ஜேம்ஸ் பாண்ட் (007) -ஐ தோற்கடித்த ஹிந்து! (Post No.10329)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,329

Date uploaded in London – –   12 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு இந்துக் கடவுள் உலகில் உள்ள  மிகப் பெரிய உளவு அமைப்புகளான சி.ஐ.ஏ . கே.ஜி.பி. எம் ஐ 5, எம் ஐ 6, மொசாத்.இந்தியாவின் ‘ரா (RAW=Research and Analysis Wing)  ‘ உளவாளிகளையும் ஜேம்ஸ்பாண்ட், மிஸ் மார்பிள் , ஷெர்லாக் ஹோம்ஸ் ஆகியோரையும் விடப் பெரியவர்; திறமையானவர் என்று அதர்வண வேத மந்திரம் சொல்கிறது. ஏன் ?எப்படி?

இதோ கணக்கு

ஒரு மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்துக்கு 10 முறை கண் சிமிட்டுகிறான் (மன்னிக்கவும்; அழகான பெண்களைப்  பார்த்து கண் சிமிட்டுவதையும், அவள்  அழகில் மயங்கி, சொக்கிப் போய் , கண்களை சிமிட்டாமல் பார்த்துக்  கொண்டே இருந்ததையும் அதர்வ வேதம் சேர்க்கவில்லை!)

சரி, அப்படியானால் ஒரு மணிக்கு ஒரு மனிதன் சராசரியாகக் கண் சிமிட்டுவது 60X 10 =600 முறை

ஒரு நாளில் அவன் 16 மணி நேரம் விழித்து இருப்பான் . அப்போது அவன் கண் சிமிட்டுவது

600x 16 மணி = 9600 முறை

உலகின் ஜனத்தொகை , இதை நான் எழுதிய போது………..

7.9 பில்லியன் , அதாவது 7,906,132,700

இதை நான் எழுதும்போது லட்சக் கணக்கில் கூடிக்கொண்டே இருக்கும்.

உலக ஜனத் தொகை கடிகாரம் என்பதை கூகுள் மூலம் பார்த்தீர்களானால் ஒவ்வொரு வினாடியும் எவ்வளவு கூடுகிறது என்பதைக் காணலாம்; வியக்கலாம் .

நம் கணக்கிற்கு 7,906,132,700 என்று வைத்துக் கொண்டால் கண் சிமிட்டுதலின் எண்ணிக்கை

9600 X 7,906,132,700 (ஒரு நாளில் மட்டும்!!!!!!!)

இதை வானத்திலிருந்து வருணன் கணக்கிட்டுக் கொண்டே இருக்கிறானாம்; இப்படிச் சொல்கிறது அதர்வண வேதம் . தள்ளிப்போன வெள்ளைக்காரப் பயல்கள் கூட, அதர்வண வேதத்துக்கு கி.மு.1000 என்று தேதி குறிக்கிறான் அதாவது இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர்!

இந்த வருண பகவானை தொல்காப்பியம் தமிழர் கடவுள் என்று விஷ்ணு, இந்திரன், வேல் முருகன், துர்க்கை ஆகியோருடன் பட்டியலில் சேர்த்து இருக்கிறது .

பார்ப்பனர்கள் தினமும் மாலை நேரத்தில் சொல்லும் சந்தியாவந்தன மந்திரத்தில் இவனிடம் மன்னிப்புக் கேட்கிறார்கள் ; அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை இன்று நீ பார்த்ததை நான் அறிவேன் ; ப்ளீஸ், ப்ளீஸ், மன்னிச்சுக்கோ.- என்று

துருக்கி- சிரியா  எல்லையில் உள்ள பொகஸ்கொய் Bogazkoy  களிமண் படிவ க்யூனிஃபார்ம் எழுத்துக் கல்வெட்டிலும் இந்திரன் மித்திரனுடன் வருணன் பெயர் உள்ளது. அதன் தேதி கி.மு 1340. அதாவது 3360 ஆண்டுகளுக்கு முந்தியது. இதெல்லாம் தள்ளிப்போன உதவாக்கரை அரைவேக்காடுகள் சொன்ன தேதி. அதாவது இந்து மதத்தை நக்கல் செய்யும், இந்து மதத்தைப் பின்பற்றாத, தன மதம் ஒன்று மட்டுமே கடவுளிடம் அழைத்துச் செல்லும் என்ற குருட்டு நம்பிக்கை கொண்ட வெள்ளைத் தோல்கள் சொன்ன சேதி . நம்முடைய பஞ்சாங்கமும் தமிழ்க் கல்வெட்டும் வியாசர் என்பவர் வேதத்தை நான்காகப் பிரித்ததையும் அது கலியுகம் துவங்குவதற்கு 60, 70 ஆண்டுகளுக்கு முன்னர் வியாசர் செய்த வேலை என்றும் சொல்கிறது. அதாவது இற்றைக்கு சுமார் 5200 ஆண்டுகளுக்கு முன்னர்!

இப்போது அதர்வண வேத கவிதையைப் படியுங்கள்; அதற்குப் பின்னர் இன்னும் சில சுவையான செய்திகளைச் சொல்கிறேன்:–

அதர்வண வேதம் – காண்டம் 4, சூக்தம் 16 (சூக்தம் 118 வருணன் என்றும் சொல்லுவர் )

1.அவன் பெரிய அதிகாரி; பக்கத்தில் இருந்து பார்ப்பது போல உன்னிப்பாக நம்மையே பார்க்கிறான் ; எல்லோரும் ரஹசியம் பேசுவதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்; அது எல்லாம் தேவர்களுக்கு நன்கு தெரியும்

2. ஒருவன் நிற்பது, உட்காருவது, வளைந்து வளைந்து கோணலாக ஓடுவது, மறைவாக ஒளிந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் எதையாவது செய்வது, இருவர் மட்டுமே தனி இடத்தில் அமர்ந்து கிசு கிசு பேசுவது அத்தனையும் வருணனுக்குத் தெரியும்.எப்படித் தெரியுமா? அவன் உங்கள் அருகில் மூன்றவது ஆளாக நைசாக உட்கார்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறான்!!

