மோக்ஷம் அடைவது எப்படி? வஸிஷ்டர் கூறிய கதை (Post. 10,592)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,592
Date uploaded in London – – 24 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

யோக வாசிஷ்டம்
மோக்ஷம் அடைவது எப்படி? வஸிஷ்டர் கூறிய விதஹவ்யன் கதை!

ச.நாகராஜன்
மோக்ஷம் அடைவது எப்படி? அது எங்கே இருக்கிறது?
வஸிஷ்டர் தெளிவாக பதிலைத் தருகிறார்.


மோக்ஷம் என்பது சுவர்க்கத்திலும் இல்லை, பாதாளத்திலும் இல்லை அல்லது பூமியிலும் இல்லை.
அது பிரக்ஞையைப் பொறுத்து அமைந்துள்ள ஒன்று.
அது தான் ஆத்ம ஞானம்!
மோக்ஷத்தை விரும்பும் ஒருவன் ஆசைகள் வசப்படுகிறான், எண்ணங்கள் வசப்படுகிறான், ஆகவே அவனுக்கு பந்தம் என்னும் தளை ஏற்படுகிறது.

ஆகவே வஸிஷ்டர் மிகத் தெளிவாகக் கூறுகிறார் -“ மோக்ஷம் அடைய வேண்டும் என்ற ஆசையைக் கூட விட்டு விடு” என்று!

வஸிஷ்டர் ராமருக்கு இது சம்பந்தமாக ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
விதஹவ்யன் என்ற ஒருவர் ஆத்ம ஞானம் பெற விரும்பினார். அதற்காக மலைகளுக்குச் சென்றார். மனம் மற்றும் உடல் சம்பந்தமான உபாதைகளிலிருந்து விடுபட இதுவே சரியான வழி என்று அவர் நினைத்தார்.
சாஸ்திரங்கள் கூறிய படி என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அந்தக் கர்மங்களை எல்லாம் ஒன்று விடாமல் செய்தார். ஆனால் அவருக்கு சாந்தி கிடைக்கவில்லை.
அலைபாயும் மனம் அப்படியே தான் இருந்தது.


புலன்களை அடக்கினார். மனத்தை அடக்கினார். ஒருவாறாக கடைசியில் சமாதி நிலையில் இருக்க அவரால் முடிந்தது. சமாதி நிலையில் நெடுங்காலம் இருந்தார்.
இதனால் அவர் தனது உடல் இறுகிப் போய்விட்ட நிலையை அடைந்திருப்பதை உணர்ந்தார். அவரால் நகரக் கூட முடியவில்லை.
தான் முயற்சி செய்து எப்படியாவது நகர வேண்டுமா அல்லது இப்படியே இதே நிலையில் தொடர்ந்திருக்க வேண்டுமா – அவருக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்.
விதஹவ்யனைப் பார்த்த சூரிய பகவான் அவரது பிரச்சினை என்னவென்பதைப் புரிந்து கொண்டார்.


அவர் மீது பிரகாசமான தன் ஒளியைப் பாய்ச்சினார். அவரை அவரது பிரச்சினையிலிருந்து விடுவித்து அவரது உடலை அவர் நகர்த்துமாறு செய்தார்.
விதஹவ்யரால் இப்போது நகர முடிந்தது.
நேராக மலையிலிருந்து இறங்கி மக்கள் அனைவரும் இருக்கும் இடத்திற்குச் சென்றார். இப்போது மைத்ரி என்னும் அனைவருடனுமான சம பாவ நட்புக் கொண்டு எல்லோருடனும் பழக முடிந்தது. அத்துடன் கருணை என்னும் அளப்பரிய இரக்கத்துடன் அனைவருடன் பழக முடிந்தது.
அவர் விருப்பம், ஆசை, வெறுப்பு, சந்தோஷம், துக்கம் ஆகிய அனைத்து நிலைகளையும் கடந்தார்.


வஸிஷ்டர் இந்தக் கதையைக் கூறியதோடு இது சொல்லும் நீதியை விளக்கலானார்.
சிலர் கஞ்சா, அபினி போன்ற போதை மருந்துகளை உட்கொண்டு மனதை அடக்க முயல்வதை வஸிஷ்டர் வெகுவாகக் கண்டித்தார்.
இதன் மூலம் மனதை சாந்தி அடையச் செய்யவோ அல்லது அடக்கவோ முடியாது என்று தெள்ளத் தெளிவாக அவர் கூறினார்.
அத்துடன் சில சித்திகளை அடைந்தவுடன் அதை அனைவருக்கும் காட்டும் விருப்பத்தையும் அவர் கண்டித்தார். அந்த அதீத சக்திகளைக் காண்பிக்கக் கூடாது என்று அவர் அறிவுரை கூறினார்.
ஹத யோகம் மூலம் உடலைக் கட்டுக்குள் கொண்டு வரலாமே தவிர மனதை அடக்கவே முடியாது என்றும் அவர் கூறினார்.

உலகியல் என்பது உடலிலும் மனம் என்னும் கருவியிலும் இருக்கிறது என்று அவர் விளக்கினார். ஆகவே மோக்ஷம் பற்றி எண்ணும் ஒருவன் முதலில் எல்லா வாஸனைகளையும் – ஆசைகளையும் – வெல்ல வேண்டும் என்றார் அவர்.
இது வாஸனா க்ஷயம் எனப்படும்.
வாஸனா க்ஷயம் அடைந்தவுடன் மனோ நாசம் ஏற்படும்.
அலைபாயும் மனம் இருக்காது.
ஆத்ம விசாரம் செய்யும் ஒருவனின் பாதையே சரியான பாதை என்பது வஸிஷ்டரின் முடிவு.
இந்த விசாரத்தினால், வைராக்யத்துடன் தொடர்ந்து செய்யும் இந்தச் செய்கையால், ஒருவன் படிப்படியாக முன்னேறி மோக்ஷத்தை அடைய முடியும்.
எவன் ஒருவன் அமைதியான மனதுடன் இருக்கிறானோ, எவன் ஒருவன் எல்லா ஆசைகளையும் துறந்து விடுகிறானோ, அவன் ஏழையாக இருந்தாலும் சரி பணக்காரனாக இருந்தாலும் சரி, அவன் உயரிய அந்தஸ்தில் இருந்தாலும் சரி, தாழ்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் சரி, அவன் சந்தோஷத்தை அடைவான்.

ஆக இந்தக் கதை மூலம் ஆத்ம விசாரம் வலியுறுத்தப்படுகிறது.

இதையே பகவான் ரமண மஹரிஷி திருப்பித் திருப்பித் தன்னை அடைந்தவர்களுக்கெல்லாம் சொல்லி வந்தார்.
இதுவே மோக்ஷத்திற்கான ரகசியம்.
யோக வாசிஷ்டத்தில் வரும் 55 கதைகளில் 25வது கதையாக இது அமைகிறது. இது உபசாம பிரகரணத்தில் வரும் கடைசி கதையாக அமைகிறது.


tags — யோக வாசிஷ்டம், மோக்ஷம், வஸிஷ்டர், விதஹவ்யன், கதை,