DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Research Article: Written by ச. நாகராஜன்
Date: 14th September 2015
Pot No: 2157
Time uploaded in London :–காலை 10-02
(Thanks for the pictures)
குறள் தெளிவு
ச.நாகராஜன்
வள்ளுவர் தபால் தலை படம்
குருடன் ரோஜா செடியைப் பார்ப்பது போல!
வள்ளுவரின் திருக்குறளுக்கும் வால்டேருக்கும் சம்பந்தம் இருக்கிறதா? வியப்பாக அல்லவா இருக்கிறது.
சற்றுப் பொறுங்கள்! கட்டுரையின் கடைசி பகுதியில் தெளிவு பிறக்கும்!
ஒரு சமயம் வால்டேர் (Voltaire) அவரது நண்பரான ஷெர்லாக் (Sherlock) என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தார். ஷெர்லாக் அவரிடம், “வெளிநாட்டுக்காரர்கள் ஷேக்ஸ்பியரை அனுபவித்து ரஸிக்க முடியாது” என்றார். உடனே வால்டேர், “ஆமாம், அது உண்மைதான்! அவரது படைப்புகளை மொழிபெயர்ப்பின் மூலமாகவே அவர்கள் படிக்க வேண்டியிருக்கிறது. அதில் பிழைகள் ஏராளம் உள்ளன. அத்தோடு மூலத்தில் இருக்கும் அழகுகள் அத்தனையும் போய் விடுகின்றன. ஒரு குருடனை அவன் கைகளை ரோஜா செடியின் முள்கள் குத்திக் கொண்டிருக்கும் போது ரோஜாவின் அழகைப் பார்த்து அனுபவி என்று வற்புறுத்த முடியாது” என்றார்,
வால்டேரின் இந்தக் கூற்று வள்ளுவரின் குறளுக்கும் நன்கு பொருந்தும்.அருமையான நூல் என்று திருக்குறளைப் பல மொழிகளில் மொழி பெயர்த்தாலும் அதன் அழகையும் அருமையையும் ஆழ்ந்த பொருளையும் தமிழை அறியாதவர்கள் அனுபவித்து ரஸிக்க முடியாது.
வள்ளுவர் நாணயம் படம்
ஆய்விற்காக ஒரே ஒரு குறள்
எடுத்துக் காட்டாக ஒரே ஒரு குறளை மட்டும் எடுத்து அலசி ஆராய்வோம்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது (குறள் 45)
இந்தக் குறளுக்கு G.U.Pope மொழியாக்கம் செய்த ஆங்கிலப் பெயர்ப்பு இது.
If love and virtue in the household reign,
This is of life the perfect grace and gain.
If the married life possess love and virtue, these will be both its duty and reward. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் மொழி பெயர்ப்பு சரி தான்.
ஆனால் வள்ளுவரோ தனது குறளை குறள் முழுவதும் உள்ள தேர்ந்தெடுத்து அமைக்கப்பட்ட சொற்களோடு ஒரு மர்மமான அதிசயமான முறையில் நெய்து இருக்கிறார்.
ஒரு குறளை மேலெழுந்தவாரியாகப் படித்துப் பொருளை அர்த்தம் செய்து கொண்டால் அதில் உள்ள ஆழத்தை அறிய முடியாது. அதாவது ஆழ்ந்திருக்கும் கவி உளத்தைக் காண முடியாது..
அன்பு, அறன், உடைத்து ஆயின், இல், வாழ்க்கை, பண்பு, பயன், அது – இந்த ஒன்பது சொற்களையும் அவர் குறளில் எங்கெங்கு எப்படிப் பயன்படுத்தியுள்ளார் என்பதைப் பார்க்க வேண்டும். இல் என்பதை இல்லம் என்றும் பயன்படுத்தலாம் இல்லை என்றும் பயன்படுத்தலாம். இல்லை என்ற பொருளில் அவர் பயன்படுத்தி இருந்தால் இந்தக் குறளுக்குத் தேவையற்ற இல்லை என்று வரும் குறள்களை நீக்கி விடலாம். இப்படி பொருத்தமான அர்த்தமுள்ள குறள்களைத் தனியே ஒப்பு நோக்கித் தொகுக்க வேண்டும். பொருத்தமுள்ள எல்லா குறள்களையும் பொருத்திப் பார்த்தால் பிரம்மாண்டமான அர்த்தம் வெளி வரும்.
