நாகரத்தினம் பற்றி வராகமிகிரர் கூற்று!!

ruby

மாணிக்கம்/ கெம்பு

Research Paper written by London swaminathan

Research Article No.1647; Dated 13th February 2015.

 

கடந்த சில நாட்களில் முத்து, வைரம், ரத்தினக் கற்களின் எடை, விலை ஆகிய தலைப்புகளில் வராஹமிகிரர் கருத்து என்ன என்பதை அவரது சம்ஸ்கிருதக் கலைக் களஞ்சிய நூலான பிருஹத் சம்ஹிதையில் இருந்து கண்டோம். இன்று மரகதம், மாணிக்கம், நாகரத்தினம் பற்றி அவர் செப்புவதைக் காண்போம்.

வராகமிகிரர் 66 ஸ்லோகங்களில் ரத்தினக் கற்கள் பற்றிப் பாடினார். அவற்றில் முத்து பற்றி மட்டும் 36 பாடல்கள் பாடிவிட்டு, மரகதம் பற்றி ”ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு” — என்று ஒரே ஒரு பாடலோடு முடித்துவிட்டார்! இதோ அது:–

Group-emerald

மரகத மகிமை

சுக வம்சபத்ர கதலி சீரிஷ குசுமப்ரபம் குணோபேதம்

சுர பித்ரு கார்ய மரகதம் அதீத சுபதாம் ம்ருனாம் விஹிதம்

 

இதன் பொருள்:– கிளியின் சிறகு, மூங்கில் இலை வாழைத் தண்டு (சாம்பல்/மஞ்சள்), சீரிச மலரின் நிறம் (வெள்ளை/மஞ்சள்) ஆகிய வர்ணங்களில் உள்ள மரகதக் கற்கள் நல்ல ஜாதிக் கற்கள். இதை தெய்வங்களைக் கும்பிடும்போதும், முன்னோருக்கான கிரியைகளைச் செய்யும் போதும் அணிந்தால் மிகவும் நன்மை பயக்கும்.

தெய்வ வழிபாடு, இறந்தோர் வழிபாடு ஆகிய காலங்களில் ரத்தினம் அணிவது அற்றி இந்த ஒரு ஸ்லோகம் மட்டுமே உள்ளது.

நாகரத்தினக் கல் உண்மையா?

மாணிக்கக் கல் (சிவப்புக் கல்), முத்து பற்றிய பாடல்களில் நாகரத்தினம் பற்றிய விவரங்களைத் தருகிறார்:

நாகரத்தினக் கல் உண்மை என்றே வராஹமிகிரர் நம்புகிறார். ஆனால் விஞ்ஞான முறைப்படி இது வரை யாரும் கண்டதில்லை. நாகரத்தினக் கல் தருவதாகச் சொல்லி பலர் மோசடி செய்து வருவதால் இதைப் படிக்கும் எமது வாசகர்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும்.

இதோ வராகமிகிரரின் கூற்று:

ப்ரமர சிகி கண்ட வர்ண: தீபசிகாசப்ரப: புஜங்கானாம்

பவதிமணி கில மூர்த்தனியோஅனர்கய சஹ விக்னபா:

——-பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 82

இதன் பொருள் என்ன?

பாம்புகளின் தலையில் ஒரு ரத்தினம் இருப்பதாச் சொல்லுவர். அது வண்டு, மயிலின் கழுத்து நிறம் போல பளபளக்கும்;  ஒரு விளக்கின் தீ ஜ்வாலை போல ஒளியை உமிழும்; அது விலை மதிக்க ஒண்ணாதது.

snake worship

இதற்கு அடுத்த ஸ்லோகத்தில் சொல்கிறார்:

நாகரத்தினத்தை அணியும் மன்னனுக்கு விஷத்தினாலோ நோய்களினாலோ ஆபத்து வராது. அவனது நாட்டில் இந்திரன் மழை பொழிந்து வளம் குவிப்பான். இந்த நாகரத்தினத்தின் மகத்தான சக்தியால் எதிரிகளை நிர்மூலம் (வேர் அறுப்பான்) செய்வான்.