3.இந்தப் பூமி அவனுக்கு சொந்தம்; அதற்கு மேல் நாம் பார்க்கும் வானமும் அவனுக்குச் சொந்தம் . பூமியில் உள்ள கடலும், கடல் போன்ற ஆகாயமும் அவனுடையதே.

நாலாவது மந்திரம்

4.((சப்போஸ்suppose ; நீ ஆகாயத்துக்கு அப்பால் ஸ்பேஸ் ஷட்டிலில் போகிறாய் என்று வைத்துக்கொள்வோம்)). அப்போதும் நீ அவன் எல்லைக்கு அப்பால் சென்றதாக நினைத்துவிடாதே . அவனுடைய ஒற்றர்கள் அங்கிருந்துதான் பூமிக்கே வருகிறார்கள் . அவர்களுக்கு 1000 கண்கள். பூமியை பார்த்துக கொண்டே இருக்கிறார்கள் (அதாவது அவர்கள் ஸிஸிடி வி  CCTV காமெராக்கள்; கூகுள் மேப் GOOGLE MAP )

ஐந்தாவது மந்திரம்

வருணன் பெரிய ராஜா ; பூமி, ஆகாயம், அதற்கு இடையிலுள்ள அந்தரம், வானத்துக்கும் அப்பால் உள்ள இடம் அத்தனையையும் பார்க்கிறார்.இந்த ஜனங்களின் இமைச் சிமிட்டுகளையும் அவன் எண்ணியுள்ளான். சூதாடுபவன் காய்களை உன்னிப்பாக எண்ணுவது போல அவன் எண்ணிக்கொண்டே இருக்கிறான்!!!!

ஆறாவது மந்திரம்

6.ஏ வருணா ! பொய் சொல்ற பயல்களை 3X 7= 21 பாஸக்  கயிற்றால் கட்டி, அடித்து விட்டு விளாசு; ஆனால் உண்மை பேசுவோரைத் தொடாதே

ஏழாவது மந்திரம் 7.

ஏ வருணா ! விடாதே; அவர்களை 100 பாசக்கயிற்றால் கட்டு ; மனிதர்களைக் கவனிக்கும் வருணா! பொய்  சொல்ற பயல்களை நல்லாக் கட்டு. ((நீ அடிக்கிற அடியிலே )) அவன் வயிறு தொங்கி மஹோதர நோயுள்ளவன் (போல) ஆகட்டும்

எட்டாவது மந்திரம்

8.நீயே அகலம்; நீயே நீளம்; நீயே மனிதன் , நீயே தெய்வமாக நிற்கிறாய்  நீ முன்னைப் பழமைக்கும் பழமையானவன். பின்னைப் புதுமைக்கும் புதுமையானவன்

ஒன்பதா வது மந்திரம்

9.இன்னாரே ! நான் அந்த எல்லாப் பாசங்களுடன் உன்னைக் கட்டுகிறேன்.இந்த இந்த குடும்பத்தைச் சேர்ந்தவனே ! இந்த இந்தத் தாயின் மகனே ! அவர்களின் அனைவரையும் உனக்கு நான் அனுகூலமாய் நான் ஆக்ஞாபிக்கிறேன்.

XXXX

ஒன்றுக்கும் உதவாத உதிய மரத்தின் VON ROTH கருத்து !

7 வெள்ளைத் தோல்கள் இந்தப் பாடலை ஐரோப்பிய மொழிகளில்  மொழிபெயர்த்தன .

Max Muller, Griffith, Ludwig, Grill, Von Roth, Muir, Kaegi

அதில் தள்ளிப்போன பயல் ஜெர்மனியைச் சேர்ந்த VON ROTH வான் ராத். அவன் 7 வால்யூம்களில் சம்ஸ்க்ருத அகராதியை (St Petersburg Dictionary) உருவாக்கியவன். அதில் தத்துப் பித்து என்று உளறிக்கொட்டி கிளறி மூடி இருக்கிறான். அதை கோல்ட்ஸ்டக்கர் THEODORE GOLDSTUCKER என்ற பேரறிஞர் விளாசு விளாசு என்று விளாசி இருக்கிறார் . அவரும் வில்ஸன் , மாக்ஸ்முல்லர், வான் ராத் காலத்தில் வாழ்ந்தவர்; ஆனால் பெரிய வித்தியாசம்; அவர் ஒரு யூதர். மற்ற 30+++++ மொழிபெயர்ப்பாளர்களும் கிறிஸ்தவர்கள். அவர்கள் பிரபஞ்சமே 6000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வந்தது என்பதை நம்பியவர்கள் . பாணினியின் காலம் என்பது பற்றி கோல்ட்ஸ்டக்கர் எழுதிய நூலில் மாக்ஸ் முல்லரையும் விடவில்லை. முன்னுக்குப் பின் முரணாக எழுதியுளாயே முட்டாள் என்று மாக்ஸ்முல்லர் தவறுகளை சுட்டிக்காட்டி ஏசுகிறார்.

நிற்க.

சப்ஜெக்டு subject க்கு வருகிறேன்.

