விஞ்ஞானம் நிரூபிக்கும் வால்மீகி முனிவர் கூறும் உண்மைகள்! (Post No.3807)

written by S NAGARAJAN

 

Date:11 April 2017

 

Time uploaded in London:-  5-44 am

 

 

Post No.3807

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

விஞ்ஞானம் மெய்ஞானம்

ஞான ஆலயம் மார்ச் 2017 இதழில் வெளியான கட்டுரை

 

விஞ்ஞானம் நிரூபிக்கும் வால்மீகி முனிவர் கூறும் உண்மைகள்!

 

by ச.நாகராஜன்

 

நாஸா நிரூபிக்கும் சேது

 

அறிவியல்  முன்னேற முன்னேற பல்வேறு ஆய்வின் முடிவுகள் ஹிந்து மதம் கூறும் தத்துவங்களையும் கொள்கைகளையும் உண்மை என நிரூபித்துக் கொண்டே வருகின்றன.

வால்மீகி தான் இயற்றிய ராமாயணத்தில் உண்மையைத் தவிர வேறொன்றும் உரைக்கவில்லை.

 

நாஸா எடுத்த சாடலைட் படம் சேது அணை இருப்பதை உறுதி செய்ததை நாம் அறிவோம் (ஞான ஆலயம் டிசம்பர் 2007 இதழில் இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய கட்டுரையை வாசகர்கள் நினைவு கூரலாம்)

 

ஜெர்மனியைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்களான புரபஸர் க்ளாஸ் டி ருல் (Prof Klaus D Ruhl)  மற்றும் அவரது இந்திய சகாவான புரபஸர் விஷாத் திரிபாதி ஆகியோர் ராமர் கட்டிய சேதுவைப் பற்றிய உண்மையை நிரூபிக்கத் தயார் என்று அகில உலக இராமாயண் மாநாட்டில் 2007இல் அறிவித்தனர்.

இராமர் பிறாந்த தேதி

 

இராமாயணம் நடந்த காலத்தில் ராமர் பிறந்த நேரத்தில் இருந்த பல்வேறு கிரக் நிலைகளை வால்மீகி ரிஷி கூறியிருப்பதை வைத்து ஆராய்ந்து அப்படிப்பட்ட கிரக நிலைகள் கிறிஸ்து பிறப்பதற்கு 5114 ஆண்டுகளுக்கு முன்னர் ஜ்னவரி மாதம் 10ஆம் தேதி அமைந்திருந்ததாக இப்போது பிரபல ஆராய்ச்சியாளர் புஷ்கர் பட்நாகர் கூறுகிறார்.. தி இன்ஸ்டிடியூட் ஃபார் ஸயிண்டிபிக் ரிஸர்ச் ஆன் வேதா என்ற ஆய்வு நிறுவனம் இந்த கணிதத்தைப் போடுவதற்கான  ஒரு விசேஷ மென்பொருளை வடிவமைத்துள்ளது. அதன் உதவி கொண்டு இந்த முடிவை அவர்  கண்டுள்ளார். இதே கிரக நிலைகள் சுழற்சி அடிப்படையில் இதற்கு முன்னர் வரும் போது காலம் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள தேதியைக் காண்பிக்கும் என்பது இன்னும் சில அறிஞர்களின் முடிவு.

 

196 ராமாயண ஸ்தலங்கள்!

 

2002 ஆம் ஆண்டில் டாக்டர் ராம் அவதார் சர்மா என்ற ஆய்வாளர் ராமாயணத்துடன் தொடர்பு கொண்ட 196 இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அங்கெல்லாம் இன்றும் கூட ராமாயணம் நடந்ததற்கான சின்னங்கள் இருப்பதை உறுதிப் படுத்தியுள்ளார்.

 

குகனின் வமிசாவளியினர்

 

டெல்லி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சௌபே மற்றும் புரபஸர் வி.ஆர்.ராவ் ஆகியோர் இன்னொரு உண்மையைத் தங்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.மிராஜ்பூர், வாரணாசி,பண்டா மற்றும் அலஹாபாத் ஆகிய இடங்களில் இன்றும் இருந்து வரும் கொல் என்னும் பழங்குடியினர் குகனுடைய வம்சத்தின் வழித்தோன்றல்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்.இவர்களுடைய மரபணுக்கள் பத்தாயிரம் வருடங்களாக இருந்து வரும் ஒரு குடியினரின் மரபணுக்களாகும் என்ற அவர் கூற்று ஆரியர் இந்தியாவின் மீது படையெடுத்து வநதனர் என்ற ஆரிய-திராவிட வாதத்தைத் தவிடு பொடியாக்குகிறது.

 

பிரித்தாளும் சூழ்ச்சியில் கை தேர்ந்த ஆங்கிலேய அரசுக்கு உறுதுணையாக இருந்த பல அறிஞர்களின் கட்டுக்கதையான ஆரிய திராவிட வாதம் தற்போதைய பல்வேறு அறிஞர்களின் ஆய்வால் முற்றிலும் கட்டுக்கதை என்பது நிரூபணமாகி விட்டது.