அதாவது குறளில் சொல்லப்பட்டிருப்பது பனிக்கட்டியின் முனை போல இருக்க, உண்மையான பொருள் மறைந்திருக்கும் பிரம்மாண்டமான பனிக்கட்டியாக இருக்கிறது குறள் பாக்களில்.
வால்டேர் – அஞ்சல்தலை
772 இடங்களைப் பார்க்க வேண்டும்!
எடுத்துக் காட்டாக மேலே எடுத்துக் கொள்ளப்பட்ட குறளில் உள்ள வார்த்தைகளை ஆராய்வோம்.
அன்பு என்ற வார்த்தை 23 இடங்களில் வருகிறது.
அறன் என்ற வார்த்தை 21 இடங்களிலும் அறம் என்ற வார்த்தை 20 இடங்களிலும் அறத்தான் என்பது ஒரு இடத்திலும் அறத்திற்கு -2, அறத்தின் -2 அறத்து – 2, அறவோர் 1 இடங்களிலும் வருகிறது.
உடைத்து 34 இடங்களிலும் ஆயின் என்பது 35 இடங்களிலும் வருகிறது.
இல் என்ற வார்த்தை மட்டும் 118 இடங்களில் வருகிறது. வாழ்க்கை 19 இடங்களில் வருகிறது.
பண்பு 29 இடங்களிலும், பண்பின் – 3 இடங்களிலும் பண்பினார்கள் – 1 இடத்திலும் வருகிறது.
பயனும் என்பது 31 இடங்களில் வருகிறது.
அது என்ற வார்த்தை மட்டும் திருக்குறளில் எத்தனை இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியுமா?
430 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சுமாராக இதையெல்லாம் கூட்டிப் பார்த்து ஆராய ஆரம்பித்தால் 772 இடங்களை நாம் ஆய்ந்து ஒரு குறளின் உண்மையான ஆழ்ந்த பல்வேறு அர்த்தங்களைக் கண்டு பிடிக்க வேண்டும். அத்தோடு இதையொத்த குறள்கள், இதற்கு விரிவை வழங்கும் குறள்கள் போன்ற பல்வேறு வகைகள் வேறு உண்டு. தமிழனாகப் பிறந்த பேற்றை எண்ணி மகிழ்ந்தவாறே, இந்த ஒரு குறளை மட்டும் ஆராய சற்று நேரத்தை அமைதியாகச் செலவழித்தால் குறளின் கட்டுக் கோப்பும் இதர அருமைகளும் தெரிய வரும்!
இன்னும் மறைந்திருக்கும் பொருளை வேறு ஆய்ந்து உணர வேண்டும்.
ஆகவே தான் இதற்குத் தமிழ் மறை என்று பெயர் வைத்தனர்.
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் என்ற ஔவையாரின் வாக்கிற்கு அர்த்தம் கண்டு பிடிப்பதற்கு வேறு, இன்னும் எவ்வளவு ஆராய்ச்சி நடத்த வேண்டுமோ!
ஒன்று மட்டும் நிச்சயம்! ஷேக்ஸ்பியரைப் பற்றி வால்டேரின் கூற்றில் ஐயம் இருக்க முடியாது. ஏனென்றால் ஒரு மேதையைப் பற்றிய இன்னொரு மேதையின் கணிப்பு அது. அதில் தவறு இருக்க முடியாது. அதையே ஒரு அடிப்படையாகக் கொண்டு திருக்குறளை நோக்கினால் திருக்குறளுக்கு மொழிபெயர்ப்பு எடுபடாது என்பதில் ஐயமே இல்லை.
வால்டேரின் கொள்கை வள்ளுவர் குறளுக்கும் சிறப்பாகப் பொருந்தும் என்பது தான் அவருக்கும் குறளுக்கும் உள்ள சம்பந்தம்! குறளைத் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் – முழுவதுமாக!
காசுகளில் வள்ளுவர் படம்
தமிழர்கள் பாக்கியசாலிகள்
தமிழ் தெரிந்தவர்கள் உலகிலேயே கொடுத்து வைத்த பாக்கியசாலிகள்!
தெய்வத் தமிழ் மூலம் திருக்குறளைப் படிக்கலாம்; திருக்குறள் மூலம் தெய்வத் தமிழைத் தொழுது உய்யும் வழி அறியலாம்.
வாழ்நாள் முழுவதற்குமான துணையாக இலங்கும் ஒரே வழிகாட்டி நூல் அற்புதத் தமிழ்க் குறளே!
குறளே தான்!
************
You must be logged in to post a comment.