ராமாயணம் சௌபாக்யம், பாப நாசனம், வேத சமம்!

ram hanuman

Post No.1047
By S Nagarajan, அத்தியாயம் 27

உலகின் முதல் காவியமான ராமாயணம் ஹிந்துக்களின் பொக்கிஷம். ராமாயணம் ஒரு அறிவுக் களஞ்சியம். அறக் களஞ்சியம். கலாசாரப் பொக்கிஷம். கலைப் பொக்கிஷம். கவிதைப் பொக்கிஷம். உவமை, உத்தி, நியாயம், பழமொழி, பழங்கதைகள் ஆகியவற்றின் கருவூலம். சுயமுன்னேற்றத்தைத் தரும் முன்னேற்ற நூல். புருஷார்த்தம் எனப்படும் அறம், பொருள், இன்பம், மோக்ஷம் ஆகிய நான்கையும் அடைவதற்கான வழிகளைச் சுட்டிக் காட்டும் லட்சிய நூல். கோடானு கோடி மனிதர்களுக்கு காலம் காலமாக உத்வேகம் ஊட்டிய பழம் பெரும் நூல். மேலாண்மையைத் திறம்படச் செய்ய வைக்கும் மேலாண்மை நூல்.

யுத்தக் கலையைக் கற்பிக்கும் போர் நூல். அஸ்திரங்களைப் பிரயோகிப்பது பற்றிய அனைத்தையும் கற்பிக்கும் அஸ்திர நூல். ராஜ தந்திரக் கலையைக் கற்பிக்கும் ராஜ தந்திர நூல். எல்லா நலத்தையும் விளைவிக்கும் மந்திர நூல். பல யந்திரங்களை விளக்கும் யந்திர நூல். இறைவனைத் துதிக்கச் சிறந்த துதிகளை அள்ளித் தரும் ஸ்தோத்திர நூல். மன நலத்தை மேம்படுத்தும் உளவியல் நூல். மூலிகைகளின் ரகசியத்தைக் கூறும் மூலிகை நூல். உயிர் மீட்கும் மருத்துவ நூல். வேத விளக்கமாகத் திகழும் வேதத்தின் உரை நூல். ரிஷிகளின் சரித்திரங்களைத் தரும் வரலாற்று நூல். ஜோதிட சாஸ்திரத்தின் நுணுக்கங்களை அறிவிக்கும் ஜோதிட நூல். வானியல் மர்மங்களை விளக்கும் வான சாஸ்திர நூல்.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கான ஆதாரங்கள் 24000 ஸ்லோகங்களில் பொதிந்து கிடக்கின்றன! வல்லார் வாய் கேட்டு இவற்றை அறியலாம்.

ram in frame

உத்தர காண்டத்தில் இறுதி ஸர்க்கமான நூற்றிப்பத்தாவது ஸர்க்கத்தில் ராமாயணத்தின் பெருமை சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.

வேத பாடத்திற்கு முதலில் கற்றறிய வேண்டியதென பெருமை பெற்றதாய் பிரம்மாவினால் மெச்சிக் கொண்டாடப்பட்டது. (முக்யம் ஏதாவதத் ப்ரஹ்மபூஜிதம்) ராமாயணம்.

ஸ்வர்க்க லோகத்தில் தேவரைப் பற்றியதாகிய ராமாயணத்தை கந்தர்வர்கள் உள்ளிட்ட தேவர்களும் பரம ரிஷிகளும் சித்தர்களும் அப்போதிலிருந்து எக்காலத்திலும் சந்தோஷமுடையவர்களாய் பாராயணம் செய்து வருகின்றனர்.

இதமாக்யானமாயுஷ்யம் சௌபாக்யம் பாப நாசனம் I ராமாயணம் வேத சம்ம் ச் ராத்தேஷு ஸ்ராவயேத்துத: II
(உத்தர காண்டம் நூற்றிப்பத்தாவது ஸர்க்கம், முப்பதாவது ஸ்லோகம்).

இதம் – இந்த ராமாயணம் – ராமாயணம் என்னும் ஆக்யானம் – ஆக்யானமானது ஆயுஷ்யம் – தீர்க்காயுளைக் கொடுக்க வல்லது சௌபாக்யம் – ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்க வல்லது பாப நாசனம் – சர்வ பாபங்களையும் போக்க வல்லது வேத சமம் – வேதத்திற்குச் சமமானது ச்ராத்தேஷு – சிரார்த்த காலங்களில் ஸ்ராவயேத் – பாராயணம் செய்ய வேண்டும்.

rama boating

இதனது கால் ஸ்லோகத்தையாவது எவன் ஒருவன் படிக்கிறானோ அவன் எல்லா பாவங்களிலிருந்தும் விமோசனம் அடைகின்றான். புத்திர பாக்கியம் இல்லாதவன் புத்திரனைப் பெறுகிறான். பணம் இல்லாதவன் பணத்தைப் பெறுகிறான்.

எவனேனும் பாவங்களை விடாமல் செய்த போதிலும் அவனும் ஒரு ஸ்லோகத்தையாவது படிப்பானாகில் பாவத்திலிருந்து விமோசனம் அடைகிறான்.

நோயற்ற வாழ்வைத் தரவல்லதாகிய (ஆயுஷ்யம்) ராமாயணம் என்னும் ஆக்யானத்தை பாராயணம் செய்யும் மனிதன் இந்த உலகில் புத்திர பௌத்திர பாக்கியங்களைப் பெற்று விளங்குகின்றான். இறந்த பின்னர் இங்கேயும் பரலோகத்திலும் கௌரவிக்கப்படுகின்றான்.
இப்படி ராமாயணம் கற்றலின் பலனையும் கேட்டலின் பயனையும் உத்தரகாண்டத்தில் வால்மீகி மஹரிஷி விவரித்து அருளியுள்ளார்.

ராமாயணத்தைப் பயில்வோம். பயிற்றுவிப்போம்.

கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்று அருளுகிறார் நம்மாழ்வார்.
பூரண அவதாரமான ராம சரிதத்தை இடைவிடாமல் கற்போம். ஏற்றம் பெறுவோம்!

முற்றும்.

contact swami_48@yahoo.com

*******************