வரவர மாமியார் கழுதை போல ஆனாளாம்- பழமொழிக் கதை (Post No.4588)

வரவர மாமியார் கழுதை போல ஆனாளாம்- பழமொழிக் கதை (Post No.4588)

 

 

Written by London Swaminathan 

 

Date: 6 JANUARY 2018

 

Time uploaded in London- 8-18 am

 

 

 

Post No. 4588

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம் — என்ற தமிழ்ப் பழமொழியைப் பலரும் அறிவார்கள்; ஆனால் இதன் பின்னாலுள்ள சுவையான கதையை அறிந்தோர் சிலரே. இதோ கதை:-

 

அம்மாஞ்சி என்ற பிராஹ்மணன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி வல்லாள கண்டி மற்றும் அவனுடைய அம்மா, மற்றும் மாமியார் ஆகியோருடன் கூட்டுக் குடும்பம்.

 

வல்லாள கண்டியின் பெயரைக் கேட்டாலேயே அவள் எப்படிப்பட்டவள் என்பதைக் கண்டுகொள்ளலாம்;  சரியான சிடுமூஞ்சி; அடங்காப்பிடாரி.

 

வீட்டில் தினமும் ரணகளம்தான்;  த்வஜம் கட்டிக் கொண்டு ஒருவருக்கொருவர் மோதல்; சண்டை சச்சரவு அன் றாடக் காட்சிகள்! குறிப்பாகச் சொல்லப் போனால் அதிகம் பாதிக்கப்பட்டது அம்மாஞ்சி பிராஹ்மணனின் அம்மாதான்

 

அசட்டு அம்மாஞ்சியால் ஒன்றும் சமாளிக்க முடியவில்லை. அவனுடைய அம்மாவும் பார்த்தாள்; இனி வீட்டை விட்டு ஓடுவதே ஒரே வழி என்று சிந்தித்தாள்; செயல் பட்டாள்;

 

ஆந்தைகள் அலறும், நாய்கள் ஓலமிடும் நள்ளிரவில் வீட்டை விட்டு ஓடினாள்.

 

 

‘ஓடினாள், ஓடினாள், கிராமத்தின் எல்லைக்கே ஓடினாள்’

அங்கே ஒரு காளி கோவில். அதில் ஓய்வு எடுத்தாள்.

 

நள்ளிரவுக்குப் பின்னர் ‘’கிலிங் கிலிங்’’ என்ற சப்தம். கிழட்டு அம்மணி நிமிர்      ந்து பார்த்தாள். அங்கே ஸ்வரூப சுந்தரியாக காளி தேவி காட்சி தந்தாள்.

‘அம்மணி! ஏது வெகுதூரம் வந்துவிட்டீர்? என்ன சமாச்சாரம்?’ என்று வினவ, கிழட்டு அம்மணியும் செப்பினாள் தன் துயரக் கதைகளை.

 

காளி மொழிந்தாள்:

கவலைப் படாதே! ஒரு மாம்பழம் தருகிறேன்; அதைச் சாப்பிடு; ‘’பெரிய மாற்றம்’’ ஏற்படும் என்றாள்.

அவளும் கவலையை மறந்து விடிவு காலத்தை (பொழுது விடியும் காலத்தை) எதிர் பார்த்துக் காத்திருந்தாள்.

 

இதற்குள்  அம்மாஞ்சி வீட்டில் ஒரே களேபரம்;அம்மாவைக் காணாது அம்மாஞ்சி- அசட்டு அம்மாஞ்சி–துடியாய்த் துடித்தான்

 

இதென்னடா கலிகாலம்! ‘பெத்த மனசு கல்லு, பிள்ளை மனசு பித்து’ என்று பழமொழி மாறிவிட்டதே.

 

ஓடினான் ஓடினான் ஊரின் எல்லைக்கே ஓடினான். அங்கே பராசக்தி அமர்ந்திருந்தாள்- அதான் அவனுடைய கிழட்டு அம்மா!

 

‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே. அன் புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே’,  என்று பாடி அவளை நமஸ்கரித்தான்.

வீட்டிற்குத் திரும்பி வருமாறு இறைஞ்சினான்.

அவளும் ‘நான் பெற்ற செல்வம்; நலமான செல்வம்’ என்று பாடி மாம்பழத்தைக் காட்டி சாப்பிடு என்றாள்.