நாகரத்தினக் கல்லை ஷேக்ஸ்பியர் கூட ‘’ஆஸ் யூ லைக் இட்’’ — நாடகத்தில் குறிப்பிடுகிறார். நாகரத்தினம் உண்மையா என்று நான் எழுதிய பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் விவரம் காண்க:

Please read my research paper, “How did Shakespeare know about the Indian Cobra Jewel-Nagaratna?”– Posted on 1 October 2011.

http://swamiindology.blogspot.co.uk/2011/10/how-did-shakespeare-know-about-indian.html

வராகமிகிரர் மேலும் கூறுவதாவது: தக்ஷக, வாசுகி வம்சத்தில் வந்த பாம்புகளின் தலையில் ஒளிவீசும் நீல நிற முத்துக்கள் இருக்கும். இந்திரன் பெய்யும் மழை, இந்த பூமியில் அதிர்ஷ்டம் மிக்க இடத்தில் வெள்ளிப் பாத்திரத்தில் முத்தாகப் பொழிவதுண்டு. அவைகளும் பாம்பிடம் இருந்து வந்த முத்துகளே என்று அறிக!

இத்தகைய பாம்பு முத்துக்களை மன்னர்கள் அணிந்தால் எதிரிகள் அழிவர். மன்னரின் புகழும் வெற்றியும் ஓங்கும்.வெற்றி கிட்டும்.

ஆக, முத்து என்ற அத்தியாயத்தில் பாடுகையில் பாம்பின் தலை முத்து பற்றியும், மாணிக்கம் என்னும் அதிகாரத்தின் கீழ் பாடுகையில் நாகரத்தினம் என்றும் இரண்டு வகைக் கற்கள் பற்றிப் பகரும் பிருஹத் சம்ஹிதை!

நாகப்பாம்பு

எனது விளக்கம்:

நாகரத்தினம் என்பது பாம்புகளின் அகச்சிவப்பு உணரும் உறுப்பைக் குறித்துச் சொல்லி  இருக்கலாம்; பிற்காலத்தில் அதைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு நாகரத்தினக் கல் என்று சொல்லிவிட்டனர். பாம்புகளுக்கு காதுகள் கிடையாது; கண்களே காதுகள் என்பதால் தமிழில் கட்செவி (கண்+செவி) என்றும் சம்ஸ்கிருதத்தில் சூன்ய கர்ண என்றும் சொல்லுவர். இருட்டில் இரை தேட அகச்சிவப்பு கதிர்கள் உதவும் .இப்பொழுது இரவு நேரத்தில் எதிரிகள் நடமாட்டத்தைக் காண அகச் சிவப்பு (இன்ப்ரா ரெட் பைனாகுலர்ஸ்) பைனாகுலர்களை ராணுவத்தினர் பயன்படுத்துகின்றனர். இது பற்றிய எனது ஆராய்ச்சிக் கட்டுரையை “தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்”– (நாகப்பா பப்ளிகேஷன்ஸ், சென்னை, ஆண்டு 2009) புத்தகத்தில் காணுங்கள். இந்தப் புத்தகம் 1990-ம் ஆண்டுகளில் நான் லண்டனில் இருந்து வெளியான மேகம் பத்திரிக்கையில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு.

மாணிக்கக் கல்=குருந்தம்=குருவிந்தம்=கெம்பு

மாணிக்கம் என்னும் சிவப்புக் கல் — குருவிந்தம், ஸ்படிகம், சௌகந்திகம் ஆகியவற்றில் இருந்து கிடைக்கிறது (சௌகந்திகம் என்பது கந்தகக் கல்)

மாணிக்கக் கற்களின் விலை (1500 ஆண்டுகளுக்கு முன்)

ஒரு பலம் ( 4 கார்ஷா) எடையுள்ள கல்= 26,000 கார்ஷாபணம்

அரைப் பல கல்= 20,000 கார்ஷாபணம்

ஒரு கார்ஷா எடை= 6000 கார்ஷாபணம்

எட்டில் ஒரு குந்துமணி எடை= 3000 கார்ஷாபணம்

நாலில் ஒரு மாசா எடை கல் = 1000 கார்ஷாபணம்

(இதைப் புரிந்து கொள்ள நேற்று கொடுத்த எடைக் கல் வாய்ப்பாட்டைப் பார்க்கவும்)

குறைகள் உள்ள, ஒளி குன்றிய, மட்டான பிரகாசம் உடைய கற்களுக்கு விலை என்ன விகிதாசாரத்தில் குறையும் என்றும் வராகமிகிரர் விளக்கி இருக்கிறார்.

ஆர்வம் உடையோர் 66 பாடல்களையும் அதற்கு உரைகாரர்கள் எழுதிய வியாக்கியானங்களையும் படித்துப் பயன் அடைக!

