Hindu Bride entering the house with her right foot stepping first
மணமகளே, மணமகளே வா,வா! உன் வலது காலை எடுத்துவைத்து வா வா!!
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1397; தேதி 8 நவம்பர், 2014.
தமிழ்நாட்டில் திருமணப் பந்தல்களில் அடிக்கடி ஒலிக்கும் தமிழ் திரைப்படப் பாடல் “மணமகளே, மணமகளே வா வா! உன் வலது காலை எடுத்து வைத்து வா வா!!” — ஏன் வலது காலை எடுத்து வைக்க வேண்டும். இடது கால் கூடாதா?
உலகம் முழுதும் வலதுசாரிகளுக்கு கொஞ்சம் மதிப்பு அதிகம். இந்தக் கொள்கையை உலகம் முழ்ழுதும் பரப்பியோர் இந்துகளாகத்தான் இருக்க வேண்டும் என்பது கீழ்கண்ட விஷயங்களால் தெரிகிறது:
1.கடிகாரம் ஏன் வலமாகச் சுற்றுகிறது? இந்துக்கள் ஏன் கோவிலை வலமாகச் சுற்றுகிறார்கள்? இரண்டையும் ஒப்பிட்டால் நாமே கடிகாரத்தை வலமாகச் சுற்றவைத்தவர்கள் என்றும் தோன்றுகிறது. இந்துக்கள் எந்த சுப காரியத்தையும் வலப் பக்கமாகவே செய்வர்.
2.இடது கையை — சுத்தம் செய்யப் பயன்படுத்துவதால் மட்டும் வலது கைக்குப் பெருமை என்று எண்ணி விடக்கூடாது. சிலர் பிறப்பிலேயே இடது கையை அதிகமாகப் பயன்படுத்துவர். இப்படிப்பட்ட இடது கைக் காரர்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டனர். இடது கையரைவிட வலது கைக்காரர்கள் ஒன்பது ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ்கிறார்கள். சர்வே, புள்ளி விவரம் எதுவும் நடத்தாமலேயே இந்துக்களுக்கு அந்தக் காலத்திலேயே இந்த விஞ்ஞான உண்மை தெரிந்திருக்கிறது.
3.இந்துக்கள் வீட்டில் யாராவது இடது கைப்பழக்கத்தோடு பிறந்து விட்டால் அவர்களை அதட்டி மிரட்டி வலது கைக்காரர்களாக மாற்றி விடுவர். வலது காலை எடுத்து வைத்துதான் கல்யாணப் பெண் வீட்டுக்குள் வரவேண்டும். கிரஹப் ப்ரவேசம், பூஜைகள் எல்லாவற்றிலும் எதையும் வலது புறமகவே செய்ய வேண்டும்
4.பிராமணச் சிறுவர்கள் செய்யும் சமிதாதானம், எல்லோரும் செய்யும் சந்தியா வந்தனம் ஆகியவற்றிலும் வலது கைப்புறமாகவே முத்திரைகள், பொட்டு வைக்கத் துவங்குவர்.
5.தமிழன் கண்ட அதிசயம்
சங்க இலக்கியத்தில் அடிக்கடி ஒரு உவமை வரும். அதாவது புலியால் தாக்கப்பட்ட மிருகம் வலப் பக்கம் விழுந்தால்தான் புலி சாப்பிடுமாம். இதை பத்துப் பதினைந்து புலவர்கள் பாடி விட்டார்கள்! ஆக மணப் பெண்ணை வலது காலை வைக்கச் சொன்ன தமிழன், காடுகளில் புலியையும் கவனித்திருக்கிறான் (காண்க புறம். 190, அகம் 238, 252).
6.இந்துக்கள் கோவில்களுக்குப் போனாலும், உணவகங்களுக்குப் போனாலும் வலது கையை மட்டுமே பயன்படுத்துவர். அதே போல சாது சந்யாசிகளும், கோவில் குருக்களும் கூட வலது கை மூலம் மட்டுமே எல்லாம் செய்வர்.
7.ஒரே ஒரு இடத்தில் மட்டுமே – மயானத்தில் மட்டுமே—சடலத்தை வலம் வராமல் – இடமாக வருவர். இதே போல பிராமணர்கள் தர்ப்பணம் செய்கையில் இடது தோளின் மீதிருக்கும் பூணூலை வலது தோளில் மாற்றி (அதாவது பூணூல் இடப்பக்கமாக சரியும்படி) நீர்க்கடன் செலுத்துவர். இந்துக்கள் செய்யும் பூஜைகளில் பெண்கள் எப்போதும் வலப்பகம் நிற்க வேண்டும்.
8. இன்னும் ஒரு இடம் இறைவனே தனது இடப்பக்கத்தை உமை அம்மைக்குக் கொடுத்ததாகும். அர்த்த நாரீஸ்வரன் கதைதான் பைபிளில் ஆதாம்—ஏவாள் கதையாக வந்தது. இடப்பக்க எலும்பை உடைத்து பெண்ணை உருவாக்கினான் இறைவன். சம்ஸ்கிருதத்தில் பெண்ணுக்கு வாமா (இடது) என்ற பெயரும் உண்டு. (காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் சொற்பொழிவில், வேதத்தில் உள்ள ஒரு கதைதான் இது என்பார். ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் இருந்தன. ஒரு பறவை பழம் சாப்பிடாமல் ஆனந்தமாக இருந்தது மற்றொன்று பழத்தைச் சாப்பிட்டது என்பது வேதக் கதை–. இதுவே ஆடம் எனபவர் ஆப்பிள் சாப்பிட்டகதையாக வந்தது. ஆத்மா என்பது ஆதாம் என்றும் ஈவ் என்பது ஜீவ்+ஆத்மா= ஜீவாத்மா என்றும் மாறியது.)
