Written by London Swaminathan
Date: 22 September 2018
Time uploaded in London – 7-13 am (British Summer Time)
Post No. 5456
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பிரிட்டிஷாருக்கு நெப்போலியன் என்றால் சிம்ம சொப்பனம். நெப்போலியன் பிரெஞ்சுப் பேரரசர். ஏறத்தாழ ஐரோப்பா முழுதையும் வென்றவர். ஆனால் ஒரு தோல்வி ஏற்பட்டவுடன் எல்பா (Elba island )தீவில் சிறை வைக்கப்பட்டார். பின்னர் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் ஏறிய போது பிரிட்டிஷ்- பிரஷ்ய சூழ்ச்சிக்கு இரையாகி, வாட்டர்லூ என்னுமிடத்தில் தோல்வியைத் தழுவினார். மாவீரனாகிய நெப்போலியன் யாரும் அணுகமுடியாத செய்ன்ட் ஹெலினா (St Helena) தீவில் சிறை வைக்கப்பட்டார். அவரை மெதுவாகக் கொல்லும் ஆர்ஸெனிக் உப்புகளைக் கொடுத்து பிரிரிட்டிஷார் கொன்று விட்டனர். நீண்ட காலத்துக்குப்பின்னர் அவர் சடலம் பாரீஸ் மாநகருக்குக் கொண்டுவரப்பட்டு (Hotel des Invalides in Paris) அடக்கம் செய்யப்பட்டது.
இதை எப்படி கண்டுபிடித்தனர்?
ஆர்ஸெனிக் (Arsenic) என்பது 118-க்கும் மேலான மூலகங்களில் ஒன்று. இது மனிதனுக்குத் தேவைதான். ஆனால் மிக, மிகக் குறைவாகவே தேவை. இது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டால் தலை முடியில் சேரும். இறந்த பின்னரும் ஒருவர் தலை மயிரை ஆராய்ந்து இதைக் கண்டு பிடித்துவிடலாம். நெப்போலியனின் சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட முடியை ஆராய்ந்ததில் இது அளவுக்கு அதிகமாக இருந்தது எல்லாப் பத்திரிக்கைகளிலும் வெளியானது.
ஆனால் ஒருவரின் தலை மயிரில் ஆர்ஸெனிக் மூலக உப்புகள் சேர வேறு சில வழிகளும் உண்டு. அந்தக் காலத்தில் சுவரில் ஒட்டும் வால் பேப்பர் (Wall Papers)களில் வர்ணம் உண்டாக்க ஆர்செனிக் பயன்படுத்தப்பட்டது. ஈரமான சூழ்நிலையில் இதன் மீது பூஞ்சக் காளான்(fungal gowth) வளர்ந்தால் அது ஆர்ஸெனிக் விஷத்தைக் காற்றில் கலக்கச் செய்யும். இது போல நெப்போலியன் இருந்த அறையிலும் சுவர்களில் பேப்பர் இருந்தது. திட்டமிட்டு நெப்போலியனை அந்த அறையில் அடைத்து சுவாஸிக்கச் செய்தனரா? அல்லது விதியின் வசமா? ஆண்டவனே அறிவான்.
வாரிசுப் பொடி மர்மம்!
கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் தலைமை குருவான போப்பாண்டவர்களில் பலர் மர்மமான முறையில் இறந்தனர். இது போல பல பிரபுக்கள், அரசர்களும் மேலை நாடுகளில் இறந்தனர் அல்லது கொல்லப்பட்டனர். இதற்கெல்லாம் காரணம் ஆர்ஸெனிக் உள்ள சில விஷ உப்புகளே. இதனால் இவைகளுக்கு ‘வாரிசுப் பொடி’ (Succession Powder) என்ற கெட்ட பெயர் ஏற்பட்டது. அதாவது அடுத்த வாரிசு யார் என்பதைத் தீர்மானிக்கும் கொலைகாரப் பொடியானது.
ஆனால் ஆர்ஸெனிக்குக்கு எவ்வளவு கெட்ட பெயர் உண்டோ அவ்வளவு நல்ல பெயர்களும் உண்டு. சிறிய அளவில் இது உடலுக்குத் தேவை. இன்றும் சீன மருந்துகளில் வெகுவாகப் பயன்படுகிறது, குறிப்பிட்ட வகை ரத்த புற்று நோய்க்கு இதை மருந்தாகப் பயன்படுத்த அமெரிக்க உணவு மருந்து இலாகாவும் அனுமதிக்கிறது. ஒரு காலத்தில் இதற்கு ஸகல ரோக நிவாரணி (Cure all) என்ற பெயரும் உண்டு. காரணம் என்னவென்றால் இதை சர்க்கரை வியாதி, க்ஷய ரோகமெனப்படும் காச நோய், நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் கொடுத்தனர். காரணம் என்ன வென்றால் இதை மிக சொற்ப அளவில் உட்கொண்டால் ரத்தத்தில் சிவப்பு நிற செல்கள் (red Blood Corpuscles) பெருகி உத்வேகத்தைக் கொடுக்கும். இதை டாக்டர் பௌளர் என்பவர் கண்டு பிடித்ததால் அந்தக் காலத்தில் டாக்டர் பௌளர் திரவம் (Dr Fowlers Solution) மிகவும் பிரஸித்தம்.
