அண்ணாமலை அதிசயம்!!

ramana

ரமண மஹரிஷி படம்

Post No.1759; Date 30th March 2015

This is written by my brother S Nagarajan for Jnana Alayam- Tamil Magazine: swami

ப்ரணவ தேஹம் பெற்ற மஹான்கள்!

 

 

ஞான ஆலயம் ஏப்ரல் 2015 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

நன்றி:ஞான ஆலயம்

மிகப் பெரும் அருளாளரான பகவான் ரமண மஹரிஷியைப் போற்றித் துதிக்கும் சிறப்புக் கட்டுரை! (ரமண மஹரிஷி அவதார தோற்றம்: 30-12-1879 சமாதி: 14-4-1950

ச.நாகராஜன்

ramana-stamp

Ramana Stamp– ரமணர் தபால் தலை

வள்ளலாரும் ரமணரும்

ஹிந்து மதத்தின் மகத்தான சிறப்புக்களில் ஒன்று, அது சுட்டிக் காட்டும் பேருண்மைகளை அனாயசமாக நிரூபிக்கும் மகான்கள் பாரதத்தின் பல இடங்களிலும் அவ்வப்பொழுது தோன்றிக் கொண்டே இருப்பது தான்! இவர்களுள் மிக பிரம்மாண்டமான நிலையை எய்தியதோடு தம்மை அப்படிப்பட்ட பெரும் நிலையை எய்தியவர்கள் என்று சிறிதும் காண்பிக்காமல் மிக எளிமையாக வாழ்ந்து அருளுரை பகர்ந்த இருவர் வள்ளலார் ராமலிங்க ஸ்வாமிகளும் பகவான் ரமண மஹரிஷியும் ஆவர்.இவர்கள் மிக சமீப காலத்திலேயே வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்த ஒரு விஷயம். ஆகவே இவர்களைப் பற்றிய ஏராளமான சம்பவங்களும் செய்திகளும் முழு விவரங்களுடன் தேதி வாரியாக அதிகாரபூர்வமாக நம்மிடையே உள்ளது.

வள்ளலார் உடலுடனேயே ஜோதி மயமாக ஆகி விட்டவர். ரமண மஹரிஷியோ தான் மறையும் அதே கணத்தின் போது தன் ஜோதி ஸ்வரூபத்திற்கு, வானில் பறந்து செல்லும் ஜோதியை சாட்சியாக காண்பித்துச் சென்றவர்.

 

ramana-maharshi

முற்றும் துறந்த ஞானி ரமணர்

மூன்று தேகங்கள்!

வள்ளலார் மனித தேகத்தின் மூலமாகப் பெறக்கூடிய அரிய மூன்று நிலைகளைத் தன் பாடல்களில் தன் அனுபவத்தின் வாயிலாக வடித்துள்ளார். மிக மிகத் தூய்மையாக இருக்கும் நிலையில் ஒருவர் எய்துவது சுத்த தேகம். அதற்கு அடுத்த நிலை பிரணவ தேகம். இதற்கும் அடுத்த உயரிய நிலை ஞான தேகம்.இதை அவர் அடைந்துள்ளதற்கு அவர் சித்தி வளாகத்தில் உடலோடு தன் அறையில் புகுந்து பின் மறைந்த சம்பவமே சான்றாகும்.

ரமணரின் பிரணவ தேகம்

ரமண மஹரிஷியின் வாழ்வில் அவர் பிரணவ தேகத்துடன் இருந்ததை அவரது அணுக்கத் தொண்டர்களுள் ஒருவரான குஞ்சு சுவாமிகள் இப்படி விவரிக்கிறார்:-.

