சங்க காலத்தில் வரதட்சணை!

அகம்1

அகநானூறு அதிசயங்கள்– பகுதி 4

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1482; தேதி 13 டிசம்பர், 2014.

முதல் மூன்று பகுதிகளைப் படித்துவிட்டு இதைப் படிப்பது நலம்.

அதிசயம் 16
பாடல் 90 மருதன் இளநாகனார் பாடியது — முன் காலத்தில் திருமணம் பேசச் செல்வோர் பெண்களுக்கு ‘’விலை’’ (ஸ்ரீதனம்) கொடுத்து பெண்ணைத் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இது தலை கீழாக மாறி ஆண்களுக்கு விலை பேசினர். டாக்டர் படிப்பு படித்திருந்தால் இவ்வளவு வரதட்சணை, இஞ்ஜினீயர் என்றால் இவ்வளவு என்று. இப்பொழுது பெண்கள் எண்ணிக்கை குறையவே பழைய கால நிலை திரும்பிவிட்டது. அதாவது பெண்களுக்கு பல விதமான ஊக்குவிப்புகளைக் காட்டி என்னைக் கல்யாணம் செய்துகொள் என்று ஆண்கள் கெஞ்சவேண்டிய நிலை! ஆதிகாலத்தில் பெண்களுக்கு ‘’விலை’’ கொடுத்ததை காளிதாசன் காவியங்களிலும் சங்க இலக்கியத்திலும் காணலாம். இந்தப் பாட்டில் செல்லூர் கோசர்களின் நியமம் என்ற ஊரையே நீ விலையாகக் கொடுத்தாலும் பெண்ணை அடைவது கஷ்டம் என்று தோழி கூறுகிறாள்:–

கருங்கட் கோசர் நியமம் ஆயினும்
உறும் எனக் கொள்ளுநர் அல்லர்
நறு நுதல் அரிவை பாசிழை விலையே!
வரதட்சணை காலம் தோறும் மாறுவது வியப்பிலும் வியப்பே!!

அதிசயம் 17

பாடல் 342 மதுரை கணக்காயனார் பாடியது. இதில் குகைகளில் உறையும் தேவதைகள் பற்றிப் பாடுகிறார். ஏரி, குளம், காடு, மலை, தோட்டம், துறவு, குகை, அருவி, கடல் முதலிய பல இடங்களில் வசிக்கும் அணங்குகள் பற்றி சங்க இலக்கியத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் காணக்கிடக்கிறது. இது ஒரு நல்ல பி.எச்டி. ஆய்வுக்குரிய விஷயம்.

நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ்
வரையர மகளிரின் அரியள்
அவ் வரி அல்குல் அணையக் காலே
பொருள்: அருவி வீழும் பொய்கை உடைய மலைக் குகையில் மறைந்த வரையர மகளிர் போல காண்பதற்கு அரியவள் நம் தலைவி.

பழந்தமிழர்களும் ஏனைய மக்கள் குழாம் போல பல (மூட?) நம்பிக்கை உடையோரே!
(வரையரை மகளிர்= மலையில் வாழும் பெண் தெய்வம்; கல் அளை=குகை).

அகம்2

அதிசயம் 18

பாடல் 369 நக்கீரர் பாடியது. இதில் காளிதாசன் எழுதிய சாகுந்தலத்தின் தாக்கத்தைக் காணலாம். சகுந்தலை என்னும் கானகப் பேரழகி, கண்வ மகரிஷியின் ஆஸ்ரமத்தை விட்டுச் செல்லும்போது அவளால் வளர்க்கப்பட்ட தாவரங்களும் பிராணிகளும் இருந்த நிலையை காளிதாசன் அழகாக வருணிக்கிறான். இதோ நக்கீரர் சொல்வது:

அவள் வளர்த்த கிளிகள் பால் உண்ணவில்லை; தோழியர் கூட்டம் விளையாடவில்லை; பூஞ்செடிகள் மலரவில்லை; சுவரில் உள்ள பாவைகளும் பலி எதையும் கொள்ளவில்லை.

நக்கீரர் கூற்றில் மெலும் ஒரு விஷயமும் தெரிகிறது. வீடுகளில் சுவரில் தெய்வப் படங்களை வரைந்து அதற்கு தினமும் நைவேத்யம் செய்வது தமிழர் வழக்கம் என்பது உறுஹியாகிறது. இதே விஷயம் வேறு சில பாடல்களிலும் வருகிறது.

அதிசயம் 19

பாடல் 344 மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடியது. இதில் தொளி என்னும் மகளிர் விளையாட்டு பற்றிக் குறிப்பிடுகிறார். இப்போது இந்தச் சொல்லும் விளையாட்டும் வழக்கில் இல்லை என்றே தோன்றுகிறது. மகளிரின் தொளி என்னும் விளையாட்டைப் போல மயில் கூட்டம் திரிகிறது என்று அவர் பாடுகிறார். பதவுரை விளக்கத்தில் மகளிர் பலர் கூடி ஆடும் வரிக் கூத்து தொளி என்று விளக்கப்படுகிறது. கோலாட்டம், கும்மி போல ஒரு கோஷ்டி ஆட்டமாக இருக்கலாம்.

