Written by S NAGARAJAN
Date:27 April 2017
Time uploaded in London:- 6-50 am
Post No.3855
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
ரமண சாரல்
ரமண தரிசனத்தின் போது கண்களில் நீர் வருவது ஏன்?
ச.நாகராஜன்
1945ஆம் வருடம். ஜூன் மாதம் 5ஆம் தேதி.
வங்க மொழியில் சிறந்த எழுத்தாளரும் கவிஞருமான ஹரீந்த்ரநாத் சட்டோபாத்யாயா பகவான் ரமண மஹரிஷியின் முன் அமர்ந்திருந்தார். ரமணாஸ்ரமத்திற்கு அவர் வருது இது மூன்றாவது முறை.
பேச்சுக்கள் பல திசையில் சென்று கொண்டிருந்தன. திடீரென்று அவர் பகவானிடம், “பகவானே! சில சமயம் உங்கள் முன்னால் பேச்சு வராமல் கண்களில் நீர் சொரிகிறதே, அது ஏன்?” என்று கேட்டார்.
‘தானாகவே இப்படி கண்களில் நீர் வர பேச்சற்று இருப்பது பக்தியினால் தான்’ என்று அருளினார் பகவான்.
அதைத் தொடர்ந்து தனது அனுபவங்களை அவர் சொல்லலானார்.
மதுரையில் அவர் கோவிலுக்குச் சென்று சிலையின் முன் நிறகும் போது “தானாகவே தன் கண்களிலும் நீர்ப் பெருக்கு ஏற்பட்டு வழிந்தோடும். இது ஆனந்தம் அல்லது வலியினால் அல்ல, பக்தியினால் தான்”என்று விவரித்த பகவான்,
“இங்கு திருவண்ணாமலைக்கு வந்தவுடன் கூட சில புத்தகங்களின் பகுதிகளைப் படிக்கும் போதோ அல்லது கேட்கும் போதோ கூட கண்களில் நீர் வரும்” என்றார்.’
அதைத் தொடர்ந்து அவர் விரூபாக்க்ஷி குகையில் தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தைச் சொன்னார்.
அப்போது அவருக்கு வயது 22 தான்.
ஒரு நாள் குகைக்கு வெளியில் இருந்த ஒரு பாறையின் மீது அவர் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது எட்டு அல்லது பத்து வய்து பையன் ஒருவன் அவரிடம் வந்தான். நல்ல களையுடைய இளைஞன் ஒருவன் இப்படி கஷ்டமான தவ வாழ்க்கையை மேற்கொண்டிருப்பதைப் பார்க்கச் சகிக்காத அவன் மிகுந்த இரக்கத்துடன் அவரிடம் வந்து கேவிக் கேவி அழலானான்.
இந்த சம்பவத்தைச் சொல்லி நிறுத்திய பகவான் சிறிது நேரம் கழித்து, “அவன் ஏன் அழுதான் அவனுக்கு ஏன் என்னைப் பார்த்ததுமே கண்களில் நீர் வந்தது என்பதற்கான காரணத்தை யார் சொல்ல முடியும்?” என்று கூறி நிறுத்தினார்.
இதற்கு முன்பாக ஒரு நாள் பகவான் தான் மதுரையில் இருந்த போது கடவுள் எப்படி வருவார் எங்கே தோன்றுவார் என்று ஏங்கி இருந்தவாறே இருந்ததையும் ஆகாயத்தைப் பார்த்தவாறே அங்கிருந்து எப்போது வருவார் என்று நினைத்துக் கொண்டே இருந்ததையும் கூறினார்.
இப்படி பகவான் அபூர்வமாக தன்னைப் பற்றிய சில சம்பவங்களை அவ்வப்பொழுது கூறியதுண்டு.
இதிலிருந்தே அவர் மதுரையில் இருந்த போதே அந்த சின்ன வயதிலேயே அவரது இறை நாட்டம் முழு வீச்சில் இருந்தது என்பதையும் அது இறையருளால் அவர் ஆட்கொள்ளப்பட்டதையும் தெரிவிக்கிறது.
பகவானின் ஞானி நிலை ஒரு பக்கம் இருந்ததெனில் அவர் வாழ்ந்த உலகியலுக்கு ஏற்ப அவரது பக்தி நிலையும் அதனால் ஏற்பட்ட வெளிப்பாடுகளையும் கூட அவரது வாழ்க்கை வரலாற்றில் காண்கிறோம்.
பெரிய புராணத்தில் நாயன்மார்களின் சரித்திரத்தைப் படிக்கக் கேட்கும் போது அருவி போல அவர் கண்களிலிருந்து நீர் வழியும்.
முழு இறைபக்தியின் வெளிப்பாடாக ஒரு ஞானிக்கும் கூட கண்ணீர் வரும் என்பதையும் அவரே கூட கூறி இருக்கிறார் அல்லவா!
***
Source ; Day by Day with Bhagavan by Sri A.Devaraja mudaliyar