Written by London swaminathan
Research Article No.1669; Dated 23 February 2015.
வராகமிகிரர் சொல்லும் வாலாட்டிக் குருவிகள் ஆரூடம்
சகுனம் என்றால் பறவை என்று சம்ஸ்கிருதத்தில் அர்த்தம். இதை வைத்து தான் சகுனம் பார்ப்பது, நல்ல சகுனமா?, கெட்ட சகுனமா? என்ற சொற்றொடர்கள் உருவாயின. தமிழ் நாட்டில் கிளி ஜோதிடம் உண்டு. ஊருக்கு ஊர் இத்தகைய கிளி சோதிடர்களைக் காணலாம். ஆனால் வராகமிகிரர் கூறுவது வாலாட்டிக் குருவி ஜோதிடம்!
பஞ்சாங்கங்களில் காணப்படும் பல்லி சொல்லுக்குப் பலன், பக்ஷி சாஸ்திரம் ஆகியவை நமக்குத் தெரியும். ஆனால் வராஹமிகிரர் சொல்லும் வாலாட்டிக் குருவி விஷயம் நமக்குத் தெரியாது. சங்கத் தமிழர்களுக்கு இதில் நம்பிக்கை உண்டு. பல்லி சொல் கேட்டு, காட்டுப் பன்றி கூட வெளியே போக பயந்த சங்க இலக்கியப் பாடலை ஏற்கனவே கொடுத்துள்ளேன். வராஹமிகிரரோ நரி ஜோதிடம், பறவைகள் ஜோதிடம் எல்லாவற்றுக்கும் பல அத்தியா யங்களை ஒதுக்கியுள்ளார். அவர் ஒரு விஞ்ஞானி. இருந்தபோதிலும் 1500 ஆண்டுக ளுக்கு முன்னர் இந்தியாவில் நிலவிய எல்லா விஷயங்களையும் தொகுத்து அளிப்பது அவர் தம் பணி.
இனி, வாலாட்டிக்குருவிகள் பற்றி அவர்தம் பிருஹத் சம்ஹிதா – என்னும் அற்புதமான சம்ஸ்கிருத கலைக் களஞ்சியத்தில் சொல்லும் சுவையான சில விஷயங்களை மட்டும் காண்போம்.
“வாலாட்டிக் குருவிகளைப் பார்ப்பது பற்றி பழங்கால முனிவர்கள் சொன்னதை இதோ எடுத்துரைக்கப் போகிறேன்.
“முகம் முதல் கழுத்து வரை கறுப்பாக இருக்கும் வாலாட்டிகளுக்கு சம்பூர்ணம் என்று பெயர். இதை முதலில் கண்டால் உங்கள் ஆசை அபிலாஷைகள் நிறைவேறும்.
“வெள்ளைக் கழுத்து, அதில் கறுப்புப் புள்ளிகளுடன் உடைய வாலாட்டிக் குருவிகளுக்கு ரிக்தா என்று பெயர். அதைப் பார்த்தால் ஏமாற்றமான செய்திகளே கிடைக்கும்.
“மஞ்சள் நிறத்திலுள்ள வாலாட்டிக் குருவிகளுக்கு கோபிலா என்று பெயர். அதைப் பார்த்தால் தொல்லைகளே வரும்.
“கீழ்கண்ட இடங்களில் வாலாட்டிக் குருவிகளைப் பார்த்தால் மங்களகரமான செய்திகளே கிடைக்கும்:– பூ, பழம் உடைய மரங்கள், கோவில், நல்லோர் கூடிய சபைகள், பசு,யானை, குதிரை, பாம்பு ஆகியவற்றின் முதுகில் அமர்ந்த பறவைகள், புனித ஏரி, ஆறு,குளங்கள், யாக சாலைகள், மாட்டுத் தொழுவம் ஆகியன
காதலன், காதலி கிடைக்க……………..
“வண்டல் மண்ணில் பறவையைப் பார்த்தால்- இனிய உணவு
மாட்டுச் சாணத்தில் பறவையைப் பார்த்தால் – பால், தயிர், வெண்ணெய்
புல் தரை – துணிகள்
வண்டிகள் மீது – நாட்டுக்கு சேதம்
வீட்டுக் கூரை- செல்வம் இழப்பு
தோல் முதலியன – சிறை வாசம்
ஆடு, செம்மறி ஆட்டின் முதுகு மேல் பறவையைப் பார்த்தால் – காதல் கைகூடும்; காதலன் – காதலி உடனே சேருவர்!
எதிரிடைப் பலன்கள்
வாலாட்டிக் குருவிகளை கீழ்கண்ட இடங்களில் பார்த்தால் கெட்ட செய்திகளே கிடைக்கும்:–
சாம்பல்- எலும்புகள் மீது, சுடுகாட்டில், மண்ணாங்கட்டியில், கழுதை, ஒட்டகம், எருமை முதுகின் மேல், வீட்டுக் காம்பவுண்ட் சுவர் மீது
சிறகு அடிக்கும் நிலையில், மாலை வேளையில்
ஆனால் தண்ணீர் குடிக்கும் நிலையிலும் காலை நேரத்திலும் பார்த்தால் நல்ல செய்தி வரும்.
புதையல் வேண்டுமா?
வாலாட்டிக் குருவிகள் புணரும் இடத்தில் பூமியைத் தோண்டிப் பார்த்தால் புதையல் கிடைக்கும்.
உணவைக் கக்கும் இடத்தில் மைகா/ அபிரகம் கிடைக்கும்.
மலஜலம் கழிக்கும் இடத்தில் நிலக்கரி கிடைக்கும்
விதி விலக்கு
எல்லா விதிகளுக்கும் சில விதிவிலக்குகள் இருக்கும்; எல்லா நோய்களுக்கும் மருந்துகள் இருக்கும். அதே போல எல்லா பாபங்களுக்கும் பரிகாரம் உண்டு.
வராஹமிகிரர் சொல்லுகிறார்: மேற்கண்டவற்றில் ஒரு அரசன் தீய நிமித்தங்களைக் கண்டாலும், அவன் பிராமணர்களையும் குரு மார்களையும், புனித மகான்களையும் வணங்கினாலோ ஒரு வாரத்துக்கு மாமிச உணவு சாப்பிடாமல் இருந்தாலோ தீமைகள் வாரா.
என் கருத்து:
இந்த நூலில் சொன்ன வாலாட்டிக் குருவி எது என்பதை முதலில் நாம் சரியாக இனம் காண வேண்டும். நான் ஆங்கில மொழி பெயர்ப்பைத் தழுவி எழுதியுள்ளேன். பின்னர் அதை நம்புவதும் நம்பாததும் தனி நபரின் அனுபவத்தில் தெரியும்.
இது ஒரு புறம் இருக்க, பொய்யோ நிஜமோ, நம்முடைய முன்னோர்கள் 2000 ஆண்டுக ளுக்கு முன்னர் இயற்கையை எவ்வளவு கூர்ந்து கவனித்துள்ளனர் என்பதை நினைக்கையில் வியப்பு மேலிடுகிறது.
You must be logged in to post a comment.