வாயு பகவான் சொன்ன ரகசியம்: கம்பன் தகவல் (Post No.3146)

hanuman-bomai

Written by london swaminathan

Date: 12 September 2016

Time uploaded in London: 6-27 AM

Post No.3146

Pictures are taken from various sources; thanks.

 

 

கம்பன் போகிற போக்கில் சில புதுத் தகவல்களை உதிர்த்துவிட்டுப் போவான்; அத்தனையும் முத்துக்கள்; வைரங்கள்; அவைகளைச் சேகரித்துப் பாதுகாப்பதும், படித்து சுவைத்து ருசிப்பதும் நம் கைகளில் உள்ளது.

 

அனுமனிடம், அவன் தந்தையான வாயு பகவான் இரண்டு முக்கிய விஷயங்களைச் சொல்லுகிறான். அதை அனுமன், சுக்ரீவனிடம் சொல்லி ராமனை நம்புங்கள் என்கிறான். அப்படியும் நம்ப முடியாவிட்டால் ராமனுக்கு ஒரு டெஸ்ட் TEST (குட்டித் தேர்வு) வைக்கலாம் என்கிறான். ஏழு மராமரங்களில் ஒன்றை அவனுடைய அம்புகளால் துளைக்கச் செய்வோம் என்கிறான்.

 

இதோ வாயு பகவான் சொன்ன ரகசியம்:-

 

 

என்னை ஈன்றவன் இவ்வுலகு யாவையும் ஈன்றான்

தன்னை ஈன்றவர்க்கு அடிமை செய் தவம் உனக்கு அஃதே

உன்னை ஈன்ற எற்கு உறு பதம் உளது என உரைத்தான்

இன்ன தோன்றலே அவன் இதற்கு ஏது உண்டு இறையோய்

 

பொருள்:-

 

தலைவா (சுக்ரீவா)! என்னைப் பெற்ற வாயுதேவன், இந்த உலகங்களை எல்லாம் படைத்த பிரம்மாவை தனது கொப்பூழிலிருந்து தோற்றுவித்த விஷ்ணுவுக்குப் பணி செய்; அதுதான் சிறந்த தவம்; அப்படி நீ செய்தால் எனக்கும் நல்ல நிலை கிட்டும் என்றான். இந்த இராமந்தான் அந்தத் திருமால்/விஷ்ணு

 

கடவுள்  என்பது எப்படித் தெரியும்?

 

உடனே அனுமன் கேட்டான்; அப்பா (வாயுதேவனே); விஷ்ணுவை நான் எப்படிக் கண்டு பிடிப்பது; எனக்குத் தெரியாதே; ஏதேனும் அடையாளங்கள் சொல்லுங்கள்;

 

(அனுமன் மனதில் எழுந்த சந்தேகங்கள்: –  அவர் என்ன கலர் சட்டை போட்டுக் கொண்டு வருவார்? கைகளில் பை (suitcase) கொண்டுவருவாரா? கண்ணாடி (Spectacles) போட்டிருப்பாரா? மீசை வைத்த ஆளா? என்ன உயரம்? குட்டையா? நெட்டையா?)

96910-kkish1

வாயுதேவன் சொன்னான்:

யாராவது கஷ்டப்பாட்டால் ஓடி வந்து உதவி செய்வான்; இது முதல் அடையாளம்.

 

அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே உன் உடலில் அன்பு சுரக்கும்; அளக்கமுடியாத காதல் உருவாகும். இது இரண்டாவது அடையாளம்

 

இதோ கம்பன் சொற்கள்:-

 

துன்பு தோன்றியபொழுது உடன் தோன்றுவன் எவர்க்கும்

முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு என் இயம்ப

அன்பு சான்று என உரைத்தனன் ஐய என் ஆக்கை

என்பு தோன்றல உருகின எனின் பிறிது எவனோ

 

பொருள்:-

 

நீ கூறிய அவனை அறிதற்கு என்ன வழி? – என்று நான் தந்தையான வாயுதேவனிடம் கேட்டேன். அதற்கு அவன், “அப் பெரியோன் எல்லார்க்கும் துன்பம் உண்டாகும் போது உடனே தோன்றுவான். மேலும் அவனைக் கண்ட அளவில் உனக்கு மனதில் அன்பு உண்டாகுவதே சான்றாகும்”- என்று கூறினான். அவன் சொன்ன படியே இந்த இராம பிரானைப் பார்த்த மாத்திரத்தில் என் உடல் எலும்பும் காணாதவாறு உருகிவிட்டது. இதற்கு மேலும் சந்தேகம் வருமா?

