

WRITTEN BY S NAGARAJAN
Post No. 9094
Date uploaded in London – –1 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பகவான் ரமண மஹரிஷியின் அவதார தினம் : 30-12-1879
இந்த 2020ஆம் வருடம் (31-12-2020) 141வது ஜெயந்தி தினம்!
மரண பயத்திலிருந்து நீங்குவது எப்படி? ரமணர் பதில்!
ச.நாகராஜன்
பகவான் ரமணர் மிகப் பெரும் ஆன்மீக ரகசியங்களை மிகச் சுலபமாக எளிய உதாரணங்களோடு விளக்கி விடுவார்.
1937ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி
ஹிந்தி பேசும் கனவான் ஒருவர் ஆசிரமத்திற்கு வந்தார். மரண பயத்தை எப்படி வெல்லலாம் என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.
மஹரிஷி : மரணத்தை எண்ணும் முன்னர், நீ பிறந்தாயா என்பதை முதலில் கண்டு பிடி. பிறந்த ஒருவன் தான் இறக்க முடியும்! நீ தூக்கத்தில் செத்திருப்பவனுக்குச் சமானம். ஆக, மரணத்தைக் கண்டு என்ன பயம்?

பக்தர்: தூக்கத்தில் நாம் எப்படி இருக்கிறோம்?
மஹரிஷி: இந்தக் கேள்வியை நீ தூங்கும் போது கேள். தூக்கத்தின் அனுபவத்தை நீ எழுந்த பின்னரே ஞாபகப்படுத்திக் கொள்கிறாய். அந்த நிலையை, ‘சந்தோஷமாக நான் தூங்கினேன்” என்று சொல்கிறாய்!
பக்தர் : எந்த கருவி மூலம் அந்த நிலையை நாம் அனுபவிக்கிறோம்?
மஹரிஷி : மற்ற நிலைகளுக்கு பழக்கமான அந்தகரணத்திற்கு எதிரான அதை மாயாகரணம் என்று அழைக்கிறோம். ஒரே கருவி தான் வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு விதமாக அழைக்கப்படுகிறது. தூக்கத்தின் ஆனந்தாத்மன் விழிப்பு நிலையில் விஞ்ஞானாத்மன் என்று கூறப்படுகிறது.
பக்தர்: தயவு செய்து மாயாகரணம் ஆனந்தத்தை அனுபவிக்கும் அனுபவத்தை ஒரு உதாரணம் மூலமாக விளக்குங்கள்.
மஹரிஷி : “நான் சந்தோஷமாகத் தூங்கினேன்” என்று எப்படி நீ சொல்கிறாய்? அனுபவமே உனது சந்தோஷத்தை நிரூபிக்கிறது. தூக்கத்தில் அந்த அனுபவம் இருந்தாலொழிய விழிப்பு நிலையில் அது ஞாபகத்திற்கு வராது.
பக்தர் : ஒப்புக் கொள்கிறேன். ஒரு உதாரணம் சொல்லுங்கள்.
மஹரிஷி : அதை எப்படி விளக்க முடியும்? நீரில் அமிழ்ந்த ஒரு பொருளை எடுக்க நீ தண்ணீரில் மூழ்கினால், தண்ணீரிலிருந்து வெளியே வந்த பின்னர் தான் அதைப் பற்றிப் பேச முடியும். நீரில் மூழ்கி இருக்கும் போது நீ அதைப் பற்றிச் சொல்வதில்லை.
பக்தர் : தூக்கத்தில் எனக்கு பயம் இல்லை; ஆனால் இப்போது இருக்கிறது.
மஹரிஷி : ஏனெனில் ‘த்வீதீயாத்வை பயம் பவதி’ – பயம் எப்போதுமே இரண்டாவதாக இருக்கிறது. எதைக் கண்டு பயப்படுகிறாய்?
பக்தர் : உடல், புலன்கள், உலகம், ஈஸ்வரன், கர்த்தா, இன்பம் போன்றவை இருக்கும் காரணத்தால் தான்.
மஹரிஷி : அது பயத்தை உண்டு பண்ணுகிறது என்றால் அதை ஏன் நீ பார்க்கிறாய்?
பக்தர் : ஏனென்றால் அதிலிருந்து தப்பிக்க முடியாது.
மஹரிஷி: ஆனால் அவற்றை நீ தான் பார்க்கிறாய். யாருக்கு பயம்? அவற்றிற்கா?
பக்தர் : இல்லை, எனக்குத் தான்!
மஹரிஷி : ஏனென்றால் நீ பார்க்கிறாய், அவற்றைக் கண்டு நீ பயப்படுகிறாய். அவற்றைப் பார்க்காதே. உனக்கு பயம் இருக்காது.
பக்தர் : விழிப்பு நிலையில், அப்போது நான் என்ன தான் செய்ய வேண்டும்?
மஹரிஷி : ஆத்மனாக இரு: பயத்தை உண்டு பண்ண இரண்டாது வஸ்து ஒன்று இருக்கவே இருக்காது!