 

நான்கு தந்தங்கள் கொண்ட யானை உண்மையே

 

சுந்தர காண்டத்தில் இராவணனின் அரண்மனை நான்கு தந்தங்கள்  கொண்ட யானைகளால் காவல் காக்கப்படுவதை வால்மீகி முனிவர் நான்காவது ஸர்க்கம் 29ஆம் சுலோகத்தில் “வாரணைச்ச சதுர்தந்தை:” என்ற சொற்றொடர் மூலம் குறிப்பிடுகிறார்.

அதே காண்டத்தில் 27ஆம் ஸர்க்கத்தில் வரும் சுலோகம் இது:

 

ராகவஸ்ச மயா த்ருஷ்டச் சதுர்தந்தம் மஹாகஜம் |

ஆரூட: சைல சங்காஷம் சசார சஹ லக்ஷ்மண: ||

 

விபீஷணனின் பெண்ணான திரிஜடை, இராவணன் அழிக்கப்பட்டு சீதையுடன் இராமன் சேருவதாகத் தான் கண்ட கனவை சீதையிடம் கூறுகிறாள். அப்போது அவள் கூறும் இந்த சுலோகத்தின் பொருள்: “ராகவர் லக்ஷ்மணரோடு கூடியவராய் நான்கு தந்தங்களை உடைய குன்று போல உள்ள யானையின் மீது ஏறினவராக என்னால் காணப்பட்டார்”

 

நான்கு தந்தங்கள் கொண்ட யானையே இல்லை; அது கற்பனை என பல “பகுத்தறிவுவாதிகள்” கிண்டலும் கேலியுமாக கூறி வந்ததுண்டு.

 

ஆனால் என்கார்டா என்சைக்ளோபீடியா (Encarta Encyclopedia)  என்னும் கலைக்களஞ்சியம் இப்படிப்பட்ட நான்கு தந்தங்கள் கொண்ட யானைகள் 38 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது என்பதையும் அவற்றின் பெயர்

 

மஸடோடோண்டாய்டியா (MASTODONTOIDEA) என்றும் குறிப்பிடுகிறது. அந்த இனம் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்து பட்டது என்றும் பின்னர் இரண்டு தந்தங்கள் உடைய யானைகள் தோன்றின என்றும் அந்தக் கலைக் களஞ்சியம் தெரிவிக்கிறது.

 

ஆய்வுகள் பல நவீன உபகரணங்களுடன் நடத்தப்பட நடத்தப்பட புதிய உண்மைகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொன்றும் வால்மீகி கூறி இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையே என்பதை நிரூபிக்கின்றன.

சத்தியத்தின் அடிப்படையில் சத்திய நாயகனான ராமனின் சரிதத்தைக் கூறும் வால்மீகி ராமாயணத்தில்,

“ஏகைகமக்ஷரம் ப்ரோக்தம் மஹா பாதக நாசனம்” – அதில் வரும் ஒவ்வொரு எழுத்தும் கூறப்படுகையில் அது மகா பாதகத்தையும் போக்கி விடும் என்று முன்னோர் கூறியது பொருள் படைத்ததல்லவா!

******

 

 

கற்பணம், முசுண்டி, பிண்டிபாலம்- கம்பன் தரும் ஆயுதப் பட்டியல்!! (Post No.3725)

Written by London swaminathan

 

Date: 15 March 2017

 

Time uploaded in London:- 8-39 am

 

Post No. 3725

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

வால்மீகி ராமாயணத்தில் 135-க்கும் மேலான ஆயுதங்களின் பெயர்கள் உள்ளன. இவைகளை ஆங்கிலத்தில் ராமாயணத்தை மொழிபெயர்த்த ஹரிபிரசாத் சாஸ்திரி கடைசியில் பிற்சேர்க்கையாகத் தனியாகக் கொடுத்துள்ளார். இது போல கம்ப ராமாயணத்தில் வரும் ஆயுதப் பட்டியலையும், பிற தமிழ் இலக்கியங்களில் வரும் ஆயுதப் பட்டியலையும் தொகுத்தல் நலம் பயக்கும். ஆயினும் அவைகளின் வடிவங்களையும் முழுச் செயற்பாட் டையும் நாம் அறியோம். கம்போடியா, இந்தோநேஷியா முதலிய நாடுகளில் உள்ள ராமாயணச் சிற்பங்களைப் பார்த்தாலும் அத்தனை ஆயுதங்களையும் அடையாளம் காண முடியுமா என்பது ஐயப்பாடே!

 

பழங்காலத்தில் போர்த் தொழிலே முக்கியத் தொழிலாக விளங்கியிருக்க வேண்டும். இதற்குப் பின்னர்தான் விவசாயம் முதலிய தொழில்கள் இருந்திருக்க வேண்டும். எகிப்து போன்ற சில இடங்களில் மட்டும் கட்டிடத் தொழில் (பிரமிடு கட்டுதல்) போர்த் தொழிலுக்கு அடுத்தபடியாக இருந்திருக்கலாம். இதற்கு அடுத்த படியாக சமயம் தொடர்பான பணிகள் வந்திருக்கலாம்.