 

ஒருவருக்குத் துன்பம் வந்தால் கடவுளை நாடுவதை கிருஷ்ணனும் பகவத் கீதையில் சொல்கிறான். அதிலிருந்து துன்பப் பட்டோருக்கு கடவுள் உதவுகிறார் என்பது தெளிவு.

 

கண்ணன் சொல்லுகிறான்:-

1.துன்பம் அடைந்தவர்கள்

2.ஞானத்தைத் தேடுவோர்

3.செல்வத்தை விரும்புவோர்

4.ஏற்கனவே ஞானியானவன்

ஆகிய நாலு வகையான மனிதர்கள் என்னை வழிபடுகின்றனர் (பகவத் கீதை 7-16)

 

பாண்டவர்களின் தாயான குந்தீ சொல்கிறாள்:-

துன்பக் கண்ணீரைத் துடைக்கும் உன் தரிசனம் துன்பம் வரும்போது கிட்டுவதால் எனக்கு அடிக்கடி துன்பம் வரட்டும்; இதுவே என் பிரார்த்தனை– (பாகவதம்)

 

விஷ்ணு சஹஸ்ர நாமத்திலும் இறுதியில் “சங்கீத நாராயண

சப்த மாத்ரம் விமுக்த துக்காஸ் சுகினோ பவந்து” என்று சொல்லப்படுகிறது. நாராயண என்ற சப்தம் கேட்ட மாத்திரத்தில் துன்பம் பறந்தோடிப் போய்விடும்; சுகம் தழைக்கும்.

 

–சுபம்–

இலங்கைத் தீவு உண்டானது எப்படி? வாயு பகவான் பற்றிய அதிசயச் செய்திகள்

CIS:IM.368-1923

இலங்கைத் தீவு உண்டானது எப்படி? வாயு பகவான் பற்றிய அதிசயச் செய்திகள்

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1380; தேதி அக்டோபர் 31, 2014.

வாயு பகவான் பற்றிய பல அரிய பெரிய செய்திகளை ரிக் வேதம் முதல் வாயு புராணம் வரை பல சம்ஸ்கிருத நூல்கள் தருகின்றன. இதில் ஒன்று இலங்கைத் தீவு உருவான கதை. சில விஷயங்களைக் காண்போம்:

1.வெள்ளைக் காரர்கள் எழுதிய புத்தகங்களைப் படித்தேன். இப்போது வாயு பகவானை யாரும் வழிபடுவதில்லை என்று எழுதி இருந்தனர். அது தவறு. பிராமணர்கள் அனுதினமும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் அக்னி, வாயு, அர்க்க, வாகீச, வருண, இந்திர, விஸ்வேதேவா என்று ஏழு வேத கால கடவுளரை வணங்குகின்றனர்.

2.பிராமணர்களோடு மற்றவர்களும்கூட வீடுகளில் திருமணம், கிரகப்பிரவேசம், பூமி பூஜை முதலிய நிகழ்ச்சிகளில் செய்யும் ஹோமங்களிலும், கோவில்களில் செய்யும் யாகம் முதலியவற்றிலும் ஹோம குண்டத்தில் வடமேற்குத் திக்கில் வாயு பகவானை ஸ்தாபித்து வழிபடுவர். அவர் எண்திசைக் காவல் தெய்வங்களில் ஒருவர்.

3.மேலும் குருவாயூர், காளஹஸ்தி, திருவண்ணாமலை வாயுலிங்கம் போன்ற எண்ணற்ற கோவில்களில் வாயு பகவான் தொடர்பு உண்டு.

4.வாயு பற்றி, ரிக் வேதம் என்னும் உலகின் மிகப் பழைய நூலில் சில துதிகள் உள்ளன. அதனுடன் புயற்காற்று என்னும் பொருள்படும் ‘’மருத்’’ பற்றிய துதிகளும் உண்டு. இதன் பெயரை ‘’மருத்’’ என்று இந்திய விமானப்படையின் குண்டுவீசி விமானங்களுக்குச் சூட்டியிருப்பது சாலப் பொருத்தமே.

5.மருத் என்னும் சொல்லில் இருந்து வாயு புத்ரனான அனுமனுக்கு ‘’மாருதி’’ என்ற பெயரும் வந்தது. பீமனும் வாயு அம்சத்தில் பிறந்தவர். அதாவது வாயு என்றால் ‘’பலம், புயல் வேகம், அதிரடி’’ என்னும் பொருள் தொனிக்கும். வாயுவின் புதல்வர்களான பீமனையும் அனுமனையும் பார்த்தால் இது நன்கு விளங்கும்.

