ஒரு குட்டிக் கதை: மனதுக்கும் சொல்லுக்கும் சண்டை! (Post No.4353)

Written by London Swaminathan

 

Date: 31 October 2017

 

Time uploaded in London- 6-43 am

 

 

Post No. 4353

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

வேதங்களின் துதிப்பாடல்களை அடுத்துத் தோன்றியவை பிராமணங்கள் என்னும் உரைநடை நூல்கள். கிரேக்கர்கள் புத்தகம் எழுதுவதற்கு முன்னரே தோன்றியவை இவை. எல்லாக் கதைகளும் உரையாடல்களும், சங்கேத மொழியில் எழுதப்பட்டிருக்கும். மொழி, சொல் பற்றி 3000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதினார்கள் என்றால், இவர்கள் எவ்வளவு நாகரீக முதிர்ச்சி அடைந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

 

யார் பெரியவர்? யார் சிறந்தவர் என்று மனதுக்கும் வாக்கிற்கும் (வாக்= சொல்) வாக்குவாதம் ஏற்பாட்டது. நானே சிறந்தவன் என்று இரண்டும் கூறின.

மனம் சொன்னது: ஏ, சொல்லே, நான் நினைப்பதைத்தானே நீ பேசுகிறாய். நான் ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்ட பின்னர் தானே நீ அதைச் சொல்ல முடியும்; ஆகையால் நானே உன்னை விடச் சிறந்தவன்; உயர்ந்தவன் — என்றது.

 

வாக்கு சொல்லியது: நீ என்னதான் நினைத்தாலும் நான் சொன்னால்தானே மற்றவர்களுக்குத் தெரியும்; ஆகையால் தகவல் தரும் நானே உன்னைக் காட்டிலும் உயர்ந்தவன் என்றது.

 

 

இரண்டும் தொடர்ந்து வாதாடின; பின்னர் வா, நாம் பிரஜாபதியிடம் (பிரம்மா) முடிவு கேட்போம் என்று புறப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த பிரஜாபதி செப்பினார்: “மனதே பெரியவன்; நீ அது நினைப்பதைச் சொன்னாலும், அதைப்போல, அதைப் பின்பற்றி நடக்கிறாய் அல்லவா? ஆகையால்நீ இரண்டாம் தரம்தான்-

BRAHMA—Picture sent by Lalgudi Veda

இப்படிப் பிரஜாபதி சொன்னவுடன் வாக்கிற்குக் கோபம் வந்தது. “அப்படியா சேதி! நீ என்னை நிராகரித்தாய் அல்லவா? உன்னையும் நான் நிராகரிப்பேன். எங்கு எங்கெல்லாம் யாக யக்ஞங்கள் மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் உன் பெயர் வரும்போது அவர்கள் உச்சரிக்காமல் போகட்டும் -உன் பெயர் என் சொல்லால் பிரகாசிக்கக்கூடாது” என்றது.

 

ஆகையால்தான் வேத மந்திர உச்சாடனத்தில் பிரஜாபதி பெயர் வருகையில் மெல்லிய- சன்னமான குரலில் மந்திரம் சொல்லுகின்றனர்.

 

இந்தக் கதையை ஆழ்ந்து யோசித்தால் நிறைய தத்துவங்கள் விளங்கும்.

 

ஒருவர் சொல்லும் சொல், தேன் போல இருக்கலாம். ஆனால் மனதில் விஷம் வைத்திருக்கலாம். ஆகவே மனதளவில் சுத்தம் வேண்டும்; ஆகையால் மனதே உயர்ந்தது.

 

ஒருவர் பலர் அறிய அழகாக மந்திரங்களைச் சொல்லலாம். ஆனால் அவர் மனது காமம், க்ரோதம், பேராசையால் மூடப்பட்டிருக்கலாம். அவர் சொல்லும் மந்திரத்தை வைத்து அவரை எடைபோட முடியாது. ஆகையால் மனமே பெரியது.

 

இப்படி யோசிக்க யோசிக்க நிறைய விளக்கங்கள் கிடைக்கும்.

 

ஜபம் செய்யும்போதுகூட வாயால் மந்திரத்தைச் சொல்லுவதைவிட மனதால் சொல்லுவது பல மடங்கு பலன் தரும் என்பர் பெரியோர்.

 

ஆக மனமே பெரியது என்பதை நாமும் ஒப்புக்கொண்டு உதட்டளவில் பேசாமல் மனத்தளவில் பேசுவோமாக!

இந்தக் கதை சதபத பிராமணத்தில் உள்ளது.

TAGS:–சதபத, பிராமணம், சொல், வாக்கு, மனம், சண்டை

 

-Subham, Subham–