ராஜதரங்கிணி அதிசயங்கள் – பகுதி 1

rajatarangini

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1470; தேதி 9 டிசம்பர், 2014.

ராஜதரங்கிணி என்றால் என்ன?
காஷ்மீரின் வரலாற்றைக் கூறும் நூல் ராஜதரங்கிணி — இதை கல்ஹணர் என்ற காஷ்மீரி பிராமணர் எழுதினார் — இது வடமொழியில் எழுதப்பட்டது. இதில் 3449 சுவைமிகு ஸ்லோகங்கள் உள்ளன. காஷ்மீர் வரலாறு நமக்கு எதற்கு என்று பல தமிழர்கள் நினைக்கலாம். இலங்கை மன்னரையும் சோழனையும் தோற்கடித்த மிஹிரகுலன் என்ற காட்டுமிராண்டி மன்னன் பற்றிய சுவையான செய்திகள், இலங்கை வரை ஆட்சிச் சக்கரத்தை பரவ விட்ட லலிதாதித்யன் போன்ற மன்னர்கள் பற்றிய செய்திகள் இதில் உள.

பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவும் ஒரு காஷ்மீரி பிராமணர். அவருடைய மைத்துனர் ஆர்.எஸ்.பண்டிட் இதை வடமொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். எங்கு தெரியுமா? சிறையில் உடகார்ந்து கொண்டு! அப்பொழுது நேருவும் சிறைவாசம் செய்தார். 1934 ஆம் ஆண்டில் அவர் இந்த ஆங்கில மொழி பெயர்ப்புக்கு டேராடூன் சிறையில் இருந்தே முன்னுரை எழுதினார். புத்தகத்தை சாஹித்ய அகாடமி வெளியிட்டது.

கல்ஹணரை வெளிநாட்டுக்கார்கள் மிகவும் பாராட்டுகின்றனர். ஏனெனில் தற்கால வரலாற்றுப் புத்தகம் போல மன்னர்களின் ஆண்டுகளைக் குறிப்பிட்டு இவர் புத்தகம் எழுதி இருக்கிறார். ஆனால் பல மிகைப்பட்ட செய்திகள் இருக்கதான் செய்யும். ஏனெனில் அவர் எழுதியது 12 ஆம் நூற்றாண்டில் — கிட்டத்தட்ட கம்பன் தமிழில் ராமாயணம் எழுதிய காலம் இது — நூலின் பெயர் ‘’அரசர்களின் ஆறு’’, அதாவது ராஜ தரங்கிணி. இதை அவர் எட்டு அத்தியாயங்களாகப் பிரித்துள்ளார். ஒவ்வொன்றும் ஒரு தரங்கம். (தரங்கம் என்றால் அலை என்று பொருள்)

கல்ஹணரைப் பற்றிய ஒரு விநோதச் செய்தி — இவர் கலியுக துவக்கம் கி.மு.3100 என்பதை ஒப்புக்கொள்ளாமல் 2500 என்கிறார். காஷ்மீரின் ஆட்சியை முஸ்லீம்கள் கைப்பற்றுவதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய நூல் இது.

kalhanas_rajatarangini_medium

இவர் மிகப் பழங்காலத்தில் நடந்த விஷயங்களைச் சொல்லும் போது தெளிவில்லாமலும், இவரது காலத்தை ஒட்டிய செய்திகளைத் துல்லியமாகவும் கூறுவதாக நேரு கருதுகிறார்.

கல்ஹணர் ஒரு பெரிய கவிஞர். வரலாற்றைக் கவிதை நடையில் எழுதிய புத்தகம், அநேகமாக, உலகில் இது ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். நிறைய உவமைகலைப் பயன்படுத்துகிறார். ‘’பாலைவனத்தில் வசிப்பவனுக்கு கங்கை நதியில் மூழ்கிக் குளிக்கும் அருமை பெருமை தெரியுமா?’’ – என்பது போன்ற பல உவமைகளைப் போகிற போக்கில் அள்ளித் தெளித்து இருக்கிறார்.

புத்தகத்தில் காஷ்மீர் அரசர்களின் சூழ்ச்சிகள், சூதுவாதுகள், காம சேஷ்டைகள், கொடூரங்கள், பிராமணர்களின் முறை தவறிய பேராசை ஆகியவற்றை விவரிக்கிறார். பல நல்ல விஷயங்களையும் சொல்கிறார். லலிதாத்தியன் என்ற மன்னனின் கடல் கடந்த ஆட்சி, சூர்யா என்ற மன்னனின் பொறியியல் பணிகள், மேகவர்ணன் என்பவன் போர் மூலம் ‘’அஹிம்சையயை’ நிலைநாட்ட முயன்றது ஆகிய எல்லாவற்றையும் இதில் படிக்கலாம்.
stories_from_rajatarangini_tales_of_kashmir_idi013

கட்டுரையின் இரண்டாவது பகுதியில் சோழனையும் இலங்கை மன்னனையும் வென்ற ஹூணன் மிகிரகுலன் பற்றிய விவரங்களைத் தருகிறேன். அவன் மூன்று கோடிப் பேரை ஏன் கொன்றான், 100 யானைகளை ஏன் மலை மீதிருந்து உருட்டிவிட்டான் என்ற விஷயங்களையும் காண்போம்.

ராஜதரங்கிணி அதிசயங்கள் தொடரும்………………………………..