6.வாயுவுக்கு உலகின் முதல் நிகண்டு/அகராதியான அமரகோசம் இருபது வடமொழிப் பெயர்களைத் தருகிறது. ஒவ்வொன்றின் விளக்கமும் நிறைய புதிய செய்திகளைத் தரும்.
அவையாவன:

Vayu

வாயு — வீசுபவன்
மருத் – (புயல்) அவன் இல்லையேல் ம்ருத்யு (மரணம்)
ஸ்வாசன — சுவாசத்துக்கு உதவுபவன்
ஸ்பர்சன – நம்மைத் தொடுவது மூலம் உணர வைப்பவன்
சதாகதி – எப்போதும் சென்றுகொண்டே இருப்பான்
மாதரிஸ்வான் – வானத்துக்கும் பூமிக்கும் இடையில் இருப்பவன்
ப்ருஷதஸ்வ – மழைத் துளிகளைத் தெளிப்பவன்
கந்தர்ப: — வாசனையை சுமந்து செல்பவன்
கந்தவாஹன: — வாசனையை வாஹனமாக உடையவன்
அநில — நிலையற்றவன்
ஆசுக – வேகமானவன் — (வேகமாகக் கவிதை மழை பொழியும் புலவர்களை ஆசு கவி என்பர்; சிவ பெருமான் வேகமாக திருப்தி அடைந்து எல்லோருக்கும் வரம் கொடுப்பதால் அவனை ஆசு தோஷ் என்பர். அதாவது விரைவில் மகிழ்பவன்/ சந்’தோஷ’ம் அடைபவன். வங்காளத்தில் புகழ்பெற்ற ஒருவர் ஆசு தோஷ் முகர்ஜி )
சமீர – விரைவில் பரவுபவன்
சமீரன — விரைவில் பரவுபவன்
ஜகத்ப்ராண – உலகின் உயிர் மூச்சு; அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது
மாருத – உயிர்வாழ உதவுவோன்
நபஸ்வான் – ஆகாயத்தில் சஞ்சரிப்பவன்
வாத — வீசுபவன்
பவன – தூய்மைப் படுத்துவோன்
பவமான — தூய்மைப் படுத்துவோன்
ப்ரபஞ்சன – தனது வேகத்தால் அழிப்பவன்

birla-museum

7.வேதத்தில் மருத்

ரிக் வேதத்தில் ருத்ரனின் புதல்வர்களாகவும், இந்திரனின் உதவியாளர்களாகவும், அக்னியின் நண்பனாகவும், த்வஷ்ட்ரியின் மாப்பிள்ளையாகவும் வாயு போற்றப்படுகிறான். புருஷசூக்த துதுயில் ஆதி புருஷனின் மூக்கில் இருந்து உதித்தவன் என்றும் வருணிக்கப் படுகிறான். அவனை புயல் என வருணிக்கும் வேத சூக்தங்கள் (துதிகள்) அவனுடைய எண்ணிக்கை 27 என்றும் ‘’மூன்று அறுபது’’ என்றும் பகரும். ராமயனத்தில் இந்திரனின் வஜ்ராயுதம் ஒரு சதைப் பிண்டத்தை 49 கூறு போட்டதாகவும் அதுவே மருத்துகள் என்றும் வருகிறது. மா ரோதி (அழாதே, வருந்தாதே) என்பதே ‘’மருத்’’ ஆனதாகவும் வேத இலக்கியம் சொற்சிலம்பம் ஆடும். இவைகளை எல்லாம் மருத்துவ, பூகர்ப்பவியல் குறிப்புகள் எனக் கொண்டால் பொருள் விளங்கும்.

vayu in nilali shobaneswara tem
Vayu at Nilali Shobaneswara Temple

8.இலங்கைத் தீவு உண்டானது எப்படி?

பாகவத புராணம் இலங்கை உருவான வரலாறு பற்றி சுவை மிகு செய்தி தருகிறது. நாரதர் வேண்டுதலுக்கு இணங்க மேரு மலையின் சிகரத்தை வாயு பகவான் தகர்த்து எறிந்ததாகவும் அது கடலில் விழுந்து ஸ்ரீ லங்கா தீவு ஆனதாகவும் கூறப்படுகிறது. இதையும் புவியியல் குறிப்பு – பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு– எனவே கொள்ளல் வேண்டும்.