 

கம்ப  ராமாயணத்தில் கம்பன் தரும் படைகளின் எண்ணிக்கையைக் கூட்டினால் வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். ஏனெனில் அது அப்போதைய உலக ஜனத்தொகைக்கும் அதிகம்! நிற்க.

 

சுந்தர காண்டத்தில் இரண்டு பாடல்களில், கம்பன் தரும் ஆயுதங்களின் பெயர்களை மட்டும் பார்போம். அவற்றைக் கண்ணால் காண்பது அரிது. அகராதிகளிலும் மேம்போக்காகவே பொருள் தருவர்; ஆகையால் அவற்றின் உருவத்தை அறிதல் அரிதிலும் அரிது. இது குறித்து மேற்கொண்டு ஆராய்ச்சிகள் தேவை. சங்க இலக்கியத்தில் கோட்டைகளின் மதில் சுவரில் பொருத்தப்பட்ட ஆயுதங்கள் பற்றிய செய்திகள் உண்டு.

 

சூலம், மழு, வாளொடு, அயில், தோமரம், உலக்கை,

காலன் வரி வில், பகழி, கற்பணம், முசுண்டி,

கோல், கணையம்,நேமி, குலிசம், சுரிகை, குந்தம்,

வாலம் முதல் ஆயுதம் வலித்தனர் வலத்தார்

 

 

சூலாயுதம் (முத்தலை வேல்), மழு (கோடரி), வாள், வேல், பேரீட்டி (தோமரம்), இருப்புலக்கை, உயிர்களை எடுக்கும் எமன் போன்ற வில்-அம்பு, இரும்பு நெரிஞ்சி முள் (கற்பணம்), முசுண்டி, தடி, வளைதடி (கணையம்), சக்கரம், வச்சிராயுதம் (குலிசம்), உடை வாள், கை வேல், திருகுதடி (பிண்டி பாலம்) முத்லிய ஆயுதங்களை உறுதியாகப் பிடித்திருந்தார்கள்.

இவை எல்லாம் அரக்கர் கைகளில் ஏந்தியிருந்த ஆயுதங்கள்

அடுத்த பாடலில்

 

அங்குசம், நெடுங்கவண் அயில் சிலை வழங்கும்

வெங்குசைய பாச முதல் வெய்ய பயில் கையார்;

செங்குருதி அன்ன செறி குஞ்சியர்; சினத்தோர்;

பங்குனி மலர்ந்து ஒளிர் பலாசவனம் ஒப்பார்

–ஊர்தேடு படலம், சுந்தர காண்டம்

 

அரக்கர்கள் மேலும் அங்குசம் (மாவெட்டி; யானைகளை அடக்கப் பயன்படுத்துவது) நீண்ட கல் எறி கயிறு, நுனியில் கூர்மையுடையதும், வீசும்போது ஒலி எழுப்புவதுமான தர்ப்பைப்  புல் போல அறுக்க வல்லதுமான கயிற்று வடிவிலுள்ள பாசக் கயிறு, முதலான ஆயுதனக்களைக் கைகளில் வைத்திருந்தார்கள். அவர்கள் ரத்தம் போலச் சிவந்த செம்பட்டை முடியினர்; கண்களும் கோபக் கனலை வீசின; அவர்களுடைய தோற்றம் பங்குனி மாதத்தில் மலர்ந்து விளங்கும் கல்யாண முருங்கைமரக் காட்டை ஒத்திருந்தது.

 

கல்யாண முருங்கை மரத்தை பூடியா மானோஸ்பெர்மா Butea monosperma என்ற தாவரவியல் பெயரால் அழைப்பர். அது ஹிமாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் காடு முழுதும் காணப்படும். வசந்த கலத்தில் அது காலை, மாலைச் சூரிய ஒளியில் காடே தீப்பற்றி எரிவதுபோலக் காட்சியை உண்டாக்கும். ஆகையால்  இதைத் தாவரவியல் பிரியர்கள் (Flame of the Forest) காட்டின் தீ என்று அழைப்பர். கம்பன், இதைக் கண்டிருக்க வேண்டும். அரக்கர்களின் தலை செம்பட்டை முடியை அதற்கு ஒப்பிட்டது தாவரவியல் படித்தோருக்கும் பூங்காக்களில் செம் முருங்கை (Butea monosperma) மரங்கள் பூத்துக் குலுங்குவதை ரசிப்போருக்கும் விசேஷ அர்த்தத்தைத் தரும்.

 

வாழ்க கம்பன் ! வளர்க அவன் புகழ்!!