“பகவானுக்கு சில நேரங்களில் திடீரென மின்னலடித்தாற்போல தன் தேகம் மறைந்து அணுக்களாகச் சிதறிப் பரந்து, புகை போன்று ஒரு உருவெளித் தோற்றம் உண்டாகி அதன் பிறகு பனித்துகள் போன்று ஒன்று சேர்ந்து மறுபடியும் தெரியுமாம். இவ்வநுபவம் ஒரே நிலையில் இருக்கும் போதும், ஆகாரம் இல்லாமல் தேகம் ஒடுங்கி இருக்கும் போதும் உண்டாகுமாம். இவ்வாறு அணுக்களாக விரிந்து தேகமற்று பஞ்சபூதத்துடன் கலந்து விடும் நிலைக்கு “பிரணவ தேகம்” எனப் பெயராகும்.

ஒரு முறை பகவான் ரமணர் உபவாசமாக இருந்து பிரணவ தேஹி ஆகி விடலாம் என்ற எண்ணத்துடன் தனித்து ஒருநாள் காலையில் திருவண்ணா மலையில் உள்ள பச்சையம்மன் கோவில் பக்கம் காட்டிற்குள் புகுந்து செல்ல ஆரம்பித்தார். அச்சமயம் சிறு பையனாக இருந்து வேத பாடசாலையில் படித்து வந்த வாசுதேவ சாஸ்திரி ரமண மஹரிஷியைப் பார்த்து விட்டு ஓடி வந்து இப்படித் தனியாக வந்திருக்கிறீர்களே, வாருங்கள் விருபாக்ஷிக்குப் போகலாம் என அழைத்தார். அதற்கு அவர், ‘ நான் காட்டிற்குள் இரண்டு நாள் தங்கி விட்டு வருகிறேன், நீ போ” என்று பதில் கூறினார். இதைக் கேட்ட வாசுதேவன் அழ ஆரம்பித்தார். பகவான் அவரைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்த சமயம் ஈசான்ய மடத்தின் அதிபதியான சாத்தப்ப சுவாமிகள் யதேச்சையாக அங்கு வர, பகவானைப் பார்த்து விட்டுத் தம்முடன் அவரை அழைத்துச் சென்றார். பகவானை நம்மிடம் பல காலம் இருக்கச் செய்யக் காரணமானவர் சாத்தப்ப சுவாமிகளே!

பகவான் இப்படிச் செல்ல முயலும் போதெல்லாம் அன்னை மீனாட்சி அவரைச் செல்ல அனுமதிக்கவில்லை. இதை பகவானே,”இங்கு இருக்கும்படி சொல்லி இம்சைப் படுத்தறா” என்று கூறி அருளி இருக்கிறார். கோடானு கோடிப் பேர்கள் கடைத்தேற அனுப்பப்பட்ட பகவானை அவ்வளவு சீக்கிரம் ப்ரணவ தேஹியாக மாற அன்னையின் ஆணை இல்லை என்பது ஜீவர்களின் மீதுள்ள மீனாட்சியின் எல்லையற்ற கருணைக்கு ஒரு உதாரணம்!

tv malai

திருவண்ணாமலை கோவில் படம்

அண்ணாமலை அதிசயம்

அன்னை மீனாட்சி அவருக்குப் பல அற்புத காட்சிகளைக் காண்பித்ததில் சிலவற்றை அவரே மிக அரிதாக அன்பர்களிடம் கூறியிருக்கிறார். அவற்றுள் ஒன்று திருவண்ணாமலை பற்றிய அதிசயம்!