9.சுமேரிய, கிரேக்க, புத்த, பாரசீக கலாசாரங்களில், மதங்களில் வாயு பகவான் போற்றப்படுகிறார். மர்து என்ற மொசபொடோமியன் புயல் தெய்வம் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று கலைக்களஞ்சியங்கள் செப்பும். உண்மையில் இது மருத் என்ற வேத காலக் கடவுளே. கிரேக்கர்கள் ‘’இயோலஸ்’’ என்ற தெய்வமாக வாயுவை வணங்குவர். ராமாயண, மஹாபாரதக் கதைகள் வாயு புத்ரர்களான அனுமன், பீமன் ஆகியோரின் வீரப் ப்ரதாபங்களை எடுத்துரைக்கும்

10.வாயு பகவான் பற்றிய புராண விவரங்கள்:
வாயு புராணம் என்பது சிவனின் மகிமைகளை விதந்தோதும்;
வாயுவின் நிறம் நீலம்; வாகனம் ஒருவகை மான்;
தாய் தீதி;

vayu in NY
Vayu at Brooklyn Museum, New York

11.ஐந்து வகை காற்றுகள் உடலில் உண்டு:
பிராணன் = நெஞ்சில்/ இருதயத்தில் இருந்து வரும் காற்று

அபானன்= அடிப் பகுதியில் இருந்து வரும் காற்று
வியானன் = உடல் முழுதும் வியாபித்து இருப்பவன்
உதானன் = வயிற்றில் இருந்து வரும் காற்று
சமானன் = கழுத்தில் இருந்து வரும் காற்று

கடவுளுக்கு உணவுபடைக்கையில் இந்த ஐந்து வாயுக்களின் பெயரில் ஸ்வாஹா சொல்லி அர்ப்பணிப்பர். இது தவிர மேலும் ஐந்து வாயுக்களையும் சேர்த்து தச வாயு என்றும் அழைப்பர்.

aeolus2-1027
Aeolus, Greek God of Wind

12.ஏழுவகைக் காற்று
மாஹாபாரத சாந்தி பர்வத்தில் ஏழுவகைக் காற்று பற்றிய விஜ்ஞானத் தகவல் கிடைக்கிறது:

ஆவாஹன் = உயிர் வாயு / ஆக்சிஜன்
ப்ரவாஹன் = மழை பொழியும் மேகம் கொணர்வோன்
உத்வாஹன் = மேகத்தை மழையாக மாற்றும் குளிர்க் காற்று

சம்வாஹன் = பாலைவன வறண்ட காற்று

விவாஹன் = வானத்தில் உள்ள நீரைத் தாங்குபவன் (இப்போது நாஸா போன்ற விண்வெளி ஆய்வு அமைப்புகள் வானத்து நீர் பற்றிப் பேசி வருகின்றன; அறிவியல் வளரும் போது இச் சொல்லுக்குப் புதுப் பொருள் காணலாம்)

பரிவாஹன் = சூரிய, சந்திரர்களைத் தாங்கும் காற்று — (மின் காந்த வீச்சு, அகச் சிவப்பு , புற ஊதா கதிர்களாக இருக்கலாம்; யாம் அறியோம் பராபரமே!!!)
பரவாஹன் = எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது; தஙகு தடையின்றி வழங்குவது
IAF MARUT
Marut, IAF Bomber

13.மேற்கண்ட மஹாபாரத பகுப்பு, உடலில் உள்ள தச வாயு பகுப்பு, காற்றுக்கான பல்வேறு பெயர்கள் ஆகியன உணர்த்தும் அபூர்வ விஷயம் என்ன தெரியுமா?

1.சம்ஸ்கிருத மொழி உலகின் வளமிக்க மொழிகளில் ஒன்று; எதை எடுத்தாலும் பல நூறு ‘’டெக்னிக்கல்’’ சொற்கள் கிடைக்கும்

2.காற்றையும் மேகத்தையும், மூச்சையும் கூடப் பிரிக்கவேண்டும் என்ற விஞ்ஞான அணுகு முறை!!! உலகில் மற்ற மொழியினர் சிந்திக்காத பல விஷயங்களைச் சிந்தித்து அதைச் செயல் முறையில் கொண்டு வந்து ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் வைத்துள்ள அற்புதமே அற்புதம். நான் தினமும் உணவு சாப்பிடுகையில் ‘’பிராணய ஸ்வாஹா’’ முதல் ஐந்து வாயுக்களின் பெயர் சொல்லி உள்ளே இருக்கும் இறைவனுக்கு நெய் கலந்த சோறு கொடுத்து வணங்குகிறேன் ஆகவே இன்றும் அனைத்தும் நடைமுறையில் உள்ளன.

contact swami_48@yahoo.com