ராம நாம மஹிமை: 4 சுவையான கதைகள்

Compiled by London swaminathan

Post no.1887

Date: 24 May 2015; London Time: 17-39

தெய்வத்தின் பெயரில் என்ன இருக்கிறது? என்று எண்ணுவோருக்கு சுவாமி ராமதாஸ், ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ சத்திய சாய் பாபா ஆகியோர் சொன்ன நான்கு கதைகளைப் படித்தால் தெய்வ நாம மகிமை புரியும்.

வறட்டியிலும் கடவுள் பெயர்

ஒரு ஆஸ்ரமத்தில் ஒரு சாமியார் இருந்தார். அவருக்குப் பணிவிடை செய்துவந்த ஒரு பெண்மணி அந்த ஆசிரமத்தின் கோ சாலையில் (பசுத் தொழுவம்) கிடைக்கும் சாணியை எருவாகத் தட்டி உலர்த்தி எடுப்பது வழக்கம். எப்பொழுதும் இறைவனின் பெயரைச் சொல்லிய வண்ணம் இருப்பார். அந்தக் கட்டிடத்துக்கு அருகேயிருந்த ஒரு வீட்டிலுள்ள ஒரு பெண்ணும் இப்படி எரு வறட்டி செய்வது வழக்கம். ஒரு நாள் நல்ல வெய்யில் அடித்து எல்லாம் காய்ந்த போது கடும் காற்று வீசி இரண்டு பெண்மணிகளின் வறட்டியும் கலந்து விட்டன. ஆசிரமத்துக்கு அடுத்தவீட்டுப் பெண், நிறைய எரு வறட்டிகள் தன்னுடையது என்று உரிமை கோரினாள். அது பொய் என்பது தெரிந்தும் நிரூபிக்க வழி தெரியவில்லை. எது யாருடையது என்பதை எப்படிச் சொல்ல முடியும்?

இந்த வழக்கு விவகாரம் சாமியார் காதில் விழுந்தது. அவர், இரண்டு பெண்மணிகளையும்  அழைத்து “கவலையே வேண்டாம், நானே கண்டு பிடித்துவிடுவேன்” என்றார். எல்லோருக்கும் ஒரே வியப்பு. சாமியாராவது, வறட்டியைக் கண்டு பிடிப்பதாவது! அவருக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று வேடிக்கை பார்க்க வந்தனர்.

அவர் ஒவ்வொரு வறட்டியாகத் தன் காதுக்கு அருகே கொண்டு சென்றார். முடிவில் இரண்டு கூறுகள் இருந்தன. ஒரு பகுதியைக் காட்டி அதுவே ஆஸ்ரமத்தைச் சேர்ந்த பெண்ணுடையவை என்று சொல்லி அதற்கான காரணத்தையும் சொன்னார்.

ஆஸ்ரமப் பெண்மணி உலர்த்திய சாணத்தில் தெய்வ நாமம் கேட்டதாகவும் அடுத்த வீட்டுப் பெண்ணின் வறட்டிகளில் அப்படி ஒலி கேட்கவில்லை என்றும் விளக்கினார். ஒருவர் எந்தச் செயலைச் செய்தாலும் அப்பொழுது கடவுளின் பெயரை ஜபித்தால் அந்த சக்தி அவர் தொடும் பொருளில் எல்லாம் ஏறும். சாணியாக இருந்தாலும் அதன் சக்தியைக் காணலாம்!!

–சுவாமி ராமதாஸ் சொன்ன கதைகள்

அனுமனுக்குக் கிடைத்த முத்து மாலை

ராமநவமி என்பது ராமனின் அவதார நாள். அது கோடை காலத்தில் வரும். அப்போதெல்லாம், பாபா கொடைக்கானலில் இருப்பது வழக்கம். ஒரு ராம நவமியின்போது ராமர் பட்டாபிஷேக தினத்தில் அனுமனுக்கு சீதை அளித்த முத்து மாலையை, பாபா, தனது அபூர்வ சக்தியால் வரவழைத்து எல்லோருக்கும் காட்டினார். அதன் விவரமாவது:

(இதை சத்திய சாய் பாபா சொன்னபடி தருகிறேன்).