பக்தர் : ஆஹா! இப்போது புரிகிறது. நான் எனது ஆதமனைப் பார்த்தால் ஆத்மா இல்லாத மற்றவை நீங்குகிறது. சந்தோஷம் இருக்கிறது. என்றாலும் மரண பயம் இருக்கவே செய்கிறது.
மஹரிஷி : பிறந்த ஒருவனே இறக்க வேண்டும். மரணம் உன்னைப் பயமுறுத்த நீ பிறந்திருக்கிறாயா என்பதைப் பார்.
தூக்கம் என்ற எளிய அன்றாட மனிதனின் பழக்கத்தை வைத்து மஹரிஷி பெரிய பெரிய உண்மைகளை இப்படி விளக்கியுள்ளார்.
1937ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி
ஆந்திராவிலிருந்து வந்த மூன்று பக்தர்கள் மஹரிஷியை நமஸ்கரித்தனர். அதில் ஒருவர் ஹட யோகம் செய்பவர்.
அவர் நீண்ட ஒரு உரையாடலை நிகழ்த்துகிறார்.
அதில் அவர் கேட்ட ஒரு கேள்வி : தூக்கநிலை என்பது ஆனந்தத்தை அனுபவிப்பது என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதை திருப்பி எண்ணிப் பார்க்கும் போது மயிர்க்கூச்சல் எடுப்பதில்லை. ஆனால் சமாதி நிலையை எண்ணிப் பார்க்கும் போது மட்டும் அவை மயிர்கூச்சலில் மயிர்க்கால்களில் மயிர்கள் ஏன் நிற்கின்றன?
மஹரிஷி : சமாதி என்பது விழிப்பு நிலையில் ஆனந்தத்தை அனுபவிக்கும் நிலையாகும். ஆனந்தம் அனைத்தையும் மீறுகிறது. அந்த அனுபவம் மிகத் தெளிவானது, ஆனால் தூக்கத்திலோ அது சற்று வித்தியாசமானது.
இப்படி தூக்கத்தை வைத்து மஹரிஷி பல்வேறு ரகசியங்களை விளக்குகிறார்.
இவற்றைத் தொகுத்துப் படித்தால் மரண பயம் பற்றி உண்மைகளை அறிந்து கொள்வோம்; திரும்பத் திரும்ப மஹரிஷியின் அருளுரைகளைப் படித்துக் கொண்டே இருந்தால் மரண பயம் நமக்கும் இல்லாமல் போகும்! பகவான் ரமணர் திருவடிகள் போற்றி!
****

அன்பர்கள் Talks With Sri Ramana Maharishi என்ற புத்தகத்தின் மூன்று தொகுதிகளைப் படித்தால் பல ரகசியங்களை உணரலாம். இவற்றை Sri Ramasramam, Thiruvannaamalai, South India விலிருந்து பெறலாம்.
tags- மரண பயம்,ரமணர்
You must be logged in to post a comment.