 

 

From my old article: —

 

இலங்காதேவியின் தோற்றம்

 

வேல் வாள் சூலம் வெங்கதை பாகம் விளி சங்கம்

கோல்வாள் சாபம் கொண்ட கரத்தாள் வடகுன்றம்

போல்வள் திங்கள் போழின் எயிற்றாள் புகை வாயில்

கால்வாள் காணின் காலனும் உட்கும் கதம் மிக்காள்

 

அவள் வேல், வாள், சூலம், கதை, பாசம், சங்கம், கோல்,  குந்தம் ஆகிய எட்டுக்கருவிகளைக் எட்டுக் கைகளில் ஏந்தியவள். வடக்கிலுள்ள மேரு மலை போன்றவள்; சந்திரனைப் பிளந்தது போல பற்களை உடையவள். வாயிலே புகை கக்குபவள்; எமனையும் கலங்கச் செய்யும் கடும் கோபம் உடையவள். 

–Subham–

 

ராமன் – யமன் சண்டை! அரிய ஏட்டுச் சுவடி!!

Compiled by London swaminathan

Date : 4 September  2015

Post No. 2124

Time uploaded in London : 12-58

கம்ப ராமாயணத்திலும்,வால்மீகி ராமாயணத்திலும் இல்லாத எவ்வளவோ விஷயங்கள் செவி வழியாக வந்துள்ளன. புற நானூற்றில் உள்ள இரண்டு பாடல்களில் உள்ள செய்திகள் இரண்டு ராமாயணங்களிலும் இல்லை. ஆழ்வார் பாடல்களில் உள்ள அணில் கதையும் முந்தைய இரண்டு ராமாயணங்களில் இல்லை. இவைகள் குறித்து முன்னரே எழுதிவிட்டேன். ஒரு வேளை இவைகள் நமக்குக் கிடைக்காமற்போன போதாயன ராமாயணம் முதலியவற்றில் இருந்திருக்கலாம். ராமனுக்கும் யமனுக்கும் நடந்த சண்டை குறித்த ஏட்டுப் பிரதி விஷயம், ஒரு சிறிய நூலாக வெளிவந்து, பிரிட்டிஷ் லைப்ரரியில் வைக்கப்பட்டுள்ளது. இதோ அந்தப் புத்தகம்.

வசந்தன் உயிர்வரு படலம்

வெளியான தேதி – 6-11-1917

வெளியிட்டவர்: கும்பகோணம் அ.அரங்கசாமி மூப்பனார்

(தற்போதைய கம்பராமாயணப் பதிப்புகளில் இந்தப் படலம் சேர்க்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை).

IMG_3972 (2)

IMG_4130

IMG_4133 (2)

IMG_4134

IMG_4135 (2)

IMG_4136 (2)

IMG_4137 (2)

IMG_4138

ராமாயணத்தில் அந்தணர்கள்

21-gurukulam-tv-serial-2-600

எழுதியவர்—லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்- 1005 தேதி—-27th April 2014.

கம்பன் காலத்தில் பிராமணர்கள் புகழ் ஓங்கியிருந்தது என்பதை அவன் பாடல்களில் இருந்து அறிய முடிகிறது. வால்மீகி, போதாயனர், வஷிஷ்டர் ஆகிய மூவர் எழுதிய ராமாயணங்களில் தேவபாஷையில் எழுதப்பட்ட வால்மீகி முனிவரின் கவிதைகளையே—காவியத்தையே அடிப்படையாகக் கொண்டு எழுதியதாக அவனே ஒரு பாடலில் கூறிகிறான். ஆக வால்மீகி முனிவன் பிராமணர்கள் பற்றிச் சொன்னதைத் தானே அவனும் சொல்லியிருப்பான் என்று சிலர் எண்ணலாம். அது சரியல்ல. எவ்வளவோ இடங்களில் அவன் வால்மீகி ராமாயணத்தில் சொன்னதை எழுதாமல் விட்டிருக்கிறான். இன்னும் பல இடங்களிலும் மாற்றியும் எழுதி இருக்கிறான். ஆக கம்பன் கூறுவதை அவன் நம்பிய ஒரு கருத்தாகவே எடுத்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. கம்பன் என்ன சொன்னான்?

வசிட்ட முனிவன் இராமனுக்குக் கூறிய உறுதிப்பொருள்

அயோத்தியா காண்டம்—மந்தரை சூழ்ச்சிப் படலம்

பாடல் 99
என்று பின்னும் இராமனை நோக்கிநான்
ஒன்று கூறுவது உண்டு உறுதிப்பொருள்
நன்று கேட்டு கடைப்பிடி நன்கு என
துன்று தாரவற் சொல்லுதல் மேயினான்

பொருள்: நான் உனக்குச் சொல்ல வேண்டிய உறுதிப்பொருள்
ஒன்று இருக்கிறது. அதை நீ நன்றாகக் கடைப்பிடிக்க வேண்டும். மாலை அணிந்த ராமனுக்குச் சொல்லத் தொடங்கினான்

பாடல் 100
கரிய மாலினும் கண்ணுதலானினும்
உரிய தாமரைமேல் உறைவானினும்
விரியும் பூதம் ஓர் ஐந்தினும் மெய்யினும்
பெரிய அந்தணர் பேணுதி உள்ளத்தால்

அந்தணர்களை மனமார ஆதரிக்கவேண்டும். ஏன் தெரியுமா? அவர்கள்
பிரம்மா (தாமரைமேல் உறைவான்), விஷ்ணு (கரிய மால்), சிவன் (கண்ணுதலான்) ஆகிய மூவரைக் காட்டிலும், ஐந்து பூதங்களையும், சத்தியத்தைக் காட்டிலும் பெரியவர்கள்.