அப்பேற்ப்பட்ட தள்ளிப்போன , ஒன்றுக்கும் உதவாத உதிய மரமான , தள்ளிப்போன ஜெர்மானியன் வான் ராத் VON ROTH வியக்கிறான்  : வேதத்தில் கடவுளைப் பற்றிய கவிதையில் இதை வீட உன்னதமான கவிதையை நன் கண்டதே இல்லை. இறைவன் சர்வ வியாபி, எல்லாம் வல்லவன் , எங்கும் நிறைந்தவன் , எல்லாம் அறிந்தவன் என்பதை இந்த அளவுக்கு விளக்கும் கவிதையை நான் கண்டதே இல்லை; இதில் கடைசி மந்திரம் எதிரிகளுக்கு எதிரான சாபம் போல இருப்பது ஒன்று மட்டுமே குறை.

xxx

லண்டன் சுவாமிநாதன் வியாக்கியானம்

இது ஒரு அற்புதமான கவிதை; வருணனைப் பற்றிய வருணணைகள் அனைத்தும் ரிக் வேதத்தில் இதே தொனியில் அமைந்திருப்பது உண்மையே. ஆனால் இங்கே புலவர் வருணிக்கும் மூன்று விஷயங்கள் வேறு எங்கும் இல்லை

1.அவன் மனிதனின் கண் சிமிட்டல்களையும் எண்ணிக்கொண்டே இருக்கிறான். அதாவது  NASA நாஸா , PENTAGON பெண்டகன் முதலிய இடங்களில் உள்ள சூப்பர் கம்பியூட்டர்களை விட வருணன் பெரிய கம்ப்யூட்டர். அவன் சிசி டிவி CCTV காமெரா போல பார்த்துக் கொண்டிருப்பதோடு பாவ புண்ணியங்களை கணக்குப் போ ட்டுக் கொண்டே இருக்கிறான்.  இதனால் தினமும் மாலை வேளை மந்திரத்தில் பிராமணர்கள் வருண பகவானிடம் பாவ மன்னிப்பு கேட்கின்றனர் .

2.அவனுடைய தூதர்கள் உளவாளிகள் ; அவர்களுக்கு ஆயிரம் கண்கள் . இப்போது கூகிள் மேப் GOOGLE MAP மூலம் நாம் யார் வீட்டின் வாசலில் யார் நிற்கிறார் என்பதைக் காண முடியும். அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் யார் நுழைகிறார், வெளியே வருகிறார் என்று காண முடியும். இதை வருணன் ஒற்றர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செய்துள்ளனர். செய்து வருகின்றனர்.

3. வருணன் இன்விஸிபிள் மேன்  ; அதாவது நாம் இருவர் மட்டுமே ரஹசியம் பேசுகிறோம் என்று நினைக்கிறோம். புலவர் சொல்கிறார்;  டேய் மக்கு, மடையா; உன் பின்னால் வருணனும் உனக்குத் தெரியாமல் கேட்டுக் கொண்டு இருக்கிறாண்டா. என்று

இறைவனின் மஹிமையை இதைவிட எவனாவது வருணிக்க முடியுமா ?

பாரதியார் சொன்னார் சுவை புதிது, பொருள் புதிது, சோதிமிக்க நவ கவிதை; எந்நாளும் அழியாதா மா கவிதை என்று ; அந்த வரிகள் இந்தக் கவிதைக்கு நன்கு பொருந்தும்.

மாணிக்க வாசகர் இறைவனை வருணிக்கையில் முன்னைப் பழமைக்கும் பழமை, புதுமைக்கும் புதுமை என்றார் ; அற்புதமான வாசகம்; அதுவும் இந்த துதியில் தொனிக்கிறது

நோய்கள் வருவது ஒருவருடைய பூர்வ ஜென்ம பாவத்தால் என்பது இந்துக்களின் கருத்து. இதை ஏற்காத வான் ராத் அதை ஒரு குறையாக கருதுகிறார். ஏனெனில் பாவம் செய்தொரின் மகா உதர (மஹோதர = பெரு வயிறு) நோய் பற்றி வருகிறது.

பொய் சொல்வோரை கட்டி அடித்து நொறுக்கு; உண்மை சொல்வோரைக் காப்பாற்று என்பது அற்புதமான கருத்து. கந்த சட்டி கவசத்தில் வரம் வரிகளை நினைவு படுத்துகிறார் புலவர் (கட்டி உருட்டி கால் முறியக்கட்டு, குத்துக் குத்துக் கூர் வடிவேலால்)

மந்திரம் ஆறில் மூவேழ் 3x 7=21 என்ற எண் வருகிறது புற நானூற்றின் 166 ஆவது பாடலிலும் இது வருகிறது..

கடவுள் என்பவன் வானத்தில் ஒரு மாளிகையில் உட்காரவில்லை எங்கும் நிறைந்தவன் என்பதை வருணனே  நீ இறைவன் நீ மனிதன் என்ற மந்திரம் காட்டுகிறது.

எல்லாம் வல்ல,எங்கும் நிறைந்த, எல்லாம் (OMNI POTENT, OMNI PRESENT, OMNI SCIENT )அறிந்த வருணனை, மாலை வேளையில் துதிக்கும் பிராமணனைக் கண்டால் ஒரு கும்பிடு போடுங்கள் . ஏனெனில் அந்த வருணனின் மஹிமையை, தொல் காப்பியன் சொன்னதை, இன்றும் நமக்கு சொல்லி வருகிறார்கள்!

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.

– தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல்-பாடல் எண்:5

–SUBHAM–

tags- வருணன் , உளவாளி, கண் சிமிட்டுதல், ஜேம்ஸ் பாண்ட் , அதர்வண வேதம்

நைடதத்தில் உள்ள நான்கு சிலேடைப் பாடல்கள்! (Post No.5309)

Written by S Nagarajan

Date: 11 August 2018

 

Time uploaded in London – 7-00 AM  (British Summer Time)

 

Post No. 5309

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

நைடதத்தில் உள்ள நான்கு சிலேடைப் பாடல்கள்!

 

ச.நாகராஜன்

 

அதிவீரராம பாண்டியன் இயற்றிய தமிழ்க் காவியமான நைடதம் சிருங்காரச் சுவை சொட்டச் சொட்ட எழுதப்பட்ட ஒன்று.

இதில் சுயம்வரப் படலம் குறிப்பிடத் தகுந்த ஒன்று.

திரிலோகத்தில் உள்ள அரசர்களெல்லாம் ஒருங்கு கூடி சுயம்வர மண்டபத்தில் வந்து சேர தமயந்தியின் தந்தையான வீமராஜன் மகிழ்ச்சியும் திகைப்பும் அடைந்தான்.

 

 

அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு தன் மகளை மணம் செய விரும்புவது குறித்து மகிழ்ச்சி,

ஆனால் இவரை இன்னார் என்று நல்ல விதத்தில் அறிமுகப்படுத்தக் கூடியவர் இந்த மண்ணுலகில் இல்லையே என்பதை நினைத்து திகைப்பு.

 

 

நாரணனை மனம் உருக வேண்டினான். நாரணனோ பிரம்மாவை நோக்கி, ‘பிரம்ம தேவா!. இவர் இன்னின்னார் என்று கூற கலைமகள் அன்றி வேறு யார் இருக்கிறார்கள்” என்று கேட்டார். பிரம்மா கலைமகளை நோக்கி, “நீ சென்று அரசர் கூட்டத்தை தமயந்திக்கு இவர் இன்னார் என்று விளக்கி வருவாய்” என்று பணிக்க கலைமகள் சுயம்வர மண்டபம் வந்து ஒவ்வொருவரைப் பற்றியும் தமயந்திக்கு எடுத்துக் கூற ஆரம்பித்தாள்.

 

 

42 பாடல்களில் அரசர்கள் பற்றிய அறிமுகம் விளக்கப் படுகிறது.

தமயந்தியை மணக்க வேண்டி சுயம்வர மண்டபத்திற்கு வந்த இந்திரன், அக்கினி தேவன், யமன்,வருணன் ஆகியோரை விளக்கும் பாடல்கள் நளனுக்கும் இவர்களுக்குமாக அமைந்துள்ள சிலேடைப் பாடல்களாக அமைந்துள்ளன.

இந்திரனுக்கும் நளனுக்கும் சிலேடை:

 

கலை வளர்திங்க ளென்னக் கடிகமழ் கமலம் வாட்டுந்

திலக வாண் முகத் தாயிங்கு வைகிய சினவேற் காளை

வலனுடை வயிர வாளான் கற்பகமலிந்த தோளான்

பலபகைவரை முன்செற்ற பகட்டெழின் மார்பினானே.

 

இதன் பொருள் :- கலைமகளுடைய அருளும், நல்ல வாசனை பொருந்திய தாமரை மலரும் வாடி விடும்படியான, திலகமிட்ட சந்திரனைப் போன்ற முகத்தை உடைய தமயந்தியே! இங்கே இருக்கும் அரசன் கோபமும் வீரமும் ஒருங்கே பெற்றும், வலனைக் கொன்ற வெற்றியுடையவனும், வெற்றி மிகுந்த கூரிய வாளை உடையவனும், கற்பக மாலை சூடியவனும், மலை பிளக்கும் தோழனும், பகைவரை முதலில் ஜெயித்து  பெருமை பொருந்திய அழகிய மார்பினனுமான இந்திரன் ஆவான்.

இந்த அரசனின் வர்ணனை – கோபமும் வீரமும் ஒருங்கே பெற்றவன், கூரிய வாளை உடையவன், பகைவரை ஜெயித்தவன் ஆகியவை நளனுக்கும் பொருந்துபவை. ஆகவே இந்திரனையும் நளனையும் குறித்த சிலேடைப் பாடலாக இது அமைகிறது.

 

அக்னிதேவனுக்கும் நளனுக்கும் சிலேடை:

நகைமதி முகத்தாயீங்கு வைகிய நாமவேலான்

புகலுரும் வெகுளி யுள்ளத் தொருவினான் பொங்கி யார்த்த

பகையிருட் பிழம்பு சீக்கும் பலசுட ருமிழும் வாளான்

றகைமைசால் புலவ ரேத்துந் தால மேழுடைய கோவே

 

இதன் பொருள் :

சந்திர பிம்பம் போன்ற முகத்தை உடைய தமயந்தியே! (நகை மதி முகத்தாய்) இங்கு இருப்பவர் யார் எனில் சொல்ல முடியாத அளவு கோபமும் ஒளியும் பொருந்தியவனுமான அக்னி தேவன்.

இருளை ஒத்த பகைவரை தன் வாளால் வென்று பெருமை மிக்க புலவர்களால் சத்சத் தீவை உடையவன்.

