ஒரு வழக்கை எப்படி வாதாடுவது? (Post No.5517)

WRITTEN BY S NAGARAJAN

Date: 8 October 2018

 

Time uploaded in London – 6-42 AM (British Summer Time)

 

Post No. 5517

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

ஒரு வழக்கை எப்படி வாதாடுவது?

 

ச.நாகராஜன்

 

ஒரு வழக்கை எப்படி வாதாடுவது? இதற்கு எடுத்துக்காட்டான வழக்காக எப்போதும் ஒரு வழக்கைச் சொல்வதுண்டு.

அந்த வழக்கும் அது கையாளப்பட்ட விதமும் இது தான்.

ஒரு வாதி, பிரதிவாதி ஒருவருக்கு ஐநூறு ரூபாய் கொடுத்ததாகவும் அதற்கு புரோநோட்டு இருப்பதாகவும் அதை அவர் திருப்பித் தரவில்லை என்றும் வழக்குத் தொடுத்திருந்தார்.

அப்பாவியான பிரதிவாதி அந்த புரோநோட்டு செல்லுபடியான புரோநோட்டே இல்லை என்று ஆன மட்டும் கதறிப் பார்த்தார்.

வழக்கு விசாரணைக்கு வந்தது.

 

அப்பாவியான பிரதிவாதிக்கு ஒரு புத்தி கூர்மையுள்ள வக்கீல் வாதாட வந்தார்.

குறுக்கு விசாரணை ஆரம்பித்தது. வாதியை நோக்கி வக்கீல் தனது கேள்விகளைத் தொடுத்தார்.

வக்கீல் : உங்கள் வயது என்ன?

வாதி : 53

வக்கீல் :எங்கு நீங்கள் வசிக்கிறீர்கள்?

வாதி : அங்கி வாடியில்

 

வக்கீல் : அங்கு அடிக்கடி திருட்டு நடப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேனே!

வாதி : (சிறிது குழப்பமடைந்தவராக) ஆம்

வக்கீல் : உங்கள் வீட்டிற்கு வாட்ச்மேன் வைத்திருக்கிறீர்களா?

வாதி : (இன்னும் குழப்பமடைந்தவராக ) இல்லை

வக்கீல் : வீட்டில் லாக்கர் உண்டா?

வாதி : இல்லை

 

வக்கீல் : நீங்கள் பெரிய பணக்காரர் இல்லை, அப்படித்தானே?

வாதி : ஆமாம்

வக்கீல் : உங்களுக்கு பேங்க் அக்கவுண்ட் உண்டா?

வாதி : இல்லை

வக்கீல் : அப்படியானால் உங்கள் பணத்தை எங்கே வைத்திருப்பீர்கள்?

 

வாதி ; போஸ்ட் ஆபீஸில் ஒரு சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருக்கிறேன்.

வக்கீல் : ஓ! அந்த அக்கவுண்டில் தான் உங்கள் பணம் எல்லாம் இருக்கிறதா?

வாதி : ஆமாம்

வக்கீல் : நீங்கள் பிரதிவாதிக்குக் கொடுத்த பணம் அந்த போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்டிலிருந்து எடுக்கப்பட்ட பணம் தானே!

வாதி : ஆமாம்

வக்கீல் : பிரதிவாதிக்கு ஐநூறு ரூபாயை எப்படிக் கொடுத்தீர்கள்?

வாதி : ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளாகக் கொடுத்தேன்

வக்கீல் : இந்த ஐநூறு ரூபாயை உங்கள் பெயரில் உள்ள போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்டிலிருந்து தான் எடுத்தீர்கள், இல்லையா?

வாதி : ஆமாம்

வக்கீல் : பிரதிவாதிக்குக் கொடுப்பதற்கு முன்னர் இந்த ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை நீங்கள் போஸ்ட் ஆபீஸ் சென்று உங்கள் அக்கவுண்டிலிருந்து எடுத்து வந்து இதை பிரதிவாதிக்குக் கொடுத்தீர்கள், அப்படித்தானே!

 

வாதி : (மிகுந்த உற்சாகத்துடன்) ஆமாம், ஆமாம்

வக்கீல் : அதாவது இந்த ஐநூறு ரூபாயை ஒரே நாளில் எடுத்து அதே நாளில் பிரதிவாதிக்குக் கொடுத்தீர்கள், சரியா?

வாதி : ஆமாம்

வக்கீல் : இது நிச்சயம் தானே?

வாதி ; நிச்சயம் தான்

 

வக்கீல் : இந்த ஐநூறு ரூபாயைக் கொடுத்து விட்டு புரோநோட்டை வாங்கினீர்கள், அப்போது மணி என்ன?

வாதி : மாலை ஆறு மணி இருக்கும்.

வக்கீல் : அதாவது அந்த நாளில் தான் நீங்கள் போஸ்ட் ஆபீஸ் சென்று பணத்தை எடுத்து வந்திருக்கிறீர்கள்!

வாதி : ஆமாம்

வக்கீல் : பணத்தை எடுக்க எத்தனை  மணிக்கு போஸ்ட் ஆபீஸ் சென்றீர்கள்?

வாதி:  மதியம் ஒரு மணிக்கு

 

வக்கீல் : ஆக ஒரு மணிக்கு எடுத்த பணத்தை அதே நாள் மாலை ஆறு மணிக்கு பிரதிவாதியிடம் அளித்து புரோநோட்டையும் பெற்றுக் கொண்டீர்கள், சரிதானே!

வாதி: மிகச் சரியாகச் சொன்னீர்கள்

வக்கீல் : இது தவிர பிரதிவாதிக்கு நீங்கள் வேறு எந்தப் பணத்தையும் கொடுக்கவில்லை, சரிதானே?

வாதி : சரிதான், வேறு எந்தப் பணத்தையும் கொடுக்கவில்லை

வக்கீல் : மிக்க நன்றி, அவ்வளவு தான்.

குறுக்கு விசாரணை முடிந்தது.

 

குறுக்கு விசாரணை செய்த பிரதிவாதியின் வக்கீல் நீதிபதியிடம் அந்த புரோநோட் எழுதிய தேதியைச் சுட்டிக் காண்பித்தார்.

அது ஆகஸ்ட் 15ஆம் தேதி.

 

வாதியின் வழக்குப்படி அவர் அதே நாளில் எடுத்த பணத்தை அன்று மாலையே பிரதிவாதியிடம் தந்திருக்கிறார்! அதுவும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று!

 

அது போஸ்ட் ஆபீஸுக்கான விடுமுறை தினம்!

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பிரதிவாதி விடுவிக்கப்பட்டார்!

 

எந்த வித ஓட்டையும் இல்லாமல் பிரதிவாதிக்காக வாதாடி அவரை வெளியில் கொண்டு வந்த வக்கீலின் வாதம் எடுத்துக்காட்டான வாதமாக இன்றும் இளம் வக்கீல்களுக்குக் காட்டப்படுகிறது.

 

அடுத்து ஆபிரஹாம் லிங்கன் வாதாடிய வழக்கு ஒன்றைப் பார்ப்போம்.

 

அதற்கான முன்னோடிக் கட்டுரை தான் இந்தக் கட்டுரை!

***