வறுமையை ஒழிப்போம்; அக்டோபர் 17- வறுமை ஒழிப்பு தினம் (Post No.10,220)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,220

Date uploaded in London – 17 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சென்னையிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் கோகுலம் கதிர் இதழில் அக்டோபர் 2021 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

உலகிலிருந்து வறுமையை ஒழிப்போம்; அக்டோபர் 17- வறுமை ஒழிப்பு தினத்தின் அறைகூவல்!

ச.நாகராஜன்

“நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் அது எல்லையை மாற்றும், அது வேண்டாம்! ஆனால் ஏழ்மையின் மீது போர் தொடுத்தால் அது மனித குலத்தின் தொல்லையை மாற்றும்!அதைச் செய்வோம்!!”

தமிழர் தம் அறிவுச் செல்வமான ஔவை மூதாட்டி, ‘கொடியது எது’ என்று கேட்ட போது கூறிய வார்த்தைகள் பொருள் பொதிந்தவை. எந்தக் காலத்திற்கும் பொருந்துபவை.                    “கொடியது கேட்கின் நெடிய வெவ் வேலோய் ! கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை” என்கிறார் ஔவையார். உலகில் இன்றுள்ள ஜனத்தொகை மொத்தம் 780 கோடி. இதில் பத்து சதவிகிதம் பேர் இன்றும் வறுமையில் வாடுகின்றனர்.

வறுமை என்பதை எப்படி வரையறுப்பது? ஒரு மனிதன் இந்தப் பூவுலகில் உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளை இழந்து வாழ்வதே வறுமை எனச் சுருக்கமாகக் கூறி விடலாம். உணவு, உடை, உறைவிடம், குடிக்க பாதுகாப்பான நல்ல நீர், கல்விக்கான வாய்ப்பு, வாழ்க்கையில் சமூக மதிப்புடன் வாழ்தல் ஆகியவை ஒவ்வொருவருக்கும் இருந்தால் வறுமை இல்லை என்று பொருள். இந்த நிலையை 2030க்குள் எட்டி விட வேண்டும் என்று ஐ.நா. உள்ளிட்ட நிறுவனங்களும் சமூக ஆர்வலர்களும் விரும்புகின்றனர்.  உலகில் மொத்தம் 3 சதவிகிதம் தான் வறுமை இருக்கிறது என்ற நிலையை அடைந்தால் கூட போதும் என்பதே இன்றைய குறிக்கோள்!

ஒரு  குடும்பத்தின் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத வறுமை முழு வறுமை என்று சொல்லப்படுகிறது. ஒப்பீட்டு வறுமை என்பது இரு நிலைகளை வைத்து ஒப்பிட்டு ஏற்றத் தாழ்வை நிர்ணயித்து உன்னிடம் இருப்பதை விட என்னிடம் இருப்பது குறைவு என்று ஒப்பிட்டு உரைப்பதாகும். இதில் முழு வறுமை முதலில் நீக்கப்பட வேண்டும் என்பதே உலகின் இன்றைய குறிக்கோள்.

அமெரிக்கா, ஸ்விட்ஸர்லாந்து, சிங்கப்பூர், அரபு நாடுகள் உள்ளிட்டவை செல்வச் செழிப்புள்ள நாடுகளாக இருக்கும் போது ஆப்பிரிக்க நாடுகளில் (புருண்டி, மத்திய ஆப்பிரிக்கா, காங்கோ, மலாவி, நைஜீரியா, மொஜாம்பிக், லைபீரியா, தெற்கு சூடான், கொமொரோஸ், மடகாஸ்கர் உள்ளிட்ட) பலவும், இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளும் வறுமையை ஒழிக்க வேண்டிய வறுமை நிறைந்த நாடுகளாக இன்று உள்ளன.

வறுமை எவ்வளவு கொடுமை என்பதை ஒவ்வொரு மனிதனும் அவசியம் உணர வேண்டும். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என்பது போல நைஜீரியா திரைப்படத் துறையை நோலிவுட் என்றும் ஜிம்பாப்வே திரைப்படத் துறையை ஜோலிவுட் என்றும் கூறுகின்றனர்.இங்கிருந்து வெளியாகியுள்ள பல திரைப்படங்கள் (The First Grader -2010 – Kenya உள்ளிட்ட ஏராளமான படங்கள்) வறுமையின் கோரத்தைக் காண்பிக்கும் போது உள்ளம் உருகாதவர்கள் இருக்க முடியாது.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை                                                                                  தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்                                                                               கசிவந்த சொல்லயர் மேல் காமுறுதல் பத்தும்                                                                                      பசி வந்திடப் பறந்து போம்

என்ற ஔவையின் வாக்கு அப்படியே திரைக்காட்சிகளாக மிளிர்கின்றன. வறுமையில் குழந்தைகளும் பெண்களும் வாடி வதங்கும் காட்சிகள் திடமான மனத்தையும் கலங்க வைக்கும்.

ஒரு நாளைக்கு 183 ரூபாய் (இரண்டரை அமெரிக்க டாலர்) வருமானம் கூட இல்லாமல் உலகின் பாதி ஜனத்தொகையினர் (780 கோடியில் பாதிப் பேர்) வாழ்கின்றனர். 130 கோடி பேருக்கோ ஒரு நாளைக்கு 92 ரூபாய் (ஒண்ணே கால் அமெரிக்க டாலர்) தான் வருமானம். 9 பேர் உள்ள ஒரு குடும்பம் இரு அறைகளே உள்ள ஒரு கூரை வீட்டில், மண் தரையில் ஆங்காங்கே வாழ்வதையும் உலகெங்கும் பார்க்க முடிகிறது.