 

 

தீவு தேவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு அக்னியையே முதலாவதாக பூஜிப்பதாலும் அவர்களுக்கு வேண்டிய ஹவிர் பாகங்களை அக்னி மூலமாகப் பெறுவதாலும் வேதத்தில் அக்னியை மூலமாகச் சொல்வதாலும் இருள் பிழம்பை ஓட்டி ஒளி தரும் ஏழு நாவை உடையவன் ஆதலாலும் தேவர்களால் புகழப்படுவதாலும் அக்னி தேவன் இவ்வாறு புகழப் படுகிறான்.

 

 

அக்னியைக் கூறும் போது தேவர்கள் என்றும் நளனைக் குறிப்பிடும் போது புலவர்கள் என்று கூறுவதும் காண்க. தேவர்களும் புலவர்களும் சிலேடையாகக் கூறப்படுகிறது.

 

யமனுக்கும் நளனுக்கும் சிலேடை

அஞ்சன மெழுத லாற்றா தம்மவோ வென்று நையும்

வஞ்சிநுண் ணிடையா யிங்கு வைகிய நாமவேலா

னெஞ்சலி றருமன் றெண்ணி ரிருங்கட லுலக மெல்லாஞ்

செஞ்சவே யோசை போய தீதறு செங்கோல் வேந்தே

 

இதன் பொருள் : அஞ்சன மை எழுதும் போது அதன் கனம் கூடத் தாங்க மாட்டாது நைந்து போகும் நுண்ணிய இடையை உடையவளே! இதோ இருக்கின்றானே இவன் யம தருமன்! பயமுறுத்தும் வேல் படையை உடையவன். செவ்விய கால தண்டாயுதத்தைக் கொண்டு கடல் சூழ்ந்த உலகை புகழ் பரப்பச் செங்கோலால் ஆள்பவன்!

நளனும் இருங்கடல் உலகம் ஆள்பவன். செங்கோலால் ஆட்சி செய்து புகழ் பெற்றவன். ஆக ஈற்றடி இரண்டினாலும் நளனுக்கும் யமனுக்கும் சிலேடை புகலப்பட்டது.

 

வருணனுக்கும் நளனுக்கும் சிலேடை :

பாற்றிரை யமிரத மூறும் படரொளிப் பவளச் செவ்வாய்

கோற்றொடி மடந்தை யீங்கு வைகிய குலவுத் தோளான்

மகற்றருஞ் சிறப்பின் மிக்க வளங்கெழு புவன வேந்த

னாற்றிசை பரப்புஞ் சூழ்போ நலங்கெழு நேமி வேந்தே

 

இதன் பொருள் ; பாற்கடலில் தோன்றிய அமிர்தமென ஊறுகின்ற பவளச் செவ்வாயை உடையவளே! அழகிய வளையலை அணிந்துள்ளவளே! இங்கு  வந்திருப்பவன் நன்மை பொருந்திய கடல் அரசனான வருண தேவன்.

 

 

புவனம் என்றால் நீர் ; நீருக்கு அரசன் வருணன்

புவனம் என்றால் பூமி : பூமிக்கு அரசன் நளன்

நேமி என்றால் கடல். வருணனைக் குறிப்பது.

நேமி என்றால் சக்கரம். நளனைக் குறிப்பது.

ஆக வருணனுக்கும் நளனுக்கும் சிலேடை புகலப்பட்டது.

 

இப்படி இந்திரன், அக்னி, யமன், வருணன் ஆகியோரின் சிறப்பியல்புகள் அனைத்தும் ஒருங்கே கொண்டவன் என்று குறிப்பால் தமயந்திக்கு கலைமகள் சொல்லிக் கொண்டே வருகிறாள் என்பது சுவையான செய்தி!

அதிவீரராம பாண்டியனின் நைடதம் கற்போர்க்கு ஔடதம்.

***

 

ராமனிடம் வருணன் சொன்ன நொண்டிச் சாக்கு! கம்பன் நகைச் சுவை? (Post No.4480)

ராமனிடம் வருணன் சொன்ன நொண்டிச் சாக்கு! கம்பன் நகைச் சுவை? (Post No.4480)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 11 DECEMBER 2017 

 

Time uploaded in London-  12-28

 

 

Post No. 4480

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கம்ப ராமாயணத்தின் யுத்த காண்டத்தில் ‘வருணனை வழிவேண்டு படல’த்தில் இரண்டு பாடல்களில் உள்ள நொண்டிச் சாக்குகள் நமக்கு நகைச் சுவையை ஏற்படுத்தும். வருணன் தாமதமாக வந்ததற்குச் சொல்லும் சாக்குகள் இவை. அதுவும் பிரம்மாஸ்திரத்தை ராமன் ஏவப் போகிறான் என்பதை அறிந்த பின்னர் சொன்ன சாக்குகள் இவை. கம்பன் இதை நகைச் சுவையாக சேர்த்தானா அல்லது உண்மைக் கதையாக சேர்த்தானா என்பது விவாதத்திற்குரியது.

 

இலங்கை செல்வதற்கு கடல் வழிவிட வேண்டும் என்று கடற்கரையில் நின்று கொண்டு ராமன் வேண்டுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கடல் தெய்வமான வருணன் வரவில்லை. ராமனுக்கு கோபம் வந்து விடுகிறது. பிரம்மாஸ்திரத்தை ஏவுவதற்கு ராமன் தயாராகிறான். உடனே வருணன் பயந்து கொண்டு ஓடி வந்து அவன் முன் தோன்றுகிறான்.

 

தாமதமாக வந்ததற்கு வருணன் சொல்லும் இரண்டு சாக்குகளும் விநோதமானவையே!

