசமாக அந்தக் குழியில் பசு மாட்டின் கொம்புகள் மாட்டிக் கொண்டன. அதை எடுக்க முயன்ற போது அதன் தலை இன்னும் அதிக ஆழத்தில் மாட்டிக் கொண்டது. அதன் அம்மா என்ற ஓலச் சத்தம் கேட்டுப் பெண்கள் அனைவரும் அங்கு ஓடினர். யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆடவரின் துணையை அவர்கள் நாடவே ஏராளமானோர் வந்து பசுவிற்கு உதவ முயன்றனர்.
அங்கிருந்த பலரும் சுவரை ஜாக்கிரதையாக இடித்துப் பசுவைக் காப்பாற்றி விடலாம் என்றனர். ஆனால் குழுமியிருந்தோரில் ஒருவன் மட்டும் பசுவின் கொம்புகளை வெட்டிப் பசுவை குழியிலிருந்து அகற்றி விடலாம் என்றான். அவனை அனைவரும் வெகுவாகத் திட்டினர்.இறுதியில் சுவர் ஜாக்கிரதையாக இடிக்கப்பட்டது. பசு மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் கொம்புகளுடன் வெளியே மீண்டது. கூட்டத்தினர் ஆரவாரம் செய்து கோமாதாவுக்கு ஜே எனக் கூவியவாறே கலைந்தனர்.
இந்த சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அரசவை ஒற்றர்களுள் ஒருவன் நடந்த சம்பவத்தை அப்படியே மஹாராஜா ரஞ்சித் சிங்கிடம் கூறினான்.
மறுநாள் கொம்புகளை வெட்டலாம் என்று சொன்னவன் தர்பாருக்கு அழைக்கப்பட்டான்.
ராஜ விசாரணை
மஹாராஜா ரஞ்சித் சிங் அவனை கூர்மையாக நோக்கினார்.
“நீ தான் நேற்று பசுவின் கொம்புகளை வெட்டலாம் என்று கூறியவனா?”
பயந்தவாறே, அவன், “ஆமாம், மஹாராஜா!” என்றான்.
“நீ ஒரு ஹிந்துவா?”
“ஆமாம், மஹாராஜா!”
“எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஒரு ஹிந்துவால் எப்படி பசுக்களின் கொம்புகளை வெட்டலாம் என்று கூற முடியும்?”
நடுநடுங்கிய அவன் கம்மிய குரலில், “தப்பு தான், மஹாராஜா” என்றான்.
“அது ஒரு இயல்பான தப்பாக எனக்குத் தெரியவில்லை.” உறுதியான குரலில் கூறிய கூரிய அறிவு படைத்த மஹாராஜா ரஞ்சித் சிங் அவனுடைய தாயாரை அரசவைக்கு உடனே அழைத்து வருமாறு பணித்தார்.
அவனுடைய வயதான தாயார் அரசவைக்கு வந்தார். அனைவரும் அந்தப் பெண்மணி என்ன கூறப் போகிறாள் என்பதை ஆவலுடன் எதிர்நோக்கினர்.
அந்தப் பெண்மணியிடம் ராஜா கேட்டார்:”நீ ஒரு ஹிந்துப் பெண்மணி தானா!”
“ஆமாம், மஹாராஜா” அவள் உறுதி படத் தெரிவித்தாள்.
“அப்படியானால் நிஜத்தைச் சொல். இப்படிப்பட்ட மகா மோசமான ஒரு பிள்ளையை நீ எப்படிப் பெற்றாய். கோமாதாவின் கொம்புகளை வெட்டு என்று சொல்லும் பிள்ளையை நீ பெற்ற காரணம் என்ன?”
தர்பாரே அமைதியாக அவளது பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தது.
மெதுவாக யோசித்த பின்னர் அவள் கூறலானாள்:-“மஹாராஜா! அதற்கு என்னால் ஒரு காரணத்தை மட்டுமே யூகிக்க முடிகிறது. இவனைக் கர்ப்பமுற்ற அந்த நாளில் முதன் முதலாகக் காலையில் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். அப்போது காலணி தைக்கும் ஒருவன் செத்த மிருகத்தின் தோலை உரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அது ஒரு பசுவின் தோலாக இருந்திருக்கக்கூடும். அது காரணமாக இருக்கலாமோ, என்னவோ”
மஹாராஜா கூவினார்: ”அது தான் சரி! இப்போது எனக்குப் புரிகிறது, இவன் ஏன் அப்படிச் சொன்னான் என்று!”
சரியான தீர்வு: கண்ணாடி பதித்த மோதிரம்
சற்று யோசித்த மஹாராஜா கூடியிருந்த அனைவரின் முன்னிலையிலும் மந்திரியிடம் கூறினார்:” தற்செயலாக இந்தப் பெண்மணி வெளியில் எட்டிப் பார்த்த போது நடந்த சம்பவம் போல எனது ராஜ்யத்தில் இப்படிப்பட்ட சம்பவம் இன்னும் ஒன்று நடக்கவே கூடாது. கர்ப்ப ஸ்தீரிகள் நல்லனவற்றைப் பார்க்க வேண்டும். நல்லனவற்றை பிரார்த்தனையாக உச்சரிக்க வேண்டும். நல்லனவற்றையே கேட்பதுடன் பழைய பாரம்பரியத்தை மதிக்க வேண்டும். ஆகவே அவர்கள் எழுந்தவுடன் தங்கள் முகத்தையே பார்க்கும் படி கைகளில் ஒரு சிறிய கண்ணாடியை எப்போதும் அணிய வேண்டும். இது எனது ஆணை என்று இன்றே பறை சாற்றுங்கள்.”
அன்று உருவானது தான் சிறிய கண்ணாடி பதித்த மோதிரங்கள். அவற்றில் அழகிய தங்கள் முகங்களை விழித்தவுடன் பஞ்சாபிய மங்கையர் பார்க்க ஆரம்பித்தனர்.
காலம் காலமாக வரும் இந்தப் பழக்கத்தினாலேயே பஞ்சாபிய மங்கையரிடன் கண்ணாடி பதித்த மோதிரம் இன்றும் காணப்படுகிறது.
கோமாதாவின் மீது பக்தி, கர்ப்ப காலத்தில் இறை சிந்தனை, காலையில் ‘கராக்ரே வஸதே லக்ஷ்மி கர மத்யே சரஸ்வதி கர மூலேது கோவிந்த: ப்ரபாதே கர தர்சனம்’ என்று ப்ராத ஸ்மரண ஸ்லோகம் சொல்லும் போது குல மங்கையர்கள் தங்கள் திரு முகங்களைப் பார்க்க உதவும் மோதிரம் ஆகிய அனைத்தையும் ஹிந்து பாரம்பரியத்தைக் காக்கும் உணர்வில் இணைக்கும் உண்மை வரலாறு தான் எவ்வளவு சுவையானது?! உலகில் கோ மாதாவை உள்ளார்ந்து அனைத்து விதத்திலும் போற்றும் நாடு பாரதம் ஒன்றே!
************
You must be logged in to post a comment.