முடிவுரை:

யாரேனும் எங்கேனும் நாகரத்தினக் கல் இருக்கிறது என்று சொன்னால் அவர்களிடம் ஏமாந்து போய்விடாதீர்கள். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் ஏதோ ஒரு உவமையாகத் தான் இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நாக ரத்தினம் என்பது உவமையே அன்றி உண்மை அல்ல!! அல்ல!!

எனது பழைய கட்டுரை நிலாசாரல்.காம்  – இல் வெளியானது:–

Ruby_Jewel

தமிழ் இலக்கியம் கூறுவது என்ன?

பாம்புகளிடத்தில் நாகரத்தினம் என்னும் சிவப்புக் கல் இருக்கும் என்றும் இரவுநேரத்தில் இரை தேடுவதற்கு பாம்பு இதைப் பயன்படுத்தும் என்றும் கூறுவர். சங்கத் தமிழ் நூல்களிலும், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி, பதினென்கீழ்கணக்கு நூல்களிலும் நாகரத்தினம் பற்றிய குறிப்புகள் உண்டு. வடமொழி நூல்களிலும் ஏராளமான குறிப்புகள் உண்டு. இது இங்கிலாந்து வரை பரவி சேக்ஷ்பியர்(Shakespeare) கூட ஒரு நாடகத்தில் குறிப்பிட்டுள்ளார். அகநானூறு 72,92,138,192, புறநானூறு 172, 294 மற்றும் பல நூல்களில் பல இடங்களில் இதைக் காணலாம். காளிதாசர் முதல் சேக்ஷ்பியர் வரை நாகரத்தினத்தின் புகழைப் பாடினர். இதுவரை நாகரத்தினம் கிடைக்கவில்லை. நாகரத்தினம் என்பது என்ன என்பதை ஊகித்தறியலாம்.

நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்”

அகம் 72

உருமுச் சிவந்து எறிந்த உரன் அழிபாம்பின்
திருமணி விளக்கிண் பெறுகுவை”

அகம் 92

பாம்புகள் தனது இரையைப் பார்க்கும் போது அவைகளின் கண்ணுக்கு அவை சிவப்பாகவே தெரியும்! அதுதான் நாகரத்தினம்! இது எப்படி என்பதைக் கீழே காணலாம் :-

பாம்புகளுக்கு தமிழில் நிறைய பெயர்கள் உண்டு. இவை ஒவ்வொன்றிலும் ஒரு ஆழமான பொருளும் உண்மையும் அடங்கியுள்ளது. இன்று அதிநவீன கருவிகளைக் கொண்டு உயிரியல் அறிஞர்கள் கண்டுபிடித்ததை தமிழர்கள் நுட்பமான பார்வையால் கண்டுபிடித்துள்ளனர்.

பாம்புக்கு ‘கட்செவி’ என்று தமிழில் ஒரு பெயர் உண்டு. கட்செவி என்றால் கண்ட செவி என்று பொருள். பாம்புக்கு கண்கள்தான் செவி (காது) என்றும் காதுகள்தான் கண் என்றும் இரண்டுவிதமாக இதற்குப் பொருள் கூறலாம் .நவீன அறிவியல் இதை உண்மை என்றே கூறுகிறது.

corundumpink

குருவிந்தம் (குருந்தம்)

இரவில் இரைதேடுவதற்கு பாம்புகள் அகச் சிவப்பு கதிர்களை (Infra red rays) பயன்படுத்துகின்றன. இருட்டு நேரத்தில் எலி, தவளை போன்ற பிராணிகளை நாம் பார்க்கமுடியாது. ஆனால் பாம்புகள் அவைகளை நாகரத்தினம் போல சிவப்பாக காணும். இது எப்படி என்றால் எலி,தவளை ஆகியவற்றின் உடல்வெப்பத்தைக் கொண்டு அவை இருக்குமிடத்தை பாம்புகள் அறிந்துகொள்ளும். இந்த அகச்சிவப்பு கதிர்களை பகுத்தறியும் உறுப்பு பாம்பின் கண்களுக்கு அருகில் உள்ளது. இது கண்ணுக்குப் பக்கத்தில் ஒரு குழி போன்ற உறுப்பில் உள்ளது. இதைக் கண்டுபிடித்த தமிழன் அதற்கு ‘கட்செவி’ எண்று பெயரிட்டான்!