ஒரு நாள் சாக்கிர, சொப்பனம் இரண்டும் இல்லாத நிலையில் பகவான் விருபாக்ஷி குகையில் இருக்கும் போது, தாம் மலையில் உள்ள ஒரு குகையினுள் நுழைந்து சென்றார். அங்கே பர்ணசாலைகளும் ரமணீயமான தடாகங்களும், பூத்துக் குலுங்கும் மரம், செடி, கொடிகளுமாக அதி அற்புதத்துடன் விளங்கும் காட்சியைக் கண்டார். அது புதிய இடமாக இல்லாமல் தான் முன்பே பார்த்துப் பழகிய இடமாக அவருக்கு ஒரு காட்சி தோன்றிற்று. பின்னர் அடியண்ணாமலை கோவில் திருப்பணி நடந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் திருப்பணி செய்து கொண்டிருந்தவர்கள் கோவிலின் கிழக்குப் பக்கத்திலிருந்து மலைக்குள் ஒரு சுரங்கம் செல்வதைக் கண்டு ஓடோடி வந்து பகவானிடம் அதைத் தெரிவித்தனர். மறுநாள் பகவான் கிரி பிரதக்ஷிணம் செய்யும் போது அச்சுரங்கம் இருக்கும் இடம் சென்று அதைப் பார்த்தார். அது தான் முன்னர் கண்ட காக்ஷியில் இருந்ததைப் போலவே இருப்பது கண்டு மனதிற்குள் வியந்தார்.வெளியில் யாரிடமும் சொல்லவில்லை. அதை எந்த வித சோதனையும் செய்யாமல் உடனே மூடச் சொன்னார். ஆனால் அதே காட்சியை அருணாசல மாகாத்மியம் விவரிப்பதைக் கண்டு அந்த சம்ஸ்கிருத ஸ்லோகத்தைத்  தமிழில் மொழி பெயர்த்தார்.

நமது அறநூல்கள் உரைக்கும் அனைத்துமே வார்த்தைக்கு வார்த்தை உண்மை தான் என்பதை ரமண மஹரிஷி போன்ற பெரும் மகான்கள் சொல்லும் போது தான் அந்த உண்மையின் ஆழத்தை நம்மால் புரிந்து கொண்டு பிரமிக்க முடிகிறது.

ramana_maharshi-30

குடையாளி – ஆன்மீகக் கொடையாளி !!

எந்த நிலை என்று சொல்ல முடியாத அரிய நிலை

பகவானின் ஆழத்தை அளக்க முயன்றவர்களுள் மாபெரும் மஹானான சேஷாத்திரி ஸ்வாமிகளும் ஒருவர். ஒரு நாள் அவர் பகவானின் முன்னிலையில் அபூர்வமாக வந்து நெடுநேரம் அமர்ந்திருந்தார். இருவரும் பேசவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்தவண்ணம் இருந்தனர்.

பின்னர் சேஷாத்திரி ஸ்வாமிகள் மலையிலிருந்து கீழே இறங்கி வந்து விட்டார்.

“ஹூம், இவர் எப்படிப்பட்ட சொரூபம் கொண்டவர் என்று பார்க்கலாம் என்று பார்த்தேன். விடவே இல்லையே!” என்று அவர் கூறி வியந்தார்.

மஹா பெரிய மஹானான சேஷாத்திரி ஸ்வாமிகளே வியக்கும் ஒரு பெரிய உயரிய நிலையைக் கொண்ட அருளாளர் நம்மிடையே வாழ்ந்து வந்தார்; இன்றும் அவரை நினைப்பவர்களுக்கு அருள் புரிந்து வருகிறார் என்பது நமது பாக்கியமே, அல்லவா!

3bd17-ramanaspose

***************

பகவான் ரமணரைச் சந்தித்த பாக்கியவான்கள்!

220px-Ramana_3_sw

மே 2013 ஞான ஆலயம் இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை

பகவான் ரமணரைச் சந்தித்த பாக்கியவான்கள்!

ச.நாகராஜன்

 

அபூர்வமான ஏதோ ஒரு சக்தி 

“ஏதோ ஒரு சக்தி ஞானியின் தேகத்தின் மூலமாக வேலை செய்கிறது. அவனது சரீரத்தை உபயோகித்து வேலையை முடிக்கிறது” என்று அணுக்க பக்தர் தேவராஜ  முதலியாரிடம் (5-5-1946 அருளுரை) கூறிய பகவான் ரமண மஹரிஷி ஒரு போதும் ‘தான் தான் அந்த மஹாசக்தி’ என்பதை வெளிப்படையாகக் குறிப்பிட்டதில்லை.

