ராமாயண வழிகாட்டி
அத்தியாயம் – 2
ச.நாகராஜன்
பொறுமையே அழகு!
அலங்காரோ ஹி நாரீனாம் க்ஷமா ஹி புருஷஸ்ய வா I
பொறுமையே பெண்களுக்கும் புருஷர்களுக்கும் அழகு.இது பிரசித்தம்.
பாலகாண்டம் 33ஆம் ஸர்க்கம் 8ஆம் ஸ்லோகம்
******
பொறுமையே தானம், ஸத்தியம்,யாகம், கீர்த்தி, தர்மம் எல்லாமும்!
க்ஷமா தானம் க்ஷமா ஸத்யம் க்ஷமா யக்ஞஸ்ய புத்ரிகா: I
க்ஷமா யக்ஞ: க்ஷமா தர்ம: க்ஷமாயாம் விஷ்டிதம் ஜகத் II
புத்திரிகளே! பொறுமை தானம்; பொறுமை ஸத்தியம்: பொறுமை யாகம்: இன்னும் பொறுமை கீர்த்தி; பொறுமை தர்மம்; பொறுமையில் உலகம் நிற்கிறது.
பாலகாண்டம் 33ஆம் ஸர்க்கம் 10ஆம் ஸ்லோகம்
(வாயு குசநாபருடைய 100 புத்திரிகளை மணந்து கொள்ள விரும்பியபோது அவர்கள் அரசனை அணுகி முறையிட அரசன் அவர்களிடம் கூறியதையே மேலே காண்கிறோம்.)
*********
அவமரியாதையோடு பரிசை வழங்கக்கூடாது!
அவக்ஞயா ந தாதவ்யம் கஸ்யசில்லிலயா(அ)பி வா I
அவக்ஞயா க்ருதம் ஹன்யாத்தாதாரே நாத்ர் சம்ஸய: II
அவமரியாதையோடும் அலக்ஷ்யத்தோடும் ஒருவனுக்கு கொடுக்கத் தக்கது இல்லை. அவமானத்தோடு செய்யப்பட்டது கொடுப்பவனைக் கொல்லும். இவ்விஷயத்தில் சந்தேகம் இல்லை.
பாலகாண்டம் 13ஆம் ஸர்க்கம் 30ஆம் ஸ்லோகம்
(ஒருவருக்கு பரிசை வழங்கும் போது எப்படி வழங்க வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்கிறோம். மிகுந்த மரியாதையுடனும், பயபக்தியுடனும் கொடுக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.)
***********
கர்மபூமியில் நல்ல கர்மங்களையே செய்ய வேண்டும்!
கர்மபூமிமிமாம் ப்ராப்ய கர்தவ்யம் கர்ம யஸ்சுபம் I
அக்னிர் வாயுஸ்ச சோமஸ்ச கர்மணாம் பலபாகின: II
இந்தக் கர்மபூமியை அடைந்தவர்கள் புண்ணியமாயுள்ள கர்மம் எதுவோ அதையே செய்ய வேண்டும்.
அக்னிபகவானும் வாயுபகவானும் சந்திரனும் கர்மங்களுடைய பலனைத்தான் அனுபவிக்கின்றன!
அயோத்யா காண்டம் 109ஆம் ஸர்க்கம் 30ஆம் ஸ்லோகம்
(புனிதமான இந்த பூமி மட்டுமே கர்மபூமி. ஸ்வர்க்கத்தில் கூட புண்யபலன்களை அனுபவித்தவர்கள் அது முடிந்தவுடன் இங்கு தான் வந்து பிறக்க வேண்டும்.ஆகவே இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் பொருள் பொதிந்தது.)
**************