 

நீ எனை நினைந்த தன்மை நெடுங்கடல் முடிவில் நின்றேன்

ஆயினேன் அறிந்திலேன்   என்று அண்ணலுக்கயிர்ப்பு நீங்க

காய் எரிப் படலை சூழ்ந்த கருங்கடல் தரங்கத்தூடே

தீயிடை நடப்பான் போலச் செறிபுனற்கு இறைவன் சென்றான்.

 

பொருள்:

நீ என்னை அழைத்தது எனக்குத் தெரியாது. ஏனெனில் நான் கடலின் ஒரு கோடியில் நின்று கொண்டிருந்ததால் அறியவில்லை. இவ்வாறு சொல்லிக்கொண்டு தீ பரவியுள்ள கடலின் அலைகளுக்கு இடையே தீயின் மீது நடப்பவனைப் போல நடந்து வந்தான் வருணன்.

 

இது ஒரு நொண்டிச் சாக்கு ! கடலுக்கே தெய்வமானவன், மிகப் பெரிய கணைகளை ராமன் தொடுத்தபோது கூட அறிய வில்லை என்பது உண்மைச் சாக்காக இருக்க முடியாது. இன்னும் பல பாடல்களுக்குப் பின்னர் அவன் சொல்லும் ஒரு சாக்கைப் பார்த்தால் முதலில் சொன்ன பொய் வெட்ட வெளிச்சத்துக்கு வந்து விடும்!

 

சுறாமீன் சண்டை!

பார்த்தனில் பொறையின் மிக்க பத்தினிக்கு உற்ற பண்பு

வார்த்தையின் அறிந்ததல்லால் தேவர்பால் வந்திலேன் நான்

தீர்த்த நின் ஆணை ஏழாம் செறி திரைக் கடலில் மீனின்

போர்த்தொழில் விலக்கப்போனேன் அறிந்திலேன் புகுந்தது ஒன்றும்

 

பொருள்:-

பூமியைவிடப் பொறுமை மிகுந்த உன் கற்பரசியான சீதைக்கு நேர்ந்துள்ள கஷ்டத்தை நின் சொல்லால் அறிந்தேன் அன்றி, தேவர்கள் மூலம் அறியவில்லை. தூயவனே! நெருங்கிய அலைகளையுடைய ஏழாம் கடலில் சுறாமீன்கள்   சண்டை நடந்து கொண்டிருந்தது. அதை விலக்கிவிடப் போயிருந்தேன். நின் கட்டளையை அறியாதவனாய் இயல்பாகவே இங்கு வந்தேன்!- என்று வருணன் உரைத்தான்.

 

இது கட்டாயம் நொண்டிச் சாக்குதான்.

சுறாமீன் சண்டயை விலக்கி, சமாதானம் செய்யப் போனதாக வருணன் கூறுவது விநோதமானதே.

 

–சுபம்–

 

வேதத்திலும் ஆழ்வாரிலும் கருப்பு, சிவப்பு! (Post No.4063)

Written by London Swaminathan
Date: 8 July 2017
Time uploaded in London- 22-29
Post No. 4063

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வேத மந்திரங்களில் பெரும்பாலும் மித்ரனையும் வருணனையும் சேர்த்தே சொல்லுவர். உலகம் என்பது நேர்மறை, எதிர்மறை சக்திகளையுடையது. பூமி என்னும் காந்த மண்டலத்திலும் வட துருவம், தென் துருவம் என்று இருக்கும். மின்சாரத்திலும் பாஸிட்டிவ், நெகடிவ் அம்சங்கள் உண்டு. அப்பொழுதுதான் அது பூர்த்தியாகும். சம்ஸ்கிருதத்தில் இதை த்வந்த்வம் (இருமை) என்பர். பிறப்பு, இறப்பு, சீத, உஷ்ணம் பகல், இருள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

Image of Varuna (sea)

வேதத்தில் வருணன் என்பது இருளையும், கரு நீலக் கடலையும், குளிர்ச்சியையும் குறிக்கும். வேத மந்திரங்கள் இதைத் தெளிவாகக் கூறும்.

மித்ரன் என்பது பல பொருள்களில் வழங்கப்பட்டாலும் சூரியன் என்பதே அதிகம் புழங்கும் அர்த்தம்.

 

சூர்ய நமஸ்கார மந்திரங்களில் முதல் மந்திரம் மித்ராய நம: என்பதாகும்.

 

அர்த்த நாரீஸ்வர உருவத்திலும் உமையை கருப்பாகவும் சிவனை சிவப்பாகவும் காட்டுவர். சங்கர நாராயண உருவத்திலும் சிவனை சிவப்பாகவும் விஷ்ணுவை கார்மேனி வண்ணனாகவும் காட்டுவர். இவை அனைத்திலும் உள்ள பொருள் ஒன்றுதான். ஆக்க சக்தி அழிவு சக்தி இரண்டும் நிறைந்ததே இயற்கை. சிவனின்றி சக்தி இல்லை; சக்தி இன்றி சிவனில்லை.

 

ஆண் முதலில் தோன்றினானா? பெண் முதலில் தோன்றினாளா? என்ற கேள்விக்கு விடை காண முடியாது; ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. இதை உணர்த்துவதே வேதங்களில் வரும் மித்ர- வருண ஜோடி.

 

என்ன அதிசயம் என்றால் கி.மு.1400 வாக்கில் கையெழுத்திடப்பட்ட துருக்கி-சிரியா (Mitanni Treaty) பகுதி ஒப்பந்தத்திலும் மித்ர-வருணர்கள் உள்ளனர். இதனால் வேதங்களை எவரும் கி.மு 1400-க்கும் முன்னர்தான் வைக்க முடியும்.