பாடல் 101
அந்தணாளர் முனியவும் ஆங்கு அவர்
சிந்தையால் அருள் செய்யவும் தேவருள்
நொந்து உளாரையும் நொய்து உயர்ந்தாரையும்
மைந்த எண்ண வரம்பும் உண்டாம் கொலோ

மகனே! அந்தணர்கள் கோபித்தபோது எத்தனை தேவர்கள் கஷ்டப் பட்டார்கள் என்று சொல்லி மாளாது; கணக்கே இல்லை. அது போல அவர்கள் மகிழ்ந்தபோது எத்தனை தேவர்கள் இன்பம் அடைந்தார்கள் என்பதையும் கணக்கிட்டுப் பார்க்க இயலாது. இல்லையா?

GURUKULAM Water color 10x13in

பாடல் 102
அனையர் ஆதலின் ஐய இவ் வெய்ய தீ
வினையின் நீங்கிய மேலவர் தாள் இணை
புனையும் சென்னியையாய்ப் புகழ்ந்து ஏத்துதி
இனிய கூறி நின்று ஏயின செய்தியால்

மகனே! அந்தணர்கள் இப்படிப்பட்டவர்கள் என்பது புரிகிறதல்லவா? கொடிய பாவங்களில் இருந்து விலகி நிற்கும் மேன்மை உடையவர்கள் அந்தணர்கள் .ஆகவே அவர்கள் திருவடிகளை உன் முடிமேல் தாங்கி, இனிய சொற்களைக் கூறி அவர்களை வாழ்த்து. அவர்கள் ஏவும் செயல்களை உடனே முடிப்பாயாக.

பாடல் 103
ஆவதற்கும் அழிவதற்கும் அவர்
ஏவநிற்கும் விதியும் என்றால் இனி
ஆவது எப்பொருள் இம்மையும் அம்மையும்
தேவரைப் பரவும் துணை சீர்த்தே

ஒருவனை உச்சாணிக் கொம்பில் வைப்பதும், அதள பாதாளத்தில் வீழ்த்துவதும் ஒருவனுடைய தலைவிதி ஆகும். அந்த விதிகூட, அந்தணர் ஏவலின் படி நடக்கும் என்றால் பார். அவர்களைக் காட்டிலும் சிறந்தவர் உண்டா? எதுவுமே இல்லை. ஆகவே இப்பிறவியிலும் மறு பிறவியிலும் பூலோக தேவர்களாகத் திகழும் அவர்களைப் போற்றுவதே சிறப்புடைய செயல்.

இதைத் தொடர்ந்து நல்லாட்சி, அமைச்சர் சொல் கேட்டல், அன்புடன் இருத்தல் ஆகியவற்றையும் வசிஷ்டர் உபதேசிக்கிறார்.

இங்கு ஒரு கேள்வி எழும். அந்தணர்கள் என்பது பிராமணர்களா? அல்லது முனிவர்களா என்று. புறநானூற்றிலும் ஏனைய சங்க நூல்களிலும், அதற்குப்பின் வந்த சிலப்பதிககரத்திலும் ‘நான்மறை அந்தணர்கள்’, ‘முத்தீ வழிபடும் அந்தணர்கள்’ என்று வருவதை நோக்குங்கால் இது பிராமணர்களையே குறிக்கும் என்பது வெள்ளிடை மலையென விளங்கும். வள்ளுவனும் (543) குறளில் அந்தணர் என்பவரை வேதத்தோடு தொடர்புபடுத்திப் பேசுவதைக் கண்கிறோம்.

பிராமணர்களை பூவுலக தேவர்கள் (பூசுரர்) என்றும் அழைப்பர். பாடல் 103–ல் பூலோக தேவர்கள் என்ற சொல்லைக் குறிக்கும் விளக்கம் வருகிறது. உரைகாரர்களும் பூலோக தேவர் என்றே உரை செய்கின்றனர். ஆக இந்தப் பாடல்களில் கம்பன் குறிப்பது பிராமணர்களைத் தான் என்பதில் ஐயமில்லை.
பாலகாண்டத்தில்

“அருந்தவ முனிவரும் அந்தணாளரும்” (பாடல் 183) என்று பிராமணர்களையும் முனிவர்களையும் கம்பன் வேறுபடுத்திப் பாடி இருப்பதையும் காண்கிறோம்.