அம்மா, அது அரிய பெரிய கனி; நீயே உண்ணு என்று சொல்லி அவளைத் தோளின் மீது போட்டுக்கொண்டான். அவளும் மாம்பழத்தைச் சாப்பிட்டாள்.

 

அம்மாஞ்சிக்கு கொஞ்சம் ஆச்சர்யம்; அம்மாவின் சொர சொர தோல் வழு வழு என்பது போல ஒரு உணர்வு; ஓஹோ! களைப்பின் மிகுதியால் வந்தது என்று எண்ணினான். மேலும் மேலும் குமரிப் பெண்ணின் கைகள் போட்ட உணர்வு தோன்,,,ரவே திரும்பி அம்மாவின் முகத்டைப் பார்த்தான; அவள் சொர்ண சுந்தரியாக மாறி ஸ்வர்ணம் போல ஜொலித்தாள்; வீட்டில் போய் இறக்கும் போது அவனுடைய கிழட்டு அம்மா  இளம் குமரி  ஆக மாறி இருந்தாள். அவனுக்கும் அவளுக்கும் மகிழ்ச்சி. எல்லாக் கதைகளையும் வல்லாள கண்டி கேட்டாள்; பொறாமைத் தீயில் சதித்திட்டம் தீட்டினாள்.

இரவு நேரத்தில் தனது அம்மாவை- அதாவது அசட்டு அம்மாஞ்சியின் மாமியாரை- வீட்டை வீட்டு ஓடும்படி துர் புத்திமதி சொன்னாள்; அவளும் இசைந்தாள் காளி கோவிலில் தஞ்சம் புகுந்தாள்; காளியும் தோன்றினள்; ஏன் அம்மா இங்கு வந்தாய் என்று கேட்க, அவளும் உரைத்தாள்– வீட்டில் துக்கம் தாளவில்லை என்று.

 

எதிர்பார்த்தது போலவே காளியும் மாம்பழம் தந்து உரைத்தாள்: இதைச் சாப்பிடு ‘’பெரிய மாற்றம்’’ வரும் என்று.

 

அந்தக் கள்ளியும் அவசரம் அவசரமாக மாம்பழத்தை உண்டாள். இதற்குள் வல்லாள கண்டி தனது அம்மாவைத் தேடிக் கண்டு பிடிக்கும்படி அம்மாஞ்சியை எஃகினாள். அவனும் விரைந்தான்.

மாமியாரைக் காளி கோவிலில் கண்டான்

கண்டேண் மாமியாரை! என்று ஆனந்தித்தான். தோளின் மீது சவாரியும் கொடுத்தான். அவள் தோல் சொர சொர என்று மாறிக்கொண்டு வந்து எடையும் கூடியது.

திரும்பிப் பார்த்தான்; சிரிப்பை அடக்க முடியவில்லை; மாமியார் அரைக் கழுதையாக மாறி இருந்தாள்; வீட்டிற்குள் ஓடிப் போய் அவளை தொப் என்று போட்டான்; அவள் முழுக் கழுதையாகக் காட்சி தந்தாள்

‘’கண்டேன் கண்டேன் கண்டேன்

கண்ணுக்கினியன கண்டேன்

ஊர் மக்கள் அனைவரும் வாரீர்

அரிய காட்சியைப்  பாரீர்’’ —

 

என்று ‘மனதுக்குள்’ பாடிக்கொண்டான்.

 

அம்மாஞ்சிக்கு சந்தோஷம்; அவன் அம்மாவுக்கும் சந்தோஷம்! ஆனால் மாமியாருக்கு துக்கம்; வல்லால கண்டிக்கு பெரும் துயரம்.

 

ஊர் முழுதும்– குறிப்பாக குழாய் அடியில் பெண்களிடையே ஒரே பேச்சு– வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்- என்று.

 

தமிழில் 20000–க்கும் மேலாகப் பழமொழிகள் உள; அவைகளில் சுமார் 2000 வரை எனது ‘பிளாக்’கில் சப்ஜெக்ட் வாரியாகக் – தலைப்பின் படி — கொடுத்துள்ளேன்; நிறைய பழமொழிக் கதைகளையும் தந்துள்ளேன்; ஆங்கிலத்திலும் வரைந்துள்ளேன்; கண்டு மகிழ்க- களிப்பு அடைக!!

 

-சுபம், சுபம் —