கழகத்தில் சேராதே: தமிழர்களுக்கு எச்சரிக்கை!!

mahabharata-game-of-dice

ஆராய்ச்சிக் கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1229 ; தேதி 12 ஆகஸ்ட் 2014.

1500 அண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த பேரறிஞன் திருவள்ளுவன் தமிழர்களைக் கடுமையாக எச்சரிக்கிறார்:

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலைப் புகின் (குறள் 937)

கழகத்தில் காலத்தைக் கழித்தால் பரம்பரையாக அவனுக்குக் கிடைத்த செல்வமும் தொலையும். அவனிடமுள்ள எல்லா நல்ல குணங்களும் அழிந்து போகும்!
கழகம்= சூதடும் இடம்.

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகியார் ( குறள் 935)

கழகத்தை நம்பி பொருள் எல்லாவற்றையும் கோட்டை விட்டவர் பலர் உண்டு! காரணம்? சூதாடும் இடம் (கழகம்), சூதாடும் கருவி, தனது சூதாட்டத் திறமை —- இவற்றை எல்லாம் நம்பி, ‘’இல்லாமல்’’ போனவர்கள் பலர்!

சுருக்கமாகச் சொன்னால் கழகத்தில் சேராதே, கழகத்துக்குப் போகாதே, போனால் நீ அழிந்து போவாய்!
வாழ்க வள்ளுவன்! வளர்க அவன் அறிவுரை!!

இதற்கு முன்னும் பின்னும் உள்ள எட்டு குறள்களில் முத்து முத்தாய் உதிர்க்கிறான் வள்ளுவன்:

sokkattan

புல்லட் பாயிண்ட் 1:
மீனைப் பார்த்தாயா? தூண்டிலைப் பார்த்தாயா? என்ன தெரிந்தது. உன் கதியும் அதே கதிதான் (குறள் 931)

புல்லட் பாயிண்ட் 2
நேற்று லட்டரியில் பத்து ரூபாய் விழுந்ததா? இனிமேல் உனக்கு நூறு முறை தோல்விதான், நீ ஒரு ஏமாளி (குறள் 932)

புல்லட் பாயிண்ட் 3
காயை உருட்டினால் பொருள் கிடைக்கும் என்று சொன்னாயா? உன் கிட்ட நல்ல வழியில் வந்த பொருளும் உருளப் போகுது! (குறள் 933)

புல்லட் பாயிண்ட் 4
டேய்! மண்டு! ‘பெட்’ கட்டினாயா? ரேசுக்குப் போனாயா? லாட்டரி சீட்டாய் வாங்கிக் குவிக்கிறாயா? இனிமேல் உனக்கு வறுமை, சிறுமை ஒன்றுக்கும் குறைவே இல்லை, போ! (குறள் 934)

புல்லட் பாயிண்ட் 5
சூதாட்டத்துக்கு இன்னொரு பெயர் முகடி (மூதேவி). அவள் உன்னை விழுங்கினால் சோற்றுக்கே லாட்டரிதான் (குறள் 936)

புல்லட் பாயிண்ட் 6
சூதாடினாயா? இனிமேல் உன் வாயில் பொய் நிறையவே வரும், அருள் எல்லாம் ஓடிப்போகும் (குறள் 938)

புல்லட் பாயிண்ட் 7
உனக்கு இனிமேல் —- “ரோடி, கப்டா அவ்ர் மகான்” — கிடைக்காது. அதாவது உணவு, புகழ், கல்வி, உடை, செல்வம் ஆகிய ஐந்தும் ‘அவுட்’! (குறள் 939)

புல்லட் பாயிண்ட் 8
நோய் வந்தவுடன் உடம்பின் மேலே கூடுதல் காதல் வருது இல்ல! அதே போல சூதாட்டத்தில் பொருளை இழக்க இழக்க அதன் மேல உனக்கு “லவ்” அதிகரிக்கும், ஜாக்கிரதை! (குறள் 940)

banu karnan 2

ரிக்வேதம் என்ன சொல்கிறது?

சூதாடாதே, நிலத்துக்குப் போய் சோளம் விதை!
கொஞ்சம் ஜெயித்தவுடன் அதைப் பற்றி உயர்வாக எண்ணி விடாதே!
உன்னுடைய ஆடு மாடுகளை எண்ணிப் பார், உனக்கு மனைவியும் உண்டு!
இதுதான் சாவித்ரியே என் கிட்ட சொன்னாள்!
(மண்டலம் 10-34-13)

உலகின் மிகப் பழைய சமய நூல் கூறிய அறிவுரை இது!
கவச ஐலூசர் என்ற முனிவர் காதில் ஒலித்த மந்திரம் இது. வேத மந்திரங்களை சங்க காலப் புலவர்கள் ‘’கேள்வி’’ (காதில் விழுந்தது) என்றும் ‘’மறை’’ (ரகசியம்) பாடுகின்றனர்.

கம்பன் என்ன சொன்னான்?

வள்ளுவனுக்கு சளைத்தவனா கம்பன்? அவன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்?

சூது முந்துறச் சொல்லிய மாத்துயர்
நீதி மைந்த! நினக்கிலை ஆயினும்
ஏதம் என்பன யாவையும் எய்துதற்கு
ஓதும் மூலம் அவையென ஓர்தியே (கம்ப ராமாயணம், மந்தரை-2)
ஒப்பிடுக : குறள் 934

banu karnan

அறநெறிச்சாரம் (147) என்ன சொல்கிறது?

ஓதலும் ஓதி உணர்தலும் சான்றோரால்
மேதை எனப்படும் மேன்மையும் – சூது
பொருமென்னும் சொல்லினால் புல்லப்படுமேல்
இருளாம் ஒருங்கே இவை
ஒப்பிடுக: குறள் 939.

பாரதி என்ன சொன்னான்?

“கோயிற் பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல் போலும்
வாயில் காத்து நிற்பான் வீட்டை வைத்து இழத்தல் போலும்
ஆயிரங்களான நீதி அவை உணர்ந்த தருமன்
தேயம் வைத்து இழந்தான் — சீச்சீ! சிறியர் செய்த செய்கை செய்தான்”
என்ற பாரதியாரின் பாஞ்சாலி சபதப் பாடல் சூதாடிய தர்மபுத்திரனைச் சாடுகிறது!

வள்ளுவன் வாழ்க ! (சூதாட்டக்) கழகங்கள் அழிக !!