பிரபல ஆங்கிலக் கதாசிரியர் சார்ல்ஸ் டிக்கன்ஸ் முதலியோரும் சாப்பிட்ட டானிக் அது.
சில இடங்களில் பூமியில் ஆர்ஸெனிக் அதிகம். அப்படிப்பட்ட ஓரிடம் மேறு வங்கம். அங்கே நிலத்தடி நீரில் இது அதிகம் இருந்ததால் அரசாங்கம் க்ளோரிம் மாத்திரைகளைக் கொடுத்தது. இது தண்ணீரில் கலக்கும் போது ஆர்ஸெனிக் விஷ உப்புகள் கீழே கசடாகப் படிந்து விடும்.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் 6000 குடிகாரர்கள் இந்த மூலகத்தால் பாதிக்கப்பட்டனர். பீயர் குடிகாரர்களில் 70 பேர் இறந்தனர். இப்பொழுதும் பெயிண்ட், (weed killers) களைக் கொல்லி திரவங்களில் இது பயன்படுகிறது.
ஆர்ஸெனிக் 5000 ஆண்டு வரலாறு உடைய மூலகம். ரோமானிய சக்ரவர்த்தி காலிகுலா (Roman Emperor Caligula) இதைப் பயன்படுத்தி தங்கம் எடுக்கும் திட்டத்தைத் துவக்கினார் என்றும் ஆனால் மிகவும் சொற்ப அளவில் தங்கம் கிடைத்ததால் லாபமில்லை என்று அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதாகவும் ரோமானிய எழுத்தர் ப்ளினி (Pliny) சொல்கிறார்.
ஆர்செனிக் என்பது உலோகவகை மூலகம். இதன் அணு எண் 33.
இயற்கையில் எரிமலை வாயு முதலியவற்றின் மூலம் இது காற்றில் கலக்கிறது. பந்தயக் குதிரைகளைப் பழக்குவோர் ஆர்ஸெனிக் கலந்த உணவை அவைகளுக்குக் கொடுப்பதால் அவை ‘சிட்’டாகப் பறந்தன. ஆல்ப்ஸ் மலையில் உள்ளோர் இதை தோலில் நல்ல நிறத்தை உண்டாக்கும் என்றும் மலை உயரத்தில் வேலை செய்ய சக்தி கொடுக்கும் என்றும் நம்பினர். உடலில் 100 மில்லிகிராம் ஆர்ஸெனிக் இருந்தால் விஷம் என்று கருதப்படும் . ஆனால் ஆல்ப்ஸ் மலைவாசிகள் வாரத்துக்கு இரு முறை 250 மில்லிகிராம் சேர்த்தனர். இதை முதலில் விஞ்ஞானிகள் நம்பவில்லை. பின்னர் ஆராய்ச்சியாளர் முன்னிலையில் ஒரு குடியானவர் 400 மில்லி கிராம் ஆர்செனிக் உண்டும் பாதிக்கப்படாமல் இருந்ததைக் காட்டியவுடன் விஞ்ஞானிகள் கதையை மாற்றி எழுதினர்.
இந்தியாவில் கிராமப் புறங்களில் ஒரு சொல் உண்டு. தேள் விஷத்தையோ பாம்பு விஷத்தையோ உடலில் சிறுகச் சிறுக ஏற்றினால் , பின்னர் பாம்பு கடித்தாலும் அவரை பாதிக்காது என்று.
இதை ருசுப்பிக்கும் வகையில் மேலும் ஒரு செய்தி. ஆர்ஸெனிக் சாப்பிட்டு பழக்கப்பட்டவர்களை அது அதிகம் பாதிப்பத்தில்லை. தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டு கிராம மக்கள் 600 மில்லிகிராம் ஆர்ஸெனிக் சாப்பிட்டும் அது தொடர்பான விளைவுகள் எதுவுமின்றி சுகமாக வசிக்கின்றனர்!
படம்- நெப்போலியன் அடக்கம் செய்யப்பட்ட இடம், பாரீஸ்
ஆர்செனிக் அதிகம் உள்ள நிலங்களில் ஒரு வகை சீன தாவரத்தை வளர்த்தால் அவை ஆர்ஸெனிக்கை உறிஞ்சி அந்த நிலத்தைப் பாதுகாப்பானதாகச் செய்து விடும் என்பதும் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
வாழ்க வாரிசுப் பொடி!
–சுபம் —