ஏதோ ஒரு சக்தி அனைவரையும் இங்கு இழுக்கிறது என்று அவர் குறிப்பிட்ட போது அந்த சக்தியால் இழுக்கப்பட்ட பாக்கியவான்களில் மஹாராஜாக்கள், மஹாராணிகள், அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், யோகிகள், சாமான்யர்கள் ஆண்டிகள் உள்ளிட்டோர் இருப்பதைப் பார்த்து பிரமிக்க முடிகிறது. ஒவ்வொரு வருக்கும் ஒரு அனுபவம்;ஒரு செய்தி!

 

மைசூர் மஹாராஜா,பரோடா மஹாராணி, மகாகவி பாரதியார், ராஜேந்திர பிரசாத், மஹாதேவ தேசாய், ராஜாஜி, சாமர்செட் மாம்,பரமஹம்ஸ யோகானந்தா, காவ்யகண்ட கணபதி சாஸ்திரிகள், பால் பிரண்டன், சாட்விக் என்று ஆரம்பித்தால் இந்தப் பட்டியல் ஆயிரத்தையும் தாண்டுகிறது. “அந்த சக்தியிடம்” அவர்கள் அனுபவித்தது என்ன? ஒரே வாக்கியத்தில் அதிசயமான, இறைவனின் சந்நிதி பாக்கியம் தான் என்று சொல்லி விடலாம்.

 

 

சிவநகர் மஹாராஜாவின் கேள்வி

உத்தரப்பிரதேசத்திலுள்ள சிவநகர் மஹாராஜா பகவானிடம் புகலிடம் அடைந்து தனக்கு ஞானம் அளிக்க வேண்டுமென்று விண்ணப்பித்தார்.

பகவான் நாம மகிமையையும் பிரம்ம ஞானம் பற்றி அஷ்டாவக்ர கீதை உரைப்பதையும் எடுத்துரைத்தார். பிரம்மஞானம் அடைய எவ்வளவு நேரமாகும் என்ற கேள்விக்கு பிரம்மஞானம் உடைய குருவிடம் முழு சரணாகதி அடைந்து ‘நான் –எனது’ என்ற எண்ணங்களை விட்டு விட்டால் குதிரையின் அங்கவடியில் ஒரு காலை வைத்து மறு காலைத் தூக்கி வைப்பதற்கு ஆகும் நேரம் தான் தேவை என்ற அஷ்டாவக்ர கீதைப் பகுதியை விவரித்த பகவான், “ அவ்வளவு நேரம் கூட ஆகாது. அகம்-பாவம் மறைந்த உடனேயே ஆன்ம பாவம் ஒளிரும் என்று தன் அனுபவத்தில் கண்டதை உரைத்தார். அனைவரும் பிரமித்தனர்.

 

 

கவிஞரின் கண்ணீரும் மூச்சுத்திணறலும்

 

ஹரீந்த்ர நாத் சட்டோபாத்யாயா என்ற வங்கக் கவிஞர் அரவிந்தாஸ்ரமத்தில் இரு வருடம் இருந்தவர். அவர் பகவானை தரிசித்துப் பேசுகையில் தான் 4000 பதினான்கு வரிப்பாடல்களையும் 50000 வரிகள் கொண்ட கவிதையையும் மேலும் பல கவிதைகளையும் நாடகங்களையும் இயற்றியதைக் கூறினார். அவரது நாடகம் ஒன்றின் பகுதியை உணர்ச்சியுடன் அவர் நடித்துக் காட்டினார். பின்னர் அவர் கேட்டார்:”அதெப்படி, பகவானே!உங்கள் சந்நிதியில் நாங்கள் கண்ணீரால் மூச்சடைத்துத் திணறுகிறோம்?”  .பகவான் மௌனமாகப் புன்னகை புரிந்தார். பின்னர், “மனதைத் தொடும் விஷயங்களைப் படித்தாலோ கேட்டாலோ கண்ணீர் பொங்கி வழிகிறது” என்றார்.

