அதிசய ஜோதிட மேதை வராஹமிஹிரர்-(2)

 

By ச.நாகராஜன்

 

நவரத்தினங்களில் ஒருவர்

வராஹமிஹிரர் விக்கிரமாதித்தனின் அரசவையில் முக்கிய இடம் பெற்றிருந்ததை வரலாறு உறுதிப்படுத்துகிறது. விக்கிரமாதித்தனின் காலம் பொற்காலம் எனக் கூறப்படுவதற்கான முக்கியமான காரணம் அவன் அரசவையை அனைத்துக் கலைகளிலும் வல்லவர்களான மகாகவி காளிதாஸர்,தன்வந்தரி,க்ஷபனாக்,அமரசிம்மர்,சங்கு,வேதாளபட்டர்,

கட் கர்பர்,வராஹமிஹிரர்,வரருசி ஆகிய நவரத்தினங்கள் அலங்கரித்தது தான்!

 

வராஹமிஹிரர் நூல்கள்

வராஹமிஹிரர் எழுதியுள்ள பல நூல்களில் ப்ருஹத் ஜாதகம், ப்ருஹத் சம்ஹிதா, யோக யாத்ரா, பஞ்ச சித்தாந்திகா, ப்ரஸ்ன வல்லபா, லகு ஜாதகா ஆகியவை மிக முக்கியமானவை. இவரது நூல்கள் இவர் ஒரு ரிஷி மட்டுமல்ல. ஒரு சிறந்த விஞ்ஞானியும் கூட என்பதை நிரூபிக்கின்றன. ப்ருஹத் ஜாதகம் மற்றும் ப்ருஹத் சம்ஹிதாவில் பூகோளம், நட்சத்திரத் தொகுதிகள், தாவரவியல், மிருகவியல், வானவியல் உள்ளிட்ட பல்துறை விஞ்ஞானம் பற்றிய வியக்கத்தகும் உண்மைகளை விளக்குகிறார். வ்ருக்ஷ ஆயுர்வேதா என்ற சிகிச்சை முறை மூலம் தாவரங்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களையும் அதைத் தீர்க்கும் விதம் பற்றியும் கூட அவர் விரிவாக விளக்குகிறார்.

 

.தனது தீவிர ஆராய்ச்சி மற்றும் தீர்க்கதிருஷ்டியின் மூலம் இவர் கண்டுபிடித்த உண்மைகள் பல! பஞ்ச சித்தாந்திகா என்ற அபூர்வமான நூல் சூர்ய,ரோமக,பௌலீஸ, வசிஷ்ட. பைதாமஹ சித்தாந்தங்களை எடுத்துரைக்கிறது. ஐந்து சித்தாந்தங்களின் சுருக்கத் தொகுப்பாக இருப்பதால் பஞ்ச சித்தாந்திகா என்ற பெயரை இந்த நூல் பெற்றது.ஹிந்துக்களின் வானவியல் அறிவை விளக்கும் இது பிரமிக்க வைக்கும் ஒன்று என்று அறிஞர்கள் புகழாரம் சூட்டுகின்றனர்!சந்திரனும் இதர கிரகங்களும் சுய ஒளியால் பிரகாசிக்கவில்லை; சூரியனின் ஒளியாலேயே பிரகாசிக்கின்றன என்ற உண்மையை முதன்முதலில் உலகுக்கு அறிவித்தவர் இவரே!

 

சில கணித சூத்திரங்களையும் இவரே உலகுக்கு முதலில் அறிவித்துள்ளார்.திரிகோணமிதியின் இன்றைய கண்டுபிடிப்புகளை (sin2 x + cos2 x = 1 உள்ளிட்ட ஏராளமான கண்டுபிடிப்புகள்) அன்றே இவர் ரத்தினச்சுருக்கமாக சூத்திர வடிவில் கூறி விட்டார்..மாஜிக் ஸ்குயர் எனப்படும் மந்திர சதுரங்களை (pandiagonal magic square of order four -டு தி ஆர்டர் ஆ•ப் •போர் – அதாவது வர்க்கத்தின் நான்கு மடங்கு என்ற அளவில்) இவர் விரிவாக விளக்கி இருப்பது நவீன கணித மேதைகளை வியப்புற வைக்கிறது.

 

நியூட்டன் பின்னால் கண்டுபிடித்த புவி ஈர்ப்பு விசை பற்றிக் கூட வராஹமிஹிரர் நன்கு விளக்கி இருப்பது பிரமிக்க வைக்கும் விஷயமாகும். புவி ஈர்ப்பு விசையை அவர் குரு த்வ ஆகர்ஷண் என்று குறிப்பிடுகிறார்.  அதாவது குருவினால் ஈர்க்கப்படுதல் என்பது இதன் பொருள். சூரியனை நடு நாயகமாகக் கொண்டு  சூரியனின் ஆகர்ஷணத்தால் இதர கிரகங்கள் பரஸ்பரம் ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு இருப்பதை அவர் கண்டறிந்து அதை குருத்வாகர்ஷன் என்று பெயரிட்டார்!

