Date: 14 FEBRUARY 2018
Time uploaded in London- 14-10
Compiled by London swaminathan
Post No. 4742
PICTURES ARE TAKEN from various sources.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
அவ்வையாரும் சாணக்கியனும்- பாரதீய சிந்தனை ஒன்றே
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))
பெரியோர் சிந்தனை ஒன்றே (Great men think alike) என்று ஆங்கிலத்தில் சொல்லுவர். ஆனால் பாரத நாட்டில் இமயம் முதல் குமரி வரை , காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை, 3000 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே சிந்தனை இருப்பது உலகம் காணாத புதுமை. ‘தூது’ என்ற தலைப்பில் வள்ளுவன் செப்பியதும், ‘விருந்தோம்பல்’ என்று அவன் உரைத்ததும், காமத்துப் பாலில் அவன் பாடியதும், ‘கொல்லாமை’யை அவன் போற்றியதும் சம்ஸ்க்ருதச் செய்யுட்களில் அப்படியே உள்ளது. கௌடியர் எனப்படும் சாணக்கியன் எழுதிய அர்த்தசாஸ்திரப் பொருளாதாரக் கருத்துக்கள் வள்ளுவனின் பொருட்பாலில் உள. ஒருவரை ஒருவர் ‘காப்பி’ அடித்தாரோ என்று வியக்க வேண்டியதில்லை. பாரத நாட்டின் சிந்தனைப் போக்கு ஒன்றே .உலகத்துக்கெல்லாம் மூலாதாரமான கருத்துகள் அவை. கொடி ஆனாலும், கடவுளின் வாஹனம் ஆனாலும் புறநானூற்றில் உள்ள விஷயங்கள் சம்ஸ்க்ருத நூல்களிலும் காணக்கிடக்கின்றன.
அவ்வைப் பாட்டியை அறியாத தமிழன் இல்லை. ஆனால் இறைவனை நாடி அறம் பாடிய முதுமைப் பெண்கள் எல்லோரையும் அவ்வையார் என்று அழைத்ததால் தமிழில் ஆறு அவ்வையார்கள் இருந்ததாக ஒருவர் புத்தகம் எழுதியுள்ளார். ஆனால் எனது மொழியியல் ஆராய்ச்சியின் படி குறைந்தது மூன்று ஔவையார் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இந்தக் கட்டுரையில் சொல்லப்படும் பாடல்கள் இடைக் கால அவ்வையாரின் பாடல்கள்தான்; சங்க கால அவ்வையார் அல்ல.
சாணக்கியன் பகர்வான்
காகம் கருடன் ஆகுமா?
குணருத்தமதாம் யாதி நோச்சைராஸன ஸம்ஸ்திதஹ
ப்ராஸாத ஸிசிகரஸ்தோபி காகஹ கிம் கருடாயதே
அத்யாயம் 16, ஸ்லோகம் 6
ஒருவன் குணத்தினால் உயர்கிறானே தவிர பதவியாலோ அந்தஸ்தினாலோ அல்ல;
அரண்மனையின் உச்சியில் உட்காருவதால், காகம் கருடன் ஆகி விடுமா?
அவ்வையார் மொழிவார்
கான மயிலும் வான் கோழியும் ஒன்றா?
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானு மதுவாகப் பாவித்துத் — தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி –
மூதுரைப் பாடல்/வாக்குண்டாம்
(மூதுரை என்பதும் வாக்குண்டாம் என்பதும் ஒரே நூல்தான்)
முறையாக யாப்பிலக்கணம் கற்காதவன், கற்றறிந்தோர் சபையில் கவி பாடுவதானது, காட்டில் உள்ள மயில் தன் அழகிய தோகையை விரித்தாடியதைக் கண்ட வான் கோழி, தன்னையும் அந்த மயில் என்று எண்ணிக் கொண்டு, அதுவும் தன் அழகில்லாத சிறகுகளை விரித்தாடியது போலாகும்.
கல்லாதவன்= வான் கோழி
கற்றவன்= கான மயில்
தவறான கவிதைகள் = வான் கோழிச் சிறகு
இலக்கணக் கவிதைகள்= மயில்தோகை
xxx
சாணக்கியன் புகல்வான்
த்யஜ துர்ஜன ஸம்ஸர்கம் பஜ சாது ஸமாகமம்
குரு புண்ய மஹோராத்ரம் ஸ்மர நித்யம் அநித்யதாம்
சாணக்கிய நீதி,அத்யாயம்14 ஸ்லோகம் 20
தீயவரைத் தீண்டாதே
நல்லவரை நாடித் தேடி ஓடு
நன்றே செய்க, இன்றே செய்க
நிலையாமையை எப்போதும் தப்பாமல் நினை.
துராசாரீ ச துர்த்ருஷ்ட்டி த்ராவாஸீ ச துர்ஜனஹ
யன் மைத்ரீ க்ரியதே பும்பிர்நரஹ சீக்ரம் விநஸ்யதி
சாணக்கிய நீதி, அத்யாயம் 2 ஸ்லோகம் 19
தீயவர்களுடன் சேர்ந்தாலோ
தீயதைக் கண்டாலோ
தீயோர் இடைடயே வசித்தாலும்
தீயவன் தீமையே அடைவான்; அழிவான்
அவ்வைப் பாட்டி சொல்லுவார்
அவ்வையாரோ இதற்கும் ஒரு படி மேலே போகிறார்; காந்திஜியின் குரங்கு பொம்மை இதிலிருந்து தோன்றியதே என்று முன்னரே ஒரு கட்டுரையில் சொன்னேன்:–
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதேயாம் – தீயார்
குணங்களுரைப்பதுவும் தீதே யவரோ
டிணங்கி யிருப்பதுவுந் தீதே – வாக்குண்டாம், அவ்வையார்.
கெட்டவர்களைப் பார்ப்பது தீது; அவர் சொல் கேட்பதும் தீது; அவர்களுடன் சேருவது தீது (இதெல்லாம் முன்னர் சொன்ன விஷயங்களே. அவரைப் பற்றிப் பேசுவதும் தீதே. அதாவது பேஸ் புக்கிலும், ஈ மெயிலிலும், திண்ணைப் பேச்சிலும், நண்பர்களின் அரட்டைக் கச்சேரியிலும் அவர்களைப் பற்றிப் பேசாதே.
xxxx
சாணக்கியன் புகல்வான்
சகடம் பஞ்ச ஹஸ்தேன தச ஹஸ்தேன வாஜினம்
ஹஸ்தினம் சத ஹஸ்தேன தேசத்யாகேன துர்ஜனம்
7-8
மாட்டுவண்டி வந்தால் ஐந்து முழம் தள்ளிப்போ
குதிரை வந்தால் 10 முழம் தள்ளிப்போ
யானை வந்தால் 100 முழம் தள்ளிப்போ
துஷ்டனைக் கண்டால் தூரப் போய்விடு (கண்காணாத வரை)
நீதி வெண்பா என்ற அருமையான நூலில் 100 பாடல்கள் உள்ளன. விவேக சிந்தாமணி என்ற நூலைப் போலவே இதை எழுதிய ஆசிரியர் பெயரும் கிடைக்கவில்லை. அதில் ஒரு அருமையான பாட்டு:-
கொம்புளதற்கு ஐந்து குதிரைக்கு பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே – வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி. (பாடல் 20, நீதி வெண்பா)
கொம்பு இருக்கும் மாடு முதலிய மிருகங்களுக்கு அருகில் போகாதீர்கள். குறைந்தது ஐந்து முழமாவது தள்ளி நில்லுங்கள். குதிரைக்கு பத்து முழ தூரத்தில் நின்றால் பாதுகாப்பாக இருப்பீர்கள். யானைக்கு ஆயிரம் முழம் தள்ளி நில்லுங்கள். திடீரென்று மதம் பிடித்து ஓடிவந்தால் அதை உங்களால் முந்தமுடியாது. ஆகையால் 1000 முழமாவது தள்ளி இருங்கள். ஆனால் தீயோரைக் கண்டால் – துஷ்டர்களைக் கண்டாலோ, கண் காணாத தூரத்துக்கு ஓடிப் போய்விடுங்கள். அப்படிப்பட்ட ஆள் வருகிறான் என்றால் அந்தப் பக்கமே போகாதீர்கள். அவர்களை போலீசாரும், நீதித் துறையும் கவனித்துக்கொள்ளும். இது நல்லதொரு புத்திமதி.
xxxxx
சாணக்கியன் நுவல்வான்
சின்னோபி சந்தனதருர்ன ஜஹாதி கந்தம்
வ்ருத்தோபி வாரணபதிர்ன ஜஹாதி லீலாம்
யந்த்ரார்பிதோஒ மதுரதாம் ந ஜஹாதி சேக்ஷுஹு
க்ஷீர்ணோபி ந த்யஜதி சீலகுணான் குலீனஹ
சாணக்கிய நீதி,அத்யாயம்15 ஸ்லோகம் 18
அரைக்கும் சந்தனம் தன் மணம் குன்றா
யானை வயதானாலும் விளையாடுவதை விடுவதுண்டோ
யந்திரத்தில் நசுக்கினும் கரும்பு இனிக்குமன்றோ
வறுமையில் வீழ்ந்தாலும் உயர் குணதோன் தன் நற்குணங்களில் இருந்து நழுவுவதில்லை; வழுவுதல் இல்லை.
அடினும் ஆவின்பால் தன் சுவை குன்றாது
சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது
அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது
புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது
கலக்கினும் தன் கடல் சேறு ஆகாது – வெற்றி வேற்கை
அதிவீர ராம பாண்டியனுக்கு (வெற்றி வேற்கை)
முன்னரே இதே கருத்தை அவ்வையாரும்
வாக்குண்டாம் என்னும் பாடலில் கூறுகிறார்:
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் நன்னுதால்
கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும் – வாக்குண்டாம்
சான்றாண்மை என்னும் அதிகாரத்தின் கீழ் வள்ளுவர் முத்து முத்தாகக் கருத்துகளைத் தொகுத்து அளிக்கிறார்:
ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படுவார் – குறள் 989
உலகம் அழியும் காலத்தில் பெரும் சுனாமி தாக்குதலில் கடல் கரை கடந்து நாட்டிற்குள் புகுந்தாலும், மேன்மக்கள், பாதை மாற மாட்டார்கள்.
சாணக்கியன் நுவல்வான்
யுகாந்தே சலதே மேருஹு கல்பாந்தே சப்த ஸாகராஹா
சாதவஹ ப்ரதிபன்னார்த்தான் ந சலந்தி கதாசன
சாணக்கிய நீதி,அத்யாயம்13 ஸ்லோகம் 19
யுக உடிவில் மேரு பர்வதமும் நிலை குலையுன்
கல்ப முடிவிலேழு கடல்களும் சுனாமியால் பொங்கி எழும்
நல்லோரோ தன் பாதையில் இருந்து எப்போதும் தப்பார்
xxx Subham xxxxx