 

பிறிதொரு சமயம் இதே பொருள் பற்றிப் பேச்சு வருகையில் ”கதாகாலக்ஷேபம் செய்பவர்கள் கல்நெஞ்சக்காரர்கள் போலும். எப்படி அவர்களால் உணர்ச்சி பொங்க கண்ணீர் வடிக்காமல் தொண்டை கட்டாமல் கதையை சொல்லி கொண்டே போக முடிகிறது” என்று வியந்தார். பகவானுக்கு பக்தர்களின் சரித்திரத்தைப் படிக்கும் போதெல்லாம் உணர்ச்சி கட்டுமீறும்; கண்ணீர் பொங்கும்; படிப்பதை நிறுத்தி விடுவார். பரம ஞானி ஒரு சிறந்த பக்தனாக இருக்க முடியும், ஞான மார்க்கமும், பக்தி மார்க்கமும் இறைவனை அடைய இரு வழிகளே என்பதைத் தன் வாழ்க்கையிலேயே வாழ்ந்து காண்பித்து அந்த உண்மையை நமக்கு உணர்த்தியவர் அவர்.

 

ramana stamp

பாரதியார் பெற்ற உத்வேகம்

திருவண்ணாமலையில் பிரசங்கம் செய்ய வந்த மஹாகவி பாரதியார் ரமண சந்ந்நிதியில் வந்து அமர்ந்து உத்வேகம் பெற்றார். பின்னால் பகவானிடம் இது பற்றிக் கேட்ட போது, பாரதியார் படத்தைப் பின்னால் பார்த்த போது தான் அவர் தான் வந்திருந்தார் என்று ஊகிக்க முடிகிறது என்று அருளினார். இப்படி தன்னை யாரென்று சொல்லிக் கொள்ளாமல் பகவான் எதிரே அமர்ந்ததனாலேயே உத்வேகம் பெற்ற பெரியோர்கள் ஏராளம்!

 

பரமஹம்ஸ யோகானந்தரின் கேள்வி

‘ஆடோபயாகிராபி ஆஃப் தி யோகி’– என்ற உலகப் பிரசித்தி பெற்ற நூலை எழுதியவரும் கிரியா யோகத்தை அமெரிக்காவிலிருந்து உலகெங்கும் பரப்பியவருமான பரமஹம்ஸ யோகானந்தர் ரமண மஹரிஷியை (29-11-1935 அன்று) சந்தித்தார்.மக்களிடம் ஆன்மீக முன்னேற்றத்தை எப்படி எழுப்புவது என்ற அவர் சந்தேகத்திற்கு ஒவ்வொருவருடைய ஆன்மீக முனேற்றத்திற்கு தக்கபடி  அவரவருக்கேற்றபடி குறிப்புகளை வழங்க வேண்டும் என்று தெளிவு படுத்தினார் ரமணர். துன்பத்தைப் போக்க யோகம் மதம் ஆகியவை உதவுமா என்ற அவர் கேள்விக்கும் அவை துன்பத்தைப் போக்க உதவும் என்று தெளிவு படுத்தினார்.

 

 

சிவனே திருவண்ணாமலை

திருவண்ணாமலை ரகசியத்தைப் பற்றி பால்பிரண்டன்(23-1-1936 அன்று) பல்வேறு கேள்விகளைக் கேட்டு பகவானைக் குடைந்தார்.

மலையில் குகைகள் உள்ளனவா என்ற பிரண்டனின் கேள்விக்கு எனது அகக் காட்சிகளில் குகைகள், நகரங்கள், தெருக்களைக் கண்டுள்ளேன் என்றார் ரமணர். சித்தர்கள் அதனுள் இருக்கிறார்களா என்றார் பிரண்டன். பெரிய சித்தர்கள் உள்ளனர் என்று பதிலளித்தார் பகவான். சித்தர்கள் இமயமலையில் இருப்பதாக அல்லவா சொல்லப்படுகிறது என்று பிரண்டன் விடாமல் கேட்ட போது கைலாஸம் சிவனின் இருப்பிடம் தான்; ஆனால் சிவனே தான் இந்த மலை“ என்று தீர்க்கமாக பதில் அளித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார் மஹரிஷி.