நாகரத்தினம் பற்றிய செய்திக்கு இந்தக் கட்செவிதான் காரணம். ஏனெனில் இரவு நேரத்தில் பாம்புக்கு இரைகள் பெரிய சிவப்புக் கல் போலவே தோன்றும். பாம்புகள் தன்னைச் சுற்றியுள்ள வெப்பநிலை சிறிது மாறினாலும் கண்டுபிடித்துவிடும். மேலும் நாக்கை வெளியே நீட்டி நீட்டி உள்ளே இழுப்பதால் காற்றிலுள்ள வாசனையைப் பிடித்து வாய்க்குள் உள்ள நரம்பு மூலம் பிராணிகள் இருப்பதை அறியும். இதை அறியும் உறுப்புக்கு ஜாகப்சன் உறுப்பு (JACOBSONS ORGAN) என்று பெயர்.

opal
ஒபல் — ஓரளவு மதிப்புடைய ரத்தினக் கற்கள்

பாம்புகளுக்கு கண் பார்வையும் குறைவு! காது கேட்பதும் குறைவு. ஆனால் அகச்சிவப்பு கதிர்களைக் கொண்டு வெப்ப நிலை மாற்றத்தை அறியும் உறுப்புகள் (HEAT PITS) உண்டு. கண்ணுக்கு அருகிலுள்ள இந்தக்குழிகள் காதுகளின் பணியைச் செய்வதால் இதற்கு கட்செவி (கண் காது) என்ற பெயர் ஏற்பட்டது.

ஆக, ஜாகப்சன் உறுப்பு,ஹீட் பிட்ஸ் (வெப்பக் குழிகள்), அகச் சிவப்புகதிர்கள் (Infra Red Rays) மூலம் பார்ப்பது இவைகளை வைத்துத்தான் நாகரத்தினம் பற்றிய கதைகள் எழுந்துள்ளன! இரவில் இரை தேட இந்த விசேஷ உறுப்புகளே பயன்படுகின்றன. நாகரத்தினம் என்று தனியாக ரத்தினக்கல் எதுவும் இல்லை!

-ச.சுவாமிநாதன் M.A (LIT), M.A (HIST)
நிலாச்சாரல்

amethist4

அமெதிஸ்ட்

agate

அகேட்

இந்து கலைக்களஞ்சியம்: பிருஹத் சம்ஹிதா!

Brhat1

ஆய்வுக் கட்டுரை எண்: 1637; தேதி : 9 பிப்ரவரி 2015

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்

இந்துக்களின் விஞ்ஞான நம்பிக்கைகள், ஜோதிட நம்பிக்கைகள் அடங்கிய நூலின் பெயர் பிருஹத் சம்ஹிதை. சம்ஹிதை என்றால் தொகுப்பு என்று அர்த்தம். வராஹமிகிரர் என்ற பேரறிஞர், அவருக்கு முன் இருந்த காலத்திய செய்திகளை எல்லாம் தொகுத்தார். அதை பெரிய தொகுப்பு (பிருஹத் சம்ஹிதை) என்ற பெயரில் சம்ஸ்கிருதத்தில் எழுதினார். இதில் 106 தலைப்புகளில் அவர் தொகுத்துள்ள விஷயங்களைப் பார்த்தலேயே அவர் எவ்வளவு பெரிய அறிஞர் என்பது விளங்கும்.

வராகமிகிரர் ஜோதிடம் பற்றி பிருஹத் ஜாதகம் என்ற வேறு ஒரு நூலையும் எழுதியுள்ளார்.

இதைப் பார்த்தவுடன் சம்ஸ்கிருதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்துவிடும். ராமகிருஷ்ண பட் என்பவரும் வேறு பலரும் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளபோதிலும், பல இடங்களில் சொற்களின், ஸ்லோகங்களின் வியாக்கியானத்தில் மாறுபட்ட கருத்துக்களைக் காணலாம். உண்மையில் சம்ஸ்கிருதம் படித்தால் இதை ஒப்பிட்டு புதிய பொருளையும் காணலாம்.

domestic

தமிழ் படித்தவர்கள் சம்ஸ்கிருதமும் கற்றால் வேறு எவரும் செய்ய முடியாத செயற்கரிய செயல்களைச் செய்யலாம். எடுத்துக் காட்டாக வெள்ளி (வீனஸ்) கிரகத்துக்கும் மழைக்கும் உள்ள தொடர்பு பற்றிப் புறநானூற்றில் பல பாடல்கள் உள்ளது பற்றி நான் ஏற்கனவே ஆய்வுக் கட்டுரை எழுதினேன். இது மேல் நாட்டினரும் அறியாத விஷயம். வராகமிகிரருக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே – சங்க இலக்கியத்தில் – இக்கருத்து உள்ளது. இவற்றை எல்லாம் ஒப்பிட்டு ஆராயலாம். ஏனெனில் தமிழில் உரை எழுதியவர்களும் பல செய்திகளைக் கூறுகின்றனர்.