மற்றொரு பாடலில்
மாதவத்து ஒழுகலம்; மறைகள் யாவையும்
ஓதலம்; ஓதுவார்க்கு உதவல் ஆற்றலம்;
மூதெரி வளர்க்கிலம்; முறையும் நீங்கினேம்;
ஆதலின் அந்தணரேயும் அல்லாமால் (பாடல் 2644)

மா தவம் செய்தல், வேதங்களை ஓதுதல், ஓதுவித்தல், முத் தீ வளர்த்து யாகம் செய்தல் ஆகியன் அந்தணர் பணியாக மேல் கூறிய பாடலும் கூறுகிறது.

ஒரு காலத்தில் பிராமணர்களும் துறவியரும் சத்தியம், ஒழுக்கம் என்பனவற்றில் சம நிலையில் இருந்தனர். ஆகவே இரண்டு பொருள்களிலும் சில நூல்களில், இச் சொல் பயன்படுதப்பட்டது என்பதும் உண்மையே.

contact swami_48@yahoo.com

சீதை சொன்ன காகாஸுரன் கதை!

ram gem

By S Nagarajan
Post No.986; Dated 18th April 2014.
அத்தியாயம் 23

சுந்தர காண்டத்தில் அனுமன் சீதையைக் கண்டு மன மகிழ்ச்சி கொண்டு தன் விஸ்வரூபத்தைக் காண்பித்துத் தன்னுடன் உடனடியாக ராமரிடம் வருமாறு வேண்ட அதற்குச் சீதை மறுத்து ஸ்ரீராமரே தன்னை வந்து மீட்டுச் செல்ல வேண்டும் என்று தன் திருவுள்ளக் கருத்தை வெளியிடுகிறார். அப்போது ஹனுமான் சீதையிடம் ஒரு அடையாளம் தர வேண்டுமென்று விண்ணப்பிக்கிறார் உடன் சீதை தன் சூளாமணியைத் தருகிறார். அத்தோடு முன் நிகழ்ந்த காகாசுரனின் கதையையும் அடையாளமாக ஹனுமானிடம் சொல்கிறார். 38வது ஸர்க்கமாக அமையும் சீதை சொன்ன காகாசுரனின் கதை இது தான் :-

சித்திரகூடமலையில் வடகீழ் தாழ்வரையில் உள்ளதும் மந்தாகினிக்கு ஸமீபத்தில் உள்ளதும் ஏராளமான கிழங்குகளும், கனிகளும், தீர்த்தங்களும் அமைந்த சித்தாஸ்ரம்ம் என்னும் ஆஸ்ரமத்தில் ஒரு ப்ரதேசத்தில் ஜலத்தில் பலவகை மலர்களால் நறுமணம் வீசிகிற நெருங்கிய சோலைகளிலும் அலைந்து களைத்து தபஸ்விகளின் ஆசிரமத்திலிருந்து வந்த நீர் என் மடியில் படுத்திருந்தீர்,
அப்போது மாமிசம் உண்பதில் ஆசையுற்ற ஒரு காகம் கூரான மூக்கால் என்னைக் குத்திற்று. அந்தக் காகத்தை மண்ணாங்கட்டியால் பயமுறுத்தி விரட்டினேன்.
ஆனால் மாமிசத்தை விட விரும்பாத அந்தக் காகம் என்னைக் குத்திய வண்ணமே அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது. நான் காகத்திடம் சினந்து என் அரைநூல் மாலையை மாத்திரம் கழற்றவும் அதனால் ஆடை நழுவி வீழ்கையில் உம்மால் பார்க்கப்பட்டேன்.

தீனியில் ருசி கொண்ட காகத்தால் குத்தப்பட்டு கோபம் மூட்டப்பட்டுக் களைத்திருந்த நான் உம்மால் பரிஹாஸம் செய்யப்பட்டேன். அதனால் மிகவும் வெட்கம் அடைந்தேன். அப்படியிருந்தும் உம்மிடமே வந்து சேர்ந்தேன். உமது மடியில் வந்து உட்கார்ந்தேன்.முகம் மலர்ந்திருந்த உம்மால் கோபமுற்றிருந்த நான் தேற்றப்பட்டேன்.

நாதா! முகமெல்லாம் கண்ணீர் நிரம்பி இருக்கக் கண்ணீரை மெதுவாகத் துடைத்துக் கொண்டிருந்த என்னை அதிகம் கோபம் கொண்டவளாக அறிந்தீர்.

ram in frame

நான் மிகவும் களைப்பால் அப்படியே உமது மடியில் படுத்து உறங்கினேன் நீரும் என் மடியில் கண் வளர்ந்தீர். அப்போது அதே காகம் மறுபடியும் வந்தது. தூங்கி எழுந்திருந்த என்னை மார்பில் கீறிற்று.
அப்படிப் பல தடவை பாய்ந்து பாய்ந்து என்னைக் கீறவே அப்போது சொட்டிய ரத்தத் துளிகளால் ஸ்ரீ ராமர் எழுந்தார்.

