Post No. 10,276
Date uploaded in London – 30 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
‘காடுகள் வாழ்க ! இந்துக்களின் அற்புத வாழ்க்கை முறை’ என்ற தலைப்பில் இரண்டாவது பகுதி நேற்று வெளியானது. இன்று இறுதி பகுதியில் ரிக் வேத துதி 10-146 ல் கடைசி மூன்று மந்திரங்களைக் காண்போம்.
நேற்று இறங்கு வரிசையில் மந்திரம் 6, 5, 4 பற்றி எனது விளக்க உரையைத் தந்தேன். ஆறு மந்திரங்களின் முழு மொழிபெயர்ப்பை முதல் பகுதியிலேயே தந்து விட்டேன்.
இதோ மூன்றாவது மந்திரம் ரிக்.10-146-3
இங்கும் புலவர் ஒரு கற்பனைக் காட்சியை புலவர் நம் முன்னே வைக்கிறார்.
புலவர் சொன்ன வார்த்தைகள் – “அங்கு பசுக்கள் மேய்வது போலத் தோன்றுகிறது. அதனால் வீடுகள் இருப்பது போலவும் தோன்றுகிறது மாலை நேரத்தில் அரண்யானி தன் வண்டிச் சக்கரங்களைக் கழற்றி வைத்திருக்கிறாள் போலும்!”
இதற்கு விளக்கம் எழுதியோர் உண்மையில் புலவர் பார்ப்பது மான்கள், அங்கும் இங்கும் புல் மேய்வதாகும்; வீடு என்பது மரங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து, செடி கொடிகளால் கூரை வேயப்பட்டது போலத் தோன்றுவதே என்றும் எழுதியுள்ளனர்.
வண்டிச் சக்கரம் கழற்றி விட்டது என்பது மாலை நேரத்தில் வண்டிக்காரர்கள் காளைகளை வண்டியிலிருந்து அகற்றி இளைப்பாற விட்டுவதாகும். இங்கே காட்டில் மான்கள் சுதந்திரமாக புல் மேய்வதைக் கண்ட புலவர் அப்படிப் பாடுகிறார் .
நல்ல ஒரு காட்சியை புலவர் நம் முன்னே கொண்டுவருகிறார்.
காளிதாசன், இமய மலை அடிவாரம் பற்றி குமார சம்பவத்தில் சொல்லும் காட்சி இது. அதை அப்படியே புறநானூற்றுப் புலவர் முரஞ்சியூர் முடி நாகராயர் பாடல் 2-ல் வருணிக்கிறார்:-
“சிறுதலை நவ்வி பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கின் துஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே “
இது சேரமான் பெருஞ் சோற்று உதியஞ் சேரலாதனைப் பாடிய பாடலால் மிகப் பழைய பாடல் ஆகும் .
MR NAGARAJAN’S POEM IN PURA NANURU
பிராமணர்கள் இமயமலை அடிவாரத்தில் மாலை நேரத்தில் சந்தியா வந்தனம் செய்து, யாகம் செய்வதைக் காட்டுகிறது .இன்று தேசப்படத்தில் ‘கஞ்சன் ஜங்கா’ என்று போட்டிருக்கும் சிகரத்தின் உண்மைப் பெயர் ‘காஞ்சன சிருங்கம்’; அதை அப்படியே ‘பொற்கோடு’ golden peak என்று அழகுற மொழிபெயர்க்கிறார் புறநானூற்றுப் புலவர் மிஸ்டர் நாகராஜன் (ராய= ராஜ என்பது இன்று ஆங்கிலத்திலும் Royal ராயல் என்று இருப்பதை தமிழ் -சம்ஸ்கிருதம் தொடர்பு பற்றிய 150 கட்டுரைகளில் விளக்கியுள்ளேன்)
xxx
ரிக்.10-146-2
இரண்டாவது மந்திரத்துக்கு வருவோம். ரிக் வேதம் எவ்வளவு பழமையானது; அதற்குப் பொருள் காண்பது எவ்வளவு கடிது என்பதை இந்த மந்திரம் விளக்குகிறது
காட்டில் நடக்கும் Orchestra ஆர்கெஸ்ட்ரா பற்றிப் புலவர் பாடுகிறார். இது போன்ற அருமையான இயற்கை வருணனை மலைபடுகடாம் முதலிய சங்க இலக்கியப் பனுவல்களில் நிறைய உள .
“கிரீச் என்று சப்திக்கும் விருஷாவரத்துக்கு சிச்சிகம் பதில் அளிக்கிறது. அங்கே பின்புறத்தில் யாரோ தாளம் போடுகிறார்கள். யாரோ சுருதி பாடுகின்றனர் . அவைகள் எல்லாம் அரண்யானி தேவியைக் குறித்து துதி பாடுகின்றன” –
இதன் பொருள் காட்டில் பல்வேறு ஒலிகள் கேட்கின்றன.அவற்றின் ஒலிகள் ‘பாடுவது’ போலவும் பின்னாலுள்ள வண்டுகளின் தொடர்ந்த ரீங்காரம் ‘சுருதி’ போலவும் உள்ளதாம். இதைப் புரிந்துகொள்ள இரண்டு விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
ஒன்று, இந்துக்களின் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் பாடகர் அல்லது வாத்தியம் வாசிப்போருக்கு தம்பூராவில் சுருதி மீட்டும் ஒரு பெண்மணி அமர்ந்து 3, 4 மணி நேரத்துக்கு சுருதி போட்டுக்கொண்டு இருப்பார் .