வராகமிகிரர் தனக்கு முன் இருந்த பல அறிஞர்கள் பெயர்களை ஆங்காங்கே எடுத்துரைத்து அவர்களது கருத்தை ஒட்டியும் வெட்டியும் வாதாடுகிறார். எடுத்துக் காட்டாக பெண்கள் வைரங்களை அணியலாமா, கூடாதா? என்பது பற்றி அவர்  கூறுவதை அடுத்த கட்டுரையில் தருகிறேன். 22 ரத்தினக் கற்களின் பெயர்களைப் பட்டியலிட்டுவிட்டு, வைரம்- முத்து – மரகதம் – மாணிக்கம் ஆகிய நாலு கற்களுக்கு ஒவ்வொரு அத்தியாயம் ஒதுக்கி அற்புதமான விஷயங்களைச் சொல்லுகிறார். 1500 ஆண்டுகளுக்கு முன் அவற்றின் விலை என்ன என்ற பட்டியலையும் சொல்லுகிறார். அவர் சொல்லும் கார்சா பணத்தின் இன்றைய மதிப்பு நமக்குத் தெரியாவிடினும், பல ரத்தினக் கற்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது பயன் தரும்- இன்பம் பயக்கும்!!

விவசாயம், மற்றும் மரங்களுக்கு வரும் வியாதிகள், நிலத்தடி நீர் கண்டுபிடிப்பது, கோவில் கட்டுவது, விக்ரகம் வைப்பது, சகுன சாஸ்திரம், கட்டிடம் கட்டுவது, வீடுகளின் வகைகள், மலர்கள், யானை, குதிரை, பசுமாடுகள் தொடர்பான சாஸ்திரங்கள், மழை –வானிலை- மேகம் தொடர்பான சாத்திரங்கள், மன்னர்களின் சின்னங்கள் இப்படி அவர் தொட்டுக் காட்டாத விஷயமே இல்லை. இவர் சொல்லக் கூடிய அத்தனை நூல்களும் நமக்குக் கிடைத்தால் அது புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்கலாம். அழிந்து போன நூல்களை எண்ணி வருந்துவதை விட, இருக்கும் நூல்களை, இன்றைய விஞ்ஞான பிண்ணனியில் ஆராய்வது பலன் தரும்.

gems

இவர் சொன்ன 106 விஷயங்களையும், அவர் மேற்கோள் காட்டும் அறிஞர் பெருமக்களின் பட்டியலையும் இக்கட்டுரையின் ஆங்கில வடிவில் காண்க. அடுத்த சில கட்டுரைகளில் வராஹ மிகிரர் சொல்லும் அற்புத தகவல்களைத் தருவேன்.

இவர் வேதங்களைக் கற்று அறிந்தவர் என்பது ஆங்காங்கே குறிப்பிடும் மந்திரங்களில் இருந்து தெரிகிறது. இவர் ஒரு கணித மேதை- கவிஞரும் கூட. சாதாரண சோதிட விஞ்ஞான விஷயங்களை விளம்ப வந்தவர் திடீரென்று கவிதை மழை பொழிகிறார். இதை சம்ஸ்கிருதம் படித்தவர்களே ரசிக்க முடியும்.

அவர் இற்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார். அந்தக் காலத்திலேயே – கலைக் களஞ்சியம் என்னும் – என்சைக்ளோபீடியா போல — இவர் எழுதியதை எண்ணி எண்ணி இறும்பூது எய்தலாம். நமக்கு முன்னால், கிரேக்கர்கள் இப்படிப்பட்ட நூல்கள் எழுதி உள்ளனர். நம்மிடம் இருந்த பல்லாயிரக் கணக்கான நூல்கள் முஸ்லீம் படை எடுப்புகளில் தீக்கிரையாக்கப் பட்டுவிட்டன. அது போக எஞ்சியதைக் கொண்டு பார்க்கையில் கிரேக்கர்கள், இத்துறையில் முன்னால் இருக்கலாம்.

வராகமிகிரர் எழுதியதை ஆல்பிரூனி (கிபி1000) என்ற அராபியர் அவரது அராபிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.