ஆர்யபட்டரின் சீடர்

இவருக்கு முன்னால் தோன்றிய ஆர்யபட்டர் வானவியலிலும் கணிதத்திலும் தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மேதையாகத் திகழ்ந்தார்.கி.பி,476ல் பிறந்த இவர் 550 முடிய  வாழ்ந்ததாகவும் இவரின் சீடரே வராஹமிஹிரர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.ஆர்யபட்டரிடம் வானவியல்,கணிதம் ஆகியவற்றை நன்கு பயின்ற வராஹமிஹிரர், அவரது புலமையை வெகுவாக வியந்து பாராட்டியதோடு அவரது சூத்திரங்களை தனது கணிதத் திறமையால் இன்னும் துல்லியமாக ஆக்கினார்!

வானவியலை ககோள சாஸ்திரம் என நமது பழைய நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த ககோள சாஸ்திரம் நாலந்தா பல்கலைக் கழகத்தில் கற்பிக்கப்பட்டு வந்தது. ககோள சாஸ்திரத்தில் நிபுணராகத் திகழ்ந்த ஆர்யபட்டர் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்து அனைவரையும் வியக்க வைத்தார்.ஆர்யபட்டர் எழுதிய அற்புதமான நூல் ஆர்யபட்டீயம்! இந்த நூலுக்குப் பல மேதைகள் விரிவாக விளக்கவுரைகள் எழுதி உள்ளனர்.

 

ஆர்யபட்டரின் கண்டுபிடிப்புகள்

பூமியின் சுற்றளவை 39968.0582 கிலோமீட்டர் என்ற அளவுக்கு இவர் துல்லியமாகக் கணித்துள்ளார். நவீன சாதனங்களுடன் விஞ்ஞானிகள் பூமியின் சுற்றளவை 40075.0167 கிலோமீட்டர்கள் என இப்போது கணித்துள்ளனர்! ’பை’ எனப்படும் கணிதக் குறியீட்டின் அளவையும் .கிரஹணங்களைப் பற்றியும் வியக்கத்தக்க விதத்தில் துல்லியமாக அவர் குறிப்பிடுகிறார். ‘காலக்ரியா’ என்ற அவரது அற்புதமான நூல் அனைத்து விவரங்களையும் விளக்குகிறது. இந்த நூலை அவர் தனது 23ம் வயதிலேயே எழுதி உலகத்தையே பிரமிக்க வைத்தார்!

 

மேலை நாடுகளுக்கு ஆர்யபட்டரே வழிகாட்டி

ஆர்யபட்டரின் அனைத்து நூல்களும் 13ம் நூற்றாண்டில் லத்தீன் மொழியில் மொழி பெயர்க்கப்படவே மேலை நாடுகளில் ஹிந்து முறையிலான வேத ஜோதிடமும் அதன் அடிப்படையான வானவியல் கணிதமும் பரவலாயிற்று, அதுவரை முக்கோணங்களின் பரப்பளவை எப்படிக் கண்டுபிடிப்பது என்று தெரியாமல் திகைத்திருந்த அவர்கள் ஆர்யபட்டரின் சூத்திரங்களால் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு பிரமித்தனர்!

 

வராஹமிஹிரரின் புதல்வர்

ஆர்யபட்டரும் வராஹமிஹிரரும் வானவியலையும் ஜோதிடத்தையும் ஒரு புதிய பரிமாணத்திற்கு ஏற்றி வைத்த போது வராஹமிஹிரரின் புதல்வரும் தன் பங்கிற்கு ஜோதிடக் கலை வித்தகராக ஆனார்.

வராஹமிஹிரரின் புதல்வரான ஹோராசரர் ப்ரஸ்ன சாஸ்திரம் பற்றி ஷட்பஞ்சசிகா என்ற நூல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். வராஹமிஹிரரின் நூல்களுக்கு விளக்கவுரையாக அவரது நூல்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

இப்படி உஜ்ஜயினி வாழ் ஜோதிடமேதைகள் வேத ஜோதிடத்திற்கு விஞ்ஞான முறையில் ஒரு வலுவான அஸ்திவாரத்தை அமைத்ததோடு அதை உலகெங்கும் பரப்பினர்!

-வராஹமிஹிரர் வரலாறு முற்றும்