9.கிரேக்க கவிஞர் ஹோமர் எழுதிய ஆடிஸியில் பல இடங்களில் வலது பக்கப் பெருமையை எழுதி இருக்கிறார். ஒரு கருடன் வலப் பக்கமாகப் பறந்தவுடன் கடவுளே நல்ல சகுனம் காட்டிவிட்டார் என்று பாடுகிறார். இது போலப் பல இடங்களில் வலது என்பது அதிர்ஷ்டம் என்று எழுதுகிறார்.
வலப் பக்கம் இலை வந்தால், கணவர் நல்லவர்!
10.இங்கிலாந்தில் ஒரு குறிப்பிட்ட செடியை பூஞ்சட்டியில் வைத்துப் பெண்கள் தொங்க விடுவர் என்றும் அதன் இலைகள் வலப் பக்கம் திரும்பினால் கணவர் நல்லவர் என்றும், இலைகள் இடது பக்கம் திரும்பினால் கணவன் மற்ற பெண்களுடன் தொடர்பு கொண்டவன் என்றும் நம்பினர். இந்தச் செடிக்கு “மிட் சம்மர் மென்” என்று பெயர். ஆக ஐரோப்பவிலும் இந்த நம்பிக்கை இருந்தது தெரிகிறது.
11. வால்மீ கிராமாயண யுத்த காண்டத்தில் ராமன் சொல்கிறான்: இதோ எனது வலது கண் துடிக்கிறது. நான் யுத்தத்தில் வெற்றி பெறுவேன் என்கிறார். ஆண்களுக்கு வலது கண் துடித்தால் அதிர்ஷ்டம். பெண்களுக்கு வலது கண் துடித்தால் கெட்டது. உத்தர காண்டத்தில் சீதை புலம்புகிறாள்: என் வலது கண் துடிக்கிறது சகுனங்கள் சரியில்லை. எனக்கு தீங்கு நடக்கப்போகிறது”. அவள் சொன்னது சரிதன் — இதற்குப்பின், அவளை ராமன் காட்டிற்கு அனுப்பிவிட்டான்.
இதிலும் விஞ்ஞான உண்மை இருக்கலாம். பெண்களுக்கு வலப் பக்க மூளையும் ஆண்களுக்கு இடப்பக்க மூளையும் பலம் வாய்ந்தவை என்பது மருத்துவ அறிவியல் காட்டும் உண்மை. ஆனால் வலது மூளை உடலின் இடது பக்கத்தையும் இடது மூளை உடலின் வலது பக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது என்பதையும் மருத்துவ நூல் கூறுகிறது. ஆகவே வால்மீகி ராமயணம் சொல்வது உண்மையே.
12.இதே போல ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும், லத்தின் மொழியிலும் வலதைப் பாராட்டியும் இடது புறத்தை இகழ்ந்தும் பல பல மரபுத் தொடர்கள் உள்ளன ( எனது ஆங்கிலக் கட்டுரையில் முழு விவரங்களும் உள்ளன.)
13.இந்துக்கள் கிழக்கு நோக்கி நின்று பூஜை செய்வர். பிறகு வலது பக்கம் திரும்புவர். அது தெற்கு திசை — தட்சிண திசை. ஆகையால் இப்படி வலப்பக்கம் செல்வது ப்ர+தக்ஷிணம் எனப்படும்.
You have to use only right hand for eating
நீங்கள் இடதா? வலதா?
14.வாமாசாரம் என்பது இந்துக்களில் ஒரு வழிபடும் முறை. இதற்கு இடது புற முறை என்று பெயர். அவர்களுக்கு ஐந்து “ம” முக்கியம். அதாவது மது, மாது, மத்ஸ்யம் (மச்சம்=மீன்), முத்ரா (முத்திரைகள்), மைத்துனம் (செக்ஸ்) என்பன ஆகும். ஆகையால் இது கெட்ட பெயர் எடுத்தது . ஏனெனில், இந்த வழியும் கடவுளை நோக்கி அழைத்துச் செல்லுமானாலும், பாதியில் வழுக்கி விழும் வாய்ப்புகள் அதிகம்.
15.முடிவுரை:–
1.கிரேக்க, லத்தீன், பிரெஞ்சு, ஆங்கில மொழிகளில் உள்ள சொற்றொடர்கள் உலகம் முழுதும் இந்த வழக்கம் இரூப்பதைக் காட்டினாலும் இந்து மத நூல்களில் ஏராளமான குறிப்புகள் இருப்பதாலும் இன்று வரை நாம் மட்டுமே இதைப் பயன்படுத்துவதாலும் நாமே இதைத் துவக்கியவர்கள் என்று சொல்லலாம்.
2.வலது கால், வலது கை ஆகியவற்றின் பெருமைதனைக் கூறும் சொற்றொடர்கள் ஐரோப்பிய மொழிகளில் இருப்பதும் கருடன் பற்றிய குறிப்புகள் இருப்பதும் நம்முடைய தொடர்பைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.
3.வலம்புரிச் சங்கு போன்ற புனிதப் பொருட்களும் வலதின் மகிமையை உணர்த்தும்
contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.