சரஸ்வதி இருக்குமிடத்தில் லக்ஷ்மி ஏன் வருவதில்லை?

14.சம்ஸ்கிருதசெல்வம்

சரஸ்வதி இருக்குமிடத்தில் லக்ஷ்மி ஏன் வருவதில்லை? ரகசியம் இதோ!

 

By ச.நாகராஜன்

 

         பணம் வேண்டும் என்று எண்ணாதவன் உலகில் யாரேனும் உண்டா? நவீன காலத்தில் சந்யாசிகள் கூடத் தங்கள் ஆசிரம வளர்ச்சிக்காகவும் நற்பணிகளுக்காகவும் பணத்தைத் தேடிச் சேர்க்கின்றனர்.ஆகவே பணத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி தேவியை அனைவரும் வணங்குவதில் வியப்பே இல்லை.

 

 

ஒரு கவிஞர் பார்த்தார், அனைவரின் நன்மைக்காகவும் ஸ்ரீதங்காத இடங்களைப் பட்டியலிட்டுத் தந்து விட்டார் தன் கவிதை வாயிலாக. அதைப் பார்ப்போம்:

 

குசைலினம் தந்தமலோப ச்ருஷ்டம்

   ப்ரஹ்மாஷினம் நிஷ்டூரபாஷினம் I

சூர்யோதயே சாஸ்தமிதே ஷயனம்

    விமுச்சதி ஷீரபி சக்ரபாணிம் II

 

(தந்தம்பல்; நிஷ்டூர பாஷினம்கடுஞ்சொற்களைப் பேசுதல்; சூர்யோதயம்சூரிய உதய நேரம்; அஸ்தமிதம்சூரியன் அஸ்தமிக்கும் மாலை வேளை; ஷயனம்உறங்குதல்)

 

அதிர்ஷ்ட தேவதையான லட்சுமி தேவி விஷ்ணுவையும் விட்டு நீங்கி விடுவாளாம்! எப்போது?

 

அவர் அழுக்கான உடைகளை அணிந்தால்

பற்களைத் துலக்காமல் அவை அழுக்குடன் இருந்தால்

அவர் பெருந் தீனிக்காரராக இருந்தால்

அவர் கடுஞ்சொற்களைப் பேசினால்

சூர்யோதய காலத்திலும் சூர்யாஸ்தமன காலத்தில் அவர் தூங்கினால்

அவர் விஷ்ணுவாக இருந்தாலும் க்ஷ்மி தேவி அவரை விட்டு விலகி விடுவாளாம்!

 

 

ஆக நல்ல பழக்கங்களை மேற்கொண்டால்  அது நாம் லக்ஷ்மி தேவியை வரவேற்கிறோம் என்று பொருள்!

 

இது ஒரு புறமிருக்க,  நல்ல வாக்கை உடைய புலவர் ஒருவர் வறுமையில் வாடுகிறார். அதன் காரணத்தை ஆராய்ந்தார். உலகியல் ரீதியான விளக்கம் சட்டென்று அவருக்குப் புரிந்தது. எந்த மாமியாரும் மருமகளும் ஒத்துப் போனதாக உலக சரித்திரம் உண்டா, என்ன! அப்படி இருக்கும் போது சரஸ்வதியும் லட்சுமியும் மட்டும் எப்படி ஒத்துப் போவார்கள். மாமியார் இருக்கும் இடத்தில் மருமகள் இருப்பாளா என்ன! அது தான் தன்னிடம் சரஸ்வதி இருக்கும் போது லட்சுமி வந்து வாசம் செய்ய மாட்டேன் என்கிறாள்! காரணம் புரிந்தவுடன் கவிஞரின் மனம் ஒருவாறு சமாதானம் அடைகிறது.

அதைப் பாடலாக வடித்து விட்டார் இப்படி:

 

 

குடிலா லக்ஷ்மீர் யத்ர

  ப்ரபவதி சரஸ்வதி வஸதி தத்ர I

ப்ராய: ஸ்வஸ்தூஸ்நுஷயோர்

   த்ருஷ்யதே சௌஹத்வம் லோகே II

 

(குடிலாகெட்ட சுபாவமுள்ள)

கெட்ட சுபாவமுள்ள லட்சுமி  எங்கு செழித்து சக்திவாய்ந்தவளாக இருக்கிறாளோ அங்கு சரஸ்வதி வசிக்க மாட்டாள். பொதுவாக உலகத்தில் மாமியாருக்கும் மருமகளுக்கும் நட்பு இருந்து பார்த்ததே இல்லை! – இது தான் ஸ்லோகத்தின் பொருள்!

 

விஷ்ணுவின் பத்தினியான லட்சுமி தேவி விஷ்ணுவின் நாபியில் பிறந்த பிரம்மாவின் பத்தினியான சரஸ்வதிக்கு மாமியார் முறை ஆகிறாள் அல்லவா; அதனால் விளைந்தது இந்த அற்புதக் கற்பனை!

*****