வள்ளுவரும் வானவரும்! (Post No.3260)

hy14-pushkar_2472025g-jpghindu-2

Written by S. NAGARAJAN

Date: 17 October 2016

Time uploaded in London: 5-21 AM

Post No.3260

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

திருக்குறளில் தேவர் உலகம்

வள்ளுவரும் வானவரும்!

By ச.நாகராஜன்

 

 

 img_5160-2

பாரத நாடெங்கும் தொன்று தொட்டு இருந்து வ்ரும் பண்பாடு ஒன்றே தான்!

 

மிகப் பழைய சங்க இலக்கிய  நூலான திருக்குறளில் இந்தப் பண்பாட்டை விளக்கும் நூற்றுக் கணக்கான குறட்பாக்களைக் காணலாம்.

 

தேவர் அல்லது வானவரைப் பற்றிய ஏராளமான செய்திகளை பாரத நாடெங்கும் உள்ள மக்கள் அறிவர். ஹிந்துப் பண்பாட்டை விளக்கும் ஏராளமான கதைகளும் அதைச் சார்ந்த சடங்குகளும், விழாக்களும், நம்பிக்கைகளும் தொன்மங்களும் வான உலகில் –விண்ணுலகில் – இருக்கும் வானவரைச் சார்ந்தே உள்ளன.

 

 

திருக்குறளை இயற்றிய வள்ளுவருக்கே தேவர் என்ற பெயரும் உண்டு. அவருக்குரிய பத்துப் பெயர்களும் அவரது உயரிய பண்பையும் அருமையையும் எண்ணி, போற்றித் தரப்பட்டு வழிவழியாக வழங்கப்பட்டு வருகின்றன.

 

 

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்                   

மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை                        

 திருவாசகமும் திருமூலர் சொல்லும்                        

ஒருவா சகமென் றுணர் 

 

–என்ற ஔவையாரின் பாடலில் தமிழ்ம்றையும் நான்மறையும் ஒன்றே என்று அறுதியிட்டு உறுதி கூறப்படுகிறது!

 

 img_5163-2

இனி, வள்ளுவரின் கிண்டல் குறள்கள் அவரது அரிய மேதைத் தனமையையும் அதில் இழைந்து ஊடாடி விளங்கும் நகைச்சுவையையும் காட்டுவன.

 

 

இந்த நகைச்சுவைக் குறள்களில் முக்கியமான குறள் ஒன்று தேவர் குறள்.

 

 

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுகலான்        –  குறள் 1073

 

“தேவர் அனையர் கயவர்”

தேவரும் கயவரும் ஒன்று போலத் தான் என்று வள்ளுவர் கூறியதைக் கேட்டவுடன் திடுக்கிடுகிறோம். தூக்கிவாரிப் போடுகிறது.

 

 

ஆனால் அவர் அடுத்து அதற்கான காரணத்தை விளக்கும் போது சிரிக்கிறோம். இருவரும் தம் மனம் போன போக்கிலேயே அனைத்தையும் செய்யும் தன்மை வாய்ந்தவர்கள் என்பதால் தேவர் அனையர் கயவர்!!

வையத்துள் புண்ணியச் செயல்களைச் செய்பவரே வானுறையும் பேறு பெற்றவர்கள். அவர்கள் மனம் போன போக்கில் நல்லதையே செய்வர்.

 

 img_5164-2

ஆனால் பூமியில் மனம் போன போக்கைச் செய்யும் கயவர் தீயவற்றையே செய்வர். உயர்ச்சியும் இழிவுமாகிய காரண வேறுபாட்டால் நகைச்சுவையை ஊட்டி நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார் வள்ளுவர்.

நகைச்சுவையுடன் கூடிய கருத்தால் மிகவும் ஈர்க்கப்படுகிறோம்.

 

அடுத்து வான் நாட்டை புத்தேள் நாடு என்றும் வானவரை புத்தேளிர் என்றும் வள்ளுவர் கூறி இருக்கும் குறட்பாக்கள் சுவையானவை.

 

 

இப்படி வரும் ஆறு குறள்களைப் பார்ப்போம்.

 

 

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற              – குறள் 213

 

பிறர்க்கு உதவி செய்யும் நல்ல பிரதிபலன் பாராத உதவி செய்யும் தன்மை தேவர் உலகத்திலும் பூவுலகத்திலும் காண்பது அரிதாகும்.

 

ஈவாரும் இல்லை, ஏற்பாரும் இல்லை என்பதால் தேவருலகில் ஒப்புரவு அரிது. யாவருக்கும் ஒப்பது இது போல வேறு ஒன்று இல்லாமையால் பூவுலகில் இது அரிது.

 img_3203

 

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு           – குறள்  234

 

ஒருவன் நிலவுலகில் பொன்றாத புகழைச் செய்வானாயின் வான் உலகம் அவனை வரவேற்குமேயல்லால் தன்னை எய்தி இருக்கும் ஞானிகளைப் போற்றாது.         