அவர் என் மார்பகங்களில் காயப்பட்டதை அறிந்து சினம் கொண்டு,” “உனது மார்பு எவனால் புண்படுத்தப்பட்டது? ஐந்து தலை நாகத்துடன் எவன் விளையாடுகிறான்?”, என்று கேட்டு சுற்றுமுற்றும் பார்த்து காகத்தைக் கண்டார்.

அந்த காகம் இந்திரனுடைய மைந்தன். கதியில் வாயுவுக்கு நிகரானது. அது அங்கே உடனே அங்கிருந்து மறைந்து விட்டது. கோபம் கொண்ட ராமர் தர்ப்பாஸனத்திலிருந்து ஒரு புல்லை எடுத்து பிரம்மாஸ்திர மந்திரத்தை மந்திரித்தார்.அது ஊழித்தீயெனப் பற்றி எரிந்தது. காகத்தைத் துரத்தியது.
உலகனைத்தும் ஓடி ஓடிக் களைத்த அது ராகவரையே சரணம் அடைந்தது.சரணம் என்று தம்மை வந்து அடைந்த காகத்தை நோக்கி,”பிரம்மாஸ்திரத்தை வீணாகச் செய்ய முடியாது. ஆகையால் வழி சொல்” என்றார் அவர்.

காகம், ‘அஸ்திரம் என் வலது கண்ணை அழிக்கட்டும்’ என்று கூறவே பிரம்மாஸ்திரம் அதன் வலது கண்ணை அழித்தது.

அது முதல் காக்கைகளுக்கு ஒற்றைக் கண் என்பது தெரிந்த விஷயம் என்று இப்படி காகத்தின் நீண்ட வரலாற்றை சீதை கூறி அருளினார். பின்னர் தன் சூடாமணியை ஹனுமானிடம் தந்தார்.

ததௌ வஸ்த்ரகதம் முக்த்வா திவ்யம் சூடாமணிம் சுபம் I
ப்ரதேயோ ராகவாயேதி சீதா ஹனுமதே ததௌ II

-சுந்தர காண்டம், முப்பத்தெட்டாவது ஸர்க்கம், எழுபதாவது ஸ்லோகம்

தத: – அப்பொழுது வஸ்த்ரகதம் – வஸ்த்ரத்தில் முடிந்திருந்த சூடாமணிம் – சூடாமணி என்னும் திவ்யம் சுபம் – திவ்ய ஆபரணத்தை முக்த்வா – அவிழ்த்தெடுத்து ராகவாய – ராகவருக்கு ப்ரதேய – சேர்த்து விட்டேன் இதி – என்று சொல்லி சீதா ஹனுமதே ததௌ – சீதை ஹனுமானிடம் தந்தாள்

இந்த சூடாமணியைக் கண்டவுடன் தான் ராமருக்கு உயிர் வந்தது. முக்கியமான ஒரு கட்டத்தை வால்மீகி விளக்குகையில் சூடாமணி தரப்பட்ட இந்த ஸ்லோகம் அர்த்தமுள்ள ஸ்லோகமாக அமைகிறது. காலம் காலமாக கேட்பவரின் மனத்தை உருக வைக்கும் கவிதையாகவும் ஆகி விட்டது.
contact swami_48@yahoo.com

ராமருக்குச் சீதை சொன்ன ஆயுதம் பற்றிய கதை!

ram sita jungle

Post no.888 Dared 5th March 2014
ராமாயண வழிகாட்டி — அத்தியாயம் 19

ச.நாகராஜன்

ராமாயணத்தின் நாயகியான சீதை பெரும் மேதை என்பதை வால்மீகி ராமாயணத்தை நுணுகிப் படிப்போர் புரிந்து கொள்ள முடியும். பாரம்பரியம் பாரம்பரியமாக வரும் பழைய கதைகளையும் அருமையான சமுதாயத்தின் வழக்கு மொழிகளையும் அவர் ஆங்காங்கே எடுத்துக் கூறுவதே இதற்குச் சான்றாகும்.

யுத்த காண்டத்தில் சீதை கூறிய கரடி கதையை முன்னர் பதினொன்றாம் அத்தியாயத்தில் பார்த்தோம். இன்னொரு கதையை அவர் ராமருக்கு எடுத்துக் கூறுவது ஆரண்ய காண்டத்தில் ஒன்பதாவது ஸர்க்கத்தில் அழகுற அமைந்துள்ளது. அதைப் பார்ப்போம்.