ராமர் முடி சூட்டிக் கொண்ட நாளில், அவர்  எல்லோருக்கும் பரிசுகளை வாரி வழங்கினார். அங்கு வந்த எல்லோரும் பரிசுகளைப் பெற்றனர். ஆனால் அனுமார் பக்கமே ராமர் திரும்பவில்லை. சீதைக்கு ஒரே கவலை. எங்கேயாவது ராமர் மறந்து விடப் போகிறாரே என்று எண்ணி அவர் காதில் கிசுகிசுத்தார், “அனுமனை மறந்து விடாதீர்கள்” என்று. உடனே ராமரும் சீதை காதில் கிசுகிசுத்தார், “எனக்குத் தெரியும்; நான் மாருதியை (அனுமன்) மறக்கவில்லை. அவன் எதைக் கொடுத்தாலும் வாங்க மாட்டான். அவன் எவ்வளவு விலை உயர்ந்த பொருளானாலும் அதைப் பொருட்படுத்தமாட்டான்” என்றார்.

சீதைக்கு அந்த பதில் திருப்தி தரவில்லை. தன் கழுத்தில் இருந்த முத்து மாலையை எடுத்து அனுமனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அனுமன் ஒரு சந்தேகப் பார்வையுடன் அதை வாங்கிக் கொண்டார்.

எல்லோர் முன்னிலையிலும் ஒவ்வொரு முத்தாகக் காதில் வைத்துக் கேட்பது, சில முத்துக்களைக் கடித்துச் சுவைப்பது – என்று மாறி மாறி செய்தார். சீதைக்கு ஒன்றும் புரியவில்லை. சரிதான்! குரங்கு புத்தியைக் காட்டிவிட்டது என்று நினைத்து, அனுமனே அது முத்து மாலை என்றாள்.

அனுமன் மிகப் பணிவுடன் சொன்னான்: அன்னையே எனக்குத் தெரியும். எனக்கு முத்து வைரம் எல்லாவற்றையும் விட ராம நாமமே உயர்ந்தது. சில முத்துக்களில் மட்டுமே ராமனின் திரு நாமம் ஒலிக்கக் கண்டேன். அவைகளைப் பத்திரமாக வைத்துவிட்டு, ஏனையவற்றைச் சுவைத்துப் பார்த்தேன்” என்றார்.

இந்த பதிலும் சீதைக்குத் திருப்தி தரவில்லை. சீதையின் முகக் குறிப்பால் எண்ணத்தைக் கண்டு பிடித்த சொல்லின் செல்வன் ஆஞ்சநேயன், அன்னையே, உங்கள் சந்தேகத்தை நீக்குகிறேன். இதோ பாருங்கள்; எனது முடிகளில் ஒன்று (ரோமம்). இதை ராமனுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று கீழே போட்டார். சீதை அதைத் தன் காதருகே கொண்டு சென்றபோது ராம நாமம் அதிலிருந்து ஒலிக்கக் கண்டு வியந்தாள்.

இந்தக் கதையைச் சொன்ன பிறகே சத்திய சாய் பாபா அந்த முத்து மாலையை வரவழைத்தார். அங்கிருந்த மாணவர்களிடம் அதைக் கொடுத்து பரிசீலிக்க்ச் சொன்னார். அவர்கள் பரிசோதித்ததில் பல முத்துக்களின் மீது அனுமனின் பல்தடம் தெரிந்தது. பின்னர் மாலையை வாங்கி அது வந்த வழியிலேயே மாயமாய் மறையும்படி செய்தார்.

–ரேடியோ சாய் வழங்கிய செய்தி.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் நமக்கு அளிக்கும் செய்தி: சாணியானாலும், முடியானாலும் இறைவன் நாமத்தால் அவைகளும் அந்த சக்தியைப் பெறுகின்றன.

மேலும் இரண்டு கதைகளை நாளை காண்போம்.