Compiled by London swaminathan
Date: 17 February 2016
Post No. 2550
Time uploaded in London :– 8-28 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)
ஒரு ஊரில் ஒரு அர்ச்சகர் இருந்தார். கிட்டத்தட்ட நம்ம ஊரில் அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டர் போல. எதையும் தனக்கென வைத்து கொள்ளா உபகாரி. அவரது புகழ் திக்கெட்டும் பரவியது உடனே சீன தேசத்து ராஜா அவரைப் பார்க்க வந்தார். நெடு நேரம் தத்துவ விஷயங்கள் பற்றி உரையாடினர். கற்றாரை கற்றாரே காமுறுவர் அன்றோ. ஆகையால் விடைபெற்றுச் செல்லுகையில் விலையுயர்ந்த முத்து ஒன்றை அர்ச்சகரிடம் அன்பளிப்பாகக் கொடுத்தார்.
அதை வாங்கிய அர்ச்சகர், ராஜாவுக்கு முன்னாலேயே, அதைக் கூட்டத்தில் நின்று வேடிக்கை பார்த்த பிச்சைக்காரனிடம் கொடுத்துவிட்டார். ராஜாவுக்கு என்னமோ போலாகிவிட்டது. முகம் சிறுத்துவிட்டது.
இருந்தபோதிலும் காரணத்தை அறிவோமென்று எண்ணி, “அன்பரே நீர் உபகாரி என்பதை நான் அறிவேன். நீவீர் எப்போதுமே இப்படித்தான் செய்வீர்களோ? என்று கேட்டான் மன்னன்.
“ஆமாம், மன்னர் மன்னா!”
“அப்படியா?உங்கள் நண்பர்கள் எதைக்கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களோ” – என்று கேட்டான் மன்னன் ஏளனமாக.
“ஆமாம்”, என்றார் அர்ச்சகர்.
“இதோ நீங்கள் நடப்பதற்கு ஊன்றுகோல் வைத்திருக்கிறீர்களே. அதை உங்கள் நண்பர் கேட்டால்”…..
“ நீதி சாத்திரங்களில் சொல்லியிருக்கிறது. ஒரு நண்பனுக்கு அத்தியாவசியமான எதையும் ஒரு உயர்ந்த மனிதன்/ உத்தம புருஷனானவன், கேட்கக்கூடாதென்று” – என்றார்.
“சரி, அவர் உயர்ந்த குணமுள்ள நண்பர் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்களேன்…” என்றான் மன்னன் விடாப்பிடியாக.
“ஆ, அருமையான கேள்வி. அப்படிப்பட்ட குணமுடையவன் எனக்கு நண்பனாக இருக்கவே முடியாதென்றார்”, அர்ச்சகர்.
மன்னர் வாயடைத்துப் போனார்.
–இது ஒரு சீனக் கதை
Xxxx
எல்லாம் கடவுள் கொடுப்பான்?
இரண்டு நண்பர்களிடையே காரசாரமான வாக்குவாதம். கடவுள், எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுப்பார். நாம் ஒன்றும் செய்யத் தேவையே இல்லை என்றான் ஒருவன்.
இல்லை, அப்பைடியில்லை. யார் ஒருவன் முயற்சி செய்கிறானோ அவனுக்குதான் கடவுள் உதவி செய்வார் என்றான் மற்றவன்.
உடனே முதலாமவன், “இதோ பார் நான் கோவிலில் போய் ஒரு மூலையில் உட்காருகிறேன். எனக்கு உணவு முதலியன கிடைக்கும் என்று சொல்லி ஒரு மூலையில் அமர்ந்தான். அவன் நண்பனும் தொலைவிலிருந்து வேடிக்கை பார்த்தான். ஒரு நாள் ஆயிற்று; இரண்டு நாள் ஓடிற்று; யாரும் அவனைக் கண்டுகொள்ள வேயில்லை. பசியோ வாட்டியது. மூன்றாம் நாளும் வந்தது. இரவு நெருங்கிவிட்டது. இதுவரை யாரும் அவனைக் கண்டுகொள்ள வேயில்லை.
அப்பொழுது மூன்று பக்தர்கள் மிச்சமுள்ள பிரசாதத்தைப் பங்குபோட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களோ, இந்த ஆளை நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை.
அவர்களிடம் பிரசாதம் நிறைய மிஞ்சியிருந்ததால், அட, இதை வீணடிக்கக்கூடாது; வீட்டிற்குக் கொண்டு செல்வோம் என்று பேசிக்கொண்டனர். மூலையில் உட்கார்ந்த ஆள் யோசித்தான். இவர்களும் போய்விட்டால் நான் மூன்று நாள் சாப்பிடாததால் இரவில் மயக்கம் போட்டுவிடுவேன் என்று எண்ணி ஒரு தந்திரம் செய்தான். லேசாக ஒரு இருமல் இரும்பி கணைத்தான். உடனே பக்தர்கள் மூவரும் அவன் பக்கம் திரும்பி, அடப் பாவமே முகமெல்லாம் வாடி இருக்கிறதே. சாப்[பிடவே யில்லை போலிருக்கிறதே என்று கருதி மீதியுள்ள புளியோதரை, தயிர்சாதம் எல்லாவற்றையும் கொடுத்தனர். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நண்பனிடம் போனான். கடவுள் எல்லோருக்கும் உதவுவார்தான். ஆனால் அவரைக் “கொஞ்சம் தூண்டிவிட” வேண்டியிருக்கிறது- என்றான்.
நண்பன் சிரித்துக்கொண்டே வீட்டுக்குப் போனான்.
–பாரசீகக் கதையின் தழுவல்
You must be logged in to post a comment.