ஸுதீக்ஷ்ண முனிவரால் விடை கொடுக்கப்பட்டு தண்டகை என்று பெயரிடப்பட்டுள்ள காட்டிற்குச் செல்லும் போது சீதை தண்டகாவனத்திற்கு எழுந்தருளத் தனக்கு இஷ்டமே இல்லை என்று ராமரிடம் கூறி, “ராக்ஷஸர்களைக் கண்டதுமே தேவரீர் பாணப் பிரயோகம் செய்வீர்; ஆயுதம் எடுத்தல் தகாது”, என்று கூறி ஒரு கதையைக் கூற ஆரம்பிக்கிறார்.

ram in jungle

“ மஹா பாஹுவே! முன்னொரு காலத்தில் உண்மையையே பேசுபவரும் பரிசுத்தருமான ஒரு முனிவர் பரிசுத்தமாய் இருப்பதும், களிப்புற்ற மான்களையும் பறவைகளையும் கொண்டதுமான ஒரு வனத்தில் வசித்து வந்தார். சசி தேவியின் மணாளனான இந்திரன் அவரது தவத்திற்கு இடையூறை செய்வதற்கென்றே கத்தியைக் கையில் கொண்டு போர் புரியும் வீர உருவத்தைக் கொண்டு அவரது ஆசிரமத்திற்கு வந்தான். அந்த ஆசிரமத்தில் அப்போது புண்ணிய தவத்தில் ஆஸக்தியுடைய அவருக்கு கூர்மையானதும் சிறந்ததுமான அந்தக் கத்தியானது பாதுகாப்பு திரவியம் என்ற முறையில் கொடுக்கப்பட்டது.

அவர் அந்த ஆயுதத்தை ஏற்றுக் கொண்டு பாதுகாப்புப் பொருளாக அதைப் போற்றி தனது அடைக்கலப் பொருளான அதைக் கையில் எடுத்துக் கொண்டே எப்போதும் வனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். பாதுகாப்புப் பொருளில் மனதைச் செலுத்தி அவர் பழங்களையோ அல்லது கிழங்குகளையோ கொண்டு வர எங்கு சென்றாலும் அந்தக் கத்தியின்றி போவதில்லை. அந்த முனிவர் சதா ஆயுதத்தைத் தரிப்பவாய் இருந்து காலக் கிரமத்தில் தவத்தில் ஊக்கத்தை விடுத்து தனது புத்தியை குரூரமாக ஆக்கிக் கொண்டார். அந்த ஆயுதத்தினுடைய சேர்க்கையால் அந்த முனிவர் சுய நிலை தவறி கொடுமையில் ஈடுபட்டு தருமம் க்ஷீணிக்கப்பெற்று அதனால் நரகத்தை அடைந்தார்.

ஆயுத சகவாசத்தால் விளைவது இப்படித்தான் ஆகும் என்பதாய் உள்ள இது ஒரு பழங்கதை” (ஒன்பதாவது ஸர்க்கம் 16 முதல் 23வது ஸ்லோகம் முடிய சீதை கூறும் இந்தக் கதையைக் காணலாம்)

சீதையின் கதையைக் கேட்ட ராமர் சீதையைப் போற்றி, “ தேவீ! க்ஷத்திரியர்களால் வில்லானது கஷ்டப்படுகிறவர்களின் முறையீடு இருக்கக் கூடாது என்கிற காரணத்தால் தரிக்கப்படுகிறதென்ற இந்த நியமனமானது உன்னாலேயே சொல்லப்பட்டு விட்டது. நான் அதைத் தவிர வேறு இல்லை என்று பதில் கூறுகிறேன்” என்கிறார்.

ramas arrow

ஸ்லோகத்தைப் பார்ப்போம்:-
கிம் து வக்ஷயாம்யஹம் தேவி த்வயைவோக்தமிதம் வச: I

க்ஷத்ரியைதார்யதே சாபோ நார்தஷப்தோ பவேதீதி II

(பத்தாவது ஸர்க்கம் மூன்றாவது ஸ்லோகம்)

தேவி – தேவீ
க்ஷத்ரியை: – க்ஷத்திரியர்களால்
சாப: – வில்லானது
ஆர்த ஷப்த: – கஷ்டப்படுகிறவர்களின் முறையீடு

ந பவதே இதி – இருக்கக் கூடாது என்கிற காரணத்தால்
தார்யதே – தரிக்கப்படுகிறதென்கிற
இதம் வச: – இந்த நியமனமானது
த்வயா ஏவ – உன்னாலேயே சொல்லப்பட்டு விட்டது.
அஹம் கிம் து – நான் அதைத் தவிர வேறு இல்லை என
வக்ஷயாமி – பதில் கூறுகிறேன்

ஆயுதம் ஆபத்தையே விளைவிக்கும் என்ற இந்த சாசுவதமான மொழியை சீதை கூறுவது எந்தக் காலத்துக்கும் பொருந்தும். இந்தக் காலத்துக்குக் கூடவே பொருந்தும்.

பழமையான இதிஹாஸமான ராமாயணம் உலகின் ஆதி காவியம் என அழைக்கப்படுகிறது. அதில் பழங்கதை என சீதை கூறுவதை நோக்கும் போது நமது ஹிந்து நாகரிகம் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றியது என்று கூறுவதில் தடை என்ன இருக்கிறது?

ஆரண்ய காண்டம் ஒன்பதாவது ஸர்க்கமும் பத்தாவது ஸர்க்கமும் சுவாரசியமான ஸ்லோகங்களைக் கொண்டுள்ளவை என்பதோடு அனைவரையும் கவர்வதுமாகும்.

(This article is written by my elder brother S Nagarajan: swami)
Contact swami_48@yahoo.com

*****************