இரண்டு , காடுகளுக்குச் சென்ற அனுபவம் உடையோருக்கு அங்கு எப்போதும் இதே போல வண்டுகளின் ரீங்காரம் இசைப்பதை கேட்டிருப்பார்கள். கொடைக்கானல் போன்ற மலைகளில் ஏறும்போது காரை நிறுத்திவிட்டு வெளியே வந்தோருக்கு இது தெரிந்திருக்கும். இதே போல காடுகளில் தொடர்ந்து ஒலி . ஆனால் இப்படி ஆர்க்கெஸ்ட்ரா Orchestra வாசித்த பூச்சிகள் , பறவைகள் பற்றி உரைகாரர் இடையே கருத்தொற்றுமை இல்லை. ஏனெனில் வேதம் அவ்வளவு பழமையானது அந்தப் பறவைகளை இன்று அடையாளம் காணமுடியவில்லை. சிச்சிக ,வ்ருஷாவர என்பதை வெட்டுக்கிளி, மீன் கொத்திப் பறவை என்பர் சிலர். எல்லாமே பூச்சி வகை, எல்லாமே பறவை வகை என்றும் உரைகாரர் செப்புவர் .
நமக்குத் புரிவது பறவைகளின் பாடல்; பின்னணியில் சிற்றோடை, நீர்வீழ்ச்சிகள் தாளம், வண்டுகளின் ரீங்காரம் என்னும் சுருதி. இது தமிழ் இலக்கியத்திலும் உளது. ஆனால் அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புலவன் அதை சம்ஸ்கிருதத்தில் பாடியதும் அதை பிராமண சமூகம் வாய் மொழியாகவே பரப்பி வருவதும் உலக அதிசயம்!!!
xxx
10-146-1
முதல் மந்திரத்தைக் காண்போம் . அரண்யானி! அரண்யானி! என்று இரு முறை அழைத்து புலவர் பாட்டைத் துவங்குகிறார் . இது போல பல பாடல்கள் சங்க இலக்கியத்திலும் உண்டு ‘பல் சான்றீரே , பல் சான்றீரே!!’ ‘கலம் செய் கோவே, கலம் செய் கோவே !!’ என்றெல்லாம் இரு முறை அழைக்கும் பாடல்களை புற நானூற்றிலும் காணலாம்.
ரிக் வேதத்தில் உள்ள நிறைய சொற்களை தமிழர்களாகிய நாம் அன்றாடம் பயன்படுத்துகிறோம் ; இந்தக் கவியில் உள்ள ‘அரண்யானி’ என்பது ஆரண்யம், அரண்யம் = காடு என்பதாகும். இன்றும் கூட வேதாரண்யம் = திருமறைக்காடு என்பதெல்லாம் தமிழர் வாயில் சர்வ சாதாரணாமாகப் புழங்கும் சொற்கள் ஆகும் .
இப்படி காட்டு ராணியை அழைக்கும் புலவர் ஒரு வியப்பான கேள்வியைக் கேட்கிறார். “ஒய் அம்மணி! உனக்கு பயமே இல்லையா? மாலை நேரம் வந்துவிட்டால் தோன்றியும் தோன்றாமலும் மறைந்து போகிறாய். நீ ஏன் அருகிலுள்ள கிராமத்துக்கு வரக்கூடாது? உனக்கு பயம் என்பதே இல்லையா என்று வியக்கிறேன்”.
xxx
6000 ஆண்டுகளுக்கு முன்னர், இப்படிப் பாடிய கற்பனை மிகு கவிகள் ரிக் வேதத்தில் நிறைய உள்ளன. BIG BANG ‘பிக் பாங்’ என்று அழைக்கப்படும் மாபெரும் பிரபஞ்சத் தோற்றம் CREATION பற்றிய கவிதையைக் கண்டு உலகமே வியக்கிறது அதர்வண வேதத்தில் உள்ள பூமி சூக்தத்தைக் கண்டு உலகமே ஆச்சர்யப்படுகிறது.
ரிக்வேதத்தின் கடைசி கவிதை வியாசரின் மஹா ஜீனியஸைக் காட்டுகிறது. ‘’உலகம் முழுதும் ஒற்றுமை நிலவ வேண்டும் என்ற உலக மஹா தேசீய கீதத்தை கடைசி பாடலாக வியாசர் வைத்திருப்பது இந்துக்களின் நல்லெண்ணத்துக்கு உதாரணம்ஆகத் திகழ்கிறது. ரிக் வேதத்தை எல்லோரும் படிக்க வேண்டும். அஸ்வினி தேவர்கள், விச்வே தேவர்கள் பற்றிய கவிதைகளை முதலில் படியுங்கள். அற்புதங்களும் வரலாறும் அதில் உள .
இதனால்தான் வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே என்று பாரதியும் பாடிவைத்தான்.
—SUBHAM—
tags- காடுகள் , ரிக் வேத, கவிதை-3