Image of Mitra (sun)

பொய்கை ஆழ்வார் முதல் மூவரில் ஒருவர். அவரும் இதே கருப்பு-சிவப்பு தத்துவத்தைப் பாடுகிறார்:-

 

அரன் நாரணன் நாமம்; ஆன்விடை புள் ஊர்தி;

உரைநூல் மறை; உறையும் கோயில்- வரை,நீர்

கருமம் அழிப்பு, அளிப்பு; கையது வேல் நேமி

உருவம் எரி கார்மேனி ஒன்று

 

நாமம்/பெயர்– சிவன், நாராயணன்

 

வாகனம் – ரிஷபம், கருடன்

நூல்கள் – ஆகமம், வேதம்

வசிப்பிடம் – மலை, கடல் (கயிலை, பாற்கடல்)

தொழில்/கருமம் – அழித்தல், காத்தல்

ஆயுதம் – திரிசூலம், சக்ராயுதம்

உருவம் – அக்கினிப் பிழம்பு, மேகத்தின் கருப்பு

ஆனால் உடல் ஒன்றுதான் (சங்கர நாராயணன், அர்த்த நாரீ)

இதைத் தான் வேதம் மித்ர-வருண என்று சேர்த்துச் சொல்கிறது.

இந்த பெரிய இயற்கை நிகழ்வை, விஞ்ஞான உண்மையைச் சொல்வதால் வேதத்தை என்றுமுள்ள சத்தியம் என்கிறோம்.

 

விஞ்ஞான உண்மைகளை நாம் கண்டுபிடித்தாலும் கண்டுபிடிக்காவிட்டாலும் அவை என்றும் இருக்கும் அழியாது— நியூடனும் ஐன்ஸ்டைனும் இல்லாவிட்டாலும் அந்த உண்மைகள் இயங்கிக் கொண்டே இருக்கும். வேதகால ரிஷிகள் தன் அருட் பார்வையால் மித்ர– வருணனை நமக்குக் கண்டுபிடித்துக் கொடுத்தனர். அவர்கள் கண்டுபிடிக்காவிடிலும் வேத உண்மைகள் வானில் முழங்கிக் கொண்டே இருக்கும்.

ஏனெனில் வேதங்கள் சத்திய மானவை; நித்தியமானவை.

 

—சுபம்–

 

தொல்காப்பியத்தில் வருணன்

Image

தமிழில் கிடைத்த பழைய நூல் தொல்காப்பியம். பெரும்பாலான அறிஞர்கள் இதை கி.மு அல்லது கி.பி. முதல் நூற்றாண்டில் வைக்கின்றனர். கார்த்திகேசு சிவதம்பி, வையாபுரிப் பிள்ளை போன்றோர் போல நானும் இதை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வைத்துள்ளேன். (தொல்காப்பியர் காலம் பற்றிய எனது (ஐந்து பகுதிகள்) கட்டுரையில் காண்க).

ரிக் வேதத்தில் வருணன் மிக முக்கியமான கடவுள். உலகம் ஒரு சட்ட நியதிக்குள் இயங்க உதவுபவர் வருணன். மேலும் கடல், நீர் நிலைகள், மழை ஆகியவற்றுக்குப் பொறுப்பானவர். இந்திரன் கிழக்கு திக்குக்கு அதிபதி, வருணன் மேற்கு திக்கிற்கு அதிபதி. மித்ரன் என்ற ஒளிக் கடவுளுடன் இவர் ஜோடியாக வைக்கப்படுகிறார். வேத மந்திரங்கள் இவரை மித்ரனுடன் சேர்த்துப் பாடுகின்றன. இது பழந் தமிழர் நம்பிக்கையுடன் மிகவும் பொருந்துகின்றன. வருணனின் வாஹனம் சுறா மீன், முதலை அல்லது கடல் மிருகம்.

 

மித்ரன் வருணன் ஜோடியை அறிஞர்கள் ஒளி/இருள் என்றும் சூரியன்/சந்திரன் என்றும் ஆக்க சக்தி/அழிவு சக்தி என்றும், உற்பத்தி/மறைவு=சூரிய உதயம்/அஸ்தமனம் என்றும், கிழக்கு/மேற்கு என்றும் வியாக்கியானம் செய்கின்றனர். அதாவது ஒரு மின்சார பேட்டரியில் உள்ள பாசிடிவ்/நெகடிவ் போன்றவர் மித்ர- வருணன் ஜோடி.

வருணனின் மகன் தமிழ் முனிவன் அகஸ்தியர். அந்த வகையில் வருணனும் தமிழுக்கு மிகவும் நெருங்கி வந்து விடுகிறார்

தற்காலத்தில் பிராமணர்கள் நாள் தோறும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தன மந்திரத்தில் வருண வழிபாடு இருக்கிறது. மழை பெய்யாமல் வறட்சி நிலவும் காலங்களில் வருண ஜபம் என்னும் வேத மந்திரச் சடங்கு நடத்தப்படுகிறது.

 

தொல்காப்பிய பொருள் அதிகாரம் (1-5)

‘’ மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே’’

 

தொல்காப்பியர் தனது பொருளதிகார சூத்திரத்தில் கடலும் கடலைச் சார்ந்த நிலமும் ஆன நெய்தல் நில மக்களின் கடவுள் வருணன் என்று சொல்லுவார். அவர்கள் பரதவர் என்று அழைக்கப்படுவர்.

((இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டு கோள்: எனது கட்டுரைகளைத் தாராளமாகப் பயன்படுத்துங்கள். ஆனால் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ , அல்லது பிளாக் பெயரையோ தயவு செய்து போட்டு தமிழுக்குத் தொண்டு செய்யுங்கள். தமிழ் எழுத்தாளர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்)).

