By London Swaminathan
Post No. 882 Date: 3-3- 2014
Part 2 of Age of Manikkavasagar in Tamil
மாணிக்கவாசகரின் காலம் தேவார மூவருக்கு முந்தியது என்றும் அவருடைய பெயர் சத்தியதாசன் என்றும் ஊர்க் கடவுளரின் பெயரான வேதபுரீஸ்வரர் (வாதவூரர்) மற்றொரு பெயர் என்றும் முதல் பகுதியில் ஆதாரங்களுடன் எழுதினேன். இப்போது மேலும் சில தகவல்களைத் தருகிறேன்.
1.அவர் சம்பந்தருக்கு ஓரிரு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்திருக்கலாம். மாணிக்கவாசகர் மீது அரசாங்கப் பணம் கையாடல் சுமத்தப்பட்டதாலும் அப்போதைய அரசர்கள் சமண மத ஆதரவாளர்கள் என்பதாலும் சம்பந்தர், அப்பர் முதலானோர் அவரைப் பாராட்டுவதைத் தவிர்த்திருக்கலாம்.
2. மாணிக்கவாசகரின் திருவாசகம் கண்டெடுக்கப்பட்டது தேவாரக் கண்டுபிடிப்புக்கும் பின்னர் நிகழ்ந்ததால் சேக்கிழார் முதலானோர் அவரை விட்டிருக்கலாம். எட்டாம் திருமுறையாக திருவாசகம் எப்போது சேர்க்கப்பட்டது என்பதை ஆராய வேண்டும். இவை எல்லாம் ஊகங்களே. இதைவிட வலுவான அகச் சான்றுகளைக் காண்போம்.
3.ஆகமங்கள் பற்றி மாணிக்கவாசர் பாடியதால் அவர் பிற்காலத்தவர் என்பது பசையற்ற வாதம். சம்பந்தருக்கு முந்தைய திருமூலர், ஆகமங்கள் பற்றி நிறைய பாடி இருக்கிறார்.
4. ஆண்டாள் பாடிய திருப்பாவைக்கும் மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவைக்கும் மிக மிக நெருக்கமான ஒற்றுமை இருக்கிறது. பாவை என்பது ஒரு குறிப்பிட்ட வகைப் பாட்டு என்பதால் இப்படி ஒற்றுமை இருக்கலாம் என்பது சரியல்ல. மாணிக்கவாசகர் தனது பாடல்களில் உபநிஷதக் கருத்துக்களை அபரிமிதமாகப் பொழிந்து தள்ளியதை சுவாமி சித்பவானந்தர் போன்றோர் எழுதிய உரைகள் மூலம் அறிகிறோம். ஆனால் ஆண்டாள் ஓர் ‘டீன் ஏஜ் கேர்ள்’ என்பதால் உபநிஷதத்துக்கு இணையான உயர் தத்துவங்களைக் காணமுடியவில்லை. அவர் மிகவும் ‘பிராக்டிகலா’கப் பாடி இருப்பதை பல கட்டுரைகளில் முன்னரே குறிப்பிட்டேன். ஆக, அவருடைஅய நாச்சியார் திருமொழி என்பது திருக்கோவையாரை மனதில் வைத்துப் பாடப்பட்டதாகவும், அவருடைய திருப்பாவை மாணிக்கவாசகரின் திருவெம்பாவையை வைத்துப் பாடப்பட்டதாகவுமே கருத வேண்டியுள்ளது. இரண்டு பாவைகளையும் கையில் வைத்துக் கொண்டு ஒருவர் ஆராய்ந்தால் நான் சொல்லுவது நன்கு புரியும்.
5. மற்றொரு அகச் சான்று பிள்ளையார் பற்றி அவர் எங்கும் பாடாதது ஆகும். அப்பர், சம்பந்தர் முதலியோர் பாடிய கணபதி வழிபாடு, மாணிக்கவாசகர் காலத்தில் பெரிய அளவில் இல்லை. இதனாலும் அவர் காலத்தால் முந்தியவரே.
6. பிற்காலத்தில் பாடல்களில் குறிப்பிடப்படும் லிங்க வழிபாடும் இது போன்றதே. கணபதி, லிங்க வழிபாடு அறவே இல்லை என்று நான் சொல்லவில்லை. இவை எல்லாம் பாடல்களில் இடம்பெறும் அளவுக்குப் பெரிதாகவில்லை.
7. மாணிக்கவாசகர் பயன்படுத்திய அகவல்பா முதலியன முற்காலத்தியவை. பின்னர் வந்தவர்கள் வெண்பாக்களாகப் பாடித் தள்ளிவிட்டனர். இவர் ஏழு அந்தாதிகளைப் படி இரூக்கிறார். முதல் மூன்று ஆழ்வார்களும் இப்படி அந்தாதி பாடி யிருப்பதால் அவர்கள் காலத்தில் இவரும் இருந்திருக்கலாம். தனி ஒருவர் என்று எடுத்துக் கொண்டால் மாணிக்கவாசகர் மட்டுமே அதிகம் அந்தாதி பாடி இருக்கிறார். முதல் மூன்று ஆழ்வார்களைப் பாராட்டும் வகையில் பாடல்களில் பூதம், பேய், பொய் என்ற சொற்களைப் பிரயோகிக்கிறார்.
8. சொல்லாட்சி: பல பழைய சொற் பிரயோகங்களையும், வழக்கங்களையும் திருவாசகத்தில் காணமுடிகிறது. ஆக அவர் சங்கம் மருவிய காலத்தில், ஒருவேளை ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம். ஆனால் தேவார மூவருக்கும் இவருக்கும் பெரிய இடைவெளி இல்லை.