 

ramana with fan

காலம் வெளி கடந்த மஹரிஷி

 

போலந்து தேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி தன் பெயரை உமாதேவி என்று மாற்றி வைத்துக் கொண்டார்.அவர் காஷ்மீரிலிருந்து வந்து  (10-11-1936 அன்று) பகவானை தரிசனம் செய்தார். காஷ்மீரில் எடுத்த காட்சிகளை அவர் அனைவருக்கும் ஆசிரமத்தில் காண்பித்த போது “பயணம் செய்யும் சிரமம் செய்யாமலேயே நாம் அந்த இடங்களைப் பார்த்து விட்டோம்” என்று நகைச்சுவையுடன் கூறினார் பகவான். ஆனால் இதன் ஆழ்ந்த பொருள் உண்மையில் வேறு. காலம், வெளி கடந்த தன்மையில் மஹரிஷி ஏராளமானோருக்குத் தன் எங்கும் நிறைந்திருக்கும் தன்மையைக் காட்டியுள்ளார்.

 

 

ஒரே சக்தியே அனைவரையும் இயக்குகிறது

பின்னால் ஜனாதிபதியாக இருந்த பாபு ராஜேந்திர பிரசாத் ரமணாசிரமத்திற்கு வந்து சில நாட்கள் தங்கி இருந்தார். விடைபெறும் நாளில் (18-8-1938 அன்று) பகவானிடம் சென்று,” நான் மஹாத்மா காந்திஜியின் அனுமதியின் பேரில் தான் இங்கு வந்துள்ளேன். அவரிடமே சீக்கிரம் திரும்பிப் போக வேண்டும். அவருக்கு ஏதேனும் செய்தி தருகிறீர்களா” என்று கேட்டார். “அவரிடம் அத்யாத்மீக  சக்தி வேலை செய்கிறது; அதுவே அவரை வழி நடத்துகிறது. அது போதும். வேறென்ன வேண்டும்!” என்று பதிலிறுத்தார் ரமணர்.

எந்த சக்தி இங்கிருந்து வழி நடத்துகிறதோ அதே சக்தி அவரையும் வழி நடத்துகிறது என்று ஒரு முறை மஹாத்மாவைப் பற்றி ரமணர் குறிப்பிட்டு ‘அந்த ஏதோ ஒரு சக்தியைப் பற்றிக்” குறிப்பிட்டுள்ளார்.

 

ரமண மஹரிஷி ஒரு திறந்த புத்தகம்

சிவனே திருவண்ணாமலை என்ற ரகசியத்தையும், அங்கிருந்து இயக்கும் அபூர்வ சக்தி ரமணரை ஆட்கொண்டதையும் அந்த சக்தி உலகத்தில் உள்ள பாக்கியம் பெற்றோரை அவர் வசம் இழுத்ததையும், உயரிய ஞானியாக இருந்தாலும் காட்சிக்கு எளியராய், பரம பாகவதனாக பக்தி செலுத்தி கண்ணீர் பொங்க இறைவனை அவர் வழி பட்டதையும், பெரும் யோகிகளுக்குக் கூட உத்வேகம் ஊட்டியதையும் கவிஞர் போன்ற யுக புருஷர்களுக்கு ஆன்ம சக்தி அளித்ததையுமே ரமணரைச் சந்தித்த விதவிதமான இறை அன்பர்களிடமிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.

 

 

மஹரிஷி ரமணர் ஒரு திறந்த புத்தகம்; அந்த புத்தகத்தைப் படித்தவர்களைப்  பற்றிய குறிப்புகள் அடங்கிய புத்தகங்கள் ஏராளம் உள்ளன! அவற்றை ஊன்றிப் படிக்கும் போது மஹரிஷி ரமணர் குறிப்பிடும் “ஏதோ ஒரு சக்தி” அவரே தான் என்பதை உணர முடியும். பகவானைச் சந்தித்த பாக்கியவான்களின் சந்திப்புகளில் நிகழ்ந்ததைப் படிக்கும் போது அது நமது ஆன்ம ஒளியைத் தான் தூண்டுகிறது! – இன்றும், என்றும்!

This article was written by my brother S Nagarajan of Bangalore: swaminathan

********************