பட்டினப்பாலை என்னும் நூலில் வருண வழிபாடு பற்றிய சுவையான செய்திகள் கிடைகின்றன; வள்ளுவனும் மறைமுகமாக வருணனைப் புகழ்கிறான்:

Image

‘’ வெண்கூதாளத்துத் தண்பூங்கோதையர்

சினைச் சுறவின் கோடு நட்டு

மனைச் சேர்த்திய வல்லணங்கினான்

மடற்றாழை மலர்மலிந்தும்

பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்

புன்றலை இரும் பரதவர்

பனிதழை மா மகளிரொடு

பாயிரும் பனிக்கடல் வேடஞ் செல்லா

துவவுமடிந்துண்டாடியும்’’ (பட்டினப்பாலை 85-93)

 

பொருள்: பரதவர்கள் சுறாமீனின் கோட்டினை மணலில் நட்டு மலர் மாலை சார்த்தி வணங்கினர். அதில் தெய்வம் ஏறியதாக நம்பினர் பவுர்ணமி நாட்களில் இதைச் செய்வர். பனங்கள்ளையும் நெற்கள்ளையும் அருந்துவர். மீனையும் இறைச்சியையும் கடவுளுக்குப் படைப்பர்.

வாரணம்= கடல் என்ற வடமொழிச் சொல்லும் வருணன்= கடல் தெய்வம் உடன் தொடர்புடையது.

 

மேற்கூறிய சங்க கால பட்டினப் பாலைப் பாடல் ரிக்வேத கருத்துடன் மிகவும் அணுசரணையாக இருக்கிறது: 1. பரதவர் என்போர் ரிக்வேத பரதர்களுடன் தொடர்புடையோராக இருக்கலாம் 2. வருணனின் வாகனமான மகரம் (மீன்/முதலை/சுறா), கடலோர பரதவர் வழிபாட்டில் இடம் பெற்றது 3. வருணன் ஒரு கடல் தெய்வம் என்பது ரிக்வேதத்தில் பல இடங்களில் வருகிறது; தமிழர்களும் கடல் தெய்வமாகவே வணங்கினர் 4. முழு நிலவுக்கும் இரவுக்கும் வருணனுக்கும் உள்ள தொடர்பு வேதத்திலும் உள்ளது. வருணன் என்பவன் சோமனுக்கும் அமிர்த்துக்கும் அதிபதி. சோமன், அமிர்த கிரணங்கள் என்பது சந்திரனுக்கும் சோம பானத்துக்கும் பொருந்தும் 5.தொல்காப்பியரும் வருணன் என்ற அதே வடமொழிப் பெயரைப் பயன்படுத்துகிறார்.. மழை என்பது கடலில் இருந்து மேகமாக உற்பத்தியாகி பூமியில் பெய்கிறது என்ற கருத்து வடமொழி, தமிழ் மொழி நூல்களில் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகிறது.

 

வள்ளுவன் போற்றிய வருணன்

இந்திரன் என்ற சொல்லைப் பயன்படுத்திய வள்ளுவன் , வருணன் என்ற வேத காலக் கடவுள் பெயரை நேரடியாகப் பயன்படுத்தவில்லை. ஆயினும் கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரமாக வான் சிறப்பு என்ற அதிகாரத்தை வைத்து பூசனை, தானம் தவம் என்ற சம்ஸ்கிருத சொற்களால் வர்ண பகவானை வாழ்த்துகிறான் வள்ளுவன் :

‘’சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு’’ (குறள் 18)

‘’தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்

வானம் வழங்காது எனின்’’ (குறள் 19)

பொருள்: வானம் வறண்டு மழை இல்லாது போனால், இந்த உலகில் வானோர்க்கு எடுக்கும் திருவிழாவும் நடைபெறாது; நாள்தோறும் செய்யும் பூஜையும் நடைபெறாது;

 

மழை இல்லாது போனால், இந்த பரந்த உலகத்தில் தானம் கொடுத்தலும், தவம் செய்தலும் இல்லாமல் போகும்.

மேற்கூறிய இரண்டு குறட்பாக்களில் வள்ளுவன் கூறும் பூஜை என்ன? விழா (க்கள்) என்ன? வருண வழிபாடு, இந்திர, வருண விழாக்கள் என்றால் பொருத்தமாகவே இருக்கும். கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக வான் சிறப்பை வைத்ததற்கு இதை விட வேறு விளக்கம் என்ன இருக்க முடியும். தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இன்றும் இந்திர விழா பல பெயர்களில் ( நீர் விழா, மழை விழா) கொண்டாடப் படுகிறது. தமிழில் பரிபாடலில் மேலும் பல நீர் விழாச் செய்திகள் உள்ளன.

தமிழர் கலாசாரம் வேறு, ஆரியர்-திராவிடர் வேறு என்பவர்க்கு தொல்காப்பியரும் வள்ளுவரும் கொடுக்கும் பதிலைத் தவிர வேறு பதிலும் தேவையா?

Image

Slavs in Russia and Ukraine worship Varun as Perun

என்னுடைய முந்தைய கட்டுரைகளையும் காண்க:

1.தொல்காப்பியத்தில் இந்திரன்

2.இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும்

3.வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன்

4.அதிசயத் தமிழ் முனிவர்/புலவர் வால்மீகி

5.சோம பானமும் சுரா பானமும்

6.வீரத்தாயும் வீர மாதாவும்

7.சிந்து சமவெளியில் பேய் முத்திரை + 570 ஆராய்ச்சிக் கட்டுரைகள்