
Written by London swaminathan
Date: 1 August 2018
Time uploaded in London – 9-24 am (British Summer Time)
Post No. 5278
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
ஒரு நாள் மாலை ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், தன் குரு தோதாபுரியோடு அமர்ந்து இருந்தார். அவர் வளர்த்து இருந்த நெருப்பின் அருகில் இருவரும் அமர்ந்து இருந்தனர். இரண்டுபேரும் தங்களை மறந்து வேதாந்தப் பேச்சில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது கோயில் தோட்டக்காரன் சுருட்டைப் பற்றவைக்க அந்த நெருப்பிலிருந்து எரியும் விறகு ஒன்றை எடுத்து வந்தான். முதலில் தோதாபுரி இதை கவனிக்கவில்லை. அவன் நெருப்பை எடுத்ததும் பார்த்துவிட்டார். அவருக்கு அளவில்லாத கோபம் வந்துவிட்டது.
பிரம்மமயமான நெருப்பிலிருந்து சுருட்டு பற்ற வைப்பதா? என்று எண்ணிய அவர், அவனைக் கண்டபடி திட்டிவிட்டு, அடிப்பதற்கே போய்விட்டார். இதைக் கண்ட ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் “என்ன இது? என்ன இது?” என்று பரவச நிலையில் உரக்கக் கூவியபடி, விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
தோதாபுரி, தனது சீடனின் விசித்திரமான நடவடிக்கையைக் கண்டு “ஏன் சிரிக்கிறாய்? அவன் செய்தது தவறான காரியம் இல்லையா?” என்றார்.
ஒருவாறு சிரிப்பை அடக்கிக்கொண்ட ராமகிருஷ்ணர் (பரமஹம்சர்), தோதாபுரியைப் பார்த்து, “உங்களுடைய அத்வைத ஞானத்தின் ஆழம் என்னைச் சிரிக்க வைத்துவிட்டது. இவ்வளவு நேரம் என்னிடம், பிரம்மம் ஒன்றே உண்மை, உலகத்தில் உள்ள உள்ள ஒவ்வொரு பொருளும் அந்தப் பிரம்மத்தின் தோற்றமே என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள்; அதன்படி பார்த்தால் அந்த நெருப்பும் பிரம்மம்; அதை எடுத்துச் சுருட்டுப் பற்றவைத்த தோட்டக்காரனும் பிரம்மம்; சுருட்டைப் பற்ற வைக்கிற செயலும் பிரம்மம். பிரம்மம் பிரம்மத்தைப் பற்ற வைக்கிறது. அப்படியிருக்க தோட்டக்காரன் செய்தது அக்கிரமம் என்று நீங்கள் அவனை அடிக்க ஓடுகிறீர்களே! எல்லோரும் ஆட்டிப் படைக்கும் மாயையின் சக்திதான் எப்படிப்பட்டது என்று நினைத்தேன். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை” என்றார்.
அதைக்கேட்டதும் தோதாபுரி அசந்தே போய்விட்டார். நெடு நேரம் அவரால் ஒன்றுமே பேசமுடியவில்லை. பிறகு நிதானமாக, “ஆமாம் நீ சொல்வது சரிதான். கோபத்தில் நான் எல்லாவற்றையும் மறந்து விட்டேன்; எதனிடமும் பற்றுக்கொள்வதும் ஆபத்துதான். இனிமேல் கோபம் கொள்ள மாட்டேன்” என்றார். அது போலவே அன்றிலிருந்து கோபப்படுவதை விட்டுவிட்டார்.
xxxx

யானைப் பாகன் பிரம்மம்!
(2014 பிப்ரவரியில் எழுதிய கதை)
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை:
“ஒரு குரு, தனது சிஷ்யனுக்கு, உபதேசம் செய்தார். நீயும் பிரம்மம், நானும் பிரம்மம். எல்லாம் கடவுள் என்று. சிஷ்யன் உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டுக் கொண்டான். வெளியே ஞானத் திமிருடன், செருக்குடன் நடந்தான். ஒரு மதம் பிடித்த யானை அவ்வழியே வந்தது. அனைவரும் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினர். யானைப் பாகனும் ‘விலகிப் போ, விலகிப் போ’ என்று கத்தினான்.
அவனோ, நானும் பிரம்மம், இந்த யானையும் பிரம்மம், நான் எதற்கு நகர வேண்டும்? என்றான். அவனை யானை துதிக்கையால் சுழற்றி தூக்கி எறிந்தது.
ரத்தக் காயங்களுடன் குருவிடம் வந்து முக்கி முனகிய வாறே, குருவே! நானும் பிரம்மம், யானையும் பிரம்மம், ஆனால் அந்தப் பிரம்மம் இந்தப் பிரம்மனைத் தூக்கிப் போட்டுக் காயப்படுத்தியது. ஏனோ? என்றான்.
சிஷ்யா!, சிறிது விளக்கமாகச் சொல். யானை தனியாக ஓடி வந்ததா? மற்ற யாரும் அங்கு இல்லையா?
குருவே, யானைப் பாகன் விரட்டவே எல்லோரும் ஓடிவிட்டனர். நான் அவன் சொன்னதை மறுத்து நானும் பிரம்மம் , யானையும் பிரம்மம் என்று வாளாவிருந்தேன்.
சிஷ்யா!, யானையை பிரம்மம் என்று நீ கருதினாய். அதன் மீதிருந்த பாகன் என்ற பிரம்மம் சொன்னதை கேட்கவில்லையே. அவனும் பிரம்மம்தானே! என்றார்.
ஆக, குரு சொன்னதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் குருவின் கட்டளையை மீறியதால் அவர் துயரம் அடைந்தார்.
–subham–