100 கோடி குழந்தைகள் வறுமையில் வாழ்கின்றனர். ஒரு நாளைக்கு 22000 குழந்தைகள் வறுமையினால் இறப்பதாக யுனிசெஃப் (UNICEF) தெரிவிக்கிறது. 75 கோடி பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் டயரியா உள்ளிட்ட வியாதிகளால் ஒரு நாளைக்கு 2300 பேர் உலகில் இறக்கின்றனர்.

இதைப் போக்க :

  1. ஊடகங்களும் தனி மனிதர்களும் நிறுவனங்களும் இணைந்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தல் வேண்டும்.

2) ஏழ்மையில் வாடும் ஒரு குழந்தைக்கேனும் ஆகும் கல்விச் செலவை வசதியுள்ளோர் தனி மனிதனாக இருந்து தம் தம் பொறுப்பில் ஏற்க முன் வர வேண்டும்.

3) பணமாக உதவி அளிக்க முடியாதோர் புத்தகமாகவோ, உணவுப் பொருள்களாகவோ தானமாகக் கொடுத்து முடிந்த அளவில் ஏழ்மையை ஒழிக்கலாம்.

4) பெண்களை இழிவு படுத்தாமல் அவர்களுக்கான சமூக நீதியை உறுதி செய்து ஆணுக்குப் பெண் சமம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

5) உலகளாவிய விதத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்

6) அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதி, நல்ல நீர் கிடைக்கும் தன்மை ஆகியவற்றை பகுதி வாரியாக உறுதி செய்ய வேண்டும்.

7) கல்வி அறிவில்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். யுனிசெஃப்பின் கணக்கீட்டின் படி இன்று 100 கோடி பேருக்கு எழுத்தறிவு இல்லை.

வறுமை ஒழிப்பு என்பது ஒவ்வொரு மனிதனுக்குமான கடமை என்ற விழிப்புணர்வே இன்றைய அவசியத் தேவை; அவசரத் தேவையும் கூட!

வறுமைக்கான காரணங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதமாக அமைந்துள்ளன. ஓரிடத்தில் குடிநீர் இல்லை என்றால் இன்னொரு இடத்தில் போரின் பாதிப்பினால் மக்கள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

ஒரு நாட்டில் பெண்களுக்கான சமூக நீதி மறுக்கப்படுகிறது என்றால் இன்னொரு இடத்தில் எதிர்பாரா இயற்கைச் சீற்றங்கள், சீதோஷ்ண நிலை மாறுதல் ஆகியவை பாதிப்பை உருவாக்குகின்றன.

ஊட்டச் சத்து இல்லாமல் குழந்தைகள் நோஞ்சான்களாக ஓரிடத்தில் இருக்கும் போது தரமான கல்வி இல்லாமல் இன்னொரு இடத்தில் குழந்தைகள் வாடுகின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஜனத்தொகைப் பெருக்கம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

இப்படிப் பல காரணங்கள்! இவை அனைத்தையும் ஒட்டு மொத்தமாக நீக்குவதே வறுமை ஒழிப்பு நாளின் உலகளாவிய நோக்கமாகும். அந்த நாள் தான் அக்டோபர் 17.

1987இல் அக்டோபர் 17ஆம் தேதியன்று பாரிஸில் ஒரு லட்சம் மக்கள் ஒன்று கூடி வறுமையை ஒழிக்க உறுதி பூண்டனர். அந்த நாளை ஐ.நா. 1992ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக உலக வறுமை ஒழிப்பு நாளாக அறிவித்தது.

கொடிய வறுமை மனித குலப் பாதுகாப்பிற்கான பொதுவான அச்சுறுத்தலாகும். குற்றங்களுக்கும் தீவிரவாதத்திற்கும் அடிப்படை தாள முடியாத வறுமையே.

செய்யாத ஒரு குற்றத்திற்கான தண்டனையே வறுமை.

நன்கு ஆளப்படும் ஒரு நாட்டில் உள்ள வறுமை அந்த நாட்டின் வெட்கக் கேடு.

ஒரு நாட்டின் வரலாற்றை செல்வந்தர்கள் மட்டும் எழுதவும் கூடாது; பழிகளை மட்டும் ஏழைகள் மீது அவர்கள் போட்டு விடவும் கூடாது.

ஆகவே தான் வறுமை இல்லாத நாட்டைக் கனவு கண்ட திருமூலர் அன்றே சொன்னார் ‘யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி’ என்று கூறி உண்ணும் போது அடுத்தவரை நினைத்து அவருக்கும் ஒரு பிடி கொடு என்றார். அத்துடன் அவர் கூடவே சொன்னார்:

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே

ஏழைக்கு ஒன்றைத் தரும் போது அது இறைவனுக்கும் சேரும்; ஆகவே இருவரையும் அது சேர்வதால் இரட்டிப்பு பலனைத் தரும் என்பது அவர் வாக்கு.

‘தேடு கல்வி இலாததோர் ஊரை தீயினுக்கு இரையாக மடுத்தல்’ என்றார் மகாகவி பாரதியார். ஆக கல்வியும், உணவும், நல்ல நீரும் இருப்பதை ஒவ்வொரு மனிதனும் உறுதிப் படுத்த சூளுரை எடுக்க வேண்டிய நாளாக அக்டோபர் 17 அமைகிறது.

வறுமை இல்லாத உலகை உருவாக்குவோம். மனித குலம் என்றும் வளமுடன் நீடித்து இருக்க நமது பங்கை ஆற்றுவோம்!

**

tags- –வறுமையை ஒழிப்போம், அக்டோபர் 17, வறுமை ஒழிப்பு,