9. மாணிக்கவாசகர் குறிப்பிடும் சில க்ஷேத்திரங்கள் எது என்றுகூடத் தெரியவில்லை. அவர் சொல்லும் மண்டோதரி சம்பவம் முதலியன மற்றைய இடங்களில் கானப்படவில்லை. மதுரையில் நடந்த பல திருவிளையாடல் நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்ட அவர் சம்பந்தருக்குப் பின்னால் வாழ்ந்திருந்தால் அதைத்தான் முதலில் குறிப்பிட்டிருப்பார்.
10. மாணிக்கவாசகர் பாடல்களில் திருக்குறளின் தாக்கமும் தெரிவதால் வள்ளுவவர் காலத்தை (ஐந்தாம் நூற்றாண்டு) ஒட்டியே வாழ்ந்திருக்க வேண்டும்
11. பொன் அம்பலம், காஞ்சி செம்பொற் கோவில் ஆகியன எல்லாம்பாட்டில் வருவதால் பல்லவர்கள் இதைச் செய்த காலத்தில் வாழ்ந்திருக்கலாம். ஐயடிகள் காடவர்கோன் (கி.பி 550-575) என்ற பல்லவ மன்னன் பொன் வேய்ந்ததை நாம் அறிவோம்.
12.இவர் அரிமர்த்தன பாண்டியன் காலத்தில் வாழ்ந்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. ஆனால் வரலாற்றில் அப்படி ஒரு பாண்டியனைக் காணமுடியவில்லை. இருந்த போதிலும் திருவிளையாடல் புராணம் குறிப்பிடும் மன்னர் பட்டியலைக் கொண்டு பார்த்தால் இவருக்குப் பின்னரே சம்ப்ந்தர் கதை வருகிறது. மாணிக்கவாசகருக்கும் சம்பந்தருக்கும் இடையே பெரிய மன்னர் வரிசை இருக்கிறது!!!
13.சம்பந்தருக்கு முந்தி வாழ்ந்த கண்ணப்பர், சண்டீசர் ஆகியோரை மாணிக்கவாசகர் பாடுகிறார். சம்பந்தருக்குப் பிற்பட்ட யாரையும் பாடவில்லை என்பது கவனிக்கப்படவேண்டியது
14. மாணிக்கவாசகர், தமிழ்ச் சங்க காலத்தைஒட்டி வாழ்ந்தவராக இரூக்கவேண்டும் திருக்கோவையில் ‘உயர் மதில் கூடலில் ஆய்ந்த ஒண் தீந்தமிழின் துறைகள்’ என்றும் திருவாசகத்தில் ‘தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானே’ என்றும் பாடுவது இவர் சங்க காலத்தை ஒட்டி வாழ்ந்தவர் என்று காட்டுகிறது. இவர் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தால் இப்படிப் பாடி இருக்க மாட்டார். கடந்தகாலத்தில் நடந்ததை ‘இறந்த கால’த்தில் பாடி இருப்பார்.
15.சிதம்பரத்துக்கு ஆதித்ய சோழன் பொன் வேயும் முன்னர் காடவர்கோன் (பல்லவ மன்னன்) பொன் வேய்ந்ததாக அறிகிறோம். ஆக திருமூலரும், மாணிக்கவாசகரும் குறிப்பிடும் பொன் அம்பலம் மிகப் பழைய பொன் அம்பலமே.
16. அப்பர் போல நேரடியாகக் குறிப்பிடாமல் சம்பந்தர், மாணிக்கவாசகரை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்: இரண்டாம் திருமுறையில் ‘தெரிந்த அடியார் திசைதோறும் குருந்த மரும் குரவின் அலரும் கொண்டேந்தி இருந்து நின்றும் இரவும் பகலும் ஏத்தும்’ — என்று பாடுகிறார். மாணிக்கவாசகர், குருந்த மரத்தடியில் இருந்த குருவிடம் உபதேசம் பெற்றதால் குருந்த மரத்தை அடிக்கடி குறிப்பிடுவது முக்கிய தடயமாகும்.
17.கோவைக்கு இலக்கணமாக இவர் எழுதிய திருக்கோவையாரையே பேராசிரியர் போன்ற உரைகாரர்கள் குறிப்பிடுவதால் மாணிக்கவாசகர், பாண்டிக்கோவைக்கு மிகவும் முந்தியவர்.
18. நவீன எழுத்தாளர்கள் மாணிக்கவாசகரை வரகுணன் காலத்தவர் என்று சொன்னாலும் இஅர் அரிமர்த்தன பாண்டியன் அவையில் மந்திரியாக இருந்தவர் என்று திருவிளையாடல் புராணம் கூறுவதையும் கவனிக்கவேண்டும்.
19.மாணிக்கவாசகரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்ச்சி நரி – பரி ஆன லீலை ஆகும். அவரை பாண்டிய மன்னன் அனுப்பியது குதிரை வாங்குவதற்கே. குதிரை வியாபாரம் நமது கடற்கரையிலும், அருகில் இலங்கையிலும் நடந்தது சங்க இலக்கியக் குறிப்பாலும் இலங்கையில் தமிழ்க் குதிரை வியாபாரிகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆட்சியைக் கைப்பற்றியதாலும் தெரிகிறது.
20. மதுரையின் முக்கியப் பெயர்களில் ஒன்று ஆலவாய். இதை மாணிக்கவாசகர் பயன்படுத்தவில்லை ஆனால் சம்பந்தர் பயன்படுத்துகிறார். ‘ஞாலம் நின்புகழே மிகவேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே’ என்று சம்பந்தர் பாடுவது, தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி– என்ற மாணிக்கவாசகரின் வரிகளின் எதிரொலியாகத் திகழ்கிறது
தொடரும்………………..
Contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.