WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,292
Date uploaded in London – – 3 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்வாமி ராமதீர்த்தர்! – 2
ஸ்வாமி ராமதீர்த்தர் ஒரு கணித மேதை. அவரைப் பற்றி பூரண் சிங், ‘ஸ்வாமி ராமா’ (Puran singh – Swami Rama) என்ற நூலை எழுதியுள்ளார். அதில் பூரண் சிங் ஸ்வாமி ராமதீர்த்தர் தன்னிடம் கூறியதாக எழுதிய சம்பவம் இது.
ஒரு முறை ஸ்வாமி உயர் கணிதத்தில் சில கடினமான கணக்குகளைத் தீர்வு செய்ய எடுத்துக் கொண்டார். ‘நாளை காலை சூரியன் உதிப்பதற்குள் அவற்றிற்கான தீர்வைக் காண்பேன்; இல்லையேல் என் தலையை உடலிலிருது வெட்டிக் கொள்வேன்’ என்று சபதம் பூண்ட அவர் தலையை வெட்டுவதற்காக ஒரு கூரிய கோடாரியையும் பக்கத்தில் வைத்துக் கொண்டார். இப்படிப்பட்ட சபதம் மிக மிகத் தவறானது தான்; ஆனால் இப்படிப்பட்ட கடுமையான ஒழுங்குக் கட்டுப்பாட்டைக் கொண்டதனால் தான் தனக்கு இருக்கும் அறிவு வந்தது என்றார் அவர். நள்ளிரவிற்குள் நான்கு கணக்குகளில் மூன்றிற்கு அவர் தீர்வைக் கண்டு விட்டார். நான்காவது கணிதத்திற்குத் தீர்வு கிடைக்கவில்லை.ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான்.
தான் போட்ட சபதத்திற்குத் தக, கோடாரியை எடுத்துக் கொண்டு வீட்டின் மாடிக்குப் போனார். அங்கு கூரிய கோடாரியைத் தன் தொண்டையில் வைத்து அறுத்துக் கொள்ள ஆரம்பித்தார். கோடாரி முனை கழுத்தில் பட்டு ரத்தம் வெளியேற ஆரம்பித்த தருணம்.
திடீரென்று ஆகாயத்தில் அந்தக் கணிதத்திற்கான தீர்வு எழுதப்பட்டிருப்பதை அவர் கண்டார். அதை எழுதிக் கொண்டார்.
அந்தக் கடினமான கணிதத்திற்கு அது தான் அபாரமான ஒரிஜினல் தீர்வாக அமைந்தது. அதை தனது கவர்ன்மெண்ட் காலேஜ் பேராசிரியர் முகர்ஜியிடம் காண்பித்தார். பேராசிரியர் பிரமித்துப் போனார்.
இதே போல பல முறை செய்து தான் கணிதத்தில் யாரும் பெறுதற்கரிய பெரும் நிலையை ராமதீர்த்தர் பெற்றார்.
1897ஆம் ஆண்டு. நவம்பர் மாதம். ஸ்வாமி விவேகானந்தரை சனாதன தர்ம சபாவின் சார்பில் சொற்பொழிவாற்ற லாகூருக்கு அழைத்தார் ராமதீர்த்தர். ஹாலில் கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகியது. உடனே ஹாலை விட்டு வெளியேறி திறந்தவெளியில் அனைவரும் கேட்டுத் திருப்தியுறும் வகையில் விவேகானந்தர் பேசினார்.
அடுத்த சொற்பொழிவு வேதாந்தம் பற்றியது. ராமதீர்த்தரின் வேண்டுகோளின் பேரில் அந்தச் சொற்பொழிவை ஆற்றினார் ஸ்வாமி விவேகானந்தர். அது ஒரு சர்கஸ் மைதானத்தில் நடந்தது.
மின்னல் போன்ற பளீரென்ற சொற்பொழிவும், ஸ்வாமிஜியின் நா வன்மையும் கூட்டத்தை அப்படியே கட்டிப் போட்டது.
இந்தச் சொற்பொழிவைக் கேட்ட பின்னர் தான், சந்யாசியாக தான் ஆக வேண்டுமென்ற எண்ணத்தில் உறுதி கொண்டார் ராமதீர்த்தர். ஸ்வாமி விவேகானந்தர் போலவே அமெரிக்கா சென்று வேதாந்தத்தைப் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியதும் இதன் விளைவே தான்!
ஸ்வாமி விவேகானந்தரை லாகூரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர் ஒரு விருந்தை அளித்தார். கூடவே குட்வின் உள்ளிட்டவரும் அந்த விருந்தில் கலந்து கொண்டனர்,
தனது வீட்டில் இருந்த நூலகத்தை ஸ்வாமிஜிக்குக் காண்பிக்கவே, அவர் வால்ட் விட்மன் எழுதிய “லீவ்ஸ் ஆஃப் கிராஸ்’ புத்தகத்தை அங்கு படித்தார்.
அவர் ஸ்வாமி விவேகானந்தருக்கு ஒரு கடிகாரத்தை பரிசாக அளிக்கவே, அதை அவர் சட்டைப் பையிலேயே மாட்டிய அத்வைதத்தின் சிகரமான ஸ்வாமிஜி, “இதை, நான் இங்கேயே அணிகிறேன்” என்று கூறினார். உள்ளது ஒன்றே என்ற
அத்வைதத்தில் ஆழ்ந்து ஊறியதால் ராமதீர்த்தர் தன்னை எப்போதும் ராமா என்று அழைத்துக் கொண்டே பேசுவார். (நான் என்று ஒரு போதும் அவர் பேசுவதில்லை.) இதை மனதில் கொண்டு அவரது உரைகளைப் படிக்க வேண்டும்.
1902ஆம் ஆண்டு. பிப்ரவரி மாதம்.
ஸ்வாமி ராமதீர்த்தர் ஃபைஜாபாத்திற்கு (Fyzabad) விஜயம் செய்தார். அங்கு சனாதன தர்ம சபா சார்பில் அவர் ஒரு சொற்பொழிவாற்றினார். இந்த சபை சாந்தி பிரகாஷ் என்ற சூரஜ் லால் பாண்டே என்பவரால் நிறுவப்பட்ட சபா.
இந்த சபை ஹிந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகிய அனைவரும் பங்கு கொள்ளக் கூடிய ஒரு பொதுவான சபா. தங்கள் தங்கள் மதக் கொள்கைகளை பரிமாறிக் கொள்வதற்கான ஒரு சபையாக இது அமைந்திருந்தது.
ஸ்வாமி ராமதீர்த்தரின் ஆணைப்படி அவரது சிஷ்யரான நாராயணா, ‘ஆத்மா’ என்ற பொருளில் பேசினார். சொற்பொழிவு முடிந்த பின்னர் கூட்டத்திற்கு வந்திருந்த மௌல்வி முகம்மது முர்டாஸா அலி கான் (Maulvi Mohammed Murtaza Ali Khan) பல ஆக்ஷேபணைகளை எழுப்பினார்.
ஸ்வாமி ராமதீர்த்தர் மறுநாள் வந்து ஆக்ஷேபணைகளுக்கு அவர் சமாதானங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்.
மறுநாள் மௌல்வி குறித்த நேரத்திற்கு அங்கு வந்து சேர்ந்தார்.
வாதம் புரிவதற்காக அல்ல; வம்புச் சண்டைக்காக வந்தார்.
ஸ்வாமி ராமதீர்த்தரின் எதிரில் நேருக்கு நேர் அவர் உடகார்ந்தார்.
இருவரின் கண்களும் சந்தித்தன.
அவ்வளவு தான்! மௌல்வி தனது ஆக்ஷேபணைகள் அனைத்தையும் மறந்தார். அவர் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிந்தது.
கைகளைக் கூப்பியவாறே அவர் ஸ்வாமி ராமதீர்த்தரை நோக்கி, “ஐயனே! மனித்து விடுங்கள் என்னை; உங்களை யார் என்று தெரியாமல் போய் விட்டது! என்னை மன்னித்து விடுங்கள்” என்றார்.
அன்று முதல் அந்த மௌல்வி இனம், ஜாதி கடந்த இறையன்புக்கு ஆளானார்.
- தொடரும்
- tags-ராமதீர்த்தர்! – 2