அகம்3

அதிசயம் 20
பாடல் 398 இம்மென்கீரனார் பாடியது. இதில் பொற்கோட்டு இமயத்தைப் பாடுகிறார். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களுக்கு இந்தியாவின் முழு சித்திரமும் தெரிந்திருந்தது. இமயம் வரை அவர்களுக்குத் தெரிந்ததிருந்தது. வெள்ளைக்காரன் நாடு முழுதும் சாலையும் ரயில் பாதையும் போட்டதால்தான் நாடு ஒற்றுமை ஆனது என்பது எல்லாம் எவ்வளவு அபத்தம் என்பது தமிழ் இலக்கியத்தைப் படிப்போருக்கு விளங்கும். ஆதி சங்கரர் பல முறை வலம் வந்து நாற்புறங்களிலும் மடங்களை நிறுவியதை அறிந்தும் வெள்ளைக்காரன் அவனையே புகழ்ந்து எழுதிய வரலாற்றை இன்று வரை நாம் படித்துக் கொண்டு இருக்கிறோம்.

அதிசயம் 21
காட்டில் வாழும் மறவர்கள் செய்த கொடிய செயலையும் பின்னர் அவர்களே அதற்கு வருந்தியதும் பாடல் 337ல் உள்ளது. இதைப் பாடியவர் பாலை பாடிய பெருங் கடுங்கோ. எலும்பும் தோலுமாக ஒரு பிராமணன் காட்டு வழியாக ஓலைச் சுவடியுடன் தூது போகிறான். அதை மழவர்கள் (மறவர்கள்) பார்த்தவுடன் இவன் தங்கத்தை வைத்திருந்தாலும் வைத்திருப்பான் என்று எண்ணி அவனைக் கொன்றுவிடுகின்றனர். அவனிடம் வெறும் ஓலைச் சுவடி மட்டுமே இருந்ததைக் கண்டு அடடா! தவறு செய்துவிட்டோமே ! என்று கையை நொடித்து அப்பாற் சென்றனர். அந்தப் பார்ப்பனனின் உடலை நரி தின்றது.

சம்ஸ்கிருத காவியங்களிலும், சிலப்பதிகாரம் முதலிய தமிழ் காவியங்களிலும் தூது செல்லும் பணி பார்ப்பனர்களுக்கே ஒதுக்கப்படதைக் காட்டும். இது 15 ஆம் நூற்றாண்டிலும் நீடித்தது. கேரள மன்னன் அனுப்பிய பார்ப்பன தூதுவனை கொடியவனான வாஸ்கோடகாமா தன் கப்பலிலேயே கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டான். அதை எல்லாம் சரித்திரப் புத்தகத்தில் எழுதாமல் – இந்தியாவுக்கு கடல் வழி கண்டுபிடித்த வாஸ்கோட காமா — என்று நம் குழந்தைகள் இன்னும் வரலாறு படிப்பது வெட்கக்கேடு.

வாஸ்கோட காமா கடற்வழியைக் கண்டுபிடித்த செய்தியும் தவறு. நாடு பிடிக்க வந்த வெள்ளைக்காரன், போர்ச்சுகீசியரும் தம் வகையறா என்று எழுதிய பொய்யுரை அவை.— வரலாற்றை உடனே திருத்தி எழுதுதல் அவசரப்பணியாகும்.

vaidehi herbert

அதிசயம் 22
மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் பாடிய பாடல் 320 ஓங்குதிரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇ – என்று துவங்குவது மதுரைக் காஞ்சியின் முதல் வரியை நினைவுபடுத்தும். இதே சொற்றொடரைக் கல்வெட்டுகளும் பயன்படுத்தின.

அதிசயம் 23
வேறு பல அதிசயச் செய்திகளைத் தனித் தனி கட்டுரைகளில் கொடுத்துவிட்டதால் பாடல் குறிப்புகளை மட்டும் தருகிறேன்:

பாடல் 265—மாமூலனார்— கங்கை நதிக்கு அடியில் தங்கம்
பாடல்கள் 69, 251, 281 – மௌரியர் படை எடுப்பு— மௌரிய மன்னன் பிந்துசாரன் தென் இந்தியாவை வென்றதை திபெத்திய வரலாற்று ஆசிரியர் தாராநாத் குறிப்பிடுவதை ஒப்பிடுதல் பொருத்தம்.
அகம் 107, 381 வங்கர் பற்றிக் கூறும்.

பாடல் 296— மதுரைப் பேராலவாயார் பாடல் – பண்டம் மாற்று வணிகம் பற்றிய குறிப்பு— கடலில் எடுத்த சிப்பிகளைக் கொடுத்து அதற்கு விலையாக ‘’கள்’’ வாங்குகின்றனர்.
பல கலாசாரங்களில் சிப்பி, கிழிஞல், சங்கு, சோழி ஆகியன கரன்ஸியாக/ பணமாகவும் பயன்படுத்தப்பட்டன.

260- மோசிக் கரையனார் பாடல் – நள்ளிரவில் வரும் பேய்கள் பற்றிய குறிப்பு.
211- மாமுலனார் பாடல் – கதவில் பல் பதித்தல்
269- மதுரை மருதன் இளநாகனார்— பாவை நோன்பு
பாடல் 151, 155, 173 – நல்ல மேற்கோள்கள்/ தமிழர்களின் கொள்கைகள்.

பாடல் 220 — மதுரை மருதன் இளநாகனார் – பரசுராமன் பற்றிய குறிப்பு – மழுவாள் நெடியோன்
பாடல் 148 – ஆந்தைகள் ஏன் பகலில் வருவதில்லை – பரணரின் புதிய விளக்கம்

அகநானூறு அதிசயங்கள் நிறைவு. —-சுபம்—
contact swami_48@yahoo.com
Pictures are used from various websites;thanks.