 

                      

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்                     

தள்ளாது புத்தே ளுலகு                   குறள் 290

 

களவினைச் செய்வார்க்கு உடம்பில் உள்ள உயிர் தவறும். அந்தக் களவினைச் செய்யாதவர்க்கு வானுலகம் வாய்த்தல் தவறாது.

 

 

புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என்மற்று           

இகழ்வார் பின் சென்று நிலை              குறள் 966

 

மானத்தை விட்டுத் தன்னை அவமதிப்பவர்கள் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலை அவனுக்கு இவ்வுலகப் புகழைத் தராது. தேவர் உலகத்திலும் கொண்டு சேர்க்காது. இப்படி அவமதிப்பார் பின் செல்வதால் அவனுக்குப் பின் என்ன தான் பயன்?

 

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு                              

நீர் இயைந்து அன்னார் அகத்து             குறள் 1323

 

 

நிலத்தில் நீர் கலந்தாற் போல ஒன்று ப்ட்ட நெஞ்சம் உடைய காதலரிடத்தில் ஊடலில் காணப்படுவது போன்ற இன்பம் தேவருலகில் உண்டா?

 

 img_3425

பெற்றார் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்                புத்தேளிர் வாழும் உலகு                   குறள் 58

 

பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுவாராயின் தேவருலகில் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர்.

 

அடுத்து வரும் மூன்று குறள்களில் அமரர் என்ற வார்த்தையையும், வானவர் என்ற வார்த்தையையும் தேவர் பயன்படுத்துகிறார்.

 

 

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை                 

ஆரிருள் உய்த்து விடும்                  குறள் 121

 

ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவர் உலகத்து உய்க்கும். அடங்காமையோ ஆர் இருள் கொண்ட நரகத்தில் செலுத்தும்.

 

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்                         

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு     (குறள் 18)

 

 

வானம் வறண்டு மழை இல்லாது போனால் இவ்வுலகில் வானவர்க்குச் செய்யும் பூஜை, திருவிழா எதுவும் நடைபெறாது.

 

 

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து  வானத்தவர்க்கு        (குறள் 86)

 

தேவர்கள் விரும்பி வரவேற்கும் விருந்தினர் யார் தெரியுமா? பூவுலகில் வந்திருந்த விருந்தினரை நன்கு  உபசரித்து அனுப்பி விட்டு அடுத்து வரும் விருந்தினருக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கின்றானே அந்த உத்தமன், அவனைத் தம் விருந்தினராக ஆவலோடு வரவேற்பார்களாம் தேவர்கள்!

 

 brahadeeswar-2

இன்னும் ஒரு குறளில் வானோர்க்கும் மேலான உலகத்தைப் பற்றிப் பேசுகிறார்.

 

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு               

உயர்ந்த உலகம் புகும்           (குறள் 346)

 

 

யான் எனது என்ற மயக்கத்தை அறுப்பார்க்கு வானோரும் எய்தற்கு அரிதான வீட்டுலகம் கிடைக்கும்.

 

தேவர் உலகத்தைச் சேர்ந்தோர் இமைக்க மாட்டார்கள் என்பதை ஒரு குறள் சுட்டிக் காட்டுகிறது.

 

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லான்              

அமையார்தோள் அஞ்சு பவர்   (குறள்  906)                             

மனைவியின் அழகிய தோளுக்கு அஞ்சி நடக்கின்றவர் தேவரைப் போல இந்த உலகில் வாழ்ந்தாலும் கூட ஆண்மை இல்லாதவரே ஆவர்.

 

 

ஹிந்துக்களின் வேதம், உபநிடதம், புராணம் ஆகியவை கூறும் பெரும்பாலான செய்திகளை சங்க இலக்கியத்தில் பரக்கக் காணலாம்.

 

 

பாரதம் முழுவதற்குமான ஒரே பண்பாட்டைச் சேர்ந்தவரே வள்ளுவர் என்பதும் அதைத் தன் குறள் நெடுகிலும் சுட்டிக் காட்டுகிறார் என்பதற்கும் வேறு என்ன சான்றுகள் வேண்டும்.

 

கடைசியாக் ஒன்று. இமையவர் கோமானான இந்திரனையும் அவர் விட்டு விடவில்லை.

 

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்               

இந்திரனே சாலுங் கரி   (குறள் 25)

 

ஐந்து புலன்களின் ஆசையை ஒழித்தவர்க்குச் சான்று கூற விசும்புளார் கோமானான இந்திரனே வருவான்

 andal-krishnan

ஆஹா, பதிமூன்று குறள்களில் பண்பாட்டைத் தெள்ளென விளக்கும அனைத்தையும் வள்ளுவர் தரும் பாங்கிற்கு ஈடு இணை உண்டோ!

 

 

ஏராளமான செய்திகளைப் பெறுகிறோம்.

 

வானவர் உலகம் உண்டு.

 

அதற்கும்  மேலான உலகமும் உண்டு.

 

வானவர்க்கு பூவுலகினர் பூஜையும் திருவிழாவும் எடுப்பர். மழை இல்லையேல் அவை நடைபெறா. (இந்திரவிழா உள்ளிட்ட பழைய செய்திகளையும், மழை தரும் பொறுப்பு இந்திரனுக்கு உண்டு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.)

 

 

அடக்கம் தேவ லோகத்தையும் அடங்காமை நரகத்தையும் தரும். மனைவி கணவனைப் போற்றல் வேண்டும். அது அரிய வானுலக வரத்தைத் தரும்.

 

தாம்பத்ய இன்ப உறவில் ஏற்படும் இன்பம் தேவலோகத்திலும் கிடைக்காது.

 

புகழுடைச் செயல்களைப் புரிபவன் பொன்னுலகம் போவான்.

களவுத் தொழில் செய்தலும், தன்னை அவமதிப்போரின் பின்னால் செல்லுதலும் தேவர் உலகை அடைய முடியாமல் தடுக்கும் தீமைகளாகும்

 

.

இன்னும் தேவாமிர்தத்தைச் சொல்லாமல் வள்ளுவரால் சும்மா இருக்க முடியுமா?

 

நான்கு குறள்களில் சாவா மருந்தான தேவாமிர்தத்தையும் குறிப்பிட்டு விடுகிறார்.

 

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று     – (குறள் 11)

 

 ambaji-temple-gujarat

மழையை உலகம் அமிழ்தம் எனப் போற்றுவதை இங்கு வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

 

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்            (குறள் 64)

 

தன் குழந்தையின் சிறுகை அளாவிய கூழை விட தேவாமிர்தம் சிறந்ததா, என்ன? இல்லை என்று ஓங்கிச் சொல்வோம் நாம். உலகியல்பு இது!

 

 

நம் முகத்தைச் சுளிக்க வைக்கும் ஒரு உவமையையும் அவர் தந்து விடுகிறார்.ஏனெனில் அப்படிச் சொன்னால் தான் அவர் சொல்ல வரும் பொருளுக்கு வலிமை சேரும்! அதனால் தான்!

நல்ல கற்றறிந்தோர் கூடிப் பேசும் அவையில் ஒன்றுமே படிக்காத ஒரு  முட்டாள் உளற ஆரம்பித்தால், ஐயகோ, அது தூய்மை இல்லாத முற்றத்தில் படைக்கப்பட்ட நல்ல அமிர்ததிற்கு ஒப்பாகும். (‘அசுத்தம்’ உள்ள இலையில் அமிழ்தம் வைக்கப்பட்டால்….?!)

 

அங்கணத்துள் உக்க அமிழ்தத்தால் தங்கணத்தார்          அல்லார் முன் கோட்டி கொளல்        (குறள் 720)

 

இன்னும் ஒரு குறள்- தலைவியின் தோள் அமிர்தத்தினால் ஆனது!

 

 

உறுதோறு உயிர்தளிப்பத் தீண்டலால் பேதைக்கு          

அமிழ்தின் இயன்றன தோள்           (குறள் 1106) 

 

தலைவியின் தோளைத் தீண்டும் போதெல்லாம் (போக இருக்கும்) உயிர் தளிர்ப்பதால் இவள் தோள் அமிர்தத்தினால் செய்யப்பட்

டிருக்க வேண்டும்!

 

எப்படி இருக்கிறது நான்கு குறள்கள்.

 

1330 குறள்களில் சுமார் 17 குறள்களில் தேவலோகத்தைக் காட்டுகிறார் தேவர்! அதாவது ஒரு சதவிகிதத்திற்கும் மேலாக!

 

இதுவே அவர் தன் கருத்துக்களுக்கு வானுலகைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

 ganga-shiva

என்ன இருந்தாலும் அவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வான் உறையும் தெய்வத்துள் சேர்ந்தவர் தானே

‘தனது இனத்தை’ விட்டுக் கொடுப்பாரா என்ன?

 

கருத்துக்களைப் பெற்று மகிழ்கிறோம். அமிழ்தம் உண